வசுந்தரா - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
காகத்தின் கூட்டில் கல்லை எறிந்து சலனம் உண்டாக்குவதைப் போல மார்க்கெட்டில் ஒரு பரபரப்பை உண்டாக்கிவிட்டு திரும்பி வரும் மரியாவை அங்குள்ள கடைக்காரர்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்.
மரியா திரும்பி வரும்வரை உள்ள நேரத்தில் ஒவ்வொரு நொடியையும் நான் மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானித்தேன். வசுந்தராவுடன் சேர்ந்து தனியாக இருக்கும் வண்ணம் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு உண்மையிலேயே மிகவும் விலைமதிப்புள்ளது என்பதை நான் நன்றாகவே உணர்ந்திருந்தேன். அளவுக்குமேல் அவள் சதைப்பிடிப்புடன் இருப்பதாக எனக்குப் பட்டது. மரியா அவளை ஏன் சிந்திப் பசு என்று அழைக்கிறாள் என்பதற்கான காரணம் எனக்குப் புரிவதே இல்லை. நல்ல சதைப்பிடிப்பு கொண்ட பெண் அவள். எப்போதும் அவள் பழைய அல்லது சற்று நிறம் மங்கிப்போன ஆடைகளைத் தான் அணிவாள். ஆனால், அவற்றை நன்கு சலவை செய்து இஸ்திரி இட்டிருப்பாள். நிறங்களின் விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவளுக்கென்று ஒரு தனியான ரசனையை அவள் கொண்டிருந்தாள். இந்தியர்கள்- குறிப்பாகச் சொல்லப் போனால் பெண்கள் அடர்த்தியான நிறங்களைத்தான் விரும்புவார்கள். ஆனால், அடர்த்தியான நிறம் கொண்ட ஆடையை அணிந்து வசுந்தராவை நான் எப்போதும் சந்தித்ததில்லை. அவள் பயன்படுத்தும் டூத்பிரஷ்கூட மங்கலான சாம்பல் நிறத்தில்தான் இருக்கும்.
“நாராயணன் கூட நாடக ரிகர்சல் பார்க்கப் போகணும்னு நினைச்சேன்” - வசுந்தரா சொன்னாள். ஆனால, “அம்மா சம்மதிக்கலை. அவுங்க மார்க்கெட்டுக்குப் போக வேண்டியிருந்தது.”
வீட்டைப் பூட்டிவிட்டு போவதில் மரியாவிற்கு விருப்பமில்லை. வீட்டில் விலை மதிப்புள்ள ஒரு பொக்கிஷம் இருப்பதைப் போலவே அவள் நடந்து கொள்வாள். அப்படியே பொக்கிஷம் இருந்தாலும், அதை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்வதற்குத் தான் சதா நேரமும் அங்கு மாஸ்ஸி இருக்கிறாரே! மாஸ்ஸியை ஏமாற்றிவிட்டு அந்த வீட்டுக்குள் யாராலும் வர இயலாது என்பதை நான் நன்றாகவே அறிவேன்.
“நீ போகாம இருந்தது நல்லதாப் போச்சு. நாம கொஞ்சநேரம் தனியா உட்கார்ந்து பேசலாம்ல?”
“அம்மா இருந்தா கூட நாம பேசலாமே?”
“சில நேரங்கள்ல அப்பாவும், அம்மாவும் இருக்கிறது கூட தேவையில்லாதது மாதிரி தோணும்.”
“எனக்கு எப்பவும் அப்படித் தோணினது இல்ல. அம்மாவுக்குத் தெரியாத ஒரு ரகசியமும் என்கிட்ட இல்ல.”
“சில விஷயங்களை மத்தவங்க இருக்குறப்போ பேசுறதுன்றது எனக்கு கஷ்டமான ஒரு விஷயம்.”
நான் அவள் முகத்தைப் பார்ப்பதற்காக குனிந்திருந்த என் தலையை நிமிர்த்தினேன். அடுத்த நிமிடம் நான் அதிர்ந்துபோனேன். காரணம் என் கண்கள் போய் பதிந்தது சுவரில் தொங்கிக் கொண்டிருந்த மாஸ்ஸியின் முகத்தில். நான் தேவைக்கும் அதிகமாக என்னுடைய தலையை உயர்த்தியதால் வந்த வினை அது. மாஸ்ஸி தன்னுடைய ஒரு காதைத் தீட்டிக் கொண்டு என்னையே வெறித்துப் பார்த்தார். கண்ணாடி போடப்பட்ட அந்த புகைப்படத்திற்கு உயிர் இருக்கிறது என்பதுபோல் என் மனதிற்குப் பல நேரங்களில் பட்டிருக்கிறது. ஒருமுறை இந்த அறையில் அமர்ந்து கொண்டு நானும் மரியாவும் வசுந்தராவும் ஒரு தமாஷ் சொல்லி வாய்விட்டு சிரித்தபோது, சுவரில் இருந்த மாஸ்ஸியும் எங்களுடன் சேர்ந்து சிரிப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. இப்போது நானும் வசுந்தராவும் பேசிக்கொண்டிருப்பதை தன்னுடைய காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு அவர் கேட்டாலும் கேட்கலாம்.
“மத்தவங்ககூட போறதுக்கு கஷ்டமா இருக்கிற விஷயம் அப்படி என்ன இருக்கு?”
“அது... உன்கிட்ட மட்டுமே பேசணும்னு நினைக்கிற விஷயம்...”
“கோகுல்... நீங்க பழைய பாணியில் இருக்கிற ஒரு ஆள். இப்படியெல்லாம் ரொமான்டிக்கா இருக்கணும்னு அவசியமே இல்ல.”
அவளின் கண்களில் தெரிந்த சிரிப்பு என்னை நிலைகுலையச் செய்தது. தவறு என்னுடையதுதான். விஷயங்களை இப்படி சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அதற்காக எல்லோரும் அவரவர்கள் சொல்ல வேண்டியதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டால் மொழி எப்படி வளரும்? வார்த்தை அலங்காரங்களும் பிம்பங்களும் எதற்கு இருக்கின்றன? விஷயங்களைச் சுற்றி வளைத்துச் சொல்வதற்குத்தானே?
“அம்மா வரட்டும்!”- வசுந்தரா சொன்னாள். “அதுக்கப்புறம் நாம நடந்திட்டு வருவோம்.”
எதற்காக நான் வசுந்தராவுடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன் என்று யாராவது என்னைப் பார்த்துக் கேட்டால்... என்னால் தெளிவான ஒரு பதிலைக் கூற முடியுமா என்பது குறித்து எனக்கே சந்தேகமாகத்தான் இருக்கிறது. காதல் மீதும் திருமணம் மீதும் எனக்கு இருக்கும் நம்பிக்கை குறைவே இதற்குக் காரணம். வசுந்தராவை நான் காதலிக்கவில்லை. அவளை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறுவதுதானே சரியான ஒன்றாக இருக்கும்.
ஒன்றரை மணி நேரம் சென்றதும் மரியா ஏராளமான காய்கறிகளுடன் மார்க்கெட்டில் இருந்து திரும்பி வந்தாள். பைகளை சமையலறையில் கொண்டுபோய் வைக்க அவளுக்கு நான் உதவினேன்.
“நீ இதுவரை கோகுலுக்கு டீ கொடுக்கலையா?”
மரியா மகளைக் கோபித்தாள். சுற்றிலும் கண்களை மேயவிட்டு அங்கு எங்கும் காலியாக தேநீர் கோப்பைகள் இல்லையே என்பதைப் பார்த்துப் புரிந்துகொண்ட பிறகுதான் அவள் அப்படிக் கேட்டாள்.
“நாங்க வெளியே போறோம்” - நான் சொன்னேன். “வெளியே டீ குடிச்சிக்கிறோம்.”
பள்ளிக்கூடம் எப்போது விடுவார்கள் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு மாணவன் எப்படி பள்ளி மணி அடித்ததும் பாய்ந்து வெளியே ஓடுவானோ அந்த மாதிரி நான் வசுந்தராவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தேன். நடைபாதையின் வழியாக அவளுடன் நீண்ட நேரம் நடக்க வேண்டும்போல் எனக்கு இருந்தது. ஆனால், வசுந்தரா சொன்னாள்: “நாம கரீம் பாயோட வீட்டுக்குப் போகலாம்.”
“அங்கேதான் நாடகத்தோட ஒத்திகை நடந்துக்கிட்டு இருக்கே! நாம அங்கே பேசிக்கிட்டு இருக்க முடியுமா?”
“இனி நாம பேசுறதுக்கு என்ன இருக்கு? நீங்க சொல்லாமலே நான் எல்லாத்தையும் புரிஞ்சுக்கிட்டேன், கோகுல்.”
“நீ என்ன புரிஞ்சுக்கிட்டே?”
“எல்லாத்தையும்தான்.”
நாங்கள் கரீம்பாயின் வீட்டிற்குச் சென்றோம். தூரத்தில் வரும்போதே மொட்டை மாடி வெளிச்சம் நன்றாக எங்களுக்குத் தெரிந்தது. ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் ஏறும்போது கரீம்பாய் உரத்த குரலில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு வேளை அவர் அளவுக்கு மேல் ரம் குடித்திருக்கலாம்.
“ரிகர்சல் முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேனன்.” - வசுந்தரா சொன்னாள்.
“ஆமா... ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே முடிஞ்சிருச்சு.” கரீம்பாய் வெறுப்புடன் சொன்னார். அவருடைய கையில் ரம் நிறைந்த கண்ணாடி டம்ளர் இருந்தது.