இரண்டாம் பிறவி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7041
எந்தப் பெரிய மனிதன், எந்தக் காலத்தில் இப்படியொரு விஷயத்தை ஆரம்பித்து வைத்தான் என்பதை அறிந்து கொள்ள அவறாச்சன் என்றுமே ஆர்வம் காட்டியதில்லை. என்ன இருந்தாலும் தான் ஆட்டக்களத்தில் அவறாச்சன்தான் என்று அவரே பூரணமாக நம்பினார்.
"நாம இப்போ இருக்குறது குறுப்பச்சனோட இடம் தெரியுமா?"- அவறாச்சன் சாராம்மாவிடம் சொன்னார்: "ஆனா ஒரு விஷயம்... நம்ம அப்பாமார்கள் பணம் கொடுத்துத்தான் அவங்கக்கிட்ட இருந்து இதை விலைக்கு வாங்கியிருக்காங்க. அதனால அவங்களுக்கு இதுல எந்தவிதமான உரிமையும் இல்லை. யாருக்கு? குறுப்பமார்களுக்கு..."
அவர் அப்படிச் சொன்னதில் உள் அர்த்தம் ஏதாவது இருக்குமோ? அதைப்பற்றி இப்போது எழுதிக் கொண்டிருக்கும் இந்த வரலாற்றில் நாம் பேசப்போவதில்லை. இனி எழுதப்போகும் விஷயங்களில் கூட இதைப் பற்றிய தகவல்கள் ஏதேனும் இருக்கவேண்டும் என்ற அவசியமுமில்லை.
அவறாச்சனின் ஏதோ ஒரு தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் இங்கு குடிபுகுந்திருக்கிறார். இங்குதான் அவறாச்சன் பிறந்தார். வளர்ந்தார். பள்ளிக்கூடம் சென்றார். ஆற்றில் குளித்தார். ஆற்றின் கரையில் இருக்கும் கோவிலில் குடிகொண்டிருக்கும் தேவியைத் தொழுதார். அத்துடன் புனித வேதப் புத்தகத்தையும் வாசித்தார். மோசஸைப் பற்றிப் படித்தார். பத்து கட்டளைகளைப் படித்தார். தாவீதைப் பற்றியும் சாலமனைப் பற்றியும் படித்தார். ஸீனாயி மலையைப் பற்றியும் செங்கடலைப் பற்றியும் மனப்பாடமாகப் படித்தார். அவரின் மலைகளில், அவரின் முந்திரித் தோட்டங்களில் தேவி, கிறிஸ்து இருவருமே இருந்தார்கள். புனிதமேரி அவருக்கு தேவமாதாவாக இருந்ததோடு தேவியுமாக இருந்தாள். அவள் பார்வதியுமாக இருந்தாள். பராசக்தியுமாக இருந்தாள். பிரபஞ்சத்திற்கு அன்னையாக இருந்தாள். அவள் எல்லாமாக இருந்தாள். இப்படி, எல்லா ஜாதி- சமய சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டு வளர்ந்தவரே அவறாச்சன்.
ஆனால், அவறாச்சன் தேவாலயத்திற்குப் போனார். ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கூடத்திற்குச் சென்றார். மதக் கொள்கைகளைப் பின்பற்றினார். மதம் என்ன சொல்கிறதோ, அதன்படியே வாழ்ந்தார். கிறிஸ்துவ முறைப்படிதான் திருமணம் செய்தார். எல்லாவற்றையும் முறைப்படி தான் செய்தார். ஆனால், எந்தச் சமயத்திலும் அவறாச்சன் ஒரு மதவெறியனாக இருந்ததில்லை. மதத்திற்குத் தான் கொடுக்க வேண்டியதைத் தவறாது கொடுத்தார். தேவாலயத்திற்கு ஒவ்வொரு மாதமும் கட்டவேண்டிய வரியை ஒழுங்காகக் கட்டினார். திருவிழா சமயங்களில் நன்கொடை தந்தார். அதே நேரத்தில் இந்துக் கோவில்களுக்கு நன்கொடை தருவதிலும் அவறாச்சன் சற்றும் பின்தங்கி இருந்ததில்லை.
குறுப்பிற்குத்தான் முதலில் திருமணம் நடந்தது. பொன் நதியென ஓடிய திருமணம் அது என்று கூட சொல்லலாம். நூறு பவுனோ அதைவிட அதிகமோ தெரியவில்லை. பவுன் நிறைய விளையாடிய திருமணம் அது. அன்று குறுப்பிற்குக் குடைபிடித்துக் கொண்டு கோவிலுக்கு அவரை அழைத்துக் கொண்டு நடந்ததே அவறாச்சன் தான். திரும்பி வந்து விருந்தின்போது அவருடன் இருந்ததுகூட அவர்தான். குறுப்பிற்கு வேறு சகோதரர்கள் யாரும் இல்லையே!
அவறாச்சனின் திருமணத்தின்போது அவருடன் இருந்தது முழுக்க முழுக்க குறுப்புதான். தேவாலயத்திலிருந்து அவறாச்சனை வீட்டிற்கு குறுப்புதான் அழைத்துச் சென்றார். அந்த அளவிற்கு நட்புடன் இருந்தார்கள் அவர்கள். அவறாச்சன் சாராம்மாவைத் திருமணம் செய்த அன்று ஒரு தமாஷான நிகழ்ச்சி நடைபெற்றது. தேவாலயத்தில் பாதிரியார் நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்.
"ஆப்ரஹாம், சாரா என்ற இவர்களை வாழ்த்திய இறைவனின் கிருபையால் இவர்களை நான் வாழ்த்துகிறேன். கிருபை செய்திட வேண்டும் நீ. இஸ்ஹாக், ரிபேகா ஆகியோரை வாழ்த்திய இறைவன்..."
இடையில் குறுப்பு குறுக்கிட்டார்: "போதும், ஃபாதர், அவறாச்சன்- சாரா இவங்க ரெண்டு பேரோட விஷயம் முடிஞ்சிடுச்சில்ல... அதுக்குப்பிறகு இன்னும் பாடணுமா?"
அதைக்கேட்டு பாதிரியார் ஆச்சர்யப்பட்டார். அவர் கேட்டார்: "குறுப்பச்சா, உங்களுக்கு வேதப்புத்தகம் நல்ல மனப்பாடம். அப்படித்தானே?"
அதற்கு குறுப்பு வெறுமனே சிரித்தார். அவ்வளவுதான்.
சாராம்மாவும் அதைக் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.
பின்னால் ஒரு நாள் அவள் சொன்னாள்: "இந்த குறுப்பச்சன் பயங்கரமான ஆளுபோல இருக்கே!"
"ஏண்டி அப்படிச் சொல்ற?"- அவறாச்சன் கேட்டார்.
"நம்ம கல்யாணம் நடந்த அன்னைக்கு பாதிரியாரை அவர் விரட்டினாரு பார்த்தீங்களா?"
"என்ன சொல்ற சாராம்மா?"- கேட்டது குறுப்புதான். அவறாச்சனும் குறுப்பும் ஒன்றாக அமர்ந்து அப்போது உணவருந்திக் கொண்டிருந்தார்கள்.
"ஆமா... இனியும் நீளமா பாடணுமான்னு நீங்க பாதிரியாரைப் பார்த்து கேட்டீங்களே!"- சாராம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"ஓ... அதைச் சொல்றியா?"- குறுப்பு உரத்த குரலில் சிரித்தார். "ஆப்ரஹாம், சாராம்மா ஆகியோரோட கல்யாணம் ஏற்கனவே முடிஞ்சிடுச்சு. அதற்குப்பிறகு எதற்காக வாழ்த்தணும்?"
"நீங்க சொல்றதும் சரிதான்."- சாராம்மா சொன்னாள்.
"இருந்தாலும்..."
அவறாச்சனும் குறுப்பும் ஒருத்தருக்கொருத்தர் வெளியே சொல்லிக் கொள்ளாத, அதே நேரத்தில்- இருவருக்கும் நன்கு தெரிந்த ஒரு ரகசியம் அவர்கள் இருவருக்குமிடையில் இருந்தது. காலை நேரத்தில் அவறாச்சன் ஆற்றங்கரைப் பக்கம் போவது எதற்கு என்பதை குறுப்பும், மாலை நேரங்களில் குறுப்பு தேவி கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏன் சுற்றித்திரிகிறார் என்பதை அவறாச்சனும் நன்கு தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்கள் இந்த விஷயத்தைப் பற்றி ஒரு நாள் கூட பேசிக் கொண்டதில்லை. இருவரும் தங்களுக்குள்ளேயே இந்த ரகசியத்தைப் பூட்டி மறைத்துக் கொண்டார்கள். ஆற்றங்கரையின் சுத்தமான காலை நேரமும், கோவிலில் குடி கொண்டிருக்கும் தேவியின் பிரகாசமான மாலை நேரமும் இந்த ரகசியங்களுக்குச் சாட்சிகளாக இருந்தன. எனினும், இந்த ரகசியத்தை யாரும் வெளிப்படுத்தவில்லை.
அந்த ரகசியம்தான் சாரி என்ற செல்லப்பெயரைக் கொண்ட சாரதா. கேசவப் பணிக்கரின் மகள் அவள். நல்ல அழகி. கிராமத்திற்கே தேவதை என்றுகூட அவளைச் சொல்லலாம். ஆற்றங்கரையின் காலை நேரத்தை விட கோவிலின் மாலை நேரத்தைவிட அவளிடம் அதிக அழகு இருந்தது. ஒரு கோடைகால சூரியனின் பிரகாசத்தை அவள் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் ஒரு குளிர்காலச் சந்திரனின் குளிர்ச்சியையும் கொண்டிருந்தாள் அவள். வெப்பத்தையும், குளிர்ச்சியையும் ஒரே நேரத்தில் தன்னுடம்பில் கொண்டிருந்த அவள் ஆறுகளையும் மலைகளையும் சூரியனையும் சந்திரனையும் பைத்தியம் பிடிக்கச் செய்யும் பெண்ணாக இருந்தாள். சாரியின் கண்கள் நெருப்பைக் கக்கின. சாரியின் உதடுகள் மலர்ந்தபோது, வார்த்தையால் விவரிக்க முடியாத ஓர் இனிய சூழ்நிலை எங்கும் உண்டானது. அவளது நீண்டு வளர்ந்திருந்த தலைமுடி தரைவரை தொங்கிக் கொண்டிருந்தது. அவள் ஒரு போதையாக கிராமம் முழுக்க நிறைந்திருந்தாள். அவளைக் காதலிக்காமலிருக்க அவறாச்சனாலும் குறுப்பாலும் முடியவில்லை. அவர்கள் மட்டுமல்ல; அவளைப் பார்த்த யாராலும் அவளைக் காதலிக்காமல் இருக்கமுடியவில்லை.