Lekha Books

A+ A A-

வசுந்தரா - Page 7

vasundara

நான் சொன்னேன். “உன்னைப் பக்கத்துல உக்கார வச்சு நகரத்தின் தெருக்களில் கொஞ்ச நேரம் வெறுமனே காரை ஓட்டித் திரியணும் போல இருக்கு தங்கச்சி...”

ஒத்திகைக்கு நேரமாகிவிடும் என்பது தெரிந்திருந்தும் அவள் அதற்குச் சம்மதித்தாள். ஜனநடமாட்டம் அதிகம் இல்லாத தெருக்களாகப் பார்த்து நான் சில நிமிடங்கள் அவளை எனக்கருகில் உட்கார வைத்து காரை ஓட்டினேன். நாங்கள் கரீம்பாயின் வீட்டை அடைந்தபோது நாராயணன் மொட்டைமாடியில் ஆர்வத்துடன் வெளியே பார்த்தவாறு நின்றிருப்பது தெரிந்தது. தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டு நாங்கள் மொட்டை மாடிக்குச் சென்றோம். நாடகாசிரியர், இயக்குநர்- இவர்கள் போக நாடகத்தில் நடிக்கும் எல்லா நடிகர் - நடிகைகளும் அங்கு ஏற்கனவே வந்திருந்தனர். மொட்டை மாடியில் ஒரு மூலையில் கண்களில் குற்றவுணர்வுடன் ராதிகா அமர்ந்திருந்தாள். அவள் வசுந்தராவைப் பார்த்துச் சொன்னாள். “விஷ் யூ ஆல் த பெஸ்ட்!”

சொல்லிவிட்டு ராதிகா மீண்டும் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஓ.கே.” - கரீம்பாய் சொன்னார். “காட்சி-ஒன்று. குண்டேச்சா கையில் ஒரு விசிறியோட நுழையிறாரு.”

வலது கையில் விசிறியை வைத்துக் கொண்டு, இடது கையால் வேஷ்டியை மேலே சுருட்டிப் பிடித்தவாறு குண்டேச்சா மேடையில் வந்தார். நிலத்தில் நீரே இல்லாமல் இருக்கும்போது எதற்கு அந்த மனிதர் வேஷ்டியை மேலே சுருட்டிப் பிடித்திருக்க வேண்டும் என்று நான் நாராயணனிடம் கேட்டேன். அதற்கு நாராயணன் சொன்னான். “நாம உண்மையான வாழ்க்கையிலயும் நாடகத்திலும் ஒரே செயலைச் செய்தாலும், அததுக்கு இருக்கிற சட்டம் வேற வேற... அதோட நோக்கமும் வேற வேறதான்.”

“பழமையின் பாதிப்புல இருந்து நாம நம்மோட நாடகக் கலையை உடனடியா விடுவிச்சு ஆகணும்” ஒத்திகை பார்க்க வந்த ஒரு நாடக ரசிகர் சொன்னார். “இந்திய நாடகக் கலைக்குன்னு ஒரு அடையாளத்தை நாம உண்டாக்க வேண்டியதிருக்கும்.”

குண்டேச்சாவும் அவரின் அடிவருடிப் பட்டாளமும் ஹோலிப் பண்டிகை கொண்டாடும் காட்சியைத்தான் இப்போது ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பால் சேர்த்த இனிப்புப் பலகாரங்களைச் சாப்பிட்டுவிட்டு அவர்கள் ஆபாசமாகப் பேசுவதும் உரத்த குரலில் சிரிப்பதுமாக இருக்கிறார்கள். ஒரு துளி சாயத்தைக் கூட காட்டாமல் நிமிஷங்களின் கொண்டாட்டத்தைக் காட்ட முயற்சிக்கிறார் கரீம்பாய். அந்தக் காட்சிக்கான ஒத்திகை முடிந்ததும், கரீம்பாய் எல்லோரையும் சிறிது நேரம் ஓய்வெடுக்கும்படி கூறிவிட்டு கீழே இறங்கிப் போனார். அவர் எங்கே போயிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். சிறிது நேரம் சென்றதும் முகத்தில் ரம் மணக்க, அவர் திரும்பி வந்தார்.

கரீம்பாயைத் தொடர்ந்து கோகுலும் அங்கு வந்தான். அவன் நேராக வசுந்தராவின் அருகில் போய் அமர்ந்து கொண்டான். இவ்வளவு நேரமும் நான் வசுந்தராவைப் பற்றி பலவிதமான யோசனை செய்து கொண்டிருந்தேன். இனி அவளைப் பற்றி கூடிய சீக்கிரம் அவளின் கழுத்தில் தாலி கட்டப் போகிற கோகுல் யோசிக்கட்டும். ஒரு பந்தை எறிவதைப் போல நான் என்னுடைய சிந்தனையிலிருந்து அவளை கோகுலின் சிந்தனைக்கு எறிந்தேன். தன்னுடைய சிந்தனையில் வந்து விழுந்த வசுந்தராவை மகிழ்ச்சியுடன் கோகுல் ஏற்றுக்கொண்டான். இனி வசுந்தராவைப் பற்றி சிந்திப்பது அவன்தான்.

5

நான் படிகள் மூலம் மேலே ஏறி வந்தவுடன் ஜாவேத் எதற்காக கீழே இறங்கிப் போனான்? அந்தக் காரியத்தை அவன் மனப் பூர்வமாகத்தான் செய்திருப்பானா? நான் வசுந்தராவைத் திருமணம் செய்து கொள்வது பற்றி ஒருவேளை ஜாவேத்திற்கு அந்த அளவிற்கு சம்மதம் இல்லாமல் இருக்குமோ? வசுந்தராவின் தாயிடமோ சகோதரனிடமோ கலந்து பேசிய பிறகு நான் அவளின் விரலில் மோதிரத்தை அணிவிக்கவில்லை. அவர்களிடம் அப்படியெல்லாம் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமே இல்லையென்று ஒரேயடியாக வசுந்தரா கூறிவிட்டாள்.

இன்று நாடகத்தின் ஒத்திகையைப் பார்க்க வர வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ராதிகா செய்ய மறுத்த வேடத்தை வசுந்தராதானே ஏற்று நடிக்கப் போகிறாள்? அதைப்பற்றி சமீபத்தில் வசுந்தரா என்னிடம் பேசினாள். அதே நேரத்தில் இந்த விஷயத்தில் என்னுடைய கருத்து என்ன என்பதைத் தெரிந்து கொள்ளவோ அதற்கு என்னுடைய அனுமதியை அவள் கேட்கவோ செய்யவில்லை. அவள் அப்படிச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இல்லை. வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யலாம் என்று தீர்மானிக்க வேண்டியவள் அவள்தான். நாராயணன் எழுதி கரீம்பாய் இயக்கும் இந்த நாடகத்தில் அவள் நடிப்பது குறித்து உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன். விக்டர் கரீம்பாயை எனக்கு நீண்ட நாட்களாகவே நன்கு தெரியும். காஷ்மீரி கேட்டில் இருக்கும் ஒரு பழைய கட்டிடத்தில்தான் அவர் முன்பு தங்கிக் கொண்டிருந்தார். அவர் குளிர்காலத்தில் மட்டுமல்ல- கோடைக் காலத்திலும் கூட ஒரு நீளமான மஃப்ளரை கழுத்தைச் சுற்றிலும் அணிந்திருப்பார். இடதுசாரிக் கட்சிக்காரர்கள் நடத்தும் கருத்தரங்கங்களிலும் போராட்டங்களிலும் நாம் கரீம்பாயைப் பார்க்கலாம். அவரின் எளிமையான வாழ்க்கை முறையையும் மனதில் கொண்டிருக்கும் உயர்ந்த லட்சியங்களையும் நீண்ட காலமாக நான் பார்த்து வருவதால், அவரைப் பொதுவாகவே எனக்குப் பிடிக்கும். அந்த ஒரே காரணத்தால் தான் கரீம்பாயின் நாடகத்தில் வசுந்தரா நடிக்கப் போகிறாள் என்ற விஷயம் எனக்குத் தெரியவந்தபோது, மனப்பூர்வமாக சந்தோஷப்பட்டேன். அது மட்டுமல்ல- அந்த நாடகத்தை எழுதியிருப்பது என்னுடைய நண்பன் நாராயணன் ஆயிற்றே!

பகவந்தி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் காட்சியைத்தான் இப்போது வசுந்தரா ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் மிகச்சிறந்த திறமையான ஒரு நடிகை என்று அங்கிருந்த எல்லோர் மனதிலும் அந்தக் கணத்திலேயே தோன்றியது. ஆடு அங்கே இல்லையென்றாலும் இருப்பதைப் போல் நாடகத்தைப் பார்ப்போர் மனதில் படும்படி செய்வது வசுந்தராவின் நடிப்புத் திறமையை வைத்தே.

ஒரு நல்ல நடிகரோ, நடிகையோ- மேடையில் இல்லாத பலவற்றையும் கூட அவை இருக்கின்றன என்பது மாதிரி அவர்கள் தங்களின் நடிப்புத் திறமையால் காட்டவேண்டும். இந்த விஷயத்தை கரீம்பாய் ஒருமுறை என்னிடம் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். ஆடுகளோடு சேர்ந்து ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் கள்ளங்கபடமில்லாத அந்தத் தாழ்த்தப்பட்ட இளம்பெண்ணின் வேடத்தை மிகவும் சிறப்பாக நடித்தாள் வசுந்தரா.

“எனக்குத் திருப்தியா இருக்கு”- கரீம்பாய் சொன்னார். “என்னோட கவலைகளெல்லாம் போயிடுச்சு.”

“ஒரு விஷயம் எனக்கு உறுத்துது” - நாராயணன் சொன்னான். “அது- வசுந்தராவோட நிறம். ஒரு கீழ் ஜாதிப் பொண்ணு இந்த அளவுக்கு நிறமா இருக்கக் கூடாது.”

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel