வசுந்தரா - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
“நீ மட்டும் அப்படி நினைக்கல. பார்த்துக்கிட்டு இருக்குற நாங்க கூட அப்படித்தான் நினைக்கிறோம்.”
நாடகத்தின் பல இடங்களிலும் அந்த நாடகத்திற்காக செய்யப்பட்டிருக்கும் விளம்பரங்களைப் பார்த்தவாறு அவர்கள் நடந்தார்கள். பல வண்ணங்களைக் கொண்ட ஒரு பெரிய போஸ்டர் அது.
அந்த நாடகத்தின் தயாரிப்புச் செலவு முழுவதையும் ஒரு சிகரெட் கம்பெனி ஏற்றுக் கொண்டிருந்தது. அப்படி சில ஸ்பான்ஸர்கள் கைவசம் இருந்ததால், கரீம்பாய் பணத்திற்காக வேறெங்கும் ஓடி அலைய வேண்டிய அவசியம் இல்லாமற்போனது. நாடகத்தோடு தொடர்புடைய எல்லோருக்கும் பயணம் செய்வதற்கும் உணவுக்கும் சேர்த்து ஒரு சிறு தொகையை அவர் ரெகுலராகக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
முதல் மேடையேற்றம் நடப்பதற்கு முதல் நாள் தியேட்டரில் ஒரு முழுமையான ஒத்திகை கட்டாயம் நடக்க வேண்டுமென்று விருப்பப்பட்டார் கரீம்பாய். அவர் இதுவரை இயக்கிய எல்லா நாடகங்களுக்கும் முறைப்படி அத்தகைய ஒத்திகைகள் நடந்திருக்கின்றன. விக்டர் கரீம்பாய் எந்த இடத்திலும் கீழே விழத் தயாராக இல்லை என்று அவர் திரும்பத் திரும்பக் கூறுவார். போர்களிலும் விளையாட்டுகளிலும் காதலிலும் சில நேரங்களில் நாம் தோல்வியடைய நேரிடலாம். ஆனால், கலையில் அது இருக்கவே கூடாது என்று பிடிவாதமாகக் கூறுவார். அவரின் இந்த பிடிவாத குணம்தான் அவரை நகரத்தின் முதல் தர நாடக இயக்குநர்களில் ஒருவராகக் கொண்டு வந்தது என்று நாம் எங்கு வேண்டுமானாலும் கூறலாம்.
முழு ஒத்திகை நடக்கும் நாளன்று யாரும் மதுவைக் கையால் கூட தொடக் கூடாது என்று அவர் எல்லோரிடமும் கூறியிருந்தார். குறிப்பாக லைட்டிங் பொறுப்பாளரான பார்த்தாவிடம். கரீம்பாயின் நாடகங்களின் வெற்றியில் பார்த்தாவிற்கு ஒரு பெரிய பங்குண்டு என்று நாடக அபிமானிகள் எல்லோருமே கூறுவார்கள். லைட்டிங்கை பயன்படுத்துவதில் மிகச் சிறந்த நிபுணர் அவன். “லைட்டிங்கோட மர்மத்தை நல்லா தெரிஞ்ச ஒரு ஆள் பார்த்தா. இருட்டுலதான் அதை நாம உணர முடியும்” என்று ஒரு நாடக விமர்சகன் ஒரு முறை சொன்னான். “வெளிச்சத்தின் ஆர்க்கிடெக்ட்” என்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையே அவனைப் பாராட்டி எழுதியிருக்கிறது. பகவந்தி பிறந்த மேனியுடன் மேடையில் தோன்றுகிற காட்சியில் லைட்டிங் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவன் ஒவ்வொரு நாளும் கரீம்பாயுடனும் நாராயணனுடனும் கலந்து பேசினான். வசுந்தராவின் கருத்து என்ன என்பதை அவன் அவளிடம் கேட்கவில்லை. நாராயணன் அதைப் பற்றி சூசகமாகச் சொன்னபோது பார்த்தா கடுப்பாகி விட்டான். “லைட்டிங்கைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்? அவளோட உடம்புல எங்கேயெல்லாம் வெளிச்சம் விழணும்ன்றதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்” என்று கூறினான் பார்த்தா.
லைட்டிங்கில் தன்னுடைய முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் பார்த்தா ஒரு முன்கோபம் கொண்ட மனிதனாக இருந்தாலும், அவனை வசுந்தரா விரும்பவே செய்தாள். “உன்னோட தொப்புளை இருட்டுல மறைக்கணும்னா உன் வயிற்றுக்க மேலே வெளிச்சத்தைக் குவிச்சா போதும்...” - பார்த்தா வெளிச்சம் சம்பந்தப்பட்ட சில பாடங்களை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான். வெளிச்சத்தை ஒரு சிற்பத்தைப் போல கொத்தியெடுக்கும் அவனின் கைகள் மிகவும் மென்மையாக இருந்தன. பாக்கெட்டில் வைத்திருந்த ரம் பாட்டில் அங்கு இருக்கிறதா என்று தடவிப் பார்த்துக் கொண்ட அவன் அவளைப் பார்த்து சிரித்தான். அவன் முன் வரிசை பற்கல் பலவும் கெட்டுப் போயிருந்தன. இந்த வயதிலேயே அவனுக்கு தலை முடியில் நரை விழுந்திருந்தது.
“குண்டேச்சா உன் உடம்புல இருக்குற துணியை அவிழ்த்தெறியிற காட்சியில நான் லைட்டிங்கை வச்சு அற்புதங்கள் காட்டப்போறேன்” - அவன் தன்னம்பிக்கையுடன் சொன்னான்.
“நெஃப்ராஜலிஸ்ட்டுகளும் ரம் விற்பனை செய்றவங்களும் கரீம்பாயையும் பார்த்தாவையும் கினியாபிக்குகள் ஆக்குறாங்களோன்னு எனக்கே சந்தேகமாக இருக்கு”- கோகுல் சொன்னான். “இவங்க உடம்புல சோதனை செய்து மனிதர்களோட லிவர் ரம்மை எந்த அளவுக்கு ஏத்துக்குறதுன்றதைத் தெரிஞ்சிக்கிறதுக்காக விஞ்ஞானிகளும் ரம் தயாரிப்பவர்களும் முயற்சிக்கிறாங்க. அதுக்கு கரீம்பாய்க்கும் பார்த்தாவுக்கும் அவங்க பெரிய அளவுல பணம் கொடுத்தாலும் கொடுக்கலாம்.”
“பணமா இல்ல. ரம் பாட்டில்களாக...”- நாராயணன் தன் வெண்மையான பற்களைக் காட்டிச் சிரித்தான். உமிக்கரியால் பற்களைத் துலக்குவதால்தான் தன்னுடைய பற்கள் இந்த அளவுக்கு வெண்மையாக இருக்கின்றன என் அவன் அடிக்கடி எல்லோரிடமும் கூறுவதுண்டு. பற்பசை தயாரிப்பாளர்களுக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு உண்மை அது.
“எனக்கு யாரோட பணமும் வேண்டாம்” - கரீம்பாய் சொன்னார். வாழ்றதுக்கு எனக்கு என்னோட இன்ஷுரன்ஸ் பிஸினஸ் இருக்கு. சாகாம இருக்குறதுக்கு எனக்கு நாடகம் இருக்கு...”
முழு ஒத்திகையைப் பார்ப்பதற்காக மரியா தன்னுடைய பழைய காரில் ஏறி கிளம்பினாள். ஆனால், ஜாவேத் அவளைத் தடுத்து நிறுத்தி அப்படியே திரும்பிப் போகும்படி செய்துவிட்டான் “அம்மா, நீங்க நாளைக்குப் பார்த்தா போதும்”- அவன் சொன்னான்.
ஜாவேத்தின் புத்திசாலித்தனத்தில் பெரிய மரியாதை எதுவும் இல்லாதவர்களுக்குக் கூட அப்போது அவன் மேல் மதிப்பு தோன்றியது. தன் மகன் எதற்காக தன் காரைத் தடுத்து நிறுத்தி பலவந்தமாக தன்னைத் திரும்பவும் வீட்டிற்குப் போகச் சொன்னான் என்பதற்கான காரணத்தை எவ்வளவு முயன்றும் மரியாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. தான் பார்க்கக் கூடாத ஏதாவது நாடகத்தில் இருக்குமோ என்று தன்னைத் தானே அவள் கேட்டுக் கொண்டாள். அவளின் மனதை நன்கு தெரிந்த ஜாவேத் சொன்னான். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. நாளைக்கு எல்லோர் கூடவும் உட்கார்ந்து அம்மா நீங்க நாடகத்தைப் பார்க்கலாம். எனக்கு நாளைக்கு குதிரைப் பந்தயம் இல்ல. அதனால நானே உங்களை அழைச்சிட்டுப் போறேன். போதுமா?”
சுவரில் இருந்தவாறு ஃபெர்னாண்டஸ் மாஸ்ஸி தன்னுடைய காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டார்.
“எல்லாருக்கும் அது ஃபுல் ட்ரெஸ் ஒத்திகை” - ஜாவேத் சுவரின் மேல் பகுதியைப் பார்த்தவாறு தனக்குள் சொன்னான். “வசுந்தராவுக்கு மட்டும் நிர்வாண ஒத்திகை...”
மனதிற்குள் கைகளைத் தட்டியவாறு அவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான். அதில் இருந்த நகைச்சுவையை நினைத்து அவன் தனக்குத் தானே சிரித்துக் கொண்டான். வசுந்தரா அவன் சொந்த தங்கையாக அமைந்து விட்டதால் அந்த நகைச்சுவையை வேறு யாரிடமும் கூற முடியாது என்பதால் தனக்குள்ளேயே அவன் அதைப் பூட்டி வைத்துக் கொண்டான். ஒரு வேளை அவனுக்கு திருமணம் நடந்தால், தன்னுடைய மனைவியிடம் அதை அவன் கூறினாலும் கூறலாம். அந்தத் தரம் தாழ்ந்த நகைச்சுவையைக் கூறுவதற்கென்றே ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு வர வேண்டுமா என்ன என்று நினைத்த அவன் திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்தான்.