ஐந்து சகோதரிகள் - Page 16
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6462
ஜானகி சத்தியம் செய்தாள். “என் மகள் திரேஸ்யா மேல ஆணையா சொல்றேன்... நான் வெளியே எங்கேயும் போக மாட்டேன்.”
அது போதாதென்று திரேஸ்யா நினைத்தாள்.
ஜானகி கேட்டாள்:
“வேற யார் மேல சத்தியம் பண்ணணும் மகளே?”
திரேஸ்யா சொன்னாள்:
“வயித்துல இருக்குற சின்னத்தம்பி மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க!”
ஜானகிக்கு அதைக்கேட்டு சிரிப்பு வந்தது. அது ஒரு சின்னத்தம்பி என்பது வரை அவள் மனதில் நினைத்து வைத்திருக்கிறாள். திரேஸ்யாவிற்கு நம்பிக்கை வரும் வண்ணம் ஜானகி சொன்னாள்:
“இல்ல, மகளே... நான் எங்கேயும் போகமாட்டேன்!”
அந்த மகளைத் தன்னிடம் கொண்டு வந்து சேர்த்ததற்காக ஜானகி விதிக்கு நன்றி உள்ளவளாக இருந்தாள். ஆனால், ஜானகிக்கு ஒரு விஷயத்தில் மனதில் சமாதானம் உண்டாகவில்லை. எதற்காக விதி அவர்களைச் சந்திக்க வைத்தது? திரேஸ்யாவிற்கு அவள் என்ன செய்துவிடமுடியும்? நல்ல ஒரு சிறுமி! ஒருவேளை அவள் கோட்டயத்தின் தெருக்களில் பிச்சை எடுக்கும் ஒருத்தியாக ஆகாமல் இருக்கலாம். அவள் சுத்தமும் தைரியமும் கொண்ட நல்ல ஒரு பெண்ணாக இருக்கலாம். முன்பு நான்கு பேர் ஜானகியின் பாதுகாப்பில் இருந்தார்கள். அவர்கள் எல்லாரையும் அப்படித்தான் தைரியமும் சுத்தமும் கொண்டவர்களாகவும், நல்லவர்களாகவும் வைத்திருக்க ஜானகியால் முடிந்தது. அவர்களின் வீட்டில் இருந்தவர்களிலேயே ஒரே ஒருத்திதான் அந்த நெறிமுறையை மீறி நடந்தாள். அவள்தான் பாரதி. ஆனால், அவளைத் தப்பு செய்தவள் என்று பார்க்க ஜானகியால் முடியவில்லை. அது ஒரு காதல் உறவின் கதை ஆயிற்றே! இன்று நான்கிற்குப் பிறகு ஐந்தாவது பெண் அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறாள்.
தன்னுடைய வாழ்க்கைக் கதையை நினைத்துப் பார்க்கும்போது அது அவளுக்கு மனதில்அமைதி தரக்கூடிய ஒன்றாக இருக்கிறதா என்ன? நான்கு பேர் ஒரு காலத்தில் அக்கா என்ற முறையில் அவளுடன் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். இன்று ஐந்தாவதாக ஒருத்தி ‘அம்மா’ என்ற முறையில் அவளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறாள். விதி எதற்காகப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்ற கொடுமையை அவள் மீது வந்து திணிக்கிறது? அவள் அப்படி என்ன தப்பு செய்தாள்? ஜானகி தன்னுடைய விருப்பங்களை நினைக்காமல் இருக்கக் கற்றுக் கொண்டவள். அவள் குலையில் மூத்தவளாயிற்றே! வக்கீல் குமாஸ்தா பரமுபிள்ளையின் மூத்தமகள்! திரேஸ்யாவைச் சந்தித்தது என்பது உண்மையிலேயே ஜானகிக்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம்தான். தன்னுடைய எல்லாவற்றையும் பத்மினிக்காக கொடுக்கத் தயங்காத ஜானகியால், இந்த ஒன்பதாவது மாதத்தில் திரேஸ்யா வந்து சேர்ந்திருப்பது, தன்னுடைய காரியங்களுக்கு ஒருவிதத்தில் ஒத்தாசையாக இருக்கும் என்று நினைக்க முடியவில்லை.
சரியாகப் பன்னிரண்டரை மணிக்கு திரேஸ்யா ஒரு பொட்டலத்தைக் கொண்டு வந்தாள். அதில் சாதம் இருந்தது. பெரியம்மா இந்த இடத்தை விட்டு அசையவில்லை என்பதை அறிந்த திரேஸ்யா அளவற்ற சந்தோஷமடைந்தாள். அந்தச் சிறுமிக்கு ஜானகி எவ்வளவு சாப்பிட்டாலும் போதாது என்றே பட்டது. ஜானகி சொன்னாள்:
“மகளே, என் வயிறு பெருசா இருக்குல்ல?”
அவள் சிரித்தாள். அது மட்டுமல்ல- அந்தச் சிறுமி ஜானகியின் வீங்கிய வயிற்றின் மீது முத்தமிட்டாள். அவள் தன்னுடைய தம்பிக்கு முத்தம் தந்தாள்.
திரேஸ்யாவின் வாழ்க்கையிலும் ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் வந்து சேர்ந்தன. வேலை முடிந்து அவள் தெருவில் தன்னுடைய தோழிகளுடன் அலைந்து திரிவதில்லை. அவள் நேராகத் தன்னுடைய பெரியம்மாவைத் தேடி வந்து விடுவாள். இரவில் தன் பெரியம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டுதான் அவள் உறங்குவாள். பெரியம்மாவின் கைக்குக் கீழே சூடு உண்டாகப் படுத்திருப்பது எவ்வளவு சுகமான அனுபவம்! தினமும் அவள் குளித்து விடுவாள். இல்லாவிட்டால் பெரியம்மா அவளைக் குளிக்கச் செய்வாள். பிறகு அவளுடைய தலைமுடியைக் கோதிவிட்டு உயர வைத்துக் கட்டிவிடுவாள்.
மருத்துவமனைக்குப் போகும் நாள் நெருங்கி வரவர ஜானகிக்கு மனக்கவலை அதிகமாகிக் கொண்டு வந்தது. தான் மருத்துவமனையில் இருக்கும் பொழுது திரேஸ்யா என்ன செய்வாள்? திரேஸ்யாவைத் தனியாக விட்டுச் செல்ல ஜானகிக்கு கஷ்டமாக இருந்தது. அந்தச் சிறுமி, வயதுக்கு வரும் நிலையில் இருந்தாள். உடம்பில் இப்போதே பளபளப்பு தெரிந்தது. ஒரு தாய் தான் பெற்ற மகளுக்கு எப்படி அறிவுரை கூறுவாளோ அப்படி திரேஸ்யாவிற்கும் அவள் அறிவுரை கூறுவாள். அவற்றை திரேஸ்யாவும் புரிந்து கொண்டாள். எனினும் ஜானகிக்கு மனதில் திருப்தி உண்டாகவில்லை. வேறு யாரையும் துணைக்கு இருக்க வைக்கவும் வாய்ப்பில்லை. ஒரு சாலை வேலைக்காக மண் சுமப்பதுதான் அவளுடைய வேலை. அவளுடன் வேலை பார்ப்பவர்கள் எல்லாருமே தவறு செய்கிறவர்கள் என்பதுதான் ஜானகியின் எண்ணம்.
மருத்துவமனைக்குப் போகவேண்டிய நாளன்று, விஷயங்கள் தெரிந்த ஒருத்தியைப்போல திரேஸ்யாக்குட்டி சொன்னாள்:
“பெரியம்மா எதைப் பற்றியும் கவலைப்படவேண்டாம். எனக்கு எல்லாம் தெரியும்.”
ஜானகி மருத்துவமனையில் இருந்தாள். தினமும் காலையிலும் மாலையிலும் திரேஸ்யா மருத்துவமனைக்கு வருவாள். பெரியம்மாவைப் பார்ப்பாள். அவளுடைய நடத்தையிலும் ஒழுங்கிலும் எந்தவித மாற்றமும் இல்லை. அது மட்டுமல்ல. அவள் தனக்குக் கிடைக்கும் கூலிக் கணக்கை தினமும் கூறுவாள். இதற்கிடையில் தன்னுடைய தந்தையின் நினைவு நாளன்று வழிபாடு நடத்தினாள். பெரியம்மா எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பிள்ளை பெற வேண்டும் என்பதற்காக ஒரு சிறப்பு வழிபாடு செய்வதாகவும் அவள் நேர்ந்தாள்.
ஜானகிக்கு பிரசவம் ஆனது. திரேஸ்யா கூறியதைப் போல அது ஒரு ஆண் குழந்தைதான்.
வயதுக்கு வந்திருக்கும் நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும் ஒரு சிறு குழந்தையும்... பேருந்து நிலையத்தின் பயணிகள் அறை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும். சிறிது உடல்நிலை சரியானவுடன், ஜானகியும் திரேஸ்யாவுடன் சேர்ந்து வேலைக்குப் போக ஆரம்பித்தாள். அவளுக்கும் பன்னிரண்டு அணா கூலியாகக் கிடைத்தது. குழந்தையையும் வேலை செய்யும் இடத்திற்கு அவள் கொண்டு செல்வாள். அந்த வகையில் நாளொன்றுக்கு அவர்களுக்கு ஒன்றரை ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.
நாகம்படத்து ஆற்றின் அக்கரையில் சாலையைத் தாண்டி உள்ளே போனால் ஒரு சிறு வீடு இருப்பதாக அவர்களுடன் வேலை செய்த ஒரு பெண் சொன்னாள். நாளொன்றுக்கு இரண்டணா வாடகை தரவேண்டும். அவர்கள் அந்த வீட்டிற்குக் குடிபெயர்ந்தார்கள். இப்போது அவர்களுக்கு, வீட்டிற்குப் போகிறோம் என்று கூறுவதற்கு ஒரு இடம் இருந்தது.
ஜானகியை எப்போதும் ஒரு பிரச்சினை அலைக்கழீத்துக் கொண்டேயிருந்தது. அது நாளடைவில் ஒரு குற்றஉணர்வாகவே மாறியது. அவருடைய மகன் வளர்ந்து வரும்போது கட்டாயம் அவன் தன் தந்தையைப் பற்றி அவளிடம் கேட்பான்.