இரண்டாம் பிறவி - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7041
7
நீண்ட நாட்களாகவே பாகீரதியம்மாவின் இரவும், பகலும் தனிமை நிறைந்ததாகவும், பொறுக்க முடியாததாகவும், அனாதை உணர்வை உண்டாக்கக் கூடியதாகவுமே அமைந்து விட்டது. மிகவும் கொடுமையாக இருந்தது இரவு நேரம்தான்.
பகல் நேரமாக இருந்தால் என்னவாவது செய்து கொண்டிருக்கலாம். நிலத்தில் இறங்கி நடக்கலாம். அங்கு வேலை செய்து கொண்டிருப்பவர்களிடம் ஏதாவது உத்தரவுகள் போட்டுக் கொண்டிருக்கலாம். வீட்டிற்குள் வேலைக்காரர்களுடன் ஏதாவது நாட்டு நடப்பைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். வாயாடி நாணி கிழவி வருவாள். அவள் வந்தால் நேரம் போவதே தெரியாது. ஊரில் நடந்த நடக்காத எவ்வளவோ விஷயங்களைப் பற்றி அவள் பேசிக் கொண்டிருப்பாள். அவள் சொல்வதில் பாதி என்ன, கிட்டத்தட்ட தொண்ணூறு சதவிகிதம் அவளாகவே மனதில் கற்பனை பண்ணிச் சொல்லும் கட்டுக் கதைகள்தான் என்ற விஷயம் பாகீரதியம்மாவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும், அவள் சொல்வதை பாகீரதியம்மா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருப்பாள். அவ்வப்போது நாணி கிழவிக்கு பால் கலக்காத காப்பியும், வெற்றிலை பாக்கும் கொண்டு வந்து தரும்படி அவள் அம்மு என்ற வேலைக்காரியிடம் முன்கூட்டியே சொல்லி வைத்திருந்தாள். அதற்குக் காரணமிருக்கிறது. கிழவி சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டிருப்பது உண்மையிலேயே ஆர்வம் தரக்கூடிய ஒரு அனுபவமே. பொழுது போகாமல் வெறுப்பைத் தந்து கொண்டிருக்கும் நிமிடங்களை இனிமையான பொழுதாக மாற்றக் கூடிய மந்திரசக்தியும், செப்படி வித்தையும் நாணி கிழவியின் வார்த்தைகளுக்கு இருந்தன. அவள் என்ன சொன்னாலும் அதைக் கேட்பவர்கள் அதை முழுமையாக நம்பக் கூடிய அளவிற்கு அவளின் வாய்ச் சொல்லுக்கு ஒரு மதிப்பு இருந்தது. கூர்மையான வார்த்தைகள், யாரையும் கவரக்கூடிய நகைச்சுவை உத்திகள், கதையைப் போல ஒவ்வொரு விஷயத்தையும் விவரித்துச் சொல்லும் பாங்கு... எழுதவும் படிக்கவும் மட்டும் தெரிந்திருந்தால் நாணி கிழவி மற்ற எவரையும் தோற்கடிக்கக் கூடிய அளவிற்கு ஒரு கதை எழுதும் பெண்ணாக வெற்றி பெற்றிருப்பாள் என்று உறுதியாக நம்பினாள் பாகீரதியம்மா. பல கதைகளைப் பத்திரிகைகளில் படித்திருப்பதால் அவளுக்கு அப்படியொரு எண்ணம் உண்டானது. கிழவி தன்னை ‘தம்புராட்டி’ என்று அழைப்பதை பாகீரதியம்மா சிறிதும் விரும்பவில்லை. ஆனால், சிறு வயதிலிருந்து இருக்கும் ஒரு பழக்கத்தை கிழவியால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. அவ்வப்போது தன்னை ‘குழந்தை’ என்று அழைக்கும்படி அவள் கேட்டுக் கொண்டாலும், வழக்கமாக தான் அழைக்கும் முறையிலிருந்து நாணி கிழவியால் சிறிதும் தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும் என்பதே உண்மை. அவள் எப்போதும் அழைப்பதைப் போலவே அழைத்துவிட்டுப் போகட்டும் என்று பாகீரதியம்மாவும் அதற்குப் பிறகு வெறுமனே இருந்து விடுவாள். கதையை சுவாரசியமாக விவரித்துக் கொண்டு வரும் போது, எங்கே அதற்கு தடை உண்டாகிவிடுமோ என்று அவள் நினைத்ததே அதற்குக் காரணம். வெற்றிலை போடும்போது, இடையில் கிழவி எச்சிலைத் துப்புவதற்காக வெளியே போவாள். எதற்கு வீணாக அந்த நேர இடைவெளி என்று நினைத்த பாகீரதியம்மா, கிழவி நாணிக்கு ஒரு எச்சில் துப்பும் பாத்திரத்தை வாங்கிக் கொடுத்தாள். ஒருமுறை வெற்றிலை போட்டு முடிக்கும் நாணி கடைசி வெற்றிலையை மென்று முடித்து அதைத் துப்பிவிட்டாள் என்றால், தன்னுடைய வாயை அடுத்து கழுவ ஆரம்பித்து விடுவாள். அது முடிந்துவிட்டால் அவளுக்குப் பால் கலக்காத காப்பி வேண்டும். அதுவும் நல்ல சூடாக இருக்க வேண்டும். அம்முவிற்கு எப்போது நாணி கிழவிக்கு காப்பி தர வேண்டும் என்ற விஷயம் நன்றாகத் தெரியும். ஒரு கம்ப்யூட்டரே ஆச்சரியப்படுமளவிற்குச் சரியான நேரத்தில் எந்தவித தாமதமுமின்றி அம்மு காப்பி போட்டுத் தருவாள். காப்பி குடித்து முடித்து விட்டால், மீண்டும் வெற்றிலையை வாய்க்குள் நுழைத்து குதப்ப ஆரம்பித்து விடுவாள் கிழவி.
“தம்புராட்டி, நம்ம வேலாயுதனை உங்களுக்குத் தெரியுமா? அதான்... நம்ம நிலத்துல முன்னாடி வேலை பார்த்துக்கிட்டு இருந்த வேலாயுதனை. தண்டாரு பறம்புல இருக்குற வேலாயுதன்...” - ஒருநாள் வந்தபோது நாணி கிழவி கேட்டாள். அவள் யாரைச் சொல்கிறாள் என்பது ஞாபகத்தில் இல்லையென்றாலும் பாகீரதியம்மாள் சொன்னாள்: “எனக்கென்ன வேலாயுதத்தைத் தெரியாதா?”
“சரிதான்... அந்த வேலாயுதத்திற்கு ஒருமகள் இருக்கா. பேரு ருக்மணி. நடந்த விஷயம் என்ன தெரியுமா? முந்தாநாளு அவள் ஒரு சின்னப் பையன்கூட வீட்டை விட்டு ஓடிட்டா. அவனுக்கு வயசு இருபத்தொண்ணு. அவளுக்கு நாற்பத்து மூணு வயசு. அவளுக்கு மூணு பிள்ளைங்க. அதுல மூத்தது ரெண்டும் வயசுக்கு வந்து நிக்கிற பொம்பளைப் பசங்க. ச்சே... இந்த உலகம் போற போக்கைப் பாருங்க. எல்லாம் கலிகாலத்தோட விளையாட்டு...” - இதைச் சொல்லிவிட்டு நாணி கிழவி விழுந்து விழுந்து சிரித்தாள்.
“நீ சொல்றது உண்மையா கிழவி?” - பாகீரதியம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“உண்மைதான் தம்பிராட்டி நான் இதுவரை உங்கக்கிட்ட பொய் சொல்லியிருக்கேனா? எனக்குப் பொய் சொல்லத் தெரியாதுன்றது உங்களுக்குத் தெரியாதா தம்புராட்டி? என் பிள்ளைங்க மேல சத்தியமா சொல்றேன். கோவில்ல இருக்கிற அம்மாமேல சத்தியமா சொல்றேன். அந்தப் பொம்பளை பசங்களோட அப்பன் வேலாயுதன் தான் இந்த விஷயத்தையே என்கிட்ட சொன்னான்.”
“அட கடவுளே! இப்படியெல்லாமா ஊர்ல நடக்குது!”- பாகீரதியம்மா மூக்கில் விரல் வைத்து ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
தான் சொன்னது உண்மைதான் என்பதை பாகீரதியம்மா ஒப்புக் கொண்டாள் என்பது தெரிந்ததும் கிழவி நாணியின் உதடுகளில் ஒருவகை புன்னகை மலர்ந்தது. இப்போதுதான் அவளுக்குத் திருப்தியாக இருந்தது. பாகீரதியம்மாவிற்கும் திருப்தி உண்டானது போல் இருந்தது.
ஒருநாள் கிழவி நாணி வரவில்லையென்றால் ஒருமாதிரி ஆகி விடுவாள் பாகீரதியம்மா. ஒரு இடத்தில் உட்காராமல் இங்குமங்கும் நடந்து கொண்டே இருப்பாள். எப்போதோ வாசித்து முடித்து வைத்திருக்கும் புத்தகத்தை மீண்டும் எடுத்து படிக்க ஆரம்பிப்பாள். அதுவும் ஒருவித சோர்வை உண்டாக்குகிறபோது, அதை மடக்கி வைத்துவிட்டு வீட்டின் பின்பக்கத்திற்கு செல்வாள்.
“அந்த நாணி கிழவி இதுவரை வரலையாடி, அம்மு?”
“இல்லையம்மா...” - அம்மு தன் கைகளை விரித்தவாறு சொல்லுவாள்.
“அவ ஏன் இதுவரை வரல?”
“அது எனக்கு எப்படி தெரியும் அம்மா?”
“அவ உடம்புக்கு ஏதாவது ஆகியிருக்குமோடி, அம்மு? கொஞ்சம் விசாரிச்சுப் பாக்குறியா?”
“அதெல்லாம் தேவையில்லம்மா. அவங்களுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது. அப்படி ஏதாவது நடந்திருச்சுன்னா, உடனடியாக தகவல் இங்கே தெரிஞ்சிருக்கும்ல?” - அம்மு பாகீரதியம்மாவிடம் கூறுவாள்:
“நீ சொல்றதும் சரிதான்.”