வசுந்தரா - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
“அம்மா சம்மதிக்கணும்னு எனக்கு அவசியமே இல்ல. நான் ஒரு வயசுக்கு வந்த பொண்ணுங்கிறதை நீங்க மறந்துடுறீங்க. எப்ப பார்த்தாலும் சமையலறைக்குள்ளே நுழைஞ்சு சூப் தயாரிச்சுக்கிட்டு வீட்டை சுத்தம் செஞ்சிக்கிட்டு மட்டும் நான் இருந்தா போதுமா? அதைத்தாண்டி வேற ஏதாவது செய்யணும்னு நான் நினைக்கிறேன்.”
“கோகுல்கிட்ட இது விஷயமா பேசினியா? கோகுலோட சம்மதம்...”
“நாராயணா, நீங்க பேசுறதே எனக்குப் பிடிக்கலை. மரியாவோட மகளாகவும், கோகுலோட வருங்கால மனைவியாகவும் தவிர வேற மாதிரி என்னைப் பார்க்க உங்களால முடியலியா? என்னை மட்டும் தனியா பிரிச்சு பார்க்குறதுல உங்களுக்கு என்ன பிரச்சினை?”
நாராயணன் ஏதோ சிந்தித்தவாறு உன்னுடைய முகத்தையே பார்த்தான். இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் நீ இந்த மாதிரி ஒரு தீர்மானத்தை எடுத்ததையோ... இப்படிப் பேசியதையோ அவன் பார்த்ததில்லை. ராதிகா இப்படிப் பேசுகிறாள் என்றால் அதைப் பற்றி நாராயணன் கொஞ்சம்கூட ஆச்சரியப்பட்டிருக்கமாட்டான். அவள் ஐரோப்பாவில் வசித்து இந்தியாவுக்குத் திரும்பி வந்த ஒரு நவநாகரிகமான குடும்பத்தைச் சேர்ந்தவள். நாராயணன் அதற்கு மேல் ஒரு வார்த்தைகூட பேசாமல் உன்னை அவனுடைய வீட்டிற்கு வரச்சொன்னான். அவனுடைய ஆடையைப் போலவே அவனுடைய வீடும் அழகாகவே இருந்தது.
ஒரு படுக்கையறையும் ஒரு கழிப்பறையும் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு ஃப்ளாட் அது. அந்தப் படுக்கையறையில் எந்தவித கஷ்டமும் இல்லாமல் குறைந்தது பத்து பேராவது படுத்துறங்கலாம். அந்த அளவுக்கு அந்த அறை பெரிதாக இருந்தது. தனியாக வசித்துக் கொண்டிருக்கும் நாராயணனுக்கு இவ்வளவு பெரிய படுக்கையறை எதற்கு என்று உன்னை நீயே கேட்டுக் கொண்டாய். நாராயணன் தன்னுடைய நாடகத்தின் கையெழுத்துப் பிரதியைக் கொண்டு வந்து உனக்கருகில் அமர்ந்து அதன் சில பகுதிகளைப் படித்துக் காட்டினான். பகவந்தி புஷ்பவதியான விஷயம் தெரிந்தவுடன், நன்கு அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டு வண்டியில் ஏறி குண்டேச்சா அவளின் குடிசையை நோக்கிச் சென்றார்...
“மாட்டுவண்டி நாடகம் பார்க்கும் மக்களுக்கு மத்தியில் வரணும்னு சிலபேரு சொல்றாங்க. அப்படிச் செய்றதா இருந்தா நம்ம நாடகத்தை நாம ஒரு திறந்த வெளியிலதான் நடத்த வேண்டியதிருக்கும்.” - நாராயணன் சொன்னான், “கிராமத்து கலைகளைத்தான் திறந்த இடங்களில் நடத்துவாங்க. நம்ம நாடகத்தைப் போல இருக்கிற நவீன நாடகங்களை ஒரு தியேட்டர்லதான் நடத்த முடியும்.”
தொடர்ந்து நாராயணன் இப்படிச் சென்னதாக நீ நினைக்கிறாய். “ஒரு நாடகத்தை நடத்துறப்போ சில தருணங்களையும் சில சம்பவங்களையும் நாம திரும்பவும் மேடையில் கொண்டுவர வேண்டியதிருக்கு. எல்லா பகுதிகளும் மூடிக்கிடக்கிற ஒரு தியேட்டர்ல மட்டுமே இந்தக் காரியங்களை நம்மால ஒழுங்கா செய்ய முடியும்.”
நாராயணன் சொன்னதை நீ கேட்டுக் கொண்டிருந்தாய். “இவ்வளவு நாட்களா அங்குமிங்குமா ஒரு ஆட்டுக்குட்டியைப் போல ஓடுவதும் விளையாடுவதும் சிரிப்பதுமா இருந்த பகவந்தி ஒரே நாள்ல அவமானப்பட்டவளாகவும், துக்கத்துல மூழ்கிப் போனவளாகவும் மனசில் காயம்பட்டவளாகவும் மாறிடுறா... அந்தக் கதாபாத்திரத்தைத்தான் இப்ப நீ செய்யப் போறே....”
அந்தப் பொறுப்பை மிகுந்த தைரியத்துடன் ஏற்றுக்கொண்ட நீ சொன்னாய், “ஒத்திகை முடிஞ்சு மேடைக்குப் போய் நிற்கிற நிமிடத்துல நான் முழுமையா பகவந்தியாவே மாறிடுவேன்ற திடமான நம்பிக்கை எனக்கு இருக்கு.”
முழுமையான பகவந்தியாக மாறுவது அல்ல... முழு நிர்வாணமான பகவந்தியாக மாறுவதுதான் இங்குள்ள பிரச்சினையே என்பதை நீ நன்றாகவே அறிவாய். அப்படிச் செய்யும்போது ஏற்படப்போகிற பாதிப்புகளைப் பற்றியும், இழப்புகளைப் பற்றியும் உன்னால் புரிந்துகொள்ள முடியும். உன் மனதில் இருக்கும் எண்ணங்களைப் பற்றி மரியாவிடம் நீ ஒரு வார்த்தைகூட இதுவரை பேசவில்லை. அதற்கான நேரம் இன்னும் வரவில்லையென்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்.
உன் கைவிரலில் மோதிரம் அணிவித்த கோகுலிடம் நீ இதுவரை ஒரு வார்த்தைகூட பேசவில்லை. அதற்கான நேரமும் இன்னும் வரவில்லை என்று நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். நீ செய்யப் போகிற காரியம், உன் குடும்பத்திலும் நண்பர்கள் மத்தியிலும் மட்டுமல்ல... சமூகத்திலேயே ஒரு புயலை உண்டாக்கக் கூடியது என்பதென்னவோ உண்மை. அந்தப் புயல் வரப்போவதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட ராதிகா, பயந்து ஓடியே போய் விட்டாள். ஆனால், நீ அந்த மாதிரி பயப்படக்கூடியவள் அல்ல. நீ வசுந்தராவாயிற்றே!
4
என் சகோதரி வசுந்தரா எடுத்த தீர்மானம் உண்மையிலேயே மிகவும் தைரியமான ஒன்றுதான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. நாடகம் எங்கள் குடும்பத்திற்கு அன்னியமான ஒன்றல்ல. என் தந்தை ஃபெர்னாண்டெஸ் மாஸ்ஸி முன்பு ஒரு நாடகத்தில் கப்பல்படை வீரன் பாத்திரத்தில் நடித்தார். படிக்கிற காலத்தில் என் தாய் ஒரு திருமணப் பெண்ணாக, வெண்மையான மஸ்லீன் துணியால் ஆன ஆடையை அணிந்துகொண்டு மேடையில் நடித்ததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், எனக்கு நாடகத்துடன் சொல்லிக் கொள்கிற மாதிரி தொடர்பு எதுவும் இல்லை. கவிதை எழுத முயற்சி பண்ணியிருந்தாலும், அதில் என்னால் வெற்றி பெற முடியவில்லை. என் சகோதரி கவிதையிலோ, நாடகத்திலோ தனிப்பட்ட ஆர்வம் எதையும் இதுவரை காட்டியதில்லை. இருப்பினும் இப்படியொரு தீர்மானத்தை இவ்வளவு சீக்கிரமாக அவள் எப்படி எடுத்தாள்? எந்த உணர்வால் உந்தப்பட்டு இப்படிப்பட்ட ஒரு முடிவை அவள் எடுத்திருக்க முடியும்? அவள் அண்ணனான என்னாலேயே அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
எது வேண்டுமானாலும் இருக்கட்டும். வசுந்தரா எடுத்த அந்த முடிவைப் பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன். ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டு குளிர்பானம் குடித்துக்கொண்டு தொலைக்காட்சித் தொடர்களைப் பற்றி பேசிக்கொண்டு திரியும் சாதாரண பெண்களைப் போலல்ல என் சகோதரி என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. சில உண்மைகளைப் புரிந்து கொள்ளவும் கடினமான முடிவுகளை தைரியமாக எடுக்கவும் என் சகோதரியால் முடிகிறது என்பதை நினைத்துப் பார்க்கும்போது எந்த சகோதரனுக்கு அதைப் பற்றி மகிழ்ச்சி உண்டாகாமல் இருக்கும்?
அதனால் வசுந்தரா ஒத்திகைக்கு கிளம்பும்போது நான் சொன்னேன். “தங்கச்சி, நான் உன்னை இறக்கி விடுகிறேன். நான் உன் நடிப்பைப் பார்த்தது மாதிரியும் இருக்கும்ல?”
எங்களின் பழைய காரில் அவளை என்னருகில் உட்கார வைத்து கரீம்பாயின் வீட்டை நோக்கி செல்லும்போது, நான் அவள் கையை எடுத்து லேசாக அழுத்தினேன். அப்போது அவளின் கண்கள் பிரகாசிப்பதை நான் பார்த்தேன். ஆடை என்ற பெயரில் அவள் எதையெதையோ எடுத்து அணிந்திருந்தாள். அம்மாவின் ஒரு பழைய பாவாடை, என்னுடைய ஒரு ஷர்ட், அதற்கு மேலே சாம்பல் நிறத்தில் ஒரு ஜாக்கெட்.,