வசுந்தரா
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7218
வசுந்தராவின் வாழ்க்கையில் நடைபெற்றது ஒரு சாதாரண நிகழ்ச்சியல்ல. அப்படிச் சாதாரண நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் யாரும் கொண்டிருக்கவில்லை. யாருடைய வாழ்க்கையிலாகட்டும், அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற ஏதாவது ஒரு சம்பவம், ஒரு கதாசிரியரின் கண்ணில் பட்டுவிட்டால், அந்தச் சம்பவத்தை அந்த எழுத்தாளர் ஒரு கதை வடிவத்தில் எழுதி என்றாவதொரு நாள் வாசகர்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் என்பது மட்டும் நிச்சயம்.
ஆனால், கதாசிரியர் கடவுளைப் போல எங்கும் பரவியிருப்பவராக இல்லாததால், உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெரும்பாலான சம்பவங்கள் அவன் பார்வையில் படாமலே போய் விடுகின்றன. அதனால் வாசகர்கள் பலரும் அந்த சம்பவங்களைப் பற்றி கடைசி வரை தெரிந்து கொள்ள முடியாமலே ஆகிவிடுகிறது. இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்ததாலோ என்னவோ ஜாவேத் எங்களிடம் ஒருமுறை சொன்னான், “ஒரு கதாசிரியருக்கு தலையின் பின்பக்கமும் கண்கள் இருக்க வேண்டும்.”
அப்போது அவனுடைய சகோதரி வசுந்தரா புத்தகங்களையும் மாத இதழ்களையும் தூசி தட்டி அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். இரண்டு அறைகள் மட்டுமே இருக்கின்ற அவர்களின் வீட்டில் புத்தகங்களைக் கவர்ந்து இழுக்கிற மாதிரி ஏதோவொன்று இருக்கிறது என்று அடிக்கடி கோகுல் கூறுவதுண்டு. எப்போது போனாலும் இதுவரை நாம் வேறெங்கும் பார்த்திராத பல புத்தகங்கள் அங்கு இருப்பதை நாம் பார்க்கலாம். ஜாவேத் மேலட்டை கிழிந்துபோன, பைண்ட் செய்யப்பட்ட, பைண்ட் பிரிந்த புத்தகங்களை மட்டுமே எப்போதும் வாங்கிக் கொண்டு வருவான். புத்தகக் கடைகளுக்குப் புதிய நூல்கள் ஏதாவது வந்தால், அவை பழைய புத்தகங்களாக ஆகும் வரை அவன் காத்திருப்பான். இது ஒருபுறமிருக்க, மற்ற பலரையும்விட அவனுக்குப் பல விஷயங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்திருந்தது என்பது ஆச்சரியமான ஒரு விஷயம்.
“ஜாவேத்தோட அப்பா கூட இப்படித்தான்”- மரியா சொன்னாள். “ஆணாக இருந்தாலும், பெண்கள் விஷயத்தைப் பற்றி பெண்களை விட நல்லா தெரிஞ்சு வச்சிருக்கிற ஆளு அவனோட அப்பா.”
மரியாவின் வயிற்றுக்குள்ளிருந்து வசுந்தராவை வெளியே எடுத்தது ஜாவேத்தின் தந்தைதான். ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸியை நான் பார்த்தது இல்லை. நான் அவருடைய குடும்பத்தைத் தெரிந்து கொள்வதற்கு முன்பே அவர் இந்த உலகத்தை விட்டு நீங்கி விட்டார். இதயம் வீங்கி அவர் மரணத்தைத் தழுவினார் என்று மரியா சொல்லித்தான் எனக்கே தெரியும். உட்கார்ந்திருக்கும் அறையிலிருந்து சமையலறைக்குப் போகும் வழியின் வாசலுக்கு மேலே மாஸ்ஸியின் ஒரு பழைய புகைப்படம் இருப்பதைப் பார்க்கலாம். தோள்கள் ஒடுங்கிய ஒரு சாம்பல் வண்ண கோட்டையும் சேட்டு தொப்பியையும் அணிந்திருக்கும் மாஸ்ஸியைப் பார்க்கும்போது வரலாற்றுப் புத்தகங்களில் எப்போதோ நாம் பார்த்திருக்கும் சுதந்திரப் போராட்ட வீரரொருவரின் சாயல் தெரியும். அந்தப் புகைப்படம் அப்படியொன்றும் மிகப் பழையதல்ல என்று மரியா எங்களிடம் சொன்னாள். மரணமடைவதற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் பறவைகள் மருத்துவமனைக்கு முன்னால் இருக்கும் ஒரு கூலி புகைப்படக்காரன் எடுத்த புகைப்படமே அது. மாஸ்ஸி மரணமடைந்த அடுத்த நாளிலிருந்து அந்தப் புகைப்படத்தின் நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கலாக ஆரம்பித்தது. மரத்தால் ஆன சட்டத்தின் உட்பக்கத்தில் சிதல்கள் பிடிக்கத் தொடங்கின. கண்ணாடிக்கும் புகைப்படத்திற்கும் நடுவில் ஒரு பூச்சி அதன் கொம்புகளை நீட்டி ஆட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். மாஸ்ஸி மரணத்தைத் தழுவி நாற்பது நாட்கள் ஆனபின் வேகமாக பழையதாக ஆரம்பித்த அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது நூறு வருடங்களுக்கு முன்னால் எடுக்கப்பட்டதைப் போல் தெரியும்.
என் பார்வை மாஸ்ஸியின் நரைத்துப் போன கைகளையும், தொடர்ந்து மரியாவின் அடி வயிற்றையும், அதற்குப் பிறகு வசுந்தராவையும் நோக்கிச் சென்றது. மரியாவின் வயிற்றில் வசுந்தரா உருவாக மூலக்காரணமாக இருந்த அதே மாஸ்ஸிதான் அவளை மரியாவின் பிறப்பு உறுப்பின் வழியாக வெளியே எடுத்ததும் என்ற விஷயம் நவீன விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல. அது மேலும் பல செய்திகளைச் சொல்லாமல் சொல்லுகின்றன. வேலையை விட்டு ஓய்வு பெற்ற பிறகு அவர் ஒரு பிரசவம் பார்க்கும் ஆணாக பணியாற்ற வேண்டும் என்று மனதில் திட்டமிட்டு வைத்திருந்தார். ஆனால், அதற்கு முன்பே அவருடைய இதயம் வீங்கி விட்டது.
“அடியே பெண்ணே...” - மரியா சொன்னாள்: “நீ வீட்டைப் பெருக்குறதை நிறுத்திட்டு கோகுலுக்கும் நாராயணனுக்கும் டீ போட்டுக் கொடு.”
தேநீர் அடங்கிய கோப்பையை என் முன்னால் வைக்கும்போது வசுந்தராவின் தலை எனக்கு நேராக குனிந்தது. பல வருடங்களுக்கு முன்பு மாஸ்ஸி வெளியே பிடித்து இழுத்த அதே தலைதான். அப்போது இப்போதிருப்பது மாதிரி இந்தத் தலையில் இவ்வளவு முடி இருந்திருக்காது. அப்போது தலையில் நல்ல ஈரமிருந்திருக்கும். அதிலிருந்து இளம் சூடு கொண்ட நீர் கீழே சொட்டிக் கொண்டிருந்திருக்கும்.
“இந்தப் பொண்ணை வச்சிக்கிட்டு நான் என்ன பண்றது?” - மரியா சொன்னாள். “ஒரு சிந்திப் பசுவைப் போல இவ வளர்ந்துக்கிட்டு இருக்கா. இவங்க அப்பா மட்டும் உயிரோட இருந்திருந்தா...”
“நான் இங்கேதான் இருக்கேன்...” சுவரில் இருந்தவாறு மாஸ்ஸி அப்படிச் சொல்வதைப் போல் எனக்குத் தோன்றியது.
எனக்கு இந்த மாதிரி அவ்வப்போது ஏதாவது மனதில் தோன்றுவதுண்டு. மாஸ்ஸியைப் பற்றிய பல நினைவுகள் தனக்கும் பல நேரங்களில் வருவதுண்டு என்று ஜாவேத் கூட சொல்லுவான்.
“அப்பா இல்லாத ஒரு பொண்ணை வளர்த்து பெரியவளா ஆக்குறதுக்குப் பின்னாடி இருக்கிற கஷ்டங்களை உங்க யாராலயும் புரிஞ்சுக்க முடியாது மகனே!”
இந்த வார்த்தைகளை மரியா என்னிடமும் கோகுலிடமும்தான் கூறிக் கொண்டிருக்கிறாள் என்பதில் ஒரு சிறு திருத்தம். ‘மகனே’ என்று கூறும்போது அவள் பார்வை கோகுலின் மேல்தான் இருந்தது. எந்த விஷயமாக இருந்தாலும், கோகுல்தான் முன்னால் இருப்பான். ஆனால், அதற்காக எப்போதும் நான் கவலைப்பட்டதே கிடையாது. கோகுல் இந்த வீட்டிலுள்ளவர்களுக்கு அறிமுகமாவதற்கு முன்பே நான் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாக இருந்தேன். ஒருமுறை மரியா என்னிடம் சொன்னாள்; “நீ இருக்குறதுனால வரிசையில நின்னு ட்ரெயினுக்கு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமோ ரேஷன் கார்டு புதுப்பிக்க வேண்டிய தேவையோ எனக்கு இல்லாமலே போச்சு”. ஜாவேத் இந்த மாதிரி காரியங்கள் எதுவும் செய்வதில்லை. கோகுலும் இவ்வகைச் செயல்களைச் செய்வதில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவன் எப்போது பார்த்தாலும் நவநாகரீகமான முறையில் தைக்கப்பட்ட பேண்ட்டையும் ஷர்ட்டையும் அணிந்து கார் ஓட்டிக் கொண்டு வருவான்.