வசுந்தரா - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7217
பல நாட்கள் தியேட்டரில் பாதிக்கு மேல் காலியாகக் கிடந்தாலும், அந்த நாடகம் கரீம்பாயின் மாஸ்டர் பீஸ் என்று எல்லோராலும் கருதப்பட்டது.
நாராயணன் எழுதிய நாடகத்தின் முதல் மேடையேற்றம் முடிந்த அடுத்த நாள் எல்லோரும் கரீம்பாயின் வீட்டில் கூடினார்கள். காரணம்- மீண்டும் அந்த நாடகம் மேடை ஏறப்போவதில்லை. அடுத்து வந்த நாட்களில் நாடகம் நடக்காமல் தியேட்டர் இருட்டுக்குள் மூழ்கி ஆள் நடமாட்டமே இல்லாமல் கிடந்தது. கோடை முடிந்து சீஸன் ஆரம்பித்திருக்கும் நேரமாதலால் சாதாரணமாக இந்தச் சமயத்தில் தியேட்டர் வெளிச்சத்திலும், சத்தத்திலும், மக்கள் கூட்டத்திலும் மூழ்கிப் போய் ஒரு திருவிழா கோலாகலத்துடன் காணப்பட வேண்டும். ஆனால், ஒரு மரண வீட்டில் இருக்கும் அமைதி அங்கு சூழ்ந்திருந்தது. தியேட்டரின் முன்பக்கக் கண்ணாடிகள் உடைந்து கிடக்கின்றன. கேட்டின் இருபக்கங்களிலும் உருண்டையாக இருந்த விளக்குகள் உடைக்கப்பட்டிருந்தன. வெளியே கார்களை நிறுத்துமிடத்திற்கு அருகில் ஜோடியைப் பிரிந்த ஒரு ஒற்றைச் செருப்பு அனாதையாக்கி கிடப்பதைப் பார்க்கலாம்.
எல்லோரும் வந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்திய பிறகு கரீம்பாய் சொன்னார். “நம்மோட புதிய நாடகத்தைப் பலரும் ஒரு தோல்வியாகப் பார்க்கலாம். நாடகக் கலையைப் பற்றி நல்லா தெரிஞ்சவங்க இதை ஒரு பெரிய வெற்றியாகவும் நினைக்கலாம். நம்மோட புதிய முயற்சி ஒரு தோல்வியா வெற்றியான்றது இங்கே பிரச்சினையில்ல...”
“சார்... கலையில் தோல்வியும் இல்ல- வெற்றியும் இல்லன்றது எங்களுக்கு நல்லாவே தெரியும்”- கெஸ்ட் ஹவுஸில் தங்குபவர்களுக்கு பெண்களைக் கூட்டிக் கொடுக்கும் ஜாவேத் சொன்னான்.
“ஆமாம்... இதைப் போன்ற அடிப்படையான விஷயங்களை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல. நீங்க விஷயங்கள் தெரிஞ்சவங்க. இல்லாட்டி என்னோட நாடகக் குழுவுல ஒருத்தரா நீங்க வந்து இணைஞ்சிருக்க மாட்டீங்க.”
அவர் மீண்டும் நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டினார். முன்பு ராதிகா அமர்ந்திருந்ததைப்போல ஒரு மூலையில் தலையைக் குனிந்தவாறு வசுந்தரா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். எல்லோரும் அங்கு வந்து விட்ட பிறகும், கோகுல் மட்டும் இன்னும் வரவில்லை. நல்ல பார்வை சக்தியைக் கொண்ட கரீம்பாய் அதை கவனிக்காமல் இல்லை.
“நாம இப்படியொரு நாடகத்தை நடத்தினோம்ன்றது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். நாலோ அஞ்சோ தடவைகள் மேடையேறக் கூடிய அளவுக்கு உள்ள நாடகம்தான் இது. ஆனா, நம்மோட துரதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்... ஒரு தடவை மேடை ஏறினதோட, இந்த நாடகம் ஒரு முடிவுக்கு வந்திடுச்சு. ஆனா, இந்த நகரத்துல நாடகக் கலைன்ற ஒண்ணு நிலை பெற்று நிக்கிற காலம் வரைக்கும் நம்மோட இந்த நாடகம் நினைக்கப்படும்ன்றது மட்டும் நிச்சயம்.”
கரீம்பாய் மீண்டும் சுற்றிலும் கண்களை ஓட்டினார். அவரின் பார்வை வசுந்தராவின் மீது பதிந்தது. அவர் தொடர்ந்து சொன்னார். “இங்கே வராமல் இருக்கும் கோகுல் கூட தெரிஞ்சிக்கணும்ன்றதுக்காகத்தான் நான் இதைச் சொல்றேன். நாடக வரலாற்றில் நாம நுழைஞ்சிருக்கோம்னா அதுக்கு முக்கியமான காரணமா இருக்குறவ வசுந்தரா.”
நாடகத்துடன் தொடர்பு கொண்டவர்கள் கூடியிருந்த கரீம்பாயின் வீடே கைத்தட்டலால் அதிர்ந்தது. கரீம்பாய் வசுந்தராவை தன்னுடைய நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டார். அவர் சொன்னார். “கலை கூட ரத்த சாட்சிகளை உருவாக்கத்தான் செய்யுது... அப்படிப்பட்ட ஒரு ரத்த சாட்சிதான் மகளே நீ...”
அங்கு அமைதி பயங்கரமாகச் சூழ்ந்திருந்தது.
ஒரு லட்சம் வீட்டைச் சேர்ந்தவர்கள் இன்று காலையில் வெளிவரும் நாளிதழைப் புரட்டியவுடன், உடம்பில் துணி எதுவும் இல்லாமல் நின்றிருக்கும் பகவந்தியைத்தான் பார்த்தார்கள். வர்கீஸ் எடுத்த வசுந்தராவின் பேட்டியின் சில பகுதிகளும் கட்டம் கட்டப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
“எனக்கு ஒரு விருப்பம்” - குளிர்வதைப் போல் சட்டையின் பாக்கெட்டுகளுக்குள் கைகளை நுழைத்துக் கொண்டு சுவரோடு சேர்ந்து நின்றிருந்த நாராயணன் சொன்னான். “என்னோட இந்த நாடகத்தை இப்போ... இந்த இடத்துல வச்சு நெருப்புல எரிக்கணும்னு நினைக்கிறேன்.”
மூன்று புகழ் பெற்ற பதிப்பாளர்கள் இன்று நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே அவன் நாடகத்தை நூல் வடிவில் தாங்கள் கொண்டுவரத் தயாராக இருப்பதாகச் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் முன் பணத்துடன் ஒரு அழகியை அவனிடம் அனுப்பி வைக்கவும் செய்திருந்தார்.
“இவ்வளவு காலமும் நான் நினைச்சிருந்தது; முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட ஒரு நாடகத்திற்கு ஒரே ஒரு லட்சியம்தான் இருக்கு. அப்படின்றதுதான்... அது... அந்த நாடகத்தை மேடையில நடத்துறது” - நாராயணன் எல்லோரையும் பார்த்துச் சிரித்தான். தன்னைத் தானே பார்த்துச் சிரித்துக் கொள்ளும் ஒரு சிரிப்பு அது. உமிக்கரி தீர்த்து போய்விட்டதால், சாதாரணமாகக் காணப்படும் வெண்மை அவன் பற்களில் காணப்படவில்லை. முகத்தில் இருந்த சிரிப்பை மாற்றிவிட்டு, மீண்டும் கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டு தன் பேச்சை அவன் தொடர்ந்தான். “முழுமையாக முடிந்த ஒரு நாடகத்துக்கு இன்னொரு லட்சியமும் இருக்குன்றதை நான் புரிஞ்சுக்கிட்டேன். நாம அந்த லட்சியத்தை நிறைவேற்றுவோம்.”
நாராயணன் நாடகத்தின் கையெழுத்துப் பிரதியுடன் மொட்டை மாடிக்கு ஏறினான். மஞ்சள் பித்தம் பிடித்த ஒரு இரவு நேரமாக இருந்தது அது. அவன் நாடகத்தின் கையெழுத்துப் பிரதியை மொட்டை மாடியின் நடுவில் வைத்து, ஜாவேத்தின் கையிலிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை வாங்கி கையெழுத்துப் பிரதியின் மேல் அதை ஊற்றினான். அவன் தீப்பெட்டியை உரசி தன்னுடைய நாடகத்திற்கு நெருப்பால் ஒரு முத்தம் தந்தான். கரீம்பாயின் வீட்டு மொட்டை மாடியில் நெருப்பு கொழுந்து விட்டு எரிந்ததால், நல்ல பிரகாசமாக இருந்தது. அந்த நெருப்பு தரை வழியாகப் பரவி அரைச்சுவரில் போய் முட்டி நின்றது.
“லெட் தி பார்ட்டி பிகின்.”
கரீம்பாய் அறிவித்தார். எல்லோரும் அவரைப் பின் தொடர்ந்து இருண்டு போயிருந்த படிகளில் இறங்கினார்கள்.
மொட்டை மாடியில் தனியாக நின்றிருந்த வசுந்தரா தன்னுடைய கை விரல்களில் பிரகாசித்துக் கொண்டிருந்த மோதிரத்தை மெதுவாகக் கழற்றி, எரிந்து தாழ்ந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டாள்.
கீழே கரீம்பாயின் உட்காரும் அறையில் பாட்டில்களின் மூடிகள் பயங்கர சத்தத்துடன் திறக்கப்பட்டன.