தேடித் தேடி... - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6634
நான் எழுந்து நின்றேன். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இன்னொரு மனிதன் தண்ணீரை எடுத்து என் தலை மீது ஊற்றினான்.
அவர்கள் அந்த இடத்தை விட்டு அகன்றவுடன் என்னுடைய நாய் தலையிலிருந்த நீரை நாக்கால் நக்கி துடைத்துவிட்டது. என் தலையில் இருக்கும் நீரைத் துணியால் துடைத்து விடுவதற்கு யார் இருக்கிறார்கள்? அவன் ஒருவகை பயத்துடன் சுற்றிலும் பார்த்தான். தனக்கு அதிகாரமில்லாத ஒரு செயலை அல்லவா அவன் செய்து கொண்டிருக்கிறான்?
இரவு நேரம் வந்துவிட்டால் அவன் சுருண்டு படுக்க ஆரம்பித்துவிடுவான். அவனுடைய பாதுகாப்பு வளையத்திற்குள் நானும் சுருண்டு படுத்திருப்பேன். அவன் தாடை என் தலை மீது இருக்கும். அப்போது எனக்கு சிறிது கூட குளிர் தெரியாது. பயம் என்பதுகூட கொஞ்சமும் எனக்கு இருக்காது. இரவு நேரத்தில் ஒவ்வொரு முறையும் தூக்கம் கலைந்து எழுகிறபோதும், ஒரு மெல்லிய ஓசை என் காதுகளில் விழும். அதில் ஒரு பாட்டு கலந்திருக்கும். இப்போது கூட அந்தப் பாட்டு என் செவிகளுக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த ஹோட்டலில் ஒரு கறுத்து தடித்த ஆள் இருந்தான். அங்கு வேலை பார்க்கும் மனிதன் அவன். அவன் என்னையே வைத்த கண் எடுக்காது பார்த்தவண்ணம் நின்றிருப்பான். அவன் என்னை எதற்காக அப்படிப் பார்க்க வேண்டும்? ஒருவேளை அவனும் என்னைப் போல எச்சில் தொட்டியில் வளர்ந்தவனாக இருப்பானோ? என்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் நிமிடங்களில் அவன் தன்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிப் போயிருக்கலாம்.
அவனையும் ஒருவேளை இதைப்போல ஒரு நாய் வளர்த்திருக்குமோ?
ஒருநாள் அவன் என்னைப் பார்த்து அழைத்தான்.
"டேய், நாய்க்குட்டி..."
அவன் அழைத்ததை நான் சரியாக கேட்கவில்லை.
மீண்டும் அவன் ஒரு கவளம் சோற்றைக் கையில் வைத்துக் கொண்டு நீட்டியவாறு அழைத்தான்.
"நாய்க்குட்டி..."
நான் வேகமாக ஓடிச் சென்று அவன் கையிலிருந்த சோற்றை வாங்கினேன். அவன் என்னைப் பார்த்து பல்லைக் காட்டினான்.
வாழ்க்கையிலேயே முதல் தடவையாக எனக்கு ஒரு கவளம் சோற்றைத் தந்தது அவன்தான். அதை அவ்வளவு எளிதில் என்னால் மறக்க முடியுமா என்ன?
அதற்கடுத்து ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு கவளம் சோறு கிடைத்துக் கொண்டிருந்தது. 'நாய்க்குட்டி' என்று அழைக்கும் குரலை எதிர்பார்த்தவாறு நான் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு படுத்திருப்பேன்.
ஒருநாள் அந்த மனிதனைக் காணவேயில்லை. அதற்கடுத்த நாளும் என்னை 'நாய்க்குட்டி' என்று யாரும் அழைக்கவில்லை. அதற்குப் பிறகு அந்தப் பல் இளிப்பை நான் பார்க்கவேயில்லை.
எனக்கு நேருக்கு நேராக பழக்கமான முதல் மனிதன் அவன்தான் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மனிதனின் சோற்றைத் தின்றுதான் நான் வளர்ந்தேனென்றாலும், நான் தின்னவேண்டும் என்பதற்காக யாரும் இலையில் பிரத்தியேகமாக சோற்றை ஒதுக்கி வைக்கவில்லை. நான் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே தினமும் ஒரு கவளம் சோற்றை எனக்காக கையில் உருட்டிக் கொண்டு வந்த மனிதன் அவன்தான். அதை எப்படி என்னால் மறக்க முடியும்?
அதுவரை எனக்கென்று எந்தப் பெயரும் கிடையாது. நான் ஒரு மனிதனாக அப்போது இல்லை. என்னை அடையாளம் கண்டு பிடிப்பதற்கு என்னிடம் என்ன இருந்தது? அந்த மனிதன்தான் எனக்கு முதல் முறையாகப் பெயர் வைத்தான்! அவன் அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதற்காக நான் காத்துக்கிடந்தேன் என்பதுதான் உண்மை.
என்னுடைய பெயர் 'நாய்க்குட்டி'.
நான் என்னுடைய நாயின் அருகில் சுருண்டு படுத்திருந்தேன். நாய் என் உடம்பை நாவால் நக்கிக் கொண்டிருந்தது. அப்போதுகூட நான் யாராவது என்னை அழைக்க மாட்டார்களா என்று எதிர்பார்த்தேன். இந்த விஷயத்தை என்னுடைய நாய் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவனுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், அவன் என்ன நினைப்பான்? தான் மட்டுமே என் மேல் அன்பு வைத்திருக்க, வேறொரு மனிதனும் என்னைத் தட்டிப் பறித்திருக்கிறான் என்று அவன் எண்ணியிருப்பானோ! நான் இன்னொரு மனிதனுக்கு அன்பைக் கொடுத்துவிட்டேன் என்று அவன் நினைத்திருப்பானோ! இந்த மனித ஜந்து நன்றி கெட்டவன் என்று அவன் மனதில் நினைத்திருப்பானோ? அப்படி என்னுடைய நாய் நினைத்திருந்தால், அது உண்மைதானே! மனித அழைப்பிற்காகக் காத்திருந்த என்னுடைய முழு கவனமும் மனிதன் மீதுதானே!
என்னை இரண்டு கால்களும் இரண்டு கைகளும் கொண்ட ஒரு மனிதப் பெண்தான் பெற்றிருக்கிறாள். அப்படியென்றால் அந்த மனிதப் பெண் எங்கே போனாள்?
நான் இந்த வாழ்க்கை முழுவதும் கேட்டுக் கொண்டே இருந்த கேள்வி அது. அதற்காக எங்கெல்லாம் நான் தேடியிருக்கிறேன்!
ஒருவேளை சாப்பாடு கிடைக்குமிடத்தில் தன் குழந்தை இருக்கட்டுமே என்று என்னைப் போட்டு விட்டு அவள் போய்விட்டாளோ! அப்படியே அந்தக் குழந்தை வளர்ந்து கொள்ளட்டும் என்று அவள் நினைத்திருக்கலாம். அந்த வகையில் பார்க்கப்போனால் நான் வளர்ந்து பெரியவன் ஆக வேண்டும் என்று என் தாய் ஆசைப்பட்டிருக்கிறாள் என்றுதானே அர்த்தம்!
நான் சற்று உரத்த குரலில் சொல்லட்டுமா?
"அம்மா... நான் வளர்ந்துட்டேன்..."
நான் இறக்கும் தருணத்திலும் உரத்த குரலில் கூறுவேன்.
"அம்மா... நான் இப்போ சாகப்போறேன்."
நான் எப்படி வளர்ந்தேன் என்ற கதையை என்னுடைய தாயைப் பார்க்க நேர்ந்தால் நான் கூறுவேன்? எதையெல்லாம் நான் என் தாயிடம் சொல்லலாம்? என் விஷயத்தில் சொல்லும் அளவிற்கு அப்படி என்ன இருக்கிறது? இதில் சில விஷயங்களை நான் சொல்லவே போவதில்லை. அப்படிச் சொல்லும் அளவிற்கு அதில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதே உண்மை. ஒவ்வொரு நாளும் நடக்கும் கதையைக் கேட்டால் உங்களுக்கே அலுப்பு தட்டிவிடும். ஆனால் என் தாய் நிச்சயம் நான் சொல்லும் கதையை மிகவும் விருப்பத்துடன் கேட்பாள்.
ஒருவேளை தாயும் மகனும் உணவைத்தேடி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கலாம். இங்கு இருக்கும்போது தாய் இறந்து போயிருக்கலாம். அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருக்கலாம். கதை இப்படி இருக்குமோ?
என்னால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை.
இல்லாவிட்டால் இப்படிக்கூட இருக்கலாம். அந்தக் குழந்தை உணவின் வாசனையால் ஈர்க்கப்பட்டு சிறிது சிறிதாகத் தவழ்ந்து இந்த இடத்தை வந்து அடைந்திருக்கலாம். என்ன இருந்தாலும் மனிதக் குழந்தையாயிற்றே! அவனுக்கு சோறு, கறி ஆகியவற்றின் வாசனையோடு ஒருவித ஈர்ப்பு உண்டானதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? இப்படிக்கூட அந்தக் கதை இருக்கலாமே!