தேடித் தேடி... - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6636
மற்ற ரிக்ஷாக்காரர்கள் என்னைப் பார்த்து சண்டை போட்டார்கள். மற்றவர்கள் சொல்லக்கூடிய கூலியை விட நான்கு சக்கரங்கள் குறைவாக நான் சொன்னேன். தொடர்ந்து ரிக்ஷாவை இழுத்து ஓடிக்கொண்டே இருந்தேன். ஒரு நிமிடத்தைக் கூட வீண் பண்ணாமல் வண்டியை இழுத்தால் அதிகமாக சவாரி கிடைக்குமல்லவா?
சாக்கோ அண்ணன் கேட்டார்:
"என்னடா பையா, செத்துப்போறதுன்னு முடிவு பண்ணிட்டியா?"
நான் சாக்கோ அண்ணனிடம் எந்த விஷயத்தையும் கூறவில்லை. அதை அவரிடம் சொல்வதும் நல்லதல்ல என்று நான் நினைத்ததே காரணம்.
இரவு வந்ததும் அன்று கிடைத்த பணம் முழுவதையும் எடுத்து எணணிப் பார்த்தேன். பத்து ரூபாய் இல்லை!
எனக்கு அதைப் பார்த்ததும் ஒரே வருத்தமாகி விட்டது. எப்படி பத்து ரூபாய்க்கு வழி பண்ணுவது?
நான் பணம் கொண்டு வருவேனென்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பாள் என்று என் மனம் சொன்னது. பத்து ரூபாய் இல்லாமற்போனால் அவள் இருக்கும் பணத்தை என்னிடமிருந்து வாங்கிக் கொண்டு முதல்நாள் செய்தது மாதிரி இப்போதும் என்னை வெறுமனே கட்டிப்பிடித்து அனுப்பிவிடுவாள். இன்றும் அந்த அளவிற்கு இருந்தால் போதுமா? அப்படியென்றால் மீண்டும் பத்து ரூபாய்க்கு நான் முதலிலிருந்து முயற்சி பண்ண வேண்டும்.
சாலையிலேயே பல தடவைகள் இங்குமங்குமாய் நான் நடந்து திரிந்தேன்.
அன்று நன்கு இருட்டும் வரை அந்தக் கள்ளுக் கடையில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடந்தது. ஆட்கள் முழுமையாக இல்லாமற்போனவுடன், நான் உள்ளே நுழைந்தேன். அவள் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
"என்ன, ரூபா கொண்டு வந்தியா?"
அவள் என்னை மறக்கவில்லை. நான் சொன்னேன்:
"இல்ல... பணம் கிடைக்கல."
"கள்ளு வேணுமா?"
"வேண்டாம்"- நான் சொன்னேன்.
"பிறகு எதற்கு வந்தே?"
நான் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. சிறிது நேரம் சென்றதும், நான் சொன்னேன்:
"நான் நாளைக்கு வர்றேன்."
"வா... ஆனா, பதினைஞ்சு ரூபா கொண்டு வரணும்."
நான் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டேன். பத்துரூபாய்தானே அவள் முன்பு கேட்டிருந்தாள்! இன்று அது எப்படி பதினைந்து ரூபாயாக மாறியது? திரும்பி வந்து அவள் கேட்டாள்:
"என்ன, ஒரு முத்தம் வேணுமா?"
அப்போது யாரோ கள்ளு குடிப்பதற்காக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.
நான் வேகமாக பாய்ந்து வெளியேறினேன்.
7
மறுநாளும் நான் சூறாவளியைப் போல் சுழன்று கொண்டிருந்தேன். கையிலிருக்கும் பணத்திற்கு மேலாக தேவைப்படும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும். எப்படியாவது கஷ்டப்பட்டு பதினைந்து ரூபாய் சம்பாதித்தாக வேண்டும். அது மட்டும் போதாதே! கள்ளு, கப்பைப்கிழங்கு ஆகியவற்றுக்கும் சேர்த்து பணம் தயார் பண்ண வேண்டும். என்னை நகரத்தின் எந்தப் பக்கத்தில் வேண்டுமானாலும் பார்க்கலாம். நான் ஓடிக் கொண்டே இருந்தேன். தலையைக் குனிந்து கொண்டு ஓடும்போது கூட, அவள் பேசியது மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது.
நேற்று நடந்து கொண்டதைப்போல எதவும் பேசாமல் மௌனமாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதைப் புரிந்த கொண்டேன். நான் சரியான ஒரு மடையன் என்று அவள் நினைத்திருக்கலாம். அப்படி அவள் நினைத்துக் கெகண்டிருந்தால், அது எவ்வளவு பெரிய மோசமான விஷயம் என்பது எனக்குப் புரியாமல் இல்லை. அவளிடம் என்ன பேசுவது? நான் பேசுவதால் அவளுக்குக் கோபம் உண்டாகிவிடக்கூடாது. என் மீது விருப்பமும் சந்தோஷம் அவளுக்கு உண்டாக வேண்டும். அந்தக் குழந்தையைக் கொஞ்சியதைப் போல- அவளை விளையாட்டுக் காட்டி சிரிக்க வைத்ததைப் போல இவளையும் கொஞ்சி விளையாட்டு காட்டி சிரிக்க வைத்தாலென்ன? இவள் ஒரு இளம்பெண்ணாயிற்றே! இருந்தாலும் இவளை எப்படி மகிழ்ச்சியுடன் இருக்கச் செய்வது என்பதைப் பற்றி என்னால் சிந்திக்க முடிந்தது. அவளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஒரு தெளிவான தீர்மானம் எடுத்தேன்.
பிற்பகல் நேரத்தில் சாக்கோ அண்ணனை நான் பார்த்தேன். அவர் என்னை வலை போட்டுத் தேடியிருக்கிறார். அவருக்கு அவசரமாய் ஐந்து ரூபாய் தேவைப்பட்டதே காரணம். வீட்டுச் செலவுக்கு அந்தப்பணம் கட்டாயம் அவருக்குத் தேவைப்பட்டது. அந்த அளவிற்கு பணம் அன்று அவருக்குக் கிடைப்பதாகத் தெரியவில்லை. இரண்டு நாட்களாக எனக்கு நல்ல சவாரி என்ற விஷயம் சாக்கோ அண்ணனுக்கு நன்றாகவே தெரியும்.
நான் ஒரு தர்மசங்கடமான நிலையில் சிக்கிக் கொண்டேன். சாக்கோ அண்ணன் பணம் வேண்டும் என்று கேட்கும்போது, கொடுக்காமல் இருக்கமுடியாது. எனக்கு சொந்த பந்தம், நண்பர் எல்லாமே அவர் தான். அவரை விட்டால் உலகத்தில் எனக்கு வேறு யாருமில்லை என்பதே உண்மை. அவர் மூலம்தான் நான் இந்த நிலைக்கே வந்தேன். எவ்வளவு தடவைகள் அவர் எனக்கு பணம் தந்து உதவியிருக்கிறார்! அவருக்குப் பணம் தந்தால் நான் கள்ளு கடைப்பக்கம் போக முடியாது. நான் சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் நின்றேன்.
இப்படியொரு இக்கட்டான நிலை எனக்கு அதற்கு முன்பு எப்போதும் உண்டானதேயில்லை. 'இல்லை' என்ற வார்த்தை என்னுடைய நாக்கு நுனியில் வந்து நின்று கொண்டிருந்தது. அது மட்டும் வெளியே வந்து விழுந்திருந்தால், சாக்கோ அண்ணன் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார். என் கையில் காசு இருக்கிறது என்ற உண்மை சாக்கோ அண்ணனுக்கு நன்றாகவே தெரியுமே!
சாக்கோ அண்ணன் சொன்னார்:
"கவலைப்படாதே, நாளைக்கோ நாளை மறுநாளோ கட்டாயம் திருப்பித் தந்திடுவேன்."
நான் சொன்னேன்:
"சாக்கோ அண்ணே, என்ன வார்த்தை சொல்றீங்க? கவலைப்படாதேன்னா சொல்றீங்க. சரிதான்... நீங்க இதைத் திருப்பிக் கொடுக்கவேணுமா என்ன?"
நான் பணத்தை எடுத்து அவர் கையில் தந்தேன்.
அன்று நான் மனதிற்குள் போட்டு வைத்திருந்த திட்டம் இப்படி முடிந்துவிட்டது. மீண்டுமொரு நாளைக்கு நிகழ்ச்சியை மாற்றி வைக்க வேண்டியதுதான். ஆனால், அதிலும் ஒரு பிரச்சினை இல்லாமல் இல்லை. இனியொரு முறை போகும்போது, அவள் பதினைந்து ரூபாய்க்குப் பதிலாக இருபது ரூபாய் வேண்டும் என்று கேட்டுவிடுவாளோ? சொன்னாலும் சொல்லலாம். அது மட்டுமல்ல- அவள் எனக்காக காத்திருந்தாலும் காத்திருக்கலாம்.
அன்றே சாக்கோ அண்ணனுக்குத் தந்த ஐந்து ரூபாயையும் சம்பாதித்துக் கொண்டு போய் அவளைப் பார்த்தால் என்ன என்று மனதில் நினைத்தேன்.
கடைவீதிக்குப் போவதற்கான ஒரு சவாரி எனக்குக் கிடைத்தது. அது ஒரு நல்ல சவாரிதான். திரும்பி வரும்போது விருந்தினர் மாளிகைக்கு அருகில் நின்று என்னை ஒரு ஆள் நிறுத்தினான். அப்போது இரவு மணி எட்டு ஆகியிருந்தது. அவன் என்னைப் பார்த்துக் கேட்டான்: