ஐந்து சகோதரிகள் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
ஒரு ஏழை கிறிஸ்தவப் பெண்ணுக்குக் கிடைக்கக் கூடிய தர்ம குழிக்குள் அவளுடைய தாய் தற்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாள். ஆனால், அந்த மகள் பிச்சை எடுத்தும் பிறரிடம் கெஞ்சியும், கிடைத்த காசில் ஒரு மரச்சிலுவை வாங்கி தன் தாயின் தலைக்குப் பக்கத்தில் கொண்டுபோய் வைத்திருக்கிறாள். அவள் தினந்தோறும் அங்கு போவாள். தன் தாய்க்காக அவள் தினமும் பிரார்த்தனை செய்வாள்.
சிறிதும் நிறுத்தாமல் அந்தச் சிறுமி தன்னுடைய தாயைப் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தாள். ஒருவேளை தன் தாயைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்ததால் உண்டான உற்சாகத்தில் அவள் அப்படிப் பேசியிருக்கலாம். இல்லாவிட்டால் ஜானகியும் அந்தச் சிறுமியின் தாயும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்ததால் உண்டான நெருக்கத்தால் அவள் தான் கூற நினைத்தவற்றையெல்லாம் கூறியிருக்கலாம். அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி அவள்பேசிக் கொண்டிருக்கும்போது, அவளுடைய நடவடிக்கை ஒவ்வொன்றும் அவளை எங்கோ பார்த்திருக்கிறோம் என்றொரு உணர்வை ஜானகியிடம் உண்டாக்கியது.
தானும் தன்னுடைய தாயும் எப்படி வாழ்ந்தோம் என்பதை அந்தச் சிறுமி சொன்னாள். அவளுடைய தாய் ஏதாவது வேலை செய்வாள். அந்தச் சிறுமி பிச்சை எடுப்பாள். அப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்கள். எல்லாவற்றையும் கூறிவிட்டு அவள் ஜானகியிடம் கேட்டாள்:
“அம்மா, நீங்க நாயரா?”
ஜானகி ‘ஆமாம்’ என்றாள். அந்தச் சிறுமி தொடர்ந்து சொன்னாள்:
“என் அம்மா கூட நாயர் ஜாதிதான். என் அப்பா கூட சேர்ந்து வீட்டை விட்டு என் அம்மா வந்துட்டாங்க. அம்மாவோட வீடு வைக்கத்துல இருந்தது. நான் அங்கே போனது இல்ல. அம்மாவுக்கு ஒரு அக்காவும் மூணு தங்கச்சிகளும் இருந்தாங்க. யாருக்கும் கல்யாணம் ஆகல...”
அந்தச் சிறுமி தான் சொல்லிக் கொண்டிருந்ததைச் சிறிதும் நிறுத்தாமல், ஜானகி எப்படி அவள் கூறிக்கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்தாள் என்பதையோ, அந்தப் பேச்சு அவளிடம் எப்படிப்பட்ட மாற்றங்களையெல்லாம் உண்டாக்கியது என்பதையோ கொஞ்சமும் கவனிக்காமல் அவள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாள். ஜானகி அதைக்கேட்டு குலுங்கி குலுங்கி அழுதவாறு ‘என் மகளே’ என்று அழைத்து அந்தச் சிறுமியை இறுக அணைத்துக் கொண்டாள். அவளுடைய தலையில் ஜானகியின் கண்ணீர் தொடர்ந்து விழுந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுமியும் திடீரென்று அமைதியாகிவிட்டாள். ஜானகி அந்தச் சிறுமியின் முகத்தை உயர்த்தினாள். அந்த முகத்தையே ஆச்சரியத்துடன், மகிழ்ச்சியுடன் பாசத்துடன் அவள் உற்றுப் பார்த்தாள்.
“அய்யோ... என் பாரதியின் சாயல் அப்படியே இந்த முகத்துல இருக்கு...”
ஜானகி அந்த முகத்தில் நூறு முத்தங்கள் கொடுத்தாள். அந்தச் சிறுமி சொன்னாள்:
“அம்மா, அதுதான் என் அம்மா நாயரா இருந்தப்போ இருந்தப் பேரு. எல்லா விஷயத்தையும் என் அம்மா என்கிட்ட சொல்லி இருக்காங்க. பழைய விஷயங்களைச் சொல்றப்போ, அம்மா அந்தக் கதையைச் சொல்லுவாங்க!”
ஜானகியின் எல்லா சந்தேகங்களும் தீர்ந்துவிட்டன. ஆனால், அந்தச் சிறுமிக்கு எதுவும் புரியவில்லை. ஜானகியின் அணைப்பிற்குள் சிக்கிக்கொண்டு நின்றிருந்தது அவளுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக இருந்தது. இனியொருமுறை கிடைக்காது என்று நினைத்திருந்த ஏதோ ஒன்று தனக்குக் கிடைத்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். இனியும் ‘மகளே’ என்று அழைத்து யாராவது தனக்கு முத்தம் தருவார்கள் என்று அந்தச் சிறுமி சிறிதும் எதிர்பார்க்கவில்லை. சிறிதும் எதிர்பார்க்காமல் அந்தச் சுகத்தை அனுபவிக்கக் கூடிய வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பதே அவளுக்குப் பெரிய விஷயமாகத் தெரிந்தது. அவள் கேட்டாள்:
“அம்மா, நீங்க யாரு?”
மகிழ்ச்சி பொங்க ஜானகி சொன்னாள்:
“என் மகளோட... பெரியம்மா!”
அந்தச் சிறுமி ஒரு குழந்தையைப் போல ஜானகியை இறுக அணைத்துக் கொண்டாள். குழந்தை ஓடிச்சென்று தாயை இறுகக் கட்டிப் பிடித்துக்கொள்ளும் அல்லவா, அதைப்போல. ஜானகி அவளை வாரி எடுத்துக்கொள்ள நினைத்தாள். ஆனால், இப்போது அவளால் அதைச் செய்ய முடியவில்லை. அந்தச் சிறுமி அவளுடைய இன்றைய நிலைமைக்குச் சற்று வளர்ந்துவிட்டிருந்தாள். அவள் ஒரு சிறு குழந்தையைப் போல் ஆகிவிட்டிருந்தாள் என்பது வேறு விஷயம். எனினும், சிறுமி அவளைப் பார்த்து கேட்டாள்:
“பெரியம்மா, உங்க பேரு ஜானகிதானே!”
அந்தச் சிறுமிக்கு எல்லாமும் தெரிந்திருந்தது. பாரதி எல்லா விஷயங்களையும் அவளுக்கு ஏற்கெனவே கூறியிருக்கிறாள்.
உண்மையாகச் சொல்லப் போனால் பாரதி யாரையும் மறக்கவில்லை. அது மட்டுமல்ல- அவள் எப்போதும் எல்லோரையும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.
மிகப் பெரிய அதிர்ஷ்டம் தனக்கு வாய்த்திருப்பதைப் போல மலர்ந்த முகத்துடனும் பாரம் இல்லாத இதயத்துடனும் சிறுமி சொன்னாள்:
“பெரியம்மா, உங்களைப் பற்றி அம்மா எப்போ பார்த்தாலும் சொல்லிக்கிட்டே இருப்பாங்க. எல்லார் மேலயும் ரொம்பவும் நீங்க பிரியமா இருப்பீங்கன்னு அம்மா சொல்லுவாங்க. சில நேரங்கள்ல உங்களைப் பற்றி சொல்றப்போ அப்போ வாய் விட்டு அழுதிடுவாங்க. அம்மா உங்களை ரொம்பவும் வேதனைப்படுத்திட்டதாக சொல்லுவாங்க.”
அந்தச் சிறுமி வேறொரு தகவலையும் சொன்னாள். பாரதி ஒருமுறை வைக்கத்திற்குப் போயிருக்கிறாள். ஆனால், அவர்களின் வீடு இருந்த இடத்தில் ஒரு பெரிய கட்டிடம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அங்கு முன்பு இருந்தவர்கள் அந்த ஊரைவிட்டு போய்விட்டார்கள். அவர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த இடத்தை விலைக்கு வாங்கியவர்கள்தான் புதிதாக கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தச் சிறுமி கதையை இப்படிச் சொல்லி முடித்தாள்.
“அம்மா சாகுறதுக்குக் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடிதான் அங்கே போனாங்க. என்னை இங்கேயே விட்டுட்டு. அவங்களாகவே கிளம்பிப் போனாங்க. நாலஞ்சு நாட்கள் கழிச்சி அம்மா திரும்பி வந்தாங்க. எல்லாமே அழிஞ்சு போச்சுன்னு அவங்க அழுதுக்கிட்டே சொன்னாங்க.”
அது இன்னொரு இதயத்தைப் பிளக்கக் கூடிய செய்தியாக இருந்தது. அப்படியென்றால் பத்மினியும் தெருவிற்கு வந்துவிட்டாள் என்று அர்த்தமா? அந்தச் சிறுமி தன்னுடைய தாயின் கடைசி கால நோக்கங்களைச் சொன்னாள்:
“தான் செத்துப் போயிடுவோம்னு அம்மாவுக்கு நல்லா தெரியும். அதுக்கு முன்னாடி பெரியம்மா, உங்கக்கிட்ட என்னை எப்படியாவது கொண்டு போய் சேர்த்துடணும்னு அவங்க நினைச்சாங்க.”
ஜானகி பாசம் மேலோங்கக் கேட்டாள்.
“வர்க்கிக்கு வீடும் சொந்தக்காரங்களும் இல்லையாடி கண்ணு?”
ஆச்சரியத்தில் அந்தச் சிறுமியின் கண்கள் அகல விரிந்தன. அவள் கேட்டாள்:
“அப்படின்னா அப்பாவை உங்களுக்குத் தெரியுமா, பெரியம்மா?”
“நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்டா, கண்ணு, பெரிய தப்பு பண்ணிட்டேன்.”
“என்ன தப்பு, பெரியம்மா?”