வசுந்தரா - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
ஒரு பெரிய குற்ற உணர்வுடன் ராதிகா மொட்டை மாடியில் ஒரு மூலையில் தலையைக் குனிந்தவாறு உட்கார்ந்திருந்தாள். அவள் நாராயணனிடம் இப்படிச் சொன்னதாக நாராயணன் என்னிடம் சொன்னான். “குண்டேச்சா, பகவந்தியை முழு நிர்வாணமாக நிக்க வச்சு பார்க்குறான்னு நீங்க பிடிவாதமா சொன்னதுனாலதான் நான் இந்த வேடத்தைச் செய்ய முடியாதுன்னு சொன்னேன். இடுப்புல கொஞ்சமாவது துணி இருக்கலாம்னு நீங்க சம்மதிச்சா, நான் பகவந்தியா மேடையில வாழ்ந்து காட்டுறேன்...”
அதற்கு நாராயணன் சொல்லியிருக்கான். “அப்பா, அம்மா முன்னாடியும், சகோதரர்கள் முன்னாடியும் உடம்புல துணி இல்லாம நின்னுக்கிட்டு இருக்குற அந்த ஏழைப்பெண்ணைப் பற்றி ஒரு நிமிடம் மனசுல நினைச்சுப் பாரு. அவளோட வேதனையின் ஒரு பகுதியையாவது புரிஞ்சுக்க முயற்சி பண்ணு. அப்போ உன்னோட கொள்கைகள் எல்லாத்தையும் மறந்திடுவே. அந்தக் கதாபாத்திரத்தை உன்னால புரிஞ்சிக்க முடியாததுனாலதான் உடம்புல துணி இல்லாம மேடையில வந்து நிக்க உன்னால முடியாதுன்னு நீ சொல்றது...”
இந்த விஷயத்தைப் பற்றி பின்னர் வசுந்தராவுடன் நான் பேச நேர்ந்தபோது, நாராயணன் சொன்ன அதே வார்த்தைகளை அவளும் சொன்னாள். ஒரு நாள் ஒத்திகை முடிந்த பிறகு நாங்கள் இருவரும் ஒரு தோட்டத்திற்குப் போய் சிறிது நேரம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தோட்டத்தில் பூவோ, செடியோ ஒன்றும் இல்லை. எல்லாமே கோடையின் கொடுமையிலும், ஆடு, மாடுகள் மேய்ந்தும் முற்றிலும் காணாமல் போயிருந்தன. தோட்டத்தின் பெயரைத் தெளிவாக எழுதி வைத்திருந்த ஒரு பெயர்ப் பலகை நுழைவாயிலருகில் மேலே வைக்கப்பட்டிருந்தது. அங்கு உட்கார்ந்திருந்தபோது வசுந்தரா என்னிடம் பல விஷயங்களையும் சொன்னாள்.
“நல்லா யோசனை பண்ணின பிறகுதான் நான் இந்த விஷயத்திலேயே இறங்கினேன்” -வசுந்தரா சொன்னாள். “இதோட சாதக பாதகங்களைப் பற்றி எனக்கு நல்லாவே தெரியும்.”
“ஆனா, உன்னை இந்த முடிவு எடுக்க வச்சது எது?” ராதிகா இந்த வேடத்தைச் செய்ய மறுத்து ஒதுங்கிக் கொண்ட பிறகு கரீம்பாயும் நாராயணனும் நம்பிக்கையிழந்து போனார்கள். “அவுங்க மேல உண்டான பரிதாப உணர்ச்சியா உன்னை இதைச் செய்ய வைத்தது?” - கோகுல் கேட்டான். “இல்லாட்டி நாடகத்து மேல உனக்கு இருந்த ஆர்வமா? ராதிகாவைப் போல எல்லோருக்கும் தெரிந்த புகழ்பெற்ற ஒரு நடிகையில்ல நீ. அளவுக்கும் அதிகமான ஒரு ஆர்வம் உனக்கு நாடகத்தின் மேல இருக்குன்னும் நான் நினைக்கல.”
“கோகுல், நீங்க சொல்ற இந்த விஷயங்களெல்லாம் என்னை இந்த முடிவு எடுக்க காரணங்களா இருந்ததென்னவோ உண்மைதான். ஒரு வருடத்திற்கு முன்னாடியே ஆடிட்டோரியத்தை அவங்க புக் பண்ணியிருக்காங்க. இனியொரு முறை அந்த ஆடிட்டோரியம் வேணும்னா மேலும் ஒரு வருடத்துக்கு அவங்க காத்திருக்கணும். இந்த நாடகத்தை ஸ்பான்ஸர் பண்ணினவங்க இதோட பின் வாங்கிடுவாங்க. கரீம்பாயை விரக்தியடைய வச்சது இதெல்லாம்தான். ஆமா கோகுல்... கரீம்பாயையும், நாராயணனையும் பார்த்து உண்மையிலேயே பரிதாபப்பட்டேன். ஆனா, இந்த வேடத்தை நான் ஒத்துக்கிட்டதுக்கு அது மட்டுமே காரணமில்ல...”
கோகுலும் வசுந்தராவும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். தங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றித்தான் அதிகமாக அவர்கள் பேசினார்கள். கோகுல் வாங்கிய ஃப்ளாட்டின் வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதைப் போய் இருவரும் பார்த்தார்கள். திருமணம் முடிந்ததும் அந்த ஃப்ளாட்டிற்குப் போய் விடுவது என்று அவர்கள் முடிவு எடுத்தார்கள். அதற்கு எல்லா வேலைகளும் முழுமையாக முடிவடைய வேண்டும் என்று அவர்கள் ஆர்வப்பட்டார்கள். அப்படி ஒருவேளை ஃப்ளாட் வேலை முடியவில்லையென்றால், ஒரு வாடகை வீட்டில் தற்காலிகமாக இருப்பது என்று கூட அவர்கள் தீர்மானித்தார்கள். திருமணம் முடிந்தபிறகு குடும்பத்தோடு சேர்ந்து இருப்பது என்பது ஒரு பழைய கலாச்சாரம் என்று அவர்கள் இருவருமே நினைத்தார்கள்.
கோகுல் தன்னுடைய எதிர்கால திட்டங்களைப் பற்றி அவனிடம் சொன்னான். வரப்போகிற நல்ல நாட்களை நினைத்து அவன் தினமும் கனவு கண்டு கொண்டிருந்தான். ஆனால், அவன் எண்ணங்களையும், எதிர்பார்ப்புகளையும் பங்குவைக்க வசுந்தராவால் பல நேரங்களில் முடியாமலே போய்விடும். அவள் முழுமையாக நாடக வேலைகளில் ஒன்றிப் போய்விட்டாள். ஒருநாள் அவர்கள் இருவரும் மான் பூங்காவிற்குப் போயிருந்தபோது, அவள் ஒரு மான்குட்டியை தன்னுடைய மடியில் உட்கார வைத்துக்கொண்டு என்னவெல்லாமோ சொல்லிக் கொண்டிருந்தாள். அது நாடகத்தில் பகவந்தி ஆட்டுக்குட்டியிடம் பேசும் வசனம் என்பதை கோகுல் புரிந்து கொண்டான். தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் நாடகத்தில் வரும் பல விஷயங்களையும் தன்னையும் மீறி அவள் செய்து கொண்டிருந்தாள்.
“பகவந்தின்னு ஒரு பெண் வாழ்ந்தான்னு நினைக்கிறப்போ எனக்கு மனசுல என்னவோ போல இருக்கு” - வசுந்தரா சொன்னாள். “நாராயணன் அதை என்கிட்ட சொல்லாம இருந்திருக்கலாம். பகவந்தி தன்னோட கற்பனைன்னு சொல்லியிருந்தா இன்னும் நல்லாயிருக்கும்.”
நாடகத்தில் வரும் பாத்திரப்படைப்புகளைப் பற்றி அவள் நினைத்துப் பார்த்தாள். மேடையில் உண்மைக்கு இடமில்லை என்பதையும், எல்லாமே நடிப்புதான் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. நடிகர்- நடிகைகள் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் மற்ற யாரோ சிலரின் பெயர்களை அணிந்து கொண்டு அவர்களின் வாழ்க்கையை மேடையில் நடித்துக் காட்டுகிறார்கள். சங்கிலியிருந்து அவிழ்த்து விடப்பட்ட விடுதலையைப் போல் அவள் அதை உணர்ந்தாள். யதார்த்தத்தின் மேல் தனக்குப் பெரிய ஈடுபாடு எதுவும் இல்லையென்றாலும் மேடையில் அதை வளைத்தும் திருப்பியும் எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை அவள் புரிந்து கொண்டாள். தன்னுடைய விதியை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியாத தன்னால் மேடையில் இன்னொருவரின் விதியைக் கையிலெடுத்துக் கொண்டு விளையாட முடிகிறதென்றால் அதற்கு பரிபூரண சுதந்திரம் என்று பெயரிடாமல் வேறு என்ன பெயரிட்டு அழைக்க முடியும்? ஆனால், சுதந்திரத்தின் கட்டுப்பாடில்லாத கொண்டாட்டத்திற்கு பகவந்தி உண்மையிலேயே வாழ்ந்த ஒரு பெண் என்ற சிந்தனை ஒரு தடையாக இருக்கிறது என்பதென்னவோ உண்மை. அதை நினைத்து வசுந்தரா பயந்தாள். நடிப்பிற்குப் பின்னால் ஒரு உண்மை மறைந்திருப்பதை அது ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது.
“ராதிகாவோட ஒப்பிடுறப்போ நீ ரொம்பவும் சின்ன நடிகை. அவளைப் போல நீ நடிப்பைப் பற்றி பெருசா ஒண்ணும் பயிற்சி எடுத்துக்கல. இருந்தாலும் எவ்வளவு அருமையா நீ நடிக்கிறே...?” கோகுல் சொன்னான்.
உண்மையாகச் சொல்லப்போனால் வசுந்தரா நடிக்கவேயில்லை. கரீம்பாய் “யெஸ் ஸ்டார்ட்” என்று சொன்னவுடன் அவள் அவளாக இல்லாமல் மாறினாள். “நடிச்சு முடிக்கிறதுவரை நான் பகவந்தின்னு என்னை நானே நினைச்சுக்கிறேன்.”