ஐந்து சகோதரிகள் - Page 20
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
கள்ளங்கபடமில்லாத ஒரு இதயத்திலிருந்து வெளிவருவதைப் போல ஒரு வார்த்தை வெளியே வந்தது:
“அப்து, உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும்!”
அவன்கேட்டான்: “இந்த விஷயத்தை நீ உன் பெரியம்மாகிட்ட சொல்லலாமே, திரேஸ்யா?”
“சொல்லலாம்” என்று அவள் அடுத்த நிமிடம் சொன்னாள்.
அந்த அப்பாவிப் பெண்ணின் உற்சாகமெல்லாம் போய்விட்டது. அவள் இப்போதுமுன்பு மாதிரி இருப்பதில்லை. விளையாடுவதில்லை. தொழிற்சாலையிலும் அவள் எந்தவித உற்சாகமும் இல்லாமல் இருந்தாள். அப்துவைப் பற்றி அவள் அதற்குப் பிறகு வீட்டில் எதுவும் பேசவில்லை. ஆனால், அவளைப் பற்றி தன் பெரியம்மாவிடம் சொல்வதாக அவள் ஏற்றுக் கொண்டிருக்கிறாள். சிலநேரங்களில் தன் பெரியம்மா தனக்கு எதிராக இருக்கமாட்டாள் என்று அவள் நினைப்பாள். அப்துவைத் தனக்குப் பிடிக்கும் என்று சொன்னால், பெரியம்மா எதிர்க்கமாட்டாள் என்று அவள் நினைத்தாள். ஆனால், ஐந்து வருடங்கள் கழித்து அவளுடைய பெரியப்பா வரும்போது, அவன் எதிர்த்துவிட்டால்...
எதிர்த்துவிட்டால் என்ற சிந்தனை வந்தவுடன், திரேஸ்யாவின் நரம்புகளில் ஒரு நடுக்கம் உண்டானதைப் போல் இருந்தது. தன்னையே அறியாமல் அவள் மெதுவான குரலில் முணுமுணுத்தாள்: “எதிர்த்தால் நடக்குறதே வேற...” அந்த வார்த்தையின் பொருள் முழுமையாக திரேஸ்யாவிற்குப் புரிந்திருக்குமா என்பது கூட சந்தேகம்தான். ஆனால், அது ஒரு தெளிவான தீர்மானமாக இருந்தது. அந்தத் தீர்மானத்தில் நடுக்கம்தான் அவளிடம் உண்டானது.
கோட்டயத்தில் யாருமே இல்லாமல் தெருவில் நடந்து திரிந்த பெண்ணுக்கு ஒரு தாய் கிடைத்தாள். தாயும் மகளுமாகத்தான் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது தனித்தனி கருத்துகளின் மோதல் கொண்ட ஒன்றாக ஆகாமல் இருக்கவேண்டும். அவளுக்கென்று தனி விருப்பம் உண்டானபோது அதற்குத் தடைகள் ஏற்பட்டபோது, அந்த உறவின் மதிப்பு குறைந்து கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து அவளுக்கு ஒரு தைரியம் வந்தது.
திரேஸ்யாவிடம் உண்டான மாற்றம் ஜானகியின் கண்ணில் படாமல் இல்லை. அவளுக்குள் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.
ஜானகி கேட்டாள்:
“என்ன மகளே, இப்போல்லாம் நீ சரியாவே பேச மாட்டேங்கிறே?”
“ம்... ஒண்ணுமில்ல...” - என்று அவள் தயங்கியவாறு கூறினாலும், அந்தப் பதில் மூலம் தான் ஏதோ விஷயத்துடன் பேச நினைப்பதை பூடகமாக அவள் காட்டினாள். அப்படிப்பட்ட சூழ்நிலையை வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்திருக்கும் ஜானகி அழுத்தமான குரலில் சொன்னாள்:
“அப்படியெல்லாம் சொல்லாதே, மகளே. சொல்ல நினைக்கிறதை சொல்லு!”
பல வருடங்களுக்கு முன்பு நடந்த அமைதியான ஒரு காட்சியின் சூழ்நிலையில் மீண்டும் தான் இருப்பதைப் போல் ஜானகிக்குத்தோன்றியது.
அது கூற வேண்டிய நேரம்தான். கூற வேண்டிய விஷயம் திரேஸ்யாவின் தொண்டை வரை வந்துவிட்டது. ஆனால்,வெளியே வரவில்லை.
ஜானகியின் முன்னால் பாரதி நின்று கொண்டிருக்கிறாள். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வைக்கத்திலிருந்து அவர்களின் வீட்டில் இப்படியொரு காட்சி நடந்தது. இன்று அதே மாதிரியான ஒரு சம்பவம் கொச்சியில் ஒரு குடிசையில் நடக்கிறது. அவ்வளவுதான். ஜானகிக்கு மேலும் வயதுகள் ஆகிவிட்டிருக்கின்றன. அவள் வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களைக் கண்டிருக்கிறாள் என்பதுதான் வித்தியாசம். அவளுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் பெண் பாரதியாகவே மாறிவிட்டிருக்கிறாள்.
"எனக்கு அப்துவைப் பிடிச்சிருக்கு!"
ஜானகி அதைக்கேட்டு அதிர்ச்சியடையவில்லை. அது முன்பு நடந்தது. அப்போது பாரதியை அவள் வாய்க்கு வந்தபடி திட்டினாள். குடும்பத்திற்கு அவமானம் உண்டாக்கிவிட்டதாகச் சொன்னாள். எல்லாமே நாசமாகிப் போய்விட்டது என்று நினைத்தாள். இப்போது அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் உண்டாகவில்லை.
பாரதி வர்க்கியுடன் வீட்டை விட்டு வெளியேறினாள். ஆனால், அவளுக்கு எந்தக் கெடுதலும் நடக்கவில்லை. அவன் அவளைக் காதலித்தான். அவளுக்கு ஒரு காப்பாற்றக்கூடிய மனிதன் கிடைத்தான். திரேஸ்யா அப்துவுடன் ஏன் போகக்கூடாது? அனுமதி தர ஜானகி பயந்தாள்.
ஜானகி சொன்னாள்:
"அஞ்சு வருடங்கள் கழிச்சி பெரியப்பா வந்தபிறகு, அவர் சம்மதம் சொன்ன பிறகு நடந்தா போதாதா, மகளே?"
அவள் நேரடியாகக் கேட்டாள்:
"பெரியப்பா சம்மதிக்கலைன்னா?"
ஜானகிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவள் சொன்னாள்:
"பெரியப்பா நல்ல மனிதர். அவர் கட்டாயம் சம்மதிப்பார். உனக்குத் தெரியாது... இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் ஒரு ஆண்தான் தீர்மானிக்கணும்."
அதற்கும் திரேஸ்யாவிடம் பதில் இருந்தது.
"பெரியப்பாவை நான் பார்த்தது இல்ல. நான் மனசுக்குள்ளே நினைச்சுப் பார்த்தேன். பெரியப்பா என் விஷயத்தைப் பெருசா எடுத்துக்கமாட்டாரு!"
அதைக்கேட்டு ஜானகிக்குக் கோபம் வரவில்லை. அவள் கூறுவது உண்மைதான். திரேஸ்யாவிற்கு கோபாலன் யார், யாரும் அல்ல? அந்தக் குடும்பத்துடன் கோபாலனுக்கு என்ன உறவு இருக்கிறது? எந்தவொரு உறவும் இல்லை. ஓச்சிற கோவிலில் ஜானகி சந்தித்த ஒரு ஆண். ஜானகி அவளை விரும்பினாள். மேலும் சிறிது சிந்தித்துப் பார்த்தால் ஐந்து வருடங்கள் கழித்து அவன் ஓச்சிற கோவிலுக்கு வந்து ஜானகிக்காகக் காத்திருப்பான் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? அவன் எந்தவிதத்திலும் உரிமை கோர முடியாத நிலைமையில் இருப்பவள் திரேஸ்யா. அவள் அவனுக்காக எதற்குக் காத்திருக்க வேண்டும்?
ஜானகி மேலும் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைத்தாள்:
"என் மகளே, எனக்கு அப்துவை நீ கொஞ்சம் காட்டுவியா?"
திரேஸ்யாவின் முகம் திடீரென்று ஒளிர்ந்தது.
பெரியம்மாவின் மார்போடு சேர்ந்து நின்றுகொண்டு, தோள் மீது தன் தலையை வைத்துக் கொண்டு, திரேஸ்யா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். ஜானகி அவளுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.
7
அந்தக் குடிசையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஒரு பெரிய விசேஷம் நடக்கப்போகிறது. அன்று ஒரு விருந்தாளி வரப்போகிறான் ஜானகியைப் பொறுத்தவரை அந்த உற்சாகத்தில் கவலையும் கலக்காமல் இல்லை. நான்கு தங்கைமார்கள் அவளுக்கு இருந்திருந்தாலும், ஒரு தங்கைக்காக மட்டுமே அவள் விருந்து வைத்தாள். இப்போது வாழ்க்கையில் இரண்டாவது தடவையாக விருந்து வைக்கிறாள். முன்பு யாருக்காக விருந்து வைத்தாளோ, அவன் ஜானகியை வீட்டை விட்டு வெளியே விரட்டிவிட்டான். அப்போது ஒரு தங்கை மட்டுமே அவளுக்கென்று எஞ்சியிருந்தாள். அந்தத் தங்கைக்கு அவள் வீட்டைவிட்டு வெளியே போவதில் எந்தவொரு வருத்தமும் இல்லாமல் இருந்தது.
இப்போது இரண்டாவது தடவையாக ஒருவனுக்கு விருந்து வைக்கிறாள். இந்த அளவிற்கு உற்சாகத்துடன் திரேஸ்யாவை அவள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அது இயற்கையும் கூட அவளுடைய காதலன் அன்று வருகிறான். அப்துவை ஜானகிக்குப் பிடிக்கும். அந்த விஷயத்தில் திரேஸ்யாவிற்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.