தேடித் தேடி... - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6634
2
எதுவுமே சாப்பிடக் கிடைக்காமல், அது கிடைப்பதற்கான வழியும் தெரியாமல், நான் அந்தச் சந்தை விட்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். எங்கெங்கெல்லாமோ சுற்றித்திரிந்து விட்டு நான் பகல் நேரத்தில் முல்லைக்கல் பகுதிக்கு வந்து ஒரு இடத்தில் படுத்துவிட்டேன். அப்படியே படுத்தவாறு அங்கு உறங்கியும் விட்டேன்.
ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன். எனக்கு முன்னால் ஒரு பெண் நின்று சிரித்துக் கொண்டிருந்தாள். எச்சில் இலை ஒன்று அவள் உடம்பில் தொங்கிக் கொண்டிருந்தது. வாயைப் பெரிதாகத் திறந்து வைத்து சிரித்துக் கொண்டிருந்தாள். கைகளால் தட்டினாள். இப்படியும் அப்படியுமாய்க் குதித்தாள். எல்லாமே என்னைப் பார்த்தபடியேதான். பிறகு என்னைப் பார்த்து அவள் சொன்னாள்:
"உயிரை காக்கா கொத்திக்கிட்டு போயிடும்."
அவள் என்ன சொல்கிறாள் என்பதற்கான அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. அவள் ஒரு பழைய துணித்துண்டை தன்னுடைய தோளிலிருந்து எடுத்து என்மீது போட்டாள். நான் மல்லாந்து படுத்தவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் சொல்லிக் கொண்டிருந்தது எதுவுமே எனக்குப் புரியவில்லை.
அவள் என்னைக் கையைப் பிடித்து எழ வைத்தாள். அந்தப் பழைய துணியை என்னுடைய இடுப்பில் அவளே சுற்றிவிட்டாள். கடைசியில் வாசல் கதவுக்குப் பக்கத்தில் கிடந்த ஒரு சணலை எடுத்துக் கொண்டு வந்து துணிக்கு மேலே கட்டினாள்.
இப்படித்தான் வாழ்க்கையிலேயே முதல் தடவையாக எனக்கு துணி கிடைத்தது. நான் துணி என்ற ஒன்றை அணிந்ததே அப்போதுதான்.
"இதை அவிழ்த்திடக் கூடாதுடா மகனே... அவிழ்த்தேன்னா உயிரைக் காக்கா கொத்திட்டு போயிடும்..."
அடுத்த நிமிடம் அவளின் நடவடிக்கை மாறியது. அவள் அழத் தொடங்கினாள்.
"எதுவுமே சாப்பிடல. வயிறு ஒட்டிப்போய் இருக்கு. அய்யோ பாவம்! என் பிள்ளை நீ ஒண்ணுமே சாப்பிடலையா?"
இப்படிச் சொன்னவாறு அவள் ஓடினாள். என்னமோ வாயில் முணுமுணுத்தவாறு அவள் ஓடிக் கொண்டிருந்தாள்.
பழைய துணியை இடுப்பில் சுற்றிய கோலத்துடன் நான் அந்த இடத்திலேயே சில நிமிடங்கள் நின்றிருந்தேன்.
நான் எதுவுமே சாப்பிடவில்லை. என்னுடைய வயிறு உடலோடு சேர்ந்து ஒட்டிக்கிடந்தது என்று என்னைப் பற்றி வாழ்க்கையிலேயே அக்கறைப் பட்டுப் பேசிய முதல் உயிர் அந்தப் பெண்தான். என்னை 'மகனே' என்று இதுவரை அழைத்ததுகூட அவள் மட்டும்தான். அவள் ஒரு பைத்தியக்காரி என்ற விஷயம் அப்போது எனக்குத் தெரியாது. அது மட்டுமல்ல; பைத்தியம் என்ற ஒன்று இருக்கிறது என்பதே அப்போது எனக்குத் தெரியாது.
ஹோட்டலுக்குப் பின்னாலிருந்த இடைவெளியை விட்டு மனிதர்கள் மத்தியில் நான் நடந்தேன்.
நான் நடந்து போய்க் கொண்டேயிருந்தேன். எனக்கு சாப்பாடு எங்கே கிடைக்கும்? தேநீர் கடைகளில் இருக்கும் கண்ணாடியால் ஆன அலமாரிகளில் தின்னும் பொருட்கள் பலவும் இருக்கின்றன. உள்ளே ஆட்கள் அமர்ந்து அவற்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலவற்றையும் அருந்துகின்றனர். சில கடைகளில் பழக்குலைகள் மேலே தொங்கிக் கொண்டிருக்கின்றன.
தேநீர் கடையின் வாசலிலும் பழம் தொங்கிக் கொண்டிருந்த கடையின் முன்னாலும் போய் நான் நின்றேன். கீழே கிடந்த பழத்தின் தோல்களை எடுத்துத் தின்றேன். நான் எப்போதும் இருக்கும் இடத்தைத் தாண்டி ஏன் இதுவரை வராமல் இருந்தேன் என்பதை பல நேரங்களிலும் நினைத்துப் பார்த்திருக்கிறேன். காரணம் என்னவென்பது எனக்கே தெரியவில்லை. நான் இதைப்பற்றி ஏன் கேள்வியே கேட்கவில்லை? நான் அந்த நிமிடம் வரை உணவு வேண்டும் என்று யாரிடமும் கேட்டவனுமல்ல.
ஒரு காப்பி கடையின் வாசலில் நின்றிருந்தபோது, என் மேல் தண்ணீரைக் கொண்டு கொட்டினார்கள்.
இந்த தேநீர் கடைக்குப் பின்னால் போனால் என்ன என்று எண்ணி அங்கு போக முயற்சித்தேன். நாய்கள் எல்லா இடத்திலும்தான் இருக்கின்றன. சில இடங்களில் சிறுவர்களும்.
மேற்குப் பக்கத்தில் இருந்த தெரு மூலையில் அந்தப் பைத்தியக்காரியை நான் பார்த்தேன். சிறுவர்கள் அவள் மீது கற்களை எடுத்து எறிந்து கொண்டிருந்தார்கள். அவள் திரும்பி நின்று அவர்களைப் பார்த்து வக்கணை காட்டினாள். அதைப் பார்த்து சிறுவர்கள் 'ஓ' என்று கூக்குரலிட்டார்கள். மண்ணை எடுத்து அவள் மேல் வீசினார்கள். அடுத்த நிமிடம் அவள் அந்த இடத்தை விட்டு ஓடி மறைந்தாள்.
மாலை நேரம் நெருங்கிய போது ஒரு கடைத்திண்ணையில் போய் நான் அமர்ந்தேன். அங்கே மூன்று நான்கு சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். அவர்களை விட்டு விலகி நான் தனியாக ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.
அவர்கள் சிரித்தார்கள். பாட்டு பாடினார்கள். ஒரு சிறுவன் இன்னொரு சிறுவனை 'கிச்சு கிச்சு' மூட்டினான். அவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்தான். அவ்வளவுதான். அடுத்த நிமிடம் இரண்டு சிறுவர்களும் கட்டிப் பிடித்து சண்டை போட ஆரம்பித்தார்கள். அங்கு அமர்ந்திருந்த மற்ற சிறுவர்களும் சண்டையில் இறங்கினார்கள். அவர்களுக்கு அது ஒரு உற்சாகமான விளையாட்டாக இருந்தது. நான் அவர்களின் சண்டையைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தேன்.
"நாம போகணும்ல? சாப்பாட்டு நேரம் வந்திருச்சே!"
அவர்கள் எழுந்து நடந்தார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் நடந்தேன். ஒருவன் இன்னொருவனின் தலையை இலேசாக கையால் தட்டிவிட்டு ஓடினான். தொடர்ந்து எல்லோரும் ஓடினார்கள். நானும் ஓடினேன். முதலில் ஓடியவனைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல; அவர்களுடன் நானும் போய்ச் சேர வேண்டுமே என்பதற்காகத்தான். ஆனால், என்னால் அந்த அளவுக்கு வேகமாக ஓட முடியவில்லை. சிறிது தூரம் சென்றதும் ஒரு இடத்தில் கும்பலாக நின்றார்கள். அப்போது நானும் அவர்களுடன் போய் நின்று கொண்டேன்.
அவர்கள் ஹோட்டலுக்குப் பின்னால் போனார்கள். நான் அவர்களுடன் சேர்ந்து போனேன். அவர்கள் அங்கு போனதும், அங்கிருந்த நாய்கள் ஓடி மறைந்தன.
அவர்களுடன் போய் நின்று நானும் சாப்பிட்டு முடித்து வந்தவரின் கையிலிருந்த எச்சில் இலையை வாங்கினேன். நாங்கள் எல்லோரும் சாப்பிட்டோம்.
அவர்களுடன் சேர்ந்து நானும் திரும்பிச் சென்றேன். அவர்களுடன் சேர்ந்து நானும் ஒரு கடை வாசலில் படுத்து உறங்கினேன்.
அவர்களுடன் சேர்ந்ததால், நாய்களை எப்படி விரட்டியடிப்பது என்ற விஷயத்தை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு பிரம்பு எனக்குக் கிடைத்தது. எதையும் எப்படி கேட்டு வாங்குவது என்பதை நான் தெரிந்து கொண்டேன். அப்போது அவர்கள் நான்கு பேரல்ல, நாங்கள் மொத்தம் ஐந்து பேர் என்று ஆனோம்.