இரண்டாம் பிறவி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7041
அப்போதும் ஆற்றில் குளிக்கும் இடம் ஆட்கள் இல்லாமல்தான் இருந்தது. கோயிலில் குடிகொண்டிருக்கும் தேவி அனாதையாகத் தான் இருந்தாள்.
அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களை வரவேற்றது குறுப்பும், அவரின் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளிகளும், மரணத்தைத் தழுவிய அவறாச்சனின் பிள்ளைகளும், மருமக்களும்தான்.
சிறப்பு விருந்தினர்கள் ஓய்வு எடுப்பதற்காக ஏற்பாடு செய்திருந்தது எங்கே என்பதைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே- குறுப்பின் வீட்டில்தான். அவர்களை உபசரிப்பதற்காக அழுது வீங்கிப்போயிருந்த முகங்களுடன் பாகீரதியம்மாவும் அவரின் பிள்ளைகளும் சில பணியாளர்களும் அங்கு இருந்தார்கள். மனதில்லா மனதுடன் குறுப்பும் கீவறீச்சனும் அவுஸேப்பச்சனும் அவ்வப்போது அங்கு போய் தலையைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
சுய உணர்வுக்கு வந்தவுடன் சாராம்மா உரத்த குரலில் சொன்னாள்: “என்ன இருந்தாலும் குறுப்பச்சா... அவரு உங்க நண்பராச்சே!”
அதற்குப் பதில் சொல்ல குறுப்பச்சன் அங்கு இருந்தால்தானே!
“குறுப்பச்சனை எங்கேடி மகளே?”
“வீட்டுக்குப் போயிருக்காரு. இப்போ வந்திடுவாரு. யாரோ மந்திரிமாருங்க வந்திருக்காங்க.”
அன்னக்குட்டி தன் தாயைத் தேற்றினாள்.
“மந்திரிமாருங்க வந்திருக்காங்களா?” - சாராம்மாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
“எத்தனை மந்திரிங்க வந்திருக்காங்க?”
“ரெண்டு மூணு பேர் வந்திருக்கிறதா சொன்னாங்க.” - அன்னக்குட்டி சொன்னாள்.
“எல்லாம் கர்த்தாவோட கிருபை! நாம செஞ்ச புண்ணியம்!” - சாராம்மா கண்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினாள்.
மார்பில் அடித்து அழுது கொண்டிருந்த மக்களில் சிலர் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அதற்கு அவர்களைக் குறை சொல்வதில் அர்த்தமே இல்லை அல்லவா?
அங்கு கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் என்ன செய்வதென்று தெரியாத ஒரு நிலைதான். தங்களை இதுவரை காப்பாற்றி வந்த அவறாச்சனிடம் தங்களுக்கு இருக்கும் ஈடுபாட்டை வெளியே நான்கு பேருக்குத் தெரிகிற மாதிரி காட்டவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு. அதனால்தான் ஆட்டக்களத்தில் வீட்டின் முன் நின்று கொண்டு அவர்கள் அப்படி அழ வேண்டி இருக்கிறது. அதே நேரத்தில் திரைப்பட நட்சத்திரங்களையும் அமைச்சர்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையும் அவர்களுக்கு இருக்கவே செய்தது. ஊரில் முக்கிய மனிதர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவர்களின் குழப்பநிலையில் ஒரு மாறுதல் உண்டாக ஆரம்பித்தது. அதைத் தொடர்ந்து மக்கள் இங்குமங்குமாய் போகத் தொடங்கினர். மரணமடைந்து கிடக்கும் அவறாச்சனுக்கு முக்கியத்துவம் தருவதா? தங்களின் அன்பிற்கு ஆளான திரைப்பட நட்சத்திரங்களுக்கு முக்கியத்துவம் தருவதா என்பதைத் தீர்மானிக்க முடியாத குழப்பநிலை உண்டானபோது, இரண்டு பக்கங்களுக்கும் சரிநிகரான முக்கியத்துவம் தருவதே சரியான ஒரு விஷயமாக இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
மக்கள் இங்குமங்குமாய் நடமாடிக் கொண்டே இருந்தனர்.
ஆட்டக்களத்தில் வீடும் பாட்டத்தில் வீடும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவற்கு ஆள் இல்லை என்ற நிலைமை உண்டானது. மக்கள் ஒருவரையொருவர் இடித்துக்கொள்வதும், கீழே விழுவதுமாக இருந்தனர். கைபலம் உள்ளவன் சக்தி பெற்ற மனிதனாக அங்கு ஆனான். உடம்பில் பலம் இல்லாதவர்கள் கூட்டத்திற்குள் சிக்கி கீழே விழுந்தபோது, அவர்களை ஆட்கள் காலால் மிதித்துக் கொண்டு நடந்தார்கள். இதன்மூலம் பலருக்கும் உடம்பில் காயம் உண்டானது.
மக்கள் கூட்டத்தில் யாரோ சொன்னார்கள்: “மரணமடையிறதுன்னா இப்படி மரணம் அடையணும். மரணத்திலும் அவறாச்சன் கொடுத்து வச்சவர்தான்!”
அவறாச்சன் அல்லது குறுப்பச்சன் - இரண்டு பேர்களில் யாராவது ஒருவரிடம் பணியாற்றும் பணியாட்களில் ஒருவர்தான் இப்படியொரு கருத்தைச் சொல்லியிருக்க வேண்டும்.
5
பல முக்கிய விருந்தனர்கள் கூடியிருந்த இடத்தில், எல்லோருக்கும் கேட்கும் வண்ணம், அதே நேரத்தில் தன்னுடைய வக்கீல் லம்போதரன் பிள்ளைக்கு முக்கியத்துவம் தந்து, கவலை தோய்ந்த குரலில் பாட்டத்தில் குஞ்ஞுக்குறுப்பு சொன்னார்: “இருந்தாலும் வக்கீல் சார்... நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனேன். நானும் அவறா மாப்பிள்ளையும் நேற்று ராத்திரி பிரியறப்போ சரியா பதினோரு மணி இருக்கும். அதுவரை நாங்க ரெண்டு பேரும் அவர் வீட்டுல செஸ் விளையாடிட்டு இருந்தோம். நேத்து நான் சாப்பிட்டதுகூட அங்கேதான். அருமையான மீன்குழம்பு, பொரிச்ச நாட்டுக்கோழி, இடியாப்பம்... அடடா... சாராம்மாவோட மீன் குழம்பையும், பொரிச்ச கோழியையும் நீங்க சாப்பிட்டிருக்கீங்களா?”
அதைக்கேட்டதும் லம்போதரன் பிள்ளைக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்தது. அவர் நாக்கைச் சப்புக்கொட்டிக் கொண்டு உதட்டால் துடைத்தபோது, அவறாச்சனின் வக்கீல் குஞ்ஞுராமக் கைமன் சொன்னார்: “அட நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து மதுவும் அருந்தியிருக்கீங்கள்ல?”
“அது இல்லாமலா?” - குறுப்பின் உதடுகளில் ஒரு திருட்டுத்தனமான சிரிப்பு தோன்றி மறைந்தது. இருந்தாலும் குரலில் ஒரு கவலை தொனிக்க அவர் கூறினார்: “பொழுது விடியிற நேரத்துல எனக்கு தொலைபேசி மூலம் செய்தி வருது - அவறாச்சன் மரணமடைஞ்சிட்டார்னு.”
“அதைப்பார்த்து சிரிக்கிறதா அழுவுறதான்றதுதான் பிரச்னையே...” - பொரித்த கோழியையும் மீன் குழம்பையும் மனதில் நினைத்து சுவைத்துக் கொண்டே லம்போதரன் பிள்ளை சொன்னார்.
இந்தச் சந்தர்ப்பத்தை வெறுமனே விட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார் குறுப்பு. அவர் சொன்னார்: "உங்க ரெண்டு பேருக்கும்தான் நல்லா தெரியும்ல? எங்களுக்குள்ள வழக்கு, சண்டைன்னு ஆயிரம் இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா படிச்சோம். ஒரே கிளையில இருக்கிற ரெண்டு மலர்களைப் போல வளர்ந்தோம் நாங்க... நான் சொல்றது புரியுதா?"- குறுப்பு சொல்லி விட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.
"என்னோட ஒரு சிறகு போயிடுச்சு, வக்கீல் சார்! இனிமேல் நான் எதுக்கு வாழணும்னுகூட நினைக்கிறேன். இன்னைக்குக் காலையில அவரோட மரணச்செய்தி என் காதுல வந்து விழுந்ததுல இருந்து நானே செத்துப்போயிட்ட மாதிரிதான் உணர்றேன். இது ஒரு பக்கம் இருக்கட்டும்... அவருக்கு இது என்ன சாகுற வயசா? என்னைவிட அவரு நாலுமாசம் இளையவரு. எனக்கு ஐம்பது வயசு பிறந்து ரெண்டு மாசம்தான் ஆகுது. எல்லாம் கடவுளோட திருவிளையாடல்ன்றதைத் தவிர, நாம இதைப் பற்றி என்ன சொல்றதுக்கு இருக்கு?"- இதைச் சொல்லிவிட்டு குறுப்பு தேம்பித்தேம்பி அழுதார்.
"கேட்கும்போது மனசுக்கு சங்கடமாகத்தான் இருக்கு!"- கைமள் குறுப்பைத் தேற்றினார். "நீங்க இப்படி சின்னப்பிள்ளையைப் போல அழலாமா? மற்றவங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டியது யாரு? நீங்கதானே?"
"இருந்தாலும்..."- குறுப்பு மீண்டும் ஈரமாக இருந்த தன்னுடைய கண்களைத் துடைத்தார். சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சாதாரண நிலைக்கு வந்தார். அவர் சொன்னார்: "ஒரு விஷயத்துல உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலின்னுதான் சொல்லணும். அவறா மாப்பிள்ளை கடைசியா பேசினது என்கிட்டதான்.