வசுந்தரா - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
பொதுக்கூட்டங்களில் நாம் சாதாரணமாக காணும் வாடகை நாற்காலிகளைப் போல் இருக்கும் ஒரு நாற்காலியில் அமர்ந்து மேலே பார்த்துக் கொண்டிருந்தான் நாராயணன். அவனுக்குப் பக்கத்தில் பார்த்தா உட்கார்ந்திருந்தான்.
“இந்தா பாட்டில்... திறந்து குடிங்க...”
கரீம்பாய் பாட்டிலைச் சுட்டிக்காட்டினார். மொட்டைமாடியில் இருந்த எல்லோரின் கையிலும் கண்ணாடி டம்ளர் இருந்ததை அப்போதுதான் நான் பார்த்தேன். கரீம்பாய் எழுந்து ஒரு டம்ளரில் ரம்மை ஊற்றி என் கையில் தந்தார். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும்போது காணப்படும் சந்தோஷம் யாருடைய முகத்திலும் தெரியவில்லை. ஏதோ விரும்பத்தகாத ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று என் மனதில் பட்டது. உட்காருவதற்கு இடமில்லாமல் இருந்ததால் நானும் வசுந்தராவும் ஒரே நாற்காலியைப் பங்குபோட்டுக் கொண்டு அமர்ந்தோம். கரீம்பாய் ஊற்றிக் கொடுத்த ட்ரிபிள் எக்ஸ் ரம்மை நான் ஒரு ‘பெக்’ குடித்தேன்.
“எதற்கு இந்த பல்ப்? அதை அணைங்க...” - கரீம்பாய் சொன்னார். “நான் யாரோட முகத்தையும் பார்க்க விரும்பல.”
யாரோ நடந்து சென்று ஸ்விட்சை ஆஃப் பண்ணினார்கள். மொட்டை மாடியில் இருந்த வெளிச்சம் திடீரென்று இல்லாமல் போனது. சுற்றிலுமிருந்த கட்டிடங்களில் இருந்து வந்த வெளிச்சம் நாராயணனின் முகத்தில் பட்டது. கரீம்பாய் முழுமையான இருட்டில் உட்கார்ந்திருந்தார்.
“என்ன நடந்தது?”
நான் மெதுவாக நாராயணனின் அருகில் சென்றேன். என்னுடைய டம்ளர் காலியாகியிருந்தது.
“எது நடக்கணுமோ அது நடந்தது. அவ்வளவுதான்...” கரீம்பாய் சொன்னார். “அவ கோவிச்சிட்டுப் போயிட்டா. மேடையில ஆடை இல்லாம நடிக்க அவளால முடியல போல இருக்கு...”
“ஆனா, அப்படி நடிக்க அவளுக்கு சம்மதம்தானே?”
நாடகம் முழுவதையும் படித்து பலமுறை விவாதம் செய்த பிறகுதான் ராதிகா அந்த வேடத்தை ஏற்று நடிக்கவே ஒப்புக் கொண்டாள். ஸ்கூல் ஆஃப் டிராமாவில் கடைசி வருட மாணவி அவள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.
“தப்பு அவளோடது இல்ல...” நாராயணன் சொன்னான். “பழமையான பாரம்பரியத்துல இருந்து நம்மால அவ்வளவு சீக்கிரமா விடுபட்டுட முடியுமா, என்ன?”
“கோபப்பட்டு போகச் சொல்றதைவிட, ஏதாவது காம்ப்ரமைஸ் செய்து...”
“கோகுல், அதை மட்டும் நீங்க என்கிட்ட சொல்லாதீங்க. கலையைப் பொறுத்தவரை காம்ப்ரமைஸுக்கு இடமே இல்ல...”
கரீம்பாய் என்னைக் கூர்மையாகப் பார்த்துவிட்டு பெரிதாக ஒரு ஏப்பம் விட்டார். அவரின் கண்களுக்குள் கீழே வியர்வை அப்பியிருந்தது.
நெற்றியைத் துடைத்துக் கொண்டு நாராயணன் தொடர்ந்தான்.
“மேடையில் அவளை ஒரு கேபரே டான்ஸ் ஆடச் சொல்லல. அவமானப்படுத்தப்பட்ட ஒரு தலித் இளம்பெண்ணை ரியலிஸ்ட்டிக்கா மேடையில காட்டணும்னு நான் நினைக்கிறேன். அது அவளுக்குப் புரியாம இல்ல. அவளோட பூர்ஷ்வாத்தனமான மதிப்பீடுகள், நடுத்தர வர்க்கத்துக்குள்ளே இருக்கிற சில சட்ட திட்டங்கள்... அவை எல்லாத்தையும் தான் நான் பலமா எதிர்க்கிறேன்.”
“சர்வ சாதாரணமா தப்பு சொல்லிடலாம்... எதிர்த்திடலாம்...” - வசுந்தரா மெதுவான குரலில் சொன்னாள்.
“குறைந்தது ஐநூறு பேருக்கு முன்னாடி உடம்புல துணி இல்லாம பிறந்தமேனியோட நிக்கிறதுன்றது... சார், அந்தக் கஷ்டத்தை உங்களால புரிஞ்சுக்கு முடியாது. இன்னொரு பெண்ணால மட்டுமே அதைப் புரிஞ்சுக்க முடியும்.”
“யாரும் எதையும் புரிஞ்சுக்கவும் வேண்டாம். யாரும் இது விஷயமா விவாதம் செய்யவும் வேண்டாம்” - கரீம்பாய் கண்ணாடி டம்ளரில் இருந்த மீதி ரம்மைக் குடித்துவிட்டு மீண்டும் பலமாக ஒரு ஏப்பம் விட்டார். செம்பட்டை நிறம் கலந்த நரைத்த தாடி வழியாக ரம் இங்குமங்குமாய் வழிந்து கொண்டிருந்தது. அவரின் வாயில் ஓட்டை இருப்பதாக நான் நினைத்தேன். கரீம்பாய் தொடர்ந்து சொன்னார். “இதைப்பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம். நான் இந்த நாடகமே வேண்டாம்னு சொல்றேன். எனக்காக கஷ்டப்பட்டு இந்த நாடகத்தை எழுதின நாராயணன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். வாழ்றதுக்கு என்னைப் பொறுத்தவரை என்னோட இன்ஷுரன்ஸ் பிசினஸ் இருக்கு. அதை வச்சு என்னால வாழ்ந்திட முடியும். குட்நைட்...”
கரீம்பாய் எழுந்து படிகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தார். வெளிச்சம் குறைவாக இருந்த படிகளுக்குக் கீழே ஒரு பெரிய மூட்டை விழுந்ததைப் போல் சத்தம் கேட்டது. கரீம்பாய்தான் கால் தடுமாறி கீழே விழுந்திருக்கிறார் என்பது நிச்சயம். வசுந்தராதான் முதலில் வேகமாக ஓடினாள். அவள் அவரை தரையை விட்டு தூக்க முயற்சித்தாள். சொந்தக் கால்களால் எழுந்து நின்ற அவர், வசுந்தராவின் கைகளை விலக்கினார்.
“பத்தினிகள்... காதலர்கள் முன்னாடியும் கணவர்கள் முன்னாடியும் உடம்புல துணியில்லாம நிக்க கொஞ்சமும் தயக்கம் கிடையாது. கலைக்காக ஏதாவது செய்யச் சொன்னா...”
அவர் முணுமுணுத்தவாறு தள்ளாடிய கால்களுடன் உள்ளே போனார். மொட்டைமாடியில் அமைதியான சூழ்நிலையில் ரம் உள்ளே போகும் சத்தம் மட்டுமே கேட்டது. குளிர்ந்த காற்று அவர்களுக்கு மத்தியில் கடந்து போய்க் கொண்டிருந்தது. நான் வசுந்தராவுடன் நெருங்கி அமர்ந்தேன்.
“கரீம்பாய் கொஞ்சம் அதிகமா போறார்னு நினைக்கிறேன்” நாராயணன் சொன்னான். “ராதிகாவை நான் தப்பு சொல்லல. அதே நேரத்துல கரீம்பாயோட உணர்வையும் என்னால புரிஞ்சுக்க முடியாது.”
“தப்பு உங்களோடதுதான்”- மொட்டை மாடியின் ஒரு மூலையில் இருட்டில் அமர்ந்திருந்த யாரோ சொன்னார்கள். “அப்படி ஒரு கதாபாத்திரத்தையே நீங்கள் படைச்சிருக்கக் கூடாது.”
ஒரு நாடக எழுத்தாளர் ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து விட்டால், அந்தக் கதாபாத்திரத்தை மேடையில் அரங்கேற்றாமல் இருக்க முடியாது. நாராயணன் இப்படிப்பட்ட ஒரு தர்மசங்கடமான நிலையில் மாட்டிக்கொண்டுவிட்டான். அவன் தன்னுடைய காலியான கண்ணாடி டம்ளரையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். டம்ளரின் ஓரங்கள் பளிச்சிட்டாலும் அதன் உள்பகுதி இருண்டு போய்தான் காணப்பட்டது.
ஒரு உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்தே நாராயணன் அந்த நாடகத்தை எழுதியிருக்கிறான் என்பது நாடகத்துடன் சம்பந்தப்பட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். அந்த நாடகத்தை எழுதுவதற்காக அவன் ஜகதாரி என்ற கிராமத்திற்குப் போய் நேரடியாக மக்களைச் சந்தித்து நடந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்து அறிந்தான். பணவசதி படைத்த ஒரு மிகப் பெரிய நிலச் சுவாந்தார் தன்னுடைய கிராமத்தில் புரியும் அட்டகாசங்களையும், செய்யும் கொடுமைகளையும் தெளிவாகக் காட்டும் அந்த நாடகத்தை அவன் கரீம் பாய்க்காக தனி கவனம் செலுத்தி உருவாக்கினான். நகரத்திலிருந்து வந்த நாகரிகமான உடையணிந்த அந்த இளைஞனை ஒரு பத்திரிகையாளன் என்று தவறுதலாகக் கணக்குப் போட்டு குண்டேச்சா என்ற பெயரைக் கொண்ட நிலச்சுவாந்தார் தன்னுடைய அரண்மனை போன்ற வீட்டிற்கு அவனை வரவழைத்து அவனுக்கு பாதாம் பருப்பு அரைத்துச் சேர்த்து தயார் பண்ணிய சர்பத்தைக் குடிக்கத் தந்தான்.