வசுந்தரா - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கியிருக்கும் பணக்காரர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யும் அவனுக்குப் பலதரப்பட்ட பெண்களையும் நன்றாகவே தெரியும். அவர்களில் பலரும் கணவன் குழந்தைகளுடன் மதிப்பு, மரியாதையுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்ற உண்மை தெரிய வந்தபோது, உண்மையிலேயே ஜாவேத் அதிர்ந்து போனான். பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் மாமா வேலை பார்ப்பதை நினைத்து பல நேரங்களில் அவன் மனதிற்குள் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறான். இப்போது அவன் அதைப் பற்றியெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. அதற்காக வருத்தப்படுவதும் இல்லை. கணவனையும் குழந்தைகளையும் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு கெஸ்ட் ஹவுஸைத் தேடி வரும் பெண்களுக்குத்தான் உண்மையாகப் பார்க்கப் போனால் அந்தக் குற்ற உணர்வு இருக்க வேண்டும். அவர்களுக்கும் அவர்ளோடு இருக்கும் பணக்காரர்களுக்கும் இல்லாத குற்ற உணர்வு நடுவில் நின்றிருக்கும் தனக்கு மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று அந்த விஷயத்தை நியாயப்படுத்த முயன்றான் ஜாவேத். வெறுக்கக் கூடியதும் மோசமானதுமான ஒரு செயலைச் செய்யும் ஒரு மனிதன் அந்தச் செயல் மூலம் தன்னுடைய மனதை சுத்தம் செய்து கொள்கிறான் என்றொரு நம்பிக்கையை அவன் கொண்டிருந்தான். வசுந்தராவைப் பற்றியுள்ள நகைச்சுவையை எதிர்காலத்தில் மனைவியிடமாவது கூற முடியும். ஆனால், தன் தொழிலுடன் சம்பந்தப்பட்ட இந்த மாதிரியான சில விஷயங்களைத் தன்னால் எந்த நிமிடத்திலும் வேறு யாரிடமும் கூறவே முடியாது என்பதை நினைத்துப் பார்த்தபோது ஜாவேத்திற்கு மூச்சு விடவே மிகவும் கஷ்டமாக இருந்தது. வாழ்க்கையின் பெரிய ஒரு பகுதியை ஒரு அப்பத்தைப் போன்று பிய்த்து மற்றவர்களுடன் பங்கு வைக்க முயன்றாலும், சில துண்டுகளை நாமேதான் தின்று தீர்க்க வேண்டும். அந்தக் கசப்பான அப்பத்தின் துண்டு வேறு யாருக்கு வேண்டும்?
“யெஸ்...” - ஸைட்விங்கின் பின்னால் நின்றவாறு விக்டர் கரீம்பாய் சொன்னார். “அன்ட்ரெஸ் அண்ட் மூவ் ஆன்...”
ஃபுல் ட்ரெஸ் ஒத்திகை தொடர்ந்து கொண்டிருந்தது.
6
இன்று நாடகத்தின் முதல் மேடையேற்றம் ஒரு மகா குடிகாரனாக இருந்தாலும் கரீம்பாய் இன்று யாரையும் மதுவைத் தொடவே அனுமதிக்க மாட்டார் என்பதை நன்கு அறிந்திருந்த பார்த்தா பொழுது புலர்வதற்கு முன்பே படுக்கையை விட்டு எழுந்து தன்னுடைய வயிற்றுக்குள் ரம்மை முழுமையாக நிறைத்து விட்டு மீண்டும் படுக்கையில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான். பெரிய விலைக்கு விற்கலாம் என்று நினைக்கும் ஒரு வியாபாரி தானியத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைப்பதைப் போல் இருந்தது அவன் செயல். வயிறு ஒரு கோடவுனைப் போல எண்ணி அதில் ரம்மை மறைத்து வைத்ததால் உண்டான சந்தோஷத்துடன் பார்த்தா மல்லாக்க படுத்தவாறு குறட்டை விட்டுத் தூங்க ஆரம்பித்தான். அவனுக்கு வெளியே நேரம் புலர்ந்தது. பறவைகள் ஓசை எழுப்ப ஆரம்பித்தன.
மிகவும் தாமதமாகப் படுத்த கரீம்பாய்க்கு படுக்கையை விட்டு எழுந்தபோது தலையில் பயங்கர வலி இருப்பது போல் தோன்றியது. முதல் நாள் நடந்த முழு ஒத்திகை பொதுவாக எல்லோரையுமே திருப்திப்படுத்தியது என்றாலும் கரீம்பாய்க்கு அதில் திருப்தி உண்டாகவில்லை. பல பகுதிகளை மேலும் மெருகேற்ற வேண்டும் என்று அவர் நினைத்தார். அதனால் அவர் மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அவர் அறைக்குள் வெறி பிடித்த மனிதனைப் போல இங்குமங்குமாய் நடப்பதும், தனக்கு முன்னால் கண்ட பொருட்கள் ஒவ்வொன்றையும் காலால் எட்டி உதைப்பதுமாக இருந்தார். ‘என்னைக்கு என் வேலையில எனக்கு திருப்தின்னு ஒண்ணு உண்டாகும்? நான் செய்ய வேண்டிய காரியங்களை முழுமையா செய்து முடிச்சேன்ற சந்தோஷத்தோட எப்போவாவது என்னால நிம்மதியா படுத்து உறங்க முடியுமா?’ - அவர் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார். அவருடைய மனைவி அவர் சவரம் செய்ய பயன்படுத்தும் கண்ணாடியின் முன்னால் போய் நின்று தலையையும் சிவந்து போயிருந்த கண்களையும் பார்த்தவாறு சொன்னாள். “விக்டர் கரீம்பாய்... உன் நாடகம் ஒரு பக்கம் கிடக்கட்டும். அலமாரியைத் திறந்து ரம் பாட்டிலை எடுத்து குடலை நிரப்பு. பிறகு ஏதாவது ஒரு பெண் மேல போய்ப் படு...”
பிணத்தைத் தின்னும் எறும்புகளைப் போல நாடகம் அவரைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தது. மக்கள் முன் நடத்திக் காட்ட வேண்டும் என்று ஒரு நாடகத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அவருக்கு அதற்குப் பிறகு உணவு, உறக்கம் எதுவுமே இல்லாமற்போகும். பல மடங்கு ரம் குடிப்பது அதிகமாகும். நாடகத்தின் முதல் காட்சி முடிகிறபோது எழுந்து நடக்க முடியாத அளவிற்கு அவர் மிகவும் களைப்படைந்து போய்க் காணப்படுவார். சாகாமல் இருப்பதற்காகத்தான் கரீம்பாய் நாடகமே நடத்துகிறார். அதனால் தொடர்ந்து நாடகத்தை நடத்துவதே சரி என்ற முடிவுக்கு அவர் வந்தார். குழாயின் அருகில் சென்று குனிந்து நின்று தொண்டைக்குள் கையை விட்டு அவர் பித்த நீரும் கபமும் வெளியே வரும்படி வாந்தி எடுத்தார். அதற்குப் பிறகு அவருக்கு கொஞ்சம் சரியானது மாதிரி இருந்தது.
காலையில் நகரத்தில் ஒரு சுற்று போய்விட்டு வரலாம் என்று போன ஜாவேத் ஒரு புத்தகக் கடையில் இருந்தாவறு நாராயணனை தொலைபேசியில் அழைத்தான். “க்ரேட் நியூஸ் நண்பா... நம்ம நாடகம் இன்னைக்கு ஹவுஸ் ஃபுல் ஆகும்.”
ஏழு இடங்களில் நாடகத்திற்கான டிக்கெட் விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் பெரும்பாலானவை புத்தகக் கடைகள். டிக்கெட் விற்பனை படுவேகமாக நடந்து கொண்டிருந்தது.
“நத்துராம் சன்ஸ் முன்னாடி டிக்கெட்டிற்கு க்யூ...” ஜாவேத் உற்சாகமாகச் சொன்னான். “நம்புறதுக்கே கஷ்டமா இருக்கு.”
நாராயணன் அதற்கு மவுனம் சாதித்தான். “நீ என்ன ஒண்ணுமே பேசாம இருக்குறே?”
“அது ஒரு நல்ல நியூஸ் இல்ல...”
“அப்படின்னா ஆடிட்டோரியம் காலியா கிடக்கணும்னு நீ விரும்புறியா?”
“நம்ம நாடகத்தைப் பார்க்குறதுக்கு ஆளுங்க டிக்கெட் வாங்க க்யூவுல நிக்கிறாங்கன்னா, அதுல ஏதோ விஷயம் இருக்குன்னு அர்த்தம். நாம முன்னெச்சரிக்கையா இருக்கணும்” -நாராயணன் தொடர்ந்து சொன்னான். “சினிமா டிக்கெட் எடுக்கத்தான் பொதுவா ஆளுங்க க்யூவுல நிக்கிறதை நாம கேள்விப்பட்டிருக்கோம். நாடகத்துக்காக யாராவது க்யூவுல நின்னு நீ பார்த்திருக்கியா?”
“நீ சொல்றது எனக்கும் புரியுது.”
ஜாவேத் ரிஸீவரின் உட்பகுதியையே உற்றுப் பார்த்தான். “அந்தக் காட்சியைப் பற்றிய செய்தி வெளியே எப்படியோ கசிஞ்சிருக்கு...” - நாராயணன் சொன்னான். “நாம முன்னெச்சரிக்கையா இருந்தது எல்லாமே வீணாயிடுச்சு.”
எது நடக்கக்கூடாது என்று இருக்கிறதோ அதுதான் முதலில் நடக்கும் என்ற தன்னுடைய அனுபவ அறிவை நாராயணன் மீண்டும் ஒருமுறை சொன்னான்.