வசுந்தரா - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
வசுந்தராவைப் போலவே மரியாவும் சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றைப் பெரிதாகப் பார்க்கக் கூடியவளே. ஒருநாள் உட்கார்ந்திருக்கும் அறையில் பழைய கார்ப்பெட்டின் மேல் கால்களை வைத்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். அப்போது வசுந்தரா ஒரு பழைய துணியை எடுத்து வந்து எனக்கு முன்னால் கீழே அமர்ந்து என் காலணிகளில் இருந்த அழுக்கை மிகவும் கவனத்துடன் துடைத்தாள். அப்போதுதான் கட்டிட வேலை செய்யும் மனிதர்களின் கால்களில் இருப்பதைப் போல என் கால்கள் அழுக்காகவும், தூசு படிந்ததாகவும் இருப்பதை நான் பார்த்தேன். அதே நேரத்தில் எனக்கு முன்னால் கஃப் பட்டன் இட்டு சிறிது கூட கசங்காத சட்டையை அணிந்து ஒளி வீசிக் கொண்டிருக்கும் ஷூவும் அணிந்து கோகுல் அமர்ந்திருந்தான்.
மரியாவின் புதுப்பிக்கப்பட்ட ட்ரைவிங் லைசென்ஸ் அவளிடம் தருவதற்காக நான் அங்கே போயிருந்தேன். நாடகத்தின் ரிகர்சல் இருந்ததால் நான் அங்கு அதிக நேரம் இருக்காமல் உடனே புறப்பட்டு விட்டேன்.
“நான் உங்களை இறக்கி விடுறேன்.”
கோகுல் எனக்குப் பின்னால் வந்தான். பார்ஸி சுடுகாட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஃப்ளாட்டுகளில் ஒன்றில்தான் விக்டர் கரீம்பாய் வசிக்கிறார். அதன் மொட்டை மாடியில்தான் நாங்கள் நாடக ஒத்திகைக்காக தினந்தோறும் மாலை நேரங்களில் கூடுவோம். முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு நல்ல ஒரு திறமையான நடிகை கிடைக்காததால் ஒத்திகையை ஆரம்பிப்பதற்கே மிகவும் தாமதமாகிக் கொண்டிருந்தது. நாடகத்தை அரங்கேற்றம் செய்வதற்கு இன்னும் ஆறு வார காலமே இடையில் இருந்தது. நாடகத்தில் நாயகியாக நடிக்கும் ராதிகா மொட்டை மாடியின் வெளிச்சத்தில் நின்று கொண்டிருப்பதை நான் சற்று தூரத்தில் வரும்போதே பார்த்தேன். அவளுக்குப் பக்கத்தில் லைட்டிங் இன்சார்ஜாக இருக்கும் பார்த்தா நின்றிருந்தான். கோகுல் என் கையை அழுத்தமாக பற்றி என்னை அங்கே இறக்கி விட்ட பிறகு காரைப் பின்னால் திருப்பி ஓட்டி பிரதான சாலைக்குப் போய் அடுத்த நிமிடம் காணாமல் போனான். கோகுலைப் பற்றி பொதுவாக யாரும் எந்தக் குற்றமும் சொல்வதில்லை. ஒரு ‘பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்’ என்று அவனைப் பற்றி கரீம்பாய் குறிப்பிடுவார்.
2
நாராயணனை கரீம்பாயின் வீட்டின் முன்னால் இறக்கி விட்ட பிறகு நான் திரும்பவும் காரை ஓட்டிக் கொண்டு மரியாவின் வீட்டிற்கு வந்தேன். ஒரு பக்கம் சற்று சரிந்தவாறு கிடக்கும் மரத்தால் ஆன கேட்டைக் கடந்தபோது மரியா வெளியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். மாஸ்ஸி தன்னுடைய கைகளால் உண்டாக்கிய கேட் அது என்று அவள் பலமுறை என்னிடம் கூறியிருப்பதை நான் நினைத்துப் பார்த்தேன். கர்ப்பிணிகளின் வயிற்றுக்குள்ளிருந்து குழந்தைகளை வெளியே எடுப்பதில் மட்டுமல்ல, கேட் உண்டாக்குவதிலும் மாஸ்ஸி திறமையானவராக இருந்தார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அது ஒரு சிறு வீடுதான். என்றாலும், அந்த வீட்டின் முன்னால் விசாலமான முற்றம் இருந்தது. ஒரு பெரிய நாவல் மரமும் மாமரமும் உள்ள அந்த முற்றம் நகரத்தில் உண்மையிலேயே பெரிய விஷயம்தான்.
“நீ திரும்ப வந்தது நல்லதாப் போச்சு”- மரியா சொன்னாள். “வசுந்தராவுக்கு பேச்சுத் துணைக்கு ஒரு ஆள் கிடைச்ச மாதிரி ஆச்சுல்ல. நான் மார்க்கெட்டுக்குப் போயி காய்கறிகள் வாங்கிட்டு வந்திர்றேன்...”
ஜாவேத்தை வீட்டில் பார்க்கவே முடியவில்லை. தனக்கென்று ஒரு நிரந்தரத் தொழில் இல்லாத அவன் குதிரைப் பந்தய டிக்கெட்டுகள் விற்றும் லாட்டரி ஏஜென்ஸிகள் எடுத்தும், ரெஸ்ட்டாரெண்டுகளில் பேண்ட் வாத்தியம் வாசித்தும் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தான். நகரத்தின் மேற்பகுதியில் குன்றுகளைப் போல முளைத்து வரும் கெஸ்ட் ஹவுஸ்களுடன் ஜாவேத்திற்கு சில தொடர்புகள் இருப்பதாக நாராயணன் ஒருநாள் என்னிடம் சொன்னான். ஒருமுறை போலீஸ்காரர்கள் அவனைத் தேடி வர, வழியில் அவர்களைப் பார்த்த ஜாவேத் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவர்களை அப்படியே திருப்பி அனுப்பிய நிகழ்ச்சி உண்மையிலேயே நடந்த ஒன்று. கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கும் பணக்காரர்களுக்குப் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மோசமான காரியத்தை ஜாவேத் செய்தாலும், தன் கைகளில் கனமான சில புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருப்பதை பல நேரங்களில் நான் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் வசுந்தராவுடன் சேர்ந்து அமெரிக்கன் லைப்ரரிக்கு நான் சென்றிருந்தபோது, அங்கே மூன்று புத்தகங்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவன் ஏதோ குறிப்புகள் எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். சமீபத்தில் அவனுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, நகரத்தின் காற்று மாசுபடும் விஷயத்தைப் பற்றி இப்படி சொன்னான். “நேற்று நம்ம நகரத்தோட காற்று மாசுபடும் அளவு என்னன்னு தெரியுமா? ஸல்ஃபர் டை ஆக்ஸைடு ஒரு க்யூபிக் மீட்டிரில் 181 மைக்ரோ கிராம், ஆக்ஸைடு ஆஃப் நைட்ரஜன் 203, கார்பன் மோனாக்ஸைடு 7047, எஸ்.பி.எம். 936.”
மரியாவின் கைகளில் பலவகைப்பட்ட பைகள் இருந்தன. வாரத்திற்கொருமுறை அவள் மார்க்கெட்டுக்குப் போய் காய்கறிகளும் தானியங்களும் வாங்கிக் கொண்டு வருவாள். ஒருமுறை நானும் நாராயணனும் அவளுடன் சென்றோம். தார்ப்பாய் போடப்பட்டிருக்கும் மார்க்கெட் பகுதியில் அழுகிப் போன காய்கறிகள் ஒரு ஓரத்தில் குவிந்து கிடந்தன. பசுக்களும் பன்றிகளும் அழுக்கடைந்து போயிருந்த மூலைகளில் முகத்தை உரசியவாறு நின்றிருந்தன. மரியா காய்கறிகளின் விலையை விசாரித்துக் கொண்டிருந்தபோது கெட்டுப் போன முட்டைக்கோஸ் நாற்றத்தை அனுபவித்தபடி நானும் நாராயணனும் நாடகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகியிருப்பதைப் பற்றி பேசியவாறு நின்றிருந்தோம். தற்போதைய பாரத நாடகக் கலை இன்னும் அதற்கான தனித்துவத்தைப் பெறாமலே இருக்கிறது என்றான் நாராயணன். நாடகத்திற்கென்று ஒரு புதிய வடிவத்தை உண்டாக்கும் முயற்சியில் நாட்டுக் கலை வடிவங்களைப் பெரும்பாலும் சார்ந்திருப்பது நாடகக் கலைக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றும் என்னிடம் நாராயணன் சொன்னான்.
மரியா பைகளுடன் காரில் ஏறி மார்க்கெட்டிற்குப் புறப்பட்டாள். மாஸ்ஸியின் காலத்திலிருந்து இருக்கும் அந்தக் காரை மார்க்கெட்டுக்கோ, சர்ச்சுக்கோ போகும்போது மட்டுமே அவள் பயன்படுத்துவாள்.
வசுந்தராவிற்குத் துணையாக என்னை வீட்டில் விட்டு விட்டு மரியா சென்றது குறித்து மனதிற்குள் உண்மையாகவே பெருமைப்பட்டேன். அவள் திரும்பி வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ கூட ஆகலாம். ஒவ்வொரு காய்கறியின் விலையையும் பல கடைகளிலும் ஏறி விசாரித்த பிறகுதான் அவள் வாங்குவாள். அது மட்டுமல்ல. தராசில் காய்கறிகளை எடை போடும்போது குறைவாக இருந்தது என்று பட்டுவிட்டால், பல நேரங்களில் பையிலிருக்கும் காய்கறிகளை வெளியே எடுத்து மீண்டும் எடை போடச் சொல்லுவாள்.