வசுந்தரா - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7219
குண்டேச்சா பகவந்தியின் உடலிலிருந்த கடைசி துணியையும் அவிழ்த்து எரிகிறபோது, ஹேன்ட் பேக்குகளிலிருந்தும் தோல் பைகளிலிருந்தும் பூனைகளைப் போல அந்த கேமராக்கள் வெளியே குதித்து வரலாம். அதையெல்லாம் மனதிற்குள் நினைத்துப் பார்த்தவாறு நின்றிருந்த பார்த்தா அதிர்ந்து போய்க் காணப்பட்டான். நியாயங்கள் பலவற்றைச் சொல்லி அவனைச் சமாதானப்படுத்த முயன்ற என்னுடைய முயற்சி பலித்ததாக எனக்குத் தெரியவில்லை.
கோகுலைக் காணாமல் இப்போதும் வருத்தத்துடன் நின்றிருந்த வசுந்தராவைப் பார்த்த நான் பார்த்தாவிடமிருந்து நகர்ந்து அவள் இருக்குமிடத்திற்குச் சென்றேன். நான் அவளிடம் சொன்னேன். “நான் உன்னை கோகுலோட வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறேன். உன் பேகை எடுத்துட்டு என்கூட வா.”
“இல்ல... நான் வரல...” - அவள் சொன்னாள். “நான் ஜாவேத் கூட என் வீட்டுக்குப் போறேன்.”
“வா...” - ஜாவேத் சொன்னான். “வீட்டுக்குப் போனதும் ஏதாவது சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு. உனக்கு இப்போ தேவை கோகுல் இல்ல. நல்ல தூக்கம்தான்.”
அவளால் இன்று தூங்க முடியுமா? அவளின் இடத்தில் நான் இருந்தால் என்னால் முடியுமா? எப்படியாவது கோகுலைத் தேடி கண்டு பிடித்து அவளை அவன் கையில் ஒப்படைக்க வேண்டும். இந்த நிமிடத்தில் அவனால் மட்டுமே அலங்கோலப்பட்டுக் கிடக்கும் அவளுடைய மனதைச் சரி பண்ண முடியும். நான் கோகுலுக்கு ஃபோன் பண்ணுவதற்காக மேனேஜரின் அறையை நோக்கிச் சென்றேன். அப்போது அவர் படுவேகமாக அங்கிருந்து என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
“என்ன இது மிஸ்டர்?” - அவர் கேட்டார். “என் தியேட்டரை கேபரே நடத்துற இடம்னு நீங்க நினைச்சிட்டீங்களா? விக்டர் கரீம்பாய் எங்கே? அவரைப் பார்த்து ரெண்டு வார்த்தைகள் நான் கேக்கணும்...”
ஆரவாரத்தைக் கேட்டு பாட்டிலை மூடிவிட்டு கரீம்பாய் எங்களை நோக்கி வந்தார். மேனேஜர் கிஷண் பல்லா அவர் பக்கம் திரும்பினார். “இருபது வருடமா இருக்குற நம்மோட நட்பை ஒரேயடியா முடிவுக்குக் கொண்டு வரணும்னு நீங்க திட்டம் போட்டுட்டிங்களா?”
“இல்ல...”
“அப்படின்னா இதுக்கு என்ன அர்த்தம்? நாளைக்கு இங்கே போலீஸ் வரமாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? அப்படி ஏதாவது நடந்தா, நான் உங்களை மன்னிக்க மாட்டேன். இந்த தியேட்டரோட வரலாற்றில் அப்படியொரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லன்றதை நீங்க ஞாபகத்துல வச்சுக்கங்க.”
“அப்படி எதுவுமே வராது, கிஷண். நாங்க கேபரேக்காரங்க இல்ல. எல்லோரும் மதிக்கிற கலைஞர்கள்தான்”- கரீம்பாய் சொன்னார். நான் அதோடு சேர்த்துச் சொன்னேன். “நாடக வரலாற்றில் இடம் பிடிக்கப் போகிற ஒரு ட்ராமாவைத்தான் நாங்க இங்கே நடத்திக்கிட்டு இருக்கோம். இது உங்களோட தியேட்டரின் மதிப்பை மேலும் கூட்டத்தான் செய்யும்.”
“நான் எதையும் கேட்க விரும்பல...” - பல்லா சொன்னார். “போலீஸ் கமிஷனரோட கையெழுத்துப் போட்ட அனுமதி கடிதம் கொண்டு வந்து காட்டினா மட்டுமே நாளைக்கு நான் தியேட்டரைத் திறந்து விடுவேன்.”
இவ்வளவையும் சொன்ன அவர் வேகமாகக் கதவை அடைத்து விளக்குகளை அணைத்துவிட்டு, அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அவர் பண்ணிய ஆர்ப்பாட்டத்தில் நான் கோகுலைப் போய் பார்க்க வேண்டும் என்ற விஷயத்தையே மறந்து விட்டேன். அவர் மிரட்டியதை, சொல்லப் போனால் நாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை. தர்மசங்கடமான சூழ்நிலையை உருவாக்கக் கூடிய எந்த விஷயத்தையும் அப்போது நாங்கள் மனதில் நினைத்துப் பார்க்கக் கூடிய நிலையில் இல்லை. நடிகர் - நடிகைகள் ஒப்பனையைக் கலைத்து முகத்தைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். கரீம்பாயும் பார்த்தாவும் காலியாகக் கிடந்த மேடையில் அமர்ந்து ஒரே பாட்டிலில் இருந்து ரம்மை ஊற்றி மாறி மாறி குடித்துக் கொண்டிருந்தார்கள். நானும் ஜாவேத்தும் வசுந்தராவை அழைத்துக் கொண்டு கோகுலின் வீட்டிற்குப் புறப்பட்டோம். ஜாவேத் அவளிடம் சொன்னான். “தங்கச்சி... நீ எதுக்கு தேவையில்லாம உணர்ச்சிவசப்படுறே? நாடக வரலாற்றில் ஒரே இரவிலேயே ஒரு இடத்தைப் பிடிச்சிக்கிட்டவ நீ...”
அவளின் தலைக்குள் இப்போது எதைப் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் என்பதை அறிய நான் முயற்சித்தேன். ஒரு வேளை திரும்ப வீட்டிற்குப் போகிறபோது, தன் தாய் தன்னிடம் எப்படி நடந்து கொள்வாள் என்பதைப் பற்றி அவள் யோசித்துக் கொண்டிருப்பாளோ? என்ன காரணத்திற்காக கோகுல் யாரிடமும் ஒரு வார்த்தை கூட கூறிக் கொள்ளாமல் அரங்கத்தை விட்டு வெளியேறினான் என்பதைப் பற்றியும் அவள் மனம் நினைத்துக் கொண்டிருக்கலாம். போகும்போது ஜாவேத் அரங்கத்தில் பார்வையாளர்கள் மத்தியில் மாஸ்ஸியைப் பார்த்ததாகக் காதுக்குள் சொன்னான். வழக்கம்போல் அவன் தந்தை இடுங்கிய தோள்களைக் கொண்ட கோட் ஒன்றை அணிந்துகொண்டு அவ்வப்போது காதுகளைத் தடவிக் கொண்டிருந்தாரென்றும் அவன் சொன்னான். இறந்துபோன மனிதர்களை மட்டுமல்ல, பந்தயக் குதிரைகளைக் கூட அவன் அவ்வப்போது பார்ப்பதுண்டு என்பதையும் நான் நினைத்துப் பார்த்தேன். ஒரு நடுப்பகல் நேரத்தில் ரேஸ்கோர்ஸில் கடுமையான வெயிலில் இறந்துபோன பிவரிகிங் என்ற பந்தயக் குதிரை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பந்தயக் குதிரையுடன் உறவு கொள்வதை தான் பார்த்ததாக அவன் சமீபத்தில் ஒரு நாள் என்னிடம் சொன்னான்.
கோகுலின் வீட்டை அடைந்தபோது, எங்களுக்கு பயங்கர ஏமாற்றமாக இருந்தது. அங்கு சிறிது கூட வெளிச்சம் இல்லை. வாசல் கதவு வெளியே பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்தது.
“நீங்க இதுக்காக கஷ்டப்பட வேண்டாம்” -ஜாவேத் என்னிடம் சொன்னான். “நான் என் தங்கச்சியைக் கூட்டிட்டுப் போய்க்கிறேன்.”
“வேண்டாம்”- நான் சொன்னேன். “வசுந்தராவை உங்க அம்மாக்கிட்ட ஒப்படைச்சிட்டுத்தான் நான் திரும்புவேன்.”
ஆனால், அதற்கு ஜாவேத் சம்மதிக்கவில்லை.
அதனால் நான் தன்னந்தனியாக அந்த நள்ளிரவு நேரத்தின் அமைதியைச் சுமந்தபடி என்னுடைய வீட்டை நோக்கி நடந்தேன். வாழ்க்கையின் அர்த்தமுள்ளதைப் பற்றியும், அர்த்தமில்லாததைப் பற்றியும் உள்ள சிந்தனைகள் ஒரு பம்பரத்தைப் போல என் தலைக்குள் சுழன்று கொண்டிருந்தன. பயங்கர களைப்பு காரணமாக என் கால்கள் மிகவும் தளர்ந்து போய்விட்டன. கண்களைத் தூக்கம் வந்து முத்தமிட்டுக் கொண்டிருந்தது. நாடகம் எழுதி மற்றவர்களின் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கிவிட்டு, தூங்கியவாறு வீட்டை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு ரசிகனே நான்.
8
நாடகத்தின் கடைசி மேடையேற்றம் முடிந்த பிறகு, அந்த நாடகத்துடன் தொடர்பு கொண்ட எல்லோரும் கரீம்பாயின் வீட்டில் கூடுவது மரபு. இதுவரை அவர் இயக்கிய நாடகங்கள் பலவும் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் மேடையில் நடத்தப்பட்டிருக்கின்றன. ‘ஒரு தலித் இளம் பெண்ணின் கதை’க்கு முன்பு அவர் இயக்கிய பீட்டர் ஹான்ட்கேயின் நாடகத்தை ஐந்து முறை தொடர்ச்சியாக மேடையேற்றியிருக்கிறார்.