
அவரு தூங்க ஆரம்பிச்ச பிறகுதான் நான் படுக்கவே போனேன். அதுக்குப் பிறகு அவரு எழுந்திருக்கவே இல்லைன்னு போனேன். அதுக்குப்பிறகு அவரு எழுந்திருக்கவே இல்லைன்னு சாராம்மா சொல்லித்தான் எனக்கே தெரியும்.”
"நிச்சயம் அது ஒரு அதிர்ஷ்டமான விஷயம்தான்."- லம்போதரன் பிள்ளை சொன்னார்: "அது மட்டுமல்ல. இந்த இறுதிச் சடங்கை இவ்வளவு பிரமாதமா நடத்திக்கிட்டு இருக்கிறது யாரு? நீங்கதானே?"
"வேற யாராவது இதை நடத்தணும்னு நினைச்சாக்கூட அது நடக்குற காரியமா?"- கைமள் தன்னுடைய வக்கீல் நண்பர் சொன்னதை ஆமோதித்தார்.
அவர்கள் பேசியது குறுப்பிற்கு மிகவும் பிடித்திருந்தது.
உண்மையிலேயே பார்க்கப்போனால் குறுப்பின் செயல் ஒவ்வொன்றும் பாராட்டக்கூடிய விதத்திலும், ஆச்சர்யப்படக்கூடிய அளவிற்கு கம்பீரமாகவும் இருந்ததை யாராக இருந்தாலும் நிச்சயம் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு விஷயமும் மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. இப்படியொரு மக்கள் கூட்டம் இதற்கு முன்பு அந்த கிராமத்திலோ, அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ எப்போதும் இருந்ததில்லை என்பதே உண்மை. இது என்ன சாதாரண விஷயமா? இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரபலமான திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களும் அந்த கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! கிறிஸ்துவ தேவாலயத்தில் நடக்கும் பெருநாள் விசேஷத்திற்கும், கோவிலில் நடைபெறும் திருவிழாவிற்கும் சேர்த்து எவ்வளவு மக்கள் வருவார்களோ அதைவிட பல மடங்கு அதிக அளவில் மக்கள் அங்கு கூடியிருந்தார்கள்.
"நம்ம ஃபிலிம் யூனிட்டை இங்கேயே அழைச்சிட்டு வந்திருக்கலாம்"- உதவி இயக்குநராக பட உலகிற்குள் நுழைந்து இப்போது சூப்பர் ஸ்டாராக வளர்ந்திருக்கும் ரூபகுமார் சொன்னான்: "இந்த மக்கள் கூட்டத்தை சில ஷாட்கள் எடுத்து வச்சா எங்கேயாவது பயன்படுத்திக்கலாமே!"
"ரூபன் அண்ணன் சொன்னது நூறு சதவிகிதம் சரி."- நட்சத்திர அந்தஸ்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கும் கதாநாயகியான முன்முனா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கும் கோயிவிள என்ற ஊரைச் சேர்ந்த நளினிக்குட்டி சொன்னாள்: "ஹரித்வாரில் கும்பமேளாவுக்குக் கூட இவ்வளவு பெரிய க்ரௌட் கூடினதில்லை..."
"அப்படின்னா நீ கும்பமேளா பார்த்திருக்கியா? ஹரித்வாருக்குப் போயிருக்கியா?" படவுலகில் ரூபாகுமாருக்குச் சமமாக இருக்கும்- அதே நேரத்தில் அவன் மீது சிறிது பொறாமை உணர்வு கொண்ட குஸுமோகன் கேட்டான்.
"நான் போகாட்டி என்ன? - முன்முனா விடுவதாக இல்லை: "என் டாடி சொல்லி நான் கேட்டிருக்கேன்."
"நீயும் உன் தாடியும்..."
"கேட்டீங்களா ரூபன் அண்ணே... இந்த குஸும் அண்ணன் வம்பு இழுக்கிறதை..."- முன்முனா கொஞ்சியவாறு சொன்னாள்.
"சரி விடு. இதுக்குப் போயி சண்டை போட்டுக்கிட்டு."- ரூபகுமார் இருவரையும் பார்த்துச் சொன்னான்: "சண்டை போடுற சூழ்நிலை இல்லை இது."
"தட் ஈஸ் தி பாயிண்ட்!"- குஸுமோகன் சொன்னான்.
தேவையில்லாத ஒரு சண்டை அங்கு நிறுத்தப்பட்டது.
பிணத்தை எடுக்கப்போகும் நேரத்தில் சடங்குகளுக்கேற்ப எல்லோரும் உரத்த குரலில் அழுதார்கள். அந்த விஷயம் நன்றாகவே நடந்தது. ஒவ்வாருவரும் தங்களின் கதாபாத்திரங்களைப் புரிந்து கொண்டு மிகவும் சிறப்பாக நடித்தார்கள். எல்லாவற்றிற்கும் காரணகர்த்தாவாகவும் இயக்குநராகவும் இருந்து செயல்பட்டது குறுப்புதான். முதன்மை உதவி இயக்குநராகப் பணியாற்றியவன் மரணமடைந்த அவறாச்சனின் மகனான வர்கீஸ் என்ற கீவறீச்சன். கேமராக்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருந்தன. பொழுது விடிந்தது முதல் மூன்று வீடியோ யூனிட்டுகள் அந்த சவச்சடங்கைப் படம் பிடித்துக் கொண்டிருந்தன. அமைச்சர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் இருந்த இடத்தில் மிகப்பெரிய கூட்டம் நின்றிருந்தது. அவர்கள் அனைவரும் ரூபகுமாரைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்று வந்தவர்கள். குஸுமோகனையும் முன்முனாவையும் வைத்த கண் எடுக்காது பார்க்க வந்தவர்கள். அமைச்சர்களுடன் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வந்தவர்கள்.
அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அங்கிருந்த பலரும் மரணத்தைத் தழுவிய ஆட்டக்களத்தில் அவறாச்சனைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அமைச்சர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் தவிர இரண்டு பாதிரிமார்களும் அவறாச்சனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்தார்கள்.
எல்லோரும் பாடியவாறு சொர்க்கத்திற்குப் பயணம் செய்யும் அவறாச்சனைப் பின் தொடர்ந்தார்கள். அவர்களின் பாடல் சொர்க்கத்தின் சுவர்களை- சொர்க்கத்திற்கு சுவர் என்ற ஒன்றிருந்தால்- நிச்சயம் இடித்துத் தள்ளியிருக்கும். சொர்க்கத்தில் இருப்பவர்கள் சிறிதும் எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பயந்து நடுங்கி வேறெங்காவது ஓடிப்போய் ஒளிந்திருப்பார்கள்.
யார் எது சொன்னாலும் ஆட்டக்களத்தில் அவறாச்சனின் இறுதிப்பயணம் ஒரு மகிழ்ச்சி நிறைந்த பயணமாக அமைந்து விட்டதென்னவோ உண்மை. இந்த அளவிற்கு வண்ணமயமான ஒரு இறுதிப்பயணம் கடந்த நூறு வருடங்களில் நடந்ததே இல்லை என்பதை பத்து, பன்னிரண்டு வயதுள்ளவர்கள்கூட ஒப்புக் கொண்டார்கள்.
கூப்பாடுகள் வித்தியாசமாக, ஆச்சர்யப்படும்படியாக, மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடியதாக மாறிவிட்டிருந்தன. பிணத்திற்குப் பின்னால் அழுது போய்க் கொண்டிருந்த பலரும் அப்போதும் இருக்கவே செய்தார்கள். எனினும், அவர்களை எல்லோரும் மறந்துவிட்டார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே மறந்துவிட்டார்கள் என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.
இறுதியில் ஊர்வலம் கிறிஸ்துவ தேவாலயத்தை அடைந்தது. தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட மக்களைவிட பலமடங்கு அதிகமான மக்கள் வெளியே நடைபெற்ற கொண்டாட்டச் சடங்குகளில் இருந்தார்கள். இடுகாட்டிலும் இதே நிலைதான். அவறாச்சனுக்காக அமைக்கப்பட்ட கல்லறையே ஒரு கண்காட்சி போல அமைந்து விட்டது. அந்த அளவிற்கு ஒரு அழகான கல்லறையை சில மணி நேரங்களில் அமையச் செய்தவர் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? தாஜ்மஹாலைப் பார்ப்பவர்கள் மும்தாஜை மறந்து விட்டு ஷாஜஹானை மனதில் நினைப்பதைப் போல, அந்தக் கல்லறையைப பார்க்க வரும் எதிர்கால பார்வையாளர்கள் ஆட்டக்களத்தில் அவறாச்சனை அல்ல; கல்லறையை உண்டாக்கிய குஞ்ஞுக்குறுப்பைத்தான் நினைப்பார்கள். அந்த அளவிற்கு அழகாக அமைந்திருந்தது கல்லறை.
அந்த அழகான கல்லறையில் பாதிரியார்களின் பிரார்த்தனைகள் ஒலிக்க, ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்விட்டு நினைத்துக் கொண்டிருக்க, ஆட்டக்களத்தில் அவறாச்சனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் மீண்டும் உரத்த குரலில் அழுதார்கள்.
சிறிது நேரத்தில் தங்கள் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவர்கள் மனதில் உற்சாகத்தை வரவழைத்துக் கொண்டு சாந்தா திரை அரங்கத்தை நோக்கி வேகமாக நடையைக் கட்டினார்கள். அங்குதான் அஞ்சலி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மட்டும் அந்தத் திரை அரங்கின் பெயர் 'ஆட்டக்களத்தில் நகர்' என்று மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அப்படியொரு காரியத்தைச் செய்தவர் வேறு யாராக இருக்க முடியும்? குறுப்புதான் என்று நாம் இங்கு சொல்ல வேண்டுமா என்ன? அந்தத் திரை அரங்கின் உரிமையாளர் குறுப்பின் சொந்தக்காரர் என்பதை அறிவாளிகளான வரலாற்றாசிரியர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook