இரண்டாம் பிறவி - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7041
சாரதா எல்லா நாட்களிலும் காலை நேரத்தில் ஆற்றுக்குப் போய் குளிப்பாள். மாலை நேரங்களில் கோவிலுக்குப் போய் தேவியை வணங்குவாள். அவள் இப்படிச் செய்ததன் மூலம் ஆற்றுக்கும், கோவிலுக்கும் பொறாமை உண்டாகும்படி செய்தாள். ஊரில் உள்ள ஒவ்வொருவரும் அவளைப் பார்த்து பொறாமைப்பட்டார்கள்.
சாரதாவின் தந்தை ஒரு ஏழை கல் தொழிலாளி. குஞ்ஞுக்குறுப்பு, அவறாச்சன் இருவருக்கும் அந்த வீட்டில் முக்கிய இடமும் அங்கீகாரமும் கொடுக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் குறுப்பிற்குச் சற்று அதிகமாகவே இடம் கொடுக்கப்பட்டிருந்தது இந்த விஷயத்தில். அதற்காக அவறாச்சனுக்கு சிறிது கூட மனக்குறையோ, குற்றச்சாட்டோ இல்லை என்பதுதான் உண்மை. அப்படி இருப்பது நியாயமே என்று அவறாச்சன் தன் மனதில் நினைத்தார். ஊருக்குப் பெரிய மனிதன் என்று குறுப்பை அவறாச்சனே ஏற்றுக் கொண்டிருக்கிறாரே!
சாரதா ஒரு பட்டாம்பூச்சியைப் போல கிராமம் முழுவதும் சுற்றித்திரிந்தாள். ஒளி வீசிக் கொண்டிருந்த அவளின் அழகு கிராமத்தைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அவள் அந்த கிராமத்தின் சகுந்தலையாக இருந்தாள். குமாரசம்பவத்தில் தவம் செய்யும் பார்வதியாக இருந்தாள். அந்த கிராமத்தின் மோனாலிஸாவாக அவள் இருந்தாள். ஒரு காளிதாசனும் ஒரு டாவின்ஸியும் அவளை ஏற்கனவே பார்த்திருப்பார்களோ என்ற எண்ணம் எல்லோருக்கும் உண்டானது. சாரதா கிராமத்தின் செல்லப்பெண்ணாக இருந்தாள். அங்கு கவிஞர்கள் யாரும் தோன்றாததால், அவளைப் பற்றி அங்கு யாரும் காவியங்கள் உருவாக்கவில்லை.
கடைசியில் சாரதாவை ராமச்சந்திரன் என்பவன் திருமணம் செய்தான். அவனும் ஒரு கல் தொழிலாளிதான். ஒரு நல்ல கணவனாக அவன் இருக்கவில்லை என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். உண்மை எதுவென்று யாருக்கும் தெரியாது. ஆனால், ராமச்சந்திரன் ஒரு குடிகாரனாக இருந்தான். அவன் மனம் போனபடி மது அருந்தக்கூடியவனும், சாரதாவைக் கொடுமைப்படுத்தக் கூடியவனாகவும் இருந்தான். அதிகமாக மது அருந்தியதாலோ என்னவோ ராமச்சந்திரன் அதிக நாட்கள் உயிருடன் இருக்கவில்லை. அவனுடைய மரணம் சிறிதும் எதிர்பார்க்காமல் நடந்துவிட்டது. அவன் இறந்து சில வாரங்கள்தான் கடந்திருக்கும். ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த சாரதாவின் பிணம் கோவில் திருவிழா நாளன்று ஆற்றில் மிதந்தது. நினைத்துப் பார்க்க முடியாத மரணமது. சாரதாவின் ஆவி கிராமத்தையே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது என்று ஊர்மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். அவறாச்சனும் குறுப்பும்கூட அதை நம்பினார்கள். அந்த நினைப்பு அவர்களை பயப்படச் செய்ததுடன், மகிழ்ச்சி கொள்ளவும் செய்தது. சாரதாவின் ஆவியை ஒரு தடவையாவது பார்க்க முடியாதா என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் இரவு முழுவதும் பொழுது புலரும் வரை காத்திருந்தார்கள்.
இருவரும் சாரதாவை விரும்பினார்கள் என்பது உண்மை. ஆனால், அவர்களின் விருப்பம் நிறைவேறியதா என்பது யாருக்கும் தெரியாது. இந்த வரலாறு எழுதக்கூடியவனுக்குக் கூட தெரியாது. இருந்தாலும், இந்த வரலாற்று ஆசிரியனின் கனவுகளில் சாரதா பலமுறை தோன்றியிருக்கிறாள். ஒருமுறை அவள் ஜூலியட்டைப் போல ஆடையணிந்து வருகிறாள் என்றால் இன்னொருமுறை ஹெலனாக தோன்றுவாள். கிருஷ்ணனின் ராதையாகவும் மஜ்னுவின் லைலாவாகவும் கூட அவள் தோன்றினாள். எவ்வளவோ விஷயங்களை அவள் பேசினாள். ஆனால், ஒரே ஒரு ரகசியத்தை மட்டும் அவள் சொல்லவேயில்லை.
சாரதாவின் மரணத்திற்குப் பிறகு ஆற்றில் குளிக்கும் இடம் கிட்டத்தட்ட ஆள் இல்லாத ஒரு இடமாகிவிட்டது. கோவிலில் திருவிழா என்ற ஒன்று இல்லாமலே போய்விட்டது. சுருக்கமாகச் சொல்லப்போனால் அந்தக் கிராமமே ஒரு சுடுகாட்டைப்போல ஆகிவிட்டது. மகிழ்ச்சியே இல்லாத ஒரு ஊராக அது ஆகிவிட்டது. கிராமத்தில் ஏதோ ஒரு அமைதி இல்லாத சூழ்நிலை உண்டானது. இந்தநிலை நீண்ட காலம் அங்கு நீடித்தது. பகல்கள் இருண்டு போனதாகவும் இரவுகள் மேலும் அதிக பயங்கரத்தன்மை கொண்டதாகவும் இருந்தன. சாரதா இல்லாமற்போனது கிராமத்தையே ஒரு சோர்வு நிலைக்குள் ஆழ்த்தியது.
குறிப்பாக அவள் மரணத்தால் எதையோ பறி கொடுத்ததைப் போல் ஆகிவிட்டார்கள் அவறாச்சனும் குறுப்பும். இப்படியே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. திருமணங்களும், வர்த்தகங்களும், மரணங்களும் நடந்தன. கிராமம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தது. அப்படியே அவறாச்சனும் குறுப்பும் வாழ்ந்தார்கள்.
காலப்போக்கில் சாரதா அந்தக் கிராமத்தின் சரித்திரமாக மாறினாள். திருவிழாக்கள் நடைபெறும் கோவில்களிலும், கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சப்ளாக் கட்டையைக் கையில் வைத்துக் கொண்டு பாட்டு பாடியவாறு புத்தகம் விற்கும் பாடகர்களுக்கு அவள் ஒரு முக்கிய விஷயமாக ஆனாள். அவர்களின் அந்தப் பாட்டுகள் மூலம் அவள் நீண்ட காலம் வாழ்ந்தாள். பாட்டு பாடுபவர்கள் யாரும் இல்லையென்றாலும் அவறாச்சன், குறுப்பு இருவர் மனதிலும் அவள் கொஞ்சமும் மறையாமல் நீங்காத நினைவுச் சின்னமாக இருந்தாள். சதா நேரமும் அவர்களின் மனதின் அடித்தளத்தில் அவள் முகம் வலம் வந்துகொண்டேயிருந்தது.
3
அவறாச்சன், குறுப்பு இருவரின் வாழ்க்கையும், வாழ்க்கையில் பின்பற்றிக் கொண்டிருந்த வழிமுறைகளும் மிகவும் சாதாரணமாகவே இருந்தன என்பதை நான்தான் முன்கூட்டியே கூறியிருக்கிறேனே! அவர்கள் கிராமத்துடனும், கிராம மக்களுடனும் ஒன்றிப் போய் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நட்புணர்வும், அமைதியான சூழ்நிலையும் கிராமத்தில் நிலவிக் கொண்டிருந்தது. அதற்கு முக்கிய காரணகர்த்தாக்களாக இருந்தவர்கள் அவர்கள் இருவரும்தான். என்ன பிரச்சினையாக இருந்தாலும், மக்கள் அவர்களைத்தான் அணுகினார்கள். அவர்களின் தீர்மானம்தான் இறுதியானதாக இருந்தது. அவர்களின் பேச்சுக்கு எதிர் பேச்சே அங்கு இல்லை என்ற நிலைதான் இருந்தது.
இரண்டு பேரும் போட்டி மனப்பான்மையுடன் நன்கு வளர்ந்து கொண்டிருந்தார்கள். போட்டி எண்ணத்துடன் விவசாயத்தில் ஈடுபட்டார்கள். போட்டி மனப்பான்மையுடன் வர்த்தகம் தொடங்கினார்கள். போட்டி மனப்பான்மையுடன் பணம் சம்பாதித்தார்கள். போட்டி மனப்பான்மையுடன் ஊரின் நன்மைக்காகவும், ஊரில் உள்ளவர்களின் நன்மைக்காகவும் பணத்தைச் செலவழித்தார்கள்.
சிறிது கூட போட்டி மனப்பான்மை இல்லாமல் திருமணம் செய்தார்கள். குழந்தையைப் பெற்றெடுத்தார்கள். அவர்களைப் படிக்க வைத்து வளர்த்தார்கள். உரிய நேரத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார்கள். சொத்துக்களைப் பாகம் பிரித்துத் தந்தார்கள். தங்களை விட்டுப் பிரிக்க வேண்டிய நேரத்தில் அவர்களைப் பிரித்தும் விட்டார்கள்.
அவர்கள் ஊரின் அதிர்ஷ்ட தேவதையான பண்ணையாரைப் போல, அவர்களின் ரயில் தண்டவாளத்தைப் போல, அவர்களின் சூரிய உதயத்தைப் போல, கிராம வாழ்க்கையும், அவர்களின் சொந்த வாழ்க்கைகளும் மிகவும் அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. பளிச்சென்று வெளியே தெரிந்த அமைதிக்குப் பின்னால் நீரோடையென பலவும் ஓடிக் கொண்டிருந்தாலும், அவை யாருக்கும் தெரியாத ரகசியங்களாக இருந்தன என்பதே உண்மை. சாரதா என்ற ரகசியம் சிறிது வெளியே தெரிந்த விஷயமாகவும் இருந்தாள்.