வசுந்தரா - Page 11
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7218
“எது வெளியே தெரியக் கூடாதோ, அதுதான் முதலில் எல்லோருக்குமே தெரிய வரும்.”
“நீ இன்னைக்கு குதிரைப் பந்தயத்துக்கும் கூட்டிக் கொடுக்குறதுக்கும் விடுமுறை விட்டிருக்கேல்ல? நேரம் இன்னும் நிறைய இருக்கு. நீ எல்லா இடங்களுக்கும் போய் டிக்கெட் விற்பனை எப்படி இருக்குன்னு கொஞ்சம் விசாரிச்சிட்டு வா...”
“சரி” - ஜாவேத் சொன்னான். “நான் ஒரு ரவுண்ட் போயிட்டு வர்றேன்.”
நாராயணன் தன்னுடைய அயர்ன் பண்ணப்பட்ட சட்டையின் கிணறு போன்ற ஆழமான பாக்கெட்டுகளுக்குள் கையை நுழைத்தவாறு அறைக்குள் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருக்க, ஜாவேத் நத்துராம் சன்ஸில் இருந்து புத்தகப் புழுவை நோக்கிப் புறப்பட்டான். அங்கே க்யூ எதுவும் இல்லாததால் அவனுக்கு லேசாக நிம்மதி உண்டானது. செய்தி எப்படியோ வெளியே கசிந்துவிட்டது என்று நாராயணன் சொன்னதற்கு அடிப்படையே இல்லையோ என்று அவன் நினைக்க ஆரம்பித்தான். எதை வெளியே சொல்லக் கூடாதோ அதை எந்தக் காலத்திலும் யாரும் வெளியே சொல்வதில்லை என்று நாராயணன் முன்பு சொன்னதையே சற்று மாற்றித் திருத்தினான் ஜாவேத். ‘புத்தகப் புழு’வின் உரிமையாளர் சிவப்பு உடை அணிந்த சர்தார்ஜி கால்குலேட்டரில் கணக்கைக் கூட்டியவாறு சொன்னார். “வாழ்த்துக்கள் மிஸ்டர் ஜாவேத். உங்களோட டிக்கெட்டுகள் முழுசா வித்துடுச்சு...”
கடையைத் திறந்து ஒரு மணி நேரத்திற்குள் நாடகத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது குறித்து சர்தார்ஜி சந்தோஷப்படுவது இயற்கையே என்று ஜாவேத் கருதினான். புத்தகங்கள் விற்கும் மனிதராக இருந்தாலும், அவர் ஒரு வியாபாரிதானே! ஒரு வியாபாரி எப்போதும் மன திருப்தி அடைவது தன்னுடைய வியாபாரம் வெற்றிகரமாக நடக்கும்போது தான். அந்த உண்மையையும் ஜாவேத் நன்றாகவே அறிந்திருந்தான். அவனுக்குப் புரியாதது ஒன்றே ஒன்றுதான். எதற்காக தான் கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் மனிதர்களுக்குப் பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்ய வேண்டும் என்பதே அது.
மதிய நேரத்தில் ஒரு பத்திரிகை கரீம்பாயை தொலைபேசியில் அழைத்தது. அவருக்கு இங்கு வந்த முதல் தொலைபேசி அழைப்பு அதுதான். நாடகத்திற்குப் பொதுவாக பத்திரிகையாளர்களை அவரே நேரில் சென்று வரும்படி அழைப்பதுதான் எப்போதும் இருக்கும் வழக்கம். ஒரு நாடகம் அரங்கேறும்போது எத்தனையோ கஷ்டங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் மூலம் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார் கரீம்பாய். நடத்தவிருக்கும் நாடகத்திற்காகத் தேர்ந்தெடுத்த கதைக்கு மேடை வடிவம் கொடுப்பதிலிருந்து அந்தக் கஷ்டங்கள் வரத் தொடங்கும். நாடகத் தயாரிப்பிற்கு அதை விளம்பரப்படுத்துவதற்கும் வேறு சில முக்கிய விஷயங்களுக்கும் தேவைப்படும் இரண்டோ அல்லது இரண்டரை லட்சம் ரூபாய்களைப் புரட்டுவதற்குப் படுகிற சிரமங்களைக் கூட ஓரளவுக்குத் தாங்கிக் கொள்ளலாம். தாங்கிக் கொள்ள முடியாதது ஆங்கிலப் பத்திரிகைகளில் நாடக விமர்சகர்களை நேரில் போய் பார்ப்பது என்பதுதான். இப்படிப் பல்வேறு விஷயங்களையும் மனதில் அசை போட்டவாறு கரீம்பாய் தொலைபேசியை எடுத்து காதில் வைத்தார்.
“நான் டைம்ஸ் எக்ஸ்பிரஸ்ல இருந்து பேசுறேன். பேரு... வர்கீஸ்...”
“ரொம்ப சந்தோஷம்.”
“நாடகத்தோட முதல் காட்சி இன்னைக்குத்தானே? கதாநாயகியா நடிக்கிற பொண்ணை பேட்டி எடுக்கணும். ஃபோட்டோகிராஃபரைக் கூட்டிட்டு நான் அங்கே வர்றேன்.”
“ஏன் கதாநாயகியைப் பார்க்கணும்?” - கரீம்பாயின் சந்தோஷம் மறைந்தது. “தேவையான விவரங்களை நான் தர்றேன். நான்தான் நாடகத்தோட டைரக்டர்- விக்டர் கரீம்பாய்.”
“அந்தப் பொண்ணைப் பார்த்துத்தான் நான் பேசணும். உங்கக்கிட்ட இல்ல...”- அந்த ஆள் சொன்னான். “அந்தப் பெண்ணோட தொலைபேசி எண்ணைத் தாங்க.”
“அவக்கிட்ட தொலைபேசி இல்ல...”
“நீங்க பொய் சொல்றீங்க. சரி... நான் பார்த்துக்குறேன்.”
அந்தப் பக்கம் தொலைபேசியை வைக்கும் சத்தம் கேட்டது.
எப்படியோ விஷயம் பத்திரிகைக்காரர்கள் வரை கசிந்திருக்கிறது என்பதை கரீம்பாய் புரிந்து கொண்டார். நாடகத்திற்கான டிக்கெட்டுகள் முழுவதும் மதியத்திற்கு முன்பே விற்றுவிட்டன என்பதை அறிந்தபோது மனதிற்குள் அவருக்கு மகிழ்ச்சி உண்டானதென்னவோ உண்மை. கடந்த இருபது வருடங்களில் ஒரு டஜன் நாடகங்களுக்கு மேலாக அவர் இயக்கி அரங்கேற்றம் செய்திருந்தாலும் இதுவரை எந்த நாடகத்திற்கும் அரங்கு நிறைந்ததில்லை. பெரும்பாலான நாடகங்களை அரங்கத்தில் கூட்டமே இல்லாமல்தான் அவர் நடத்தியிருக்கிறார். இப்போதுதான் முதல் தடவையாக அவரின் நாடகத்திற்கு அரங்கு நிறைந்திருக்கிறது என்றாலும் அந்தப் பத்திரிகையாளர் பேசிய விதம் அவருக்கு பயங்கர வெறுப்பை உண்டாக்கியது.
நாராயணன் வந்தபோது கரீம்பாய் பத்திரிகையாளர் தொலைபேசியில் பேசிய விஷயத்தைச் சொன்னார்.
“பத்திரிகைகளோட கவனம் வசுந்தராவை நோக்கித் திரும்புவது ரொம்பவும் ஆபத்தானது” - நாயணன் சொன்னான். “ப்ரஹ்த்தியன் பரம்பரையோட முடிவைக் காட்டுறதுதான் நம்மோட நாடகம். பத்திரிகை அதைப் பற்றித்தான் எழுதணும்.”
“நீ சொல்றது சரிதான்.”
கரீம்பாய் தலையை ஆட்டினார் ஒரு வருடத்திற்கும் மேலாக நடத்திய ஆலோசனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பிறகுதான் அவர் இப்படிப்பட்ட புதுமையான கதைக் கருவைக் கொண்ட நாடகத்தையே நடத்தத் தீர்மானித்தார். மனதில் வெறுப்பு மேலோங்க தொலைபேசியைப் பார்த்த அவர் இறுமினார். பின் சொன்னார்.
“வசுந்தராவை இன்னைக்கு ஒரு பத்திரிகைக்காரனும் பார்த்துப் பேச முடியாது!”
நாராயணன் தொலைபேசியின் அருகில் சென்றான். ஜாவேத் தொலைபேசியை எடுத்தான். நாராயணன் சொன்னான். “வசுந்தரா என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? நாலு மணி வரை அவ நல்லா ஓய்வெடுக்கட்டும்.” நாராயணன் தொடர்ந்து சொன்னான். “ஒரு முக்கியமான விஷயம். ஒரு பத்திரிகையாளரிடமும் அவ இன்னைக்கு பேசக்கூடாது. ஜாவேத், இந்த விஷயத்தை நீ கவனமா பார்த்துக்கோ.”
“மன்னிக்கணும் நாராயணன்” - ஜாவேத் சொன்னான் - “ஒரு பத்திரிகைக்காரன் இப்போத்தான் அவளை பேட்டி எடுத்து முடிச்சி புகைப்படங்களும் எடுத்துக்கொண்டு போனான்.”
“யார் அந்த ஆளு?”
“வர்கீஸ்...”
நாராயணன் அதற்கு மேல் எதுவும் பேசாமல் தொலைபேசியைக் கீழே வைத்தான். வரப்போகும் ஆபத்தை அவன் காலையிலிருந்தே ஓரளவுக்கு எதிர்பார்த்தான். ஆனால், இப்போது ஒன்றும் செய்ய முடியாது. கஷ்டப்பட்டு பண்ணிய ஒத்திகைகளின் வழியே பகவந்தி எப்போதோ பிறந்துவிட்டாள். மேடையில் இனிமேல் நாடகத்தில் ஒரு சிறு மாற்றத்தைக் கூட பண்ண முடியாது என்பதை அவன் நன்றாகவே அறிந்திருந்தான். கரீம்பாயும் பார்த்தாவும் கூட அதே கருத்தைத்தான் சொன்னார்கள். அப்படியே ஒரு சிறு மாற்றம் நாடகத்தில் செய்வதாக இருந்தால், அதற்கு நாராயணன் தயாராக இருக்கிறானா? தன்னுடைய நாடகம் முழுமையாக எழுதி முடிக்கப்பட்டு விட்டால், அதிலிருந்து ஒரு வரியைக் கூட நீக்கவோ ஒரு வார்த்தையை மாற்றவோ அல்லது எடுக்கவோ அவன் சம்மதிக்கவே மாடடான். கஷ்டப்பட்டு உருவாக்கிய ஒரு வார்த்தை ஒரு உயிருள்ள ஜீவன் என்பான் அவன்.