வசுந்தரா - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
இளைஞனின் அறிவையும் நடந்து கொள்ளும் முறையையும் பார்த்து சந்தோஷப்பட்ட குண்டேச்சா அவன் ஒரு வசதியான வீட்டைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று மனதிற்குள் முடிவு செய்து அவனைத் தன்னுடைய வீட்டிலேயே தங்குமாறு கேட்டுக் கொண்டான். அதை ஏற்றுக் கொண்டு அந்த மனிதனின் வீட்டில் தங்கிய நாராயணன் அவன் செய்யும் அட்டகாசங்களைப் பற்றி எழுத ஆரம்பித்தான். கடவுளுக்குக் கூட பயப்படாத குண்டேச்சா பத்திரிகைகாரனைப் பார்த்து பயப்பட்டார்.
தன்னுடைய வீட்டில் தங்கியிருந்து பகவந்தியைப் பற்றி நாராயணன் நாடகம் எழுதிக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தபோது குண்டேச்சா பயங்கர கோபத்திற்கு ஆளாகி, தன்னுடைய நாட்டுத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வந்து அவனை மிரட்டினான்.
“நீ உயிரோட திரும்பி வந்தது பெரிய விஷயம்” -மரியா சொன்னாள், “இந்த மாதிரியான காரியங்கள்ல இனிமேல் ஈடுபடாம பார்த்துக்க மகனே.”
கரீம்பாயின் மொட்டை மாடி இப்போது முழுமையாக இருளில் மூழ்கிக் கிடந்தது. காலியான கண்ணாடி டம்ளரைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த நாராயணன் எழுந்து நின்று சொன்னான். “நாளைக்கு இதே நேரம் இந்த இடத்துல என்னோட நாடகத்தை நான் தீ வச்சு கொளுத்தி சாம்பலாக்குவேன்.”
“நான் அதை அனுமதிக்க மாட்டேன்.”
வசுந்தரா நாராயணனின் கையைப் பிடித்துக்கொண்டு அவன் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தாள். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அவர்கள் ஏதோ மேடையில் நின்று கொண்டிருப்பதைப் போலவே தோன்றியது. அவள் தொடர்ந்து சொன்னாள் “நிச்சயமா நாடகத்தை எரிக்கிறதே நான் ஒத்துக்க மாட்டேன்.”
3
உன் தாயின் வார்த்தைகளின்படி, ஒரு சிந்திப் பசுவைப் போல் வளரும்- அதே நேரத்தில்- சதைப் பிடிப்பான, மென்மையான இந்த உடல்தானே உன்னுடைய வாழ்க்கை? நீ போகின்ற இடங்களிலெல்லாம், ஏராளமான மக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்ற நகரத்தின் தெருக்களிலும், மேலே இருக்கும் துரும்பு பிடித்த கைப்பிடிகளை வவ்வால்களைப் போல பற்றிக் கொண்டு பயணிகள் தொங்கிக் கொண்டிருக்கும் பஸ்களிலும், டெலிஃபோன் பூத்களிலும், எப்போதும் ரம் வாசனை அடித்துக் கொண்டிருக்கும் கரீம்பாய் வீட்டின் உட்காரும் அறையிலும்- இப்படி நீ செல்கின்ற எல்லா இடங்களுக்கும் நீ உன்னுடைய வாழ்க்கையை உன்னுடனேயே கொண்டு போகிறாய். அதாவது - நீ போகும் இடங்களுக்கு அதை உடன் கொண்டு போக நீ விருப்பப்படவில்லையென்றாலும், உன் வாழ்க்கை எப்போதும் உன்னுடனேயேதான் இருக்கிறது. அதை எங்கேயாவது ஒரு இடத்தில் கீழே இறக்கி வைத்துவிட்டு ஓடி தப்பித்து விடலாம் என்று மனதிற்குள் நீ ஆசைப்பட வேண்டாம், பெண்ணே. ஒரு சுமை தூக்கும் தொழிலாளி மிகவும் களைத்துப் போகும்போது தலையில் இருக்கும் சுமையைச் சிறிது நேரத்திற்குக் கீழே இறக்கி வைத்துவிட்டு களைப்பு நீங்கி மீண்டும் சுமையைத் தலையில் வைத்து தன்னுடைய பயணத்தைத் தொடர்வதைப் போல் வாழ்க்கையை சிறிது நேரத்திற்கு எங்கேயாவது கொஞ்சம் இறக்கி வைத்து இளைப்பாறலாம் என்ற சிறு ஆசையைக் கூட உன் மனதில் நீ வைக்க வேண்டாம். நீ விருப்பப்பட்டாலும் இல்லையென்றாலும் இந்தச் சுமையை நீ தூக்கித்தான் ஆக வேண்டும்.
நீ தனியாக ஒரு ஆடிட்டோரியத்தில் அமர்ந்திருக்கிறாய். கோகுலின் அலுவலகத்திற்கு அருகிலுள்ள இந்த இடத்திற்கு நீ சாதாரணமாக வந்திருக்கிறாய். எல்லா நாட்களிலும் மாலை நேரங்களில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் மட்டுமே சுறுசுறுப்பாகவும் மற்ற நேரங்களில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமலும் அமைதியாக இருக்கும் தான் இந்த ஆடிட்டோரியம். நீ உன்னுடைய வாழ்க்கையைத் தாங்கிக் கொண்டு அங்கு அமர்ந்திருக்கும் விஷயம் உன்னைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. ஓரங்கள் தெளிவாக அமைக்கப்பபட்டு இருட்டாகக் காணப்படும் மேடையையே பார்த்தவாறு நீ அமர்ந்திருக்கிறாய். பிறகு இரண்டு மணி தாண்டிய பின் நாராயணனைப் பார்ப்பதற்காக நீ தோடார்மல் லேனில் இருக்கும் ஒரு மஞ்சள் நிற பழைய கட்டிடத்தின் அருகில் போய் நிற்கிறாய். சிறிது நேரம் கழித்து அயர்ன் பண்ணிய ஆடைகள் மட்டுமே அணியும் நாராயணன் முழங்கால் வரை தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரிய ஷர்ட்டை அணிந்து தூரத்தில் வரும்போதே உன்னைப் பார்த்து சிரிக்கிறான். தொடர்ந்து உன் அருகில் வந்து நிற்கிறான்.
“நீ என்னை உடனடியாகப் பார்க்கணும்னு எதுக்காக நினைச்சே?”
நீ உன் கைவிரல்களையே பார்த்தவாறு நின்றிருந்தாய். நாராயணனின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தின் நிழலை நீ கவனிக்கவில்லை.
“சொல்லு...”
நாராயணன் உன்னைத் தொட்டும் தொடாத மாதிரி உனக்கு அருகில் நின்றிருக்கிறான். அவனின் ஒரு கை அவன் சர்ட் பாக்கெட்டிற்குள் முழங்கால் வரை இருக்கிறது.
நீ உன் விரலை அவனிடம் காட்டுகிறாய். அதில் ஒர தங்க மோதிரம் மின்னிக் கொண்டிருக்கிறது.
“எனக்கு திருமணம் நிச்சயமாயிடுச்சு.”
“வாழ்த்துக்கள்!”
அவன் மனப்பூர்வமாக உன்னை வாழ்த்துகிறான்.
சிறிது நேரத்திற்கு முன்பு கோகுலின் அலுவலகத்தில் வைத்து அவன் உனக்கு இந்த மோதிரத்தை அணிவித்தான்.
“ஆனா இந்த விஷயத்தைச் சொல்றதுக்காக நான் இங்கே வரல” நீ சொன்னாய்... “உங்க நாடகத்துல ராதிகாவோட வேடத்தை நான் ஏற்று நடிக்கத் தயாரா இருக்கேன்.”
அவன் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது.
“நீ நல்லா யோசிச்சிக்கிட்டுத்தான் இதைச் சொல்றியா?”
அவன் கொஞ்சம் கூட நம்பிக்கை வராமல் உன் முகத்தையே பார்த்தான்.
“நான் தெளிவா யோசிக்காம இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்திருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா? இன்னைக்கு எனக்கு நிச்சயம் ஆச்சு. ஆனா, நேத்து ராத்திரி ஒரு பொட்டு கூட உறங்காம நான் யோசிச்சது அதைப் பத்தியில்ல... உங்களோட நாடகத்தைப் பற்றியும், பகவந்தியைப் பற்றியும்தான்...”
“பகவந்தி ரொம்பவும் பிரச்சினைக்குரிய ஒரு கதாபாத்திரம். ராதிகாவைப் போல உள்ள ஒருத்தியே நடிக்க மறுத்த ஒரு ரோல் அது...”
“அது எனக்குத் தெரியும்” - நீ தன்னம்பிக்கையுடன் சொன்னாய். “பகவந்தியோட கதை முழுவதும் எனக்கு நல்லா தெரியும். அதை எழுதினதற்கான சூழ்நிலையும் எனக்குத் தெரியும்.”
நாராயணன் காவேரியிடம் இப்படிச் சொன்னதும் உனக்குத் தெரியும். “பிராமணனா இல்லாத நான் ஒரு பூணூல் அணிஞ்சுக்கிட்டுத்தான் குண்டேச்சாவின் வீட்டிற்கே போனேன். பணக்காரனோட திருட்டுத்தனங்களை புரிஞ்சிக்கிறதுக்கு நானும் ஒரு பணக்காரனா வேடம் போட வேண்டியது கட்டாயமா இருந்துச்சு...”
நாராயணன் உன்னிடம் தொடர்ந்து கேட்டான்.
“உன் தாய் இந்த விஷயத்துக்கு சம்மதிப்பாங்கன்னு நினைக்கிறியா?”