இரண்டாம் பிறவி - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7041
அஞ்சலி கூட்டம் ஒரு திருவிழாவைப் போல நடைபெற்றது. யானை மட்டும்தான் அங்கு இல்லை. அந்த அளவிற்கு திருச்சூர் பூரம் திருவிழாவையே தோற்கடிக்கக்கூடிய விதத்தில் அந்தக் கூட்டம் படு ஆர்ப்பாட்டமாக இருந்தது.
ஒரு அமைச்சர்தான் அந்த அஞ்சலி கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
கூட்டத்தை ஆரம்பித்து வைத்தது திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார். அப்படியென்றால் இன்னொரு அமைச்சருக்குத் தகுதியான ஒரு பதவி தர வேண்டுமல்லவா? அவர் சிறப்புப் பேச்சாளராக்கப்பட்டார். மற்ற சிறப்பு விருந்தினர்கள் மரணமடைந்த அவறாச்சனைப் பற்றி பேசுவதாக ஏற்பாடு. எல்லோரையும் வரவேற்று பேசுபவர் வேறு யார்- குஞ்ஞுக்குறுப்புதான்.
குஞ்ஞுக்குறுப்பின் வரவேற்புரை முழுக்க முழுக்க ஒரு இரங்கல் காவியமாகவே இருந்தது. தாமஸ் க்ரையையே தோற்கடிக்கக்கூடிய இரங்கல் காவியம் அது. பள்ளிக்கூடத்தில் நடந்த பேச்சுப் போட்டிகளுக்குப் பிறகு குஞ்ஞுக்குறுப்பு இவ்வளவு அழகான, இந்த அளவிற்கு இதயத்தைத் தொடக்கூடிய விதத்தில், இந்த அளவிற்கு உணர்ச்சி பூர்வமாகப் பேசியதே இல்லை. மிகப்பெரிய முதலைகளையும் விட மிகவும் அழகாக குறுப்பு கண்ணீர் விட்டார் என்று சில விவரம்கெட்ட மனிதர்கள் சொன்னாலும் சொல்லலாம். அத்தகைய மனிதர்கள் வாய்க்கு வந்தபடி எதை வேண்டுமானாலும் பேசத்தான் செய்வார்கள். தன் கணவனுக்கு இந்த அளவிற்குச் சிறப்பான குணங்கள் இருந்தன என்பதையே அப்போதுதான் சாராம்மா தெரிந்து கொண்டாள். "எங்க அப்பா அந்த அளவிற்கு பெரிய மனிதரா!" என்று கீவறீச்சனும் அன்னக்குட்டியும் ஆச்சர்யப்பட்டு நின்று விட்டனர். அவர்கள் மனதில் உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்களின் கண்களிலிருந்து சந்தோஷத்தால் ஆனந்தக்கண்ணீர் முத்து மணிகளைப் போல வழிய ஆரம்பித்தது. குறுப்பின் உணர்ச்சிமயமான அந்தப் பேச்சில் அங்கு கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவரும் தங்களையே மறந்து போயிருந்தார்கள்.
தொடர்ந்து குறுப்பு தன்னுடைய கடமையைச் செய்ய ஆரம்பித்தார். ஊருக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றுப் பேசி, அவர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி, அவர்களின் சிறப்பு இயல்புகளை விளக்கிப் புகழ்ந்து தன் சார்பாகவும் கிராமத்து மக்கள் சார்பாகவும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் குறுப்பு நடந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி இந்த அளவிற்கு வெற்றிகரமாக நன்றாக நடந்ததற்கு மூலகாரணமாக இருந்த கிராமத்து மக்களை வரவேற்றுப் பேசவும் குறுப்பு மறக்கவில்லை.
வரவேற்புரை முடிந்து பல நிமிடங்கள் கடந்த பிறகும் இடி முழங்கியதைப் போல மக்களின் கைத்தட்டல் திரை அரங்கிற்குள் (ஆட்டக்களம் நகர் என்று தயவுசெய்து திருத்தி வாசிக்கவும்) கேட்டுக் கொண்டே இருந்தது.
குறுப்பு பேசியதைத் தொடர்ந்து மற்றவர்கள் பேசினார்கள். 'ஜனகனமன'வுடன் அந்த நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.
அதிகமான அன்பு வைத்திருந்த மக்கள் எங்கே கட்டுப்பாட்டை மீறி ஏதாவது பண்ணி விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்த அமைச்சர்களும், திரைப்பட நட்சத்திரங்களும் ஏதோ தப்பித்தால் போதும் என்று விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள்.
எல்லாம் முடிந்தவுடன் குஞ்ஞுக்குறுப்பிற்கு எதிராக இருந்த ஒரே ஒரு நபரும் இந்த உலகத்தை விட்டுப்போய் விட்டார் என்று யாராவது மனதில் நினைத்திருப்பார்களா? அப்படி நினைத்திருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம்- ஆட்டக்களத்தில் அவறாச்சன் உண்மையாகப் பார்க்கப்போனால் குறுப்பிற்கு எதிராக இருந்த ஒரு மனிதர் இல்லையே!
மாறாக, பிள்ளைப் பருவத்திலிருந்து அவருடன் இருந்த நெருங்கிய நண்பரும்- இணைபிரியாத சினேகிதரும் ஆயிற்றே அவர்!
6
ஆட்டக்களத்தில் அவறாச்சனின் மரணத்திற்குப்பிறகு உள்ள சடங்குகள் ஒவ்வொன்றும் முறைப்படி நடைபெற்றன. பிரார்த்தனைகள், குர்பானாக்கள், விருந்துகள்- எல்லாம் மிகவும் ஆர்ப்பாட்டமாக, கொண்டாட்டத்துடன் சிறப்பாக நடத்தப்பட்டன. அவறாச்சனின் பெயரில் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டன. ஊரில் இருந்த பல நிறுவனங்களின் பெயர்கள் அவறாச்சனின் பெயரைத் தாங்கும்படி மாற்றப்பட்டன. பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு, அவரிடம் பணியாற்றும் ஆட்கள், அவறாச்சனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், ஊரில் அடுத்த நிலையில் முக்கிய நபர்களாகயிருப்பவர்கள் எல்லோரும் அதற்குத் தூண்டுகோலாக இருந்தார்கள். ஊர்க்காரர்களின் முழுமையான ஒத்துழைப்புடன்தான் எல்லா காரியங்களும் நடைபெற்றன. இப்படியே வாரங்களும் மாதங்களும் கடந்து கொண்டிருந்தன.
நான்கு பேர் கூடி நிற்கும் எந்த இடமாக இருந்தாலும், சில நாட்கள் வரை அவர்களின் பேச்சு அவறாச்சனைப் பற்றியதாகத் தான் இருந்தது. ஆற்றில் குளிக்கும் இடத்திலும், தேநீர் கடைகளிலும், வாசக சாலைகளிலும் ஊர் மனிதர்கள் அவறாச்சனின் பெருமைகளைப் பற்றி வாய் வலிக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவறாச்சன் ஊருக்கும், ஊர் மக்களுக்கும் செய்த நல்ல காரியங்களை மனம் திறந்து அவர்கள் பாராட்டினார்கள். கிராமத்து ஆட்களுக்கு தங்களின் சொந்த அனுபவங்களைப் பற்றி பேசுவதற்கே நேரமில்லாமல் இருந்தது.
காலப்போக்கில் அந்நிலை மாற ஆரம்பித்தது. பிற விஷயங்களையும் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களின் வாழ்க்கையிலேயே ஆயிரம் விஷயங்கள் நடந்து கொண்டிருந்தனவே! ஊரிலும் பல புதிய திட்டங்களும், புதிய பல மாற்றங்களும் நித்தமும் நடந்து கொண்டிருந்தன. இந்த மாதிரியான நிகழ்கால உண்மைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உண்டான போது, அவறாச்சன் என்ற மனிதர் ஒரு கடந்தகால நினைவாக மட்டும் மாறிப்போவது என்பது நடைமுறையில் இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றுதானே! உலக வாழ்க்கையின் போக்கு அப்படித்தான் இருக்குமென்பதால், அதற்காக கிராமத்து மக்களையோ, அவறாச்சனின் நண்பர்களையோ, அவரின் வீட்டில் உள்ளவர்களையோ நாம் குறை சொல்வதில் அர்த்தமே இல்லையே!
மறைந்த அவறாச்சனிடம் ஊரில் யாராவது தவறாக நடந்து கொண்டார்கள் என்பதை இறந்து போன அவறாச்சன் கூட ஒப்புக் கொள்ளமாட்டார். ஊர்க்காரர்கள் அவரை முழுமையாக மறந்துவிட்டார்கள் என்றும் கூறுவதற்கில்லை. பல இடங்களிலும் மறைந்துபோன அந்த மனிதரைப் பற்றி பலரும் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள். பல இடங்களிலும் அவரின் பெயர் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்க்கும் நிமிடங்களில் மக்கள் அவரை மிகவும் பாசத்துடன் தங்கள் மனத்திரையில் நினைத்துப் பார்ப்பார்கள். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வேலைகளும் இருந்தன அல்லவா? மக்களுக்கு மட்டுமல்ல, அவறாச்சனுக்கு மிகவும் வேண்டியவர்களுக்கும்தான். அதாவது- அவறாச்சனின் குடும்பத்தில் உள்ளவர்கள், குறுப்பு போன்ற எல்லாருக்கும்தான். அவர்களுக்கு நிறைய வேலைகள் இருந்தன. நிகழ்கால பிரச்சினைகளை மறந்துவிட்டு ஒரு கடந்தகால ஞாபகத்தை மனதில் எப்போதும் நினைத்துக் கொண்டு இருப்பதென்பது நிச்சயம் ஒரு ஆளுக்கு முடியாத விஷயம்தான்.
இப்படித்தான் காலப்போக்கில் அவறாச்சன் ஒரு நினைவுச் சின்னமாக மட்டும் மாறினார். வரலாற்றின் ஒரு பகுதியாக அவர் ஆனார். நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்திற்கு அவர் பறந்து சென்றார். கடந்த காலத்தின் மூடுபனிக்கு அப்பால் அவறாச்சன் சிறிது சிறிதாக ஒதுங்கிப் போனார்.