தேடித் தேடி...
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6632
கருப்பு புள்ளிகளைக் கொண்ட ஒரு வெள்ளைநிற நாய் அங்கு இருந்தது. அவன் அப்போது என்னைப் பார்த்து பற்களைக் கடித்து இலேசாக முனகியபடி இருப்பான் தனிப்பட்ட முறையில் என்மீது அவன் கொண்ட வெறுப்பே அதற்குக் காரணம்.
அவனைத் தவிர வேறு நான்கு நாய்களும் அங்கு இருந்தன. அந்த ஐந்து நாய்களுமே ஒரே வயதைக் கொண்டவைகளாக இருந்தாலும் அந்த நாய்களில் எதற்கும் எச்சில் இலைகள் இருக்கும் பீப்பாய்களை நெருங்குவதற்கான தைரியம் இல்லை என்றே சொல்ல வேண்டும். காரணம்- நாங்கள் அதற்குச் சம்மதித்தால்தானே! எங்களுக்கு வேண்டிய அளவிற்குச் சாப்பிட்டு முடித்துவிட்டு நாங்கள் கிளம்பி விடுவோம். அதற்குப்பிறகு நான்கு பக்கங்களிலும் பயந்தபடி பார்த்தவாறு பதுங்கிப் பதுங்கி மற்ற நாய்கள் எச்சில் இலைகள் இருக்கும் இடத்தை நோக்கி வருவார்கள்.
நாங்கள் என்று சொன்னால் யார் என்கிறீர்களா? நானும் என்னுடைய தாயும் அல்ல. நானும் என் தந்தையும் அல்ல. நானும் என் அண்ணனும் அல்ல. நானும் என் நண்பனும் அல்ல. நானும் என்னுடைய ஒரு நாயும்தான். ஆமாம்- அதைத்தான் 'நாங்கள்' என்று சொல்கிறேன்.
மற்ற எந்த நாய்களையும் விட இரண்டு மடங்கு பெரியவன் அவன். நல்ல தைரியசாலியாக வேறு இருந்தான். மற்ற எல்லா நாய்களும் அவனைப் பார்த்துப் பயந்தன. ஒருநாள் நான் இனிப்பான உணவுப் பொருட்கள் இருந்த ஒரு இலையை நக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய நாய் சற்று தூரத்தில் உறங்கிக் கொண்டிருந்தது. அப்போதுதான் அப்படியொரு சம்பவம் நடந்தது. அந்த கருப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நிற நாய்க்கு பொறுமை எல்லை கடந்து போனது காரணமாக இருக்கலாம். என்மீது வேகமாகப் பாய்ந்து வந்தது. நாங்கள் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு புரண்டோம்.
வேறொரு மனிதக் குழந்தையாக இருந்திருந்தால், அந்தக் குழந்தையின் பிடரி நாயின் வாய்க்குள் போய், நரம்புகள் அந்த நாயின் வளைந்து காணப்படும் பற்களில் சிக்கிச் சிதறிப் போயிருக்கும். நான் நாய்களுடன் சேர்ந்து வளர்ந்தவன். என்னால் உருளமுடியும். தள்ளிப் போய் விழமுடியும், திரும்பக் கடிக்க முடியும். இப்படி எல்லாமே என்னால் முடியும். ஒரு சிறு நாய்க்குட்டியை ஒரு பெரிய நாய் கடிக்கும்போது, அது என்னவெல்லாம் செய்யுமோ, அதையெல்லாம் நானும் செய்வேன்.
அப்போது பயங்கர கோபத்துடன் வந்த அந்த நாய்கள் நான்கும் குதித்துக் கொண்டு என் மீது பாய்ந்தன.
நான் யாரை அழைத்து அழுவது? நான் அழுதேன். என்னுடைய நாய்க்கு அம்மா என்றோ- அப்பா என்றோ பெயரில்லை. அது மட்டுமல்ல-அதற்கு எந்தப் பெயரும் கிடையாது. இருந்தாலும், என்னுடைய அழுகைக்கும் நாய்களின் குரைக்கும் சத்தங்களுக்கும் மத்தியில் 'பௌ' என்ற கனமான ஒரு சத்தம் ஒரு பெரிய பாறையைப் போல வந்து ஒலித்ததை நான் கேட்கவே செய்தேன். அந்தச் சத்தத்தின் கம்பீரத்தை வாயால் சொல்லி விளங்கவைக்க உண்மையாகவே என்னால் முடியாது. என்னுடைய நாய்க்குள் இருந்துதான் அந்தச் சத்தம் வந்தது என்பதை இப்போது கூட என்னால் நம்ப முடியவில்லை.
மற்ற நாய்கள் வேகமாகப் பாய்ந்தன. அந்த கருப்பு புள்ளிகளைக் கொண்ட வெள்ளை நாயின் கழுத்து என்னுடைய நாயின் வாயில் இருந்தது. அவன் அந்த நாயின் மீது இருந்த பிடியைச் சிறிது கூட விடவில்லை. இருந்தும் எப்படியோ அந்த வெள்ளை நிற நாய் அந்தப் பிடியிலிருந்து உதறிக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. கொஞ்சம் தாமதித்திருந்தால் கூட அவன் ஒருவழி ஆகியிருப்பான்.
நான் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய நாய் வாலை ஆட்டியவாறு மெதுவாக முனகிக் கொண்டே என் உடம்பை இங்குமங்குமாய் முகர்ந்து பார்த்தது. அவன் என்னிடம் பல கேள்விகளைக் கேட்க விரும்புகிறான் என்பதை நானும் அறிவேன்.
என் முதுகிலும் நெஞ்சிலும் நிறைய காயங்கள் இருந்தன. தொடையில் நாயின் பல் பட்டு உண்டான காயம் இருந்தது. அங்கு இரத்தம் லேசாக கசிந்து கொண்டிருந்தது. அதை அவன் பார்த்தான். அடுத்த நிமிடம் தன்னுடைய நீளமான நாக்கால் அதை நக்கித் துடைக்க ஆரம்பித்தான்.
ஹோட்டலுக்குப் பின்னால் இருக்கும் குறுகலான இடத்தில் நடந்த அந்தச் சம்பவம் இப்போதும் கூட பசுமையாக அப்படியே பதிந்து இருக்கிறது. அந்த 'பௌ' என்ற சத்தத்தை அதற்குப்பிறகும் பலமுறை நான் கேட்டிருக்கிறேன். சாம்பல் குவியலிலும் குப்பை மேட்டிலும் புதிதாகப் போட்ட குட்டிகளுடன் இருக்கும் தாய்நாய் மற்ற நாய்களைப் பார்க்கும்போதும், கல்லெறிய முயற்சிக்கும் சிறுவர்களைப் பார்க்கும் போதும் அப்படியொரு 'பௌ' சத்தத்தை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் நான் கேட்ட 'பௌ' சத்தத்தில் இருந்த கடுமை மற்ற நாய்களின் 'பௌ' ஒலியில் இல்லை என்பதே உண்மை.
நான் என் உடம்பைப் பல நேரங்களில் 'பரபர'வென்று சொறிவேன். என்ன இருந்தாலும் எனக்கு இருப்பது மனிதக்குழந்தையின் தோல்தானே! அப்போது என்னுடைய நாய் என் உடலை நாவால் நக்கித் துடைக்கும். அப்படி அது நாவால் நக்கும்போது எனக்கு மிகவும் சுகமாக இருப்பது போல் தோன்றும்.
ஒரு நாள் அவன் அப்படி நக்கிக் கொண்டிருக்கும் போது ஹோட்டலுக்குப் பின்னால் கதவுக்குப் பக்கத்தில் நின்றவாறு இரண்டு மனிதர்கள் பேசிக் கொண்டிருப்பதை நான் கேட்டேன்.
"இங்க பார்த்தியா, அந்த நாய் அவனை எப்படி நாக்கால் நக்கி துடைக்குதுன்னு? அந்த நாய் தன் குட்டியை நக்குறது மாதிரி நக்குது பாரு..."
"அவனுக்கு ரொம்பவும் ஆனந்தமா இருக்கும் போல..."
அவர்களில் ஒருவன் சொன்னான். "அவன் உடம்புல இருக்குற உப்பு நாய்க்கு ரொம்பவும் பிடிச்சிருக்கும்!"
"அவன் உண்மையிலேயே கொடுத்து வச்சவன்தான்."
அவர்கள் பேசுவதற்கான அர்த்தம் எதுவுமே எனக்குப் புரியவில்லை. ஆனால் இப்போது அவர்களைப் பார்ப்பதாக இருந்தால் அவர்களைப் பார்த்து சில வார்த்தைகளாவது நான் நிச்சயம் பேசுவேன். மனிதன் எதற்காக அவனுடைய குழந்தைகளிடம் விளையாட்டு காட்டுகிறான்? அவர்களைப் பார்த்து நான் நிச்சயம் இந்தக் கேள்வியைக் கேட்பேன். என்னுடைய நாய்க்கும் அவர்கள் பேசியதன் அர்த்தம் புரிந்திருந்தால், அதுவும் அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் செய்யும்.
அவர்கள் இருவரும் எங்களையே பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அடுத்த நிமிடம் அவர்களில் ஒருவன் என்னுடைய நாயை நோக்கி ஒரு கல்லை எடுத்து எறிந்தான். அந்தக் கல் பட்டதால் அவனுக்கு பயங்கர வேதனை உண்டாகியிருக்க வேண்டும். அவன் அப்படியே பின்னோக்கி வேகமாகக் குதித்தான். அவர்களில் ஒருவன் கண்களை ஒரு மாதிரியாக உருட்டியவாறு என்னைப் பார்த்து சொன்னான்:
"எந்திரிச்சு போடா..."