தாபம்
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
நான் ஹரியின் சினேகிதியாக மாறியபோது அவன் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களைப் பற்றி மனம் திறந்து சொல்ல ஆரம்பித்தான். அப்படி பல விஷயங்களைப் பற்றியும் என்னிடம் பேசுவதன் மூலம் ஒருவகை நெருக்கத்தை இந்த உறவில் தான் வெளிப்படுத்துவதாக அவன் உணர்ந்தான். ஆனால், என்னைப் பொறுத்தவரை அவன் வாழ்க்கையில் உள்ள ரகசியங்களைக் கேட்பதற்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நான் அவன் காதலியாகவோ மனைவியாகவோ ஆக வேண்டும் என்றும் துடிக்கவில்லை.
எந்த விஷயத்தையும் மிகவும் மெதுவாகச் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடிய மனநிலை கொண்டவன் அவன். ஒரு நேர சாப்பாட்டை உட்கொள்வதற்கு அவன் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் செலவிடுவான். ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு சாப்பிட வேண்டும் என்று சொல்லி என்னை அவன் அழைப்பதுண்டு. உடன் பணியாற்றும் வேறு எந்தப் பெண்ணையும் அவன் இப்படி தன்னுடன் வந்து சாப்பிட வேண்டும் என்று அழைப்பதில்லை. அவன் என்னை மட்டும் அழைத்து என்னுடன் அமர்ந்து சாப்பிட விருப்பப்பட்டதைச் சொல்லி பல நேரங்களில் என்னுடன் பணியாற்றுபவர்கள் என்னைக் கிண்டல் பண்ணுவார்கள். ஹரியின் இலக்கு என்னைத் திருமணம் செய்வதுதான் என்று அவர்களில் சிலர் கூறினார்கள்.
"உஷா டெல்லியில் பிறந்து வளர்ந்தவ. அதனாலதான் ஹரி உஷாவை மட்டும் தனியா அழைச்சிட்டுப் போறான். நாங்க எல்லாரும் சாதாரண கிராமப் பகுதிகள்ல இருந்து வந்தவங்க. கிராமங்கள்ல பிறந்து வளர்ந்து ஒழுங்கா படிச்சதை மட்டும் வச்சுக்கிட்டு திருவனந்தபுரத்துல வேலை பார்க்குறவங்க நாங்க..." ருக்மணி ஒருநாள் சொன்னாள்.
"ஒரு தனிப்பட்ட நாகரீகம்னு சொல்ற மாதிரி ஹரிக்கிட்ட அப்படியொண்ணும் கிடையாது"- நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
ஹரி திருவனந்தபுரத்தில் பிறந்து, அங்கேயே கல்வி கற்று, தானே வரைபடம் போட்டுக் கொடுத்து கட்டப்பட்ட வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் ஒரு திருமணமாகாத இளைஞன். அதனால்தானோ என்னவோ அவனுடன் பேசுவதற்கு என்னுடன் பணியாற்றும் திருமணமாகாத இளம்பெண்கள் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
மது அருந்தும் பழக்கமோ, காபி குடிக்கும் பழக்கமோ எதுவுமே இல்லாதவன் ஹரி. கன்னாபின்னாவென்று தேவையில்லாமல் செலவழிக்காமல் ஒவ்வொரு மாதமும் கனரா வங்கியில் பணத்தைச் சேமித்துக் கொண்டிருப்பவன் அவன். வரதட்சணையும் காரும் மற்ற பொருட்களும் தந்து ஹரியை மருமகனாக ஏற்றுக்கொள்ள பணக்காரர்களான நாயர்கள் போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவனோ திருமணமே செய்து கொள்ளாமல், சுதந்திர மனிதனாக உலவிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவன் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு பகல் உணவு சாப்பிட என்னை அழைத்துச் சென்றிருந்தான்.
"இங்கே ஒவ்வொரு உணவுப் பொருளையும் கொண்டு வந்து வைக்கிறதுக்கு ஏகப்பட்ட நேரம் ஆகும் உஷா. அதனாலதான் உன்னை நான் இந்த ஹோட்டலுக்கு அழைச்சிட்டு வந்தேன். கொஞ்சநேரம் மனசை விட்டு ஏதாவது பேசிக்கிட்டு இருக்கலாமேன்னு நினைச்சேன்."- ஹரி எனக்காக ஒரு நாற்காலியைப் பின்னால் இழுத்தவாறு சொன்னான்.
"நல்ல வியாபாரம் நடக்குற இடமா பார்த்துப் போனா நம்மால இப்படி உட்கார்ந்து பேச முடியாது. உஷா, உன் கிட்ட சில முக்கியமான விஷயங்களை நான் பேச விரும்புறேன்" என்றான் ஹரி.
"என்னைத் திருமணம் செய்ய விருப்பப்படுற விஷயமா இருந்தா ஆரம்பத்துலயே அதை நான் நிராகரிச்சுடறேன். அதை மட்டும் புரிஞ்சுக்கங்க ஹரி. உங்களைப் போல ஒரு ஆளை என் கணவனா என்னால கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியாது" என்று நான் சொன்னேன்.
"என்னைப் பற்றி இதுதான் உன் மனசுல இருக்குற எண்ணம்னா எதற்கு என்கூட நீ திரைப்படம் பார்க்கவும், ஹோட்டல்ல சாப்பிடவும் வரணும்?"- ஹரி கேட்டான். அவன் உதடுகள் லேசாகத் துடித்தன. கோபத்தால் அவனுடைய முகத்தில் இருக்கும் தசைகள் இறுகியதைப் போல் எனக்குத் தோன்றியது.
"நான் திருவனந்தபுரத்துல வளர்ந்தவ இல்ல. இதைவிட பெரிய நகரத்துல வளர்ந்தவ. ஒரு ஆளுகூட நான் திரைப்படம் பார்க்கவோ ஹோட்டல்ல சாப்பிடவோ போறேன்னா அதற்காக என்னை அந்த ஆளுக்கு எழுதிக் கொடுத்திடணும்னு அவசியம் ஒண்ணும் இல்ல" - நான் சொன்னேன்.
ஹரி மேஜை மேல் வைக்கப்பட்டிருந்த பூக்களை தன் விரல்களால் தடவிக் கொண்டிருந்தான். அவன் உணர்ச்சி வசப்பட்டு அமர்ந்திருப்பதை என்னால் உணர முடிந்தது.
"அப்படின்னா... உஷா, உன்னை நான் வீட்டுல கொண்டு போயி இப்பவே விட்டுர்றேன். என் மேல உனக்கு அந்த அளவுக்கு வெறுப்பு இருக்குறதா இருந்தா, உன் நேரத்தை நான் ஏன் தேவையில்லாம பாழாக்கணும்?" என்றான் அவன்.
அதைக்கேட்டு நான் விழுந்து விழுந்து சிரித்தேன். "தாலி கட்டி உன் வீட்டுக்கு வர எனக்கு விருப்பமில்லைன்னு மட்டும்தான் நான் சொன்னேன், ஹரி... நம்மோட நட்பு இன்னைக்கோட முடிஞ்சு போகணும்னு ஒண்ணும் நான் சொல்லலியே." ஹரி மீண்டும் நாற்காலியில் அமர்ந்தான்.
"ஸாரி, உஷா, நான் என்னென்னவோ சொல்லிட்டேன். என்னை மன்னிச்சுடு. மனசுல உண்டான ஏமாற்றத்துல வாய்க்கு வந்தபடி பேசிட்டேன். உஷா, உன்னை உன் எதிர்கால மனைவியா மனசுல நினைச்சு ஒண்ணரை வருஷமாச்சு. உன்னைப் பற்றி நான் என் தாய்கிட்டயும், சகோதரன்கிட்டயும்கூட பலமுறை பேசியிருக்கேன். நாம ரெண்டுபேரும் வேற வேற ஜாதியைச் சேர்ந்தவங்கன்றதைக் கூட அவங்க பார்க்கலைன்னு சொல்லிட்டாங்க. தாராவை மனைவியா அடைய முடியாத வேதனை உன்னை நான் பார்த்த பிறகுதான் எனக்கே தீர்ந்தது, உஷா" - ஹரி சொன்னான்.
நான் என் மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி அவனிடம் விளக்க விரும்பவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் தாரா மீது தனக்கிருந்த காதலை ஹரியே என்னிடம் மனம் திறந்து சொன்னான். அவன் செய்த மிகப்பெரிய தவறே அதுதான். தன்னுடைய முறைப் பெண்ணான தாராவுடன் சேர்ந்து பள்ளிக்கூடத்திற்கும், கல்லூரிக்கும் ஒன்றாகப் போனது, அவளுடன் சேர்ந்து இளைஞர்கள் திருவிழாக்களில் பாடவும் ஆடவும் செய்தது, கடைசியில் அமெரிக்காவிலிருந்து வந்த மலையாளியான விஞ்ஞானியை அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உண்டானபோது தனக்கு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது- இப்படி எல்லா விஷயங்களையும் அவன் என்னிடம் கூறியிருந்தான். தாராவின் உடலழகைப் பற்றி அவன் விளக்கமாகக் கூறும்போது எனக்குப் பொதுவாக அவன்மேல் வெறுப்புத்தான் தோன்றும். அந்த அளவுக்குப் பேரழகியான தன்னுடைய காதலியை தன்னைவிட பணக்காரனாக இருந்தாலும் அழகில்லாத ஒரு மனிதனுக்கு தாராவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து தந்தபோது அவன் ஏன் பலமாக அதை எதிர்க்காமல் விட்டான்?