ஐந்து சகோதரிகள் - Page 14
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
அந்தத் தப்பு என்னவென்று சொன்னால் அந்தச் சிறுமிக்குப் புரியாது. பல வருடங்களுக்கு முன்னால் பாரதியின் இதயம் வர்க்கியின் மீது பதிந்தபோது, அந்தக் காதல் உறவை ஜானகி எதிர்த்தாள் அல்லவா? அப்படி தான் எதிர்த்தது ஒரு தவறான விஷயம் என்று இப்போது, இந்த நிமிடத்தில்தான் ஜானகி உணர்கிறாள். அன்று ஜாதி மீது கொண்ட வெறுப்பில் அவள் அந்த உறவை எதிர்த்தாள். பாரதி, வர்க்கியுடன் வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்டாள். அன்று அந்தக் காதல் உறவை அவள் ஏற்றுக் கொண்டிருந்தால், வர்க்கி பாரதியின் கணவனாக அங்கேயே இருந்திருப்பான். அந்த வீட்டில் ஆண் துணை என்று ஒரு ஆள் இருந்திருப்பான். அப்படி ஒரு சூழ்நிலை உண்டாகியிருந்தால், அந்த வீட்டில் இருந்தவர்களின் வாழ்க்கை நிலை இந்த மாதிரி ஆகியிருக்காது. ஒன்றுமே இல்லையென்றாலும் பவானியைத் தேடிப் போவதற்கு வீட்டில் ஒரு ஆள் இருந்திருப்பான். கொச்சு மாது பிள்ளைக்கு பத்மினியைக் கல்யாணம் செய்து வைப்பது நல்லதுதானா என்று கேள்வி கேட்பதற்கு ஒரு ஆண் இருந்திருப்பான். எல்லாருக்கும் வர்க்கி ஒரு ஆதரவு தரும் ஆணாக இருந்திருப்பான். அந்த வீட்டிற்கு உறவுக்காரன் என்று மனப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டு வந்தவன் அவன். வாழ்க்கையில் தான் முதல் தடவையாகச் செய்த தப்பை ஜானகி கோட்டயம் பேருந்து நிலையத்தில் பெண்களுக்காக அமைக்கப்பட்டிருந்த பயணிகள் அறையில் இருக்கும்போது உணர்ந்தாள். அது ஒரு மிகப் பெரிய தப்பு என்பது அவளுக்குப் புரிந்தது.
பாரதி ஒரு ஆணை விரும்பினாள். அதற்கு அவளுக்கு உரிமை இல்லையா? எப்படி ஒரு பெண் தன்னையே அறியாமல் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள் என்பதை நன்கு தெரிந்திருப்பவள் ஜானகி. அந்தக்காதலை ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். அதற்குப் பதிலாக அவள் பக்கத்து வீட்டுக்காரர்களை வாய்க்கு வந்தபடி திட்டினாள். ஜாதியையும் மதத்தையும் குறிப்பிட்டு அவர்கள் என்னவெல்லாமோ சொல்லி அவளை வெறுப்படையச் செய்தார்கள். அந்த ஜாதியும் மதமும் அவர்கள் யாரையும் காப்பாற்றுவதற்கு முன்வரவில்லை. உண்மையாகப் பார்க்கப் போனால் பாரதி, வர்க்கி இருவரின் குற்றத்தையும் ஏற்றுக் கொண்டு அவள் அவர்களை மன்னித்திருக்க வேண்டும். அவளுக்கு அன்று உண்டான அறிவுத் தடுமாற்றம்தான் அந்தக் குடும்பத்தையே இந்த அளவிற்குத் தகர்த்து எறிந்துவிட்டது என்பதைப் புரிந்து கொண்டாள் ஜானகி. அவள் பாரதிக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே தீங்கு இழைத்துவிட்டாள். எல்லாரின் வாழ்க்கையையும் நாசம் பண்ணிவிட்டாள்.
திரெஸ்யா மூலம்- அதுதான் அந்தச் சிறுமியின் பெயர் வர்க்கியின் கதையைக் கேட்டபோது தான் செய்த தவறு எந்த அளவிற்குப் பெரியது என்பதை ஜானகியால் புரிந்து கொள்ள முடிந்தது. வர்க்கி உண்மையிலேயே நல்லவன்தான். பாசமானவன். அவனுடைய தாயும், தந்தையும் அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பாரதியை ஞானஸ்நானம் செய்து முடித்து மதச் சடங்குகளின்படி திருமணம் செய்திருந்தாலும், அவள் வரதட்சணை எதுவும் கொண்டு வராத மருமகள் அல்லவா? வர்க்கி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினான். திடீரென்று ஒருநாள் வர்க்கி மரணத்தைத் தழுவிவிட்டான். அவனுடைய மரணத்திற்குப் பிறகு பாரதியும் குழந்தையும் அவனுடைய வீட்டிற்குச் சென்றார்கள்.
அப்போது அவனுடைய தந்தையும் தாயும் இறந்துவிட்டிருந்தார்கள். தம்பிமார்கள் அவர்களை வீட்டிற்குள் விடவில்லை. அதற்குப் பிறகு அவர்கள் தெருவே கதி என்று ஆனார்கள். உண்மையாகவே சொல்லப் போனால் வர்க்கி நல்லவன்தான்.
அந்தச் சிறுமி இப்படித்தான் அந்தக் கதையை கூறி முடித்தாள்:
“அப்பா இறந்த நாளன்னைக்கு ஒவ்வொரு வருடமும் அம்மா வழிபாடு செய்வாங்க. தான் இறந்தபிறகு நான் அதை ஒவ்வொரு வருடமும் கட்டாயம் நிறுத்தாம செய்யணும்னு அம்மா என்கிட்ட சொல்லியிருக்காங்க.” கண்களில் நீர் மல்க, அவள் கூறி முடித்தாள். “பெரியம்மா, அப்பா பாவம்... அவர் ரொம்பவும் நல்லவர்...”
அந்தச் சிறுமி தன் கால்களைச் சற்று மடக்கியவாறு, நெற்றியிலும், மார்பிலும், தோளிலும் சிலுவை வரைந்தாள். தன்னுடைய தந்தையின் மன சாந்திக்காக அவள் பிரார்த்தனை செய்தாள்.
மதத்தையும் ஜாதியையும் விட்டு நிரந்தரமாக வெளியே போய் விட்டதால், பாரதி இனிமேல் திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் ஜானகி நினைத்தாள். அன்று அவள் வீட்டை விட்டுப் போனது அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில்தான். ஜானகி அதைத் தெளிவாக நினைத்துப் பார்ப்பாள். திரும்பி வந்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று பாரதி நினைத்திருப்பாள். இல்லாவிட்டால், தான் இனிமேல் திரும்பி வரவே போவதில்லை என்ற உறுதியான தீர்மானத்துடன் அவள் உறுதியாக இருந்திருக்கலாம். அப்படியென்றால் இறப்பதற்கு முன்பு வீட்டைத் தேடி எதற்காக அவள் வரவேண்டும்? அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். அந்த மகளை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு இறக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். மரணத்திற்கும் அவளுக்குமிடையே ஒரு பெரிய போட்டியே நடந்திருக்க வேண்டும். குழந்தையைத் தனியாக விட்டுப் போக முடியாமல் இருந்திருக்கலாம்.
தான் எதற்காக கோட்டயத்திற்கு வந்தோம் என்பதை ஜானகி நினைத்துப் பார்த்தாள். வேறு எந்த இடத்திற்கும் போகாமல் இங்கு வந்து அவள் சேர்ந்தாள். ஒருவேளை பாரதியின் ஆத்மா அவளை தேவிகுளத்தின் மலைகளிலிருந்து சிறு காற்றாக வந்து மோதி வருடி அவளை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கும் தனக்கு முன்னால் பாரதி, தன்னுடைய செல்ல மகளைக் கொண்டு வந்து நிறுத்தி, அந்தச் சிறுமியின் கண்களைத் திறந்து அவளின் பெரியம்மாவைப் அந்தக் கண்கள் பார்க்கும்படி செய்திருக்க வேண்டும்.
இனிமேல் மற்றவர்களையும் இதே மாதிரி பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையலாம். பவானியையும், பத்மினியையும்... இல்லாவிட்டால்... அவர்களின் பிள்ளைகளை! அதுவும் இல்லாவிட்டால் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தை அவர்களில் யாரையாவது பார்த்து என்ற சூழ்நிலை உண்டாகலாம்.
எதுவாக இருந்தாலும் இந்த உலகத்தில், தான் தனியாக இல்லை என்ற ஒரு நிம்மதி ஜானகிக்கு உண்டானது. அவளுக்கு ஒரு மகள் இருக்கிறாள். பாசமான ஒரு மகள். இனி எந்த நாளிலும் அவள் தனியாக இருக்கப் போவதில்லை.
அந்தச் சிறுமி உற்சாகத்தில் துள்ளிக் குதித்தாள். அவளுக்கு மூன்று நான்கு தோழிகள் இருந்தார்கள். அவர்களிடம் அந்தச் சிறுமி சொன்னாள்: “என் பெரியம்மாவைப் பார்த்தீங்களா?”
தனக்குப் பெரியம்மாவும் சித்திமார்களும் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் நாயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதையும் அவர்களிடம் திரேஸ்யா நூறு தடவைகளாவது கூறியிருப்பாள். அந்தப் பெண்கள் எல்லாரும் வந்து ஜானகியைப் பார்த்தார்கள். ஜானகி அவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் விசாரித்து தெரிந்துகொண்டாள்.