ஐந்து சகோதரிகள் - Page 25
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
போகும் வழியில் ஜானகி தனக்கே உரிய மொழியில் ஒரு பெரிய தத்துவத்தைச் சொன்னாள்:
“உலகத்துல நாம பார்க்குற பெரிய பணக்காரர்களும் பிச்சைக்காரர்களும் கொஞ்சம் பின்னாடி போய்த் திரும்பிப் பார்த்தால், அவங்க ஒரே தந்தை, தாய்க்குப் பொறந்தவங்களா இருப்பாங்க சில நேரங்கள்ல...”
திரேஸ்யா அப்போது ஆதாம்- ஏவாள் கதையைச் சொன்னாள். கண்ணில் படும் மனிதருக்கெல்லாம் தந்தையும், தாயும் ஆதாமும் ஏவாளும்தானே! அங்கிருந்துதான் மனிதர்கள் கடற்கரை மணலைப் போல பெருகினார்கள். எனினும் அவளுக்கு ஒரு பதைபதைப்பு இருக்கவே செய்தது. அவளுடைய சித்தியின் மகன் மீது அவளுக்கு உரிமை இல்லையா என்ன? ஒரு முத்தம் தருவதற்கான உரிமையாவது! அப்து வேறொரு உண்மையைக் கூறுகிற சாக்கில் சொன்னான்:
“உன்னையும் உன் தாய் இதே மாதிரி யாருக்காவது விற்றிருந்தா...”
அவன் கூற வந்ததை முழுமையாகக் கூற அவள் விடவில்லை.
“என்னை என் அம்மா இந்த மாதிரி விற்கமாட்டாங்க. என் பெரியம்மாவும் விற்கமாட்டாங்க!”
அவளுக்குக் கோபம் வந்ததைப் போல் தோன்றியது.
கொல்லத்தில் போளேத்தோடு என்ற இடத்தில் ஒரு சிறு குடிசையில் அந்தக் குடும்பம் வசித்தது. இப்போது அவர்களுக்கு ஒரு ஆண் துணை இருக்கிறது. எனினும் அந்த வீட்டிற்கு தலைவனாக வேறொரு ஆண் இருக்கிறான் என்ற உணர்வு அப்துக்குட்டி வரை இருக்கவே செய்தது. அந்த மனிதன் வந்து சேரும் நாளைத்தான் அங்கிருந்த எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தினமும் நாட்களை எண்ணிக்கொண்டிருந்தான் பரமு.
ஜானகிக்கு நூற்றுக்கணக்கான கனவுகள் இருந்தன. ஒரு மனைவியின், இல்லத்தரசியின் கனவுகள்... ஒரு சிறிய வீட்டைக் கட்ட வேண்டும். இந்த நிமிடம் வரை அவர்களுக்கென்று சொந்தமாக ஒரு வீடு இல்லை. இந்த மாதிரியான நடைமுறைக்குச் சாத்தியமான ஆசைகள். எனினும், எவ்வளவோ அனுபவித்திருக்கும் ஜானகிக்கு இயற்கையாகவே அந்த அளவிற்கு எந்த விஷயத்திலும் முழுமையான நம்பிக்கை உண்டாகவில்லை. அடிக்கடி அவள் வாழ்க்கையின் இருண்ட பக்கங்களைப் பற்றிய சிந்தனையில் மூழ்கிவிடுவாள். ஓச்சிற கோவிலில் காத்திருப்பதாக கோபாலன் அவளிடம் கூறியிருக்கிறான். சிலநேரங்களில் அவளுக்கே சந்தேகம் உண்டாகிவிடும். சொன்னது மாதிரி கோபாலன் வந்துசேரவில்லை என்ற சூழ்நிலை உண்டாகி விடுமா? கோபாலனின் அன்பைப் பற்றி சந்தேகப்படுவதற்குக் காரணங்களே இல்லை. இருந்தாலும், சந்தேகம் என்ற வியாதி அவளை அவ்வப்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. வழக்குமன்ற குமாஸ்தாவான பரமுபிள்ளையின் மகள் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்திருக்க உரிமையில்லை. அந்த நாள் கடந்து போய்விட்டாலும், அவள் ஓச்சிற கோவிலுக்குச் சென்று காத்திருப்பாள்.
திரேஸ்யா மெதுவான குரலில் அப்துவிடம் கேட்டாள்: “பெரியப்பா வருவாரா?”
அவளுக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. கதைகள் முழுவதையும் அவள் தெரிந்து வைத்திருந்தாள். ஓச்சிற கோவிலில் உண்டான அந்த உறவு ஒன்றுமில்லாமல் போய் விடக்கூடாது. ஆனால், நீண்ட சிறை வாழ்க்கை கோபாலனை வேறொரு மனிதனாக மாற்ற முடியாதா என்ன? எனினும், அவர்கள் எல்லாரும் ஆவலுடன் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஜானகியின் மனதில் ஓச்சிற கோவில் பசுமையான நினைவாக நின்றுகொண்டிருந்தது. அந்த இடத்தில்தான் அவளுடைய பெண்மைக்கு ஒரு மரியாதை கிடைத்தது. அவளுடைய பெண்மைத்தனம் எழுச்சி பெற்றது அங்குதான். அந்த நினைவு வாடிப்போகுமா என்ன? அந்த மனிதன் வெளியே வரும் நாள் நெருங்க நெருங்க அந்த நினைவுகள் கிளை பரப்பி மொட்டு உண்டாக்க ஆரம்பித்தன.
அப்துவும் திரேஸ்யாவும் சில நேரங்களில் தங்களுக்குள் யாருக்கும் தெரியாமல் சிரித்துக் கொள்வார்கள். எதை நினைத்து? ஜானகி கனவு கொண்டிருப்பதை நினைத்துத்தான். பல வருடங்களுக்குப் பிறகு மனைவி கணவனைக் காணப்போகிறாள். எனினும், வயதானவர்கள் கனவு காணுவதென்பது இளம் வயதைக் கொண்டவர்களுக்கு ஒரு கிண்டலான விஷயம்தான்.
சில நாட்களுக்கு முன்புதான் ஜானகியும் பரமுவும் அப்துவும் திரேஸ்யாவும் ஓச்சிற கோவிலுக்கு வந்தார்கள். பழைய காவி உடை தரித்த பெண்கள் யாரும் அப்போது அங்கு இல்லை. அவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள். ஜானகியின் காதல் காட்சிகளைப் பார்த்த ஆலமரத்திற்குக் கீழே இருந்த இடங்கள் இப்போதும் இருந்தன. அந்த ஆலமரத்தடி எத்தனை ஆயிரம் தர்மம் யாசிப்பவர்களின் எப்படிப்பட்ட கதைகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும்!
ஒரு புதிய வாழ்க்கையை அவள் ஆரம்பிக்கப் போகிறாள். அப்போது வரை அவர்கள் யாருக்குமே மதிக்கிற மாதிரியான ஒரு வாழ்க்கை அமைந்ததில்லை. ஒவ்வொரு மரமாக பறந்து திரியும் பறவைகளைப் போல அவள் இங்குமங்குமாக தன்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள். குடும்பத் தலைவன் வரப்போகிறான். இனி அவளுக்கென்று ஒரு தெளிவான வாழ்க்கை அமையும்.
திரேஸ்யா கேட்டாள்:
“பெரியம்மா, நாம எங்கே வசிக்கலாம்?”
ஜானகி கேட்டாள்;
“எங்கே இருக்கணும்னு நீ பிரியப்படுறே?”
கொச்சியில் இருக்க வேண்டுமென்பதுதான் திரேஸ்யாவின் விருப்பம். மலைப்பகுதியில் எங்காவது இருந்தால் நன்றாக இருக்கும் என்பது ஜானகியின் எண்ணம். அங்கு போய் வாழ்ந்தால் பரமுவின் படிப்பு விஷயம் சரியாக இருக்காதென்று அப்துக்குட்டி சொன்னான்.
அந்த நாள் வந்து சேர்ந்தது. அதிகாலை வேளையில் பேருந்து நிற்கும் இடத்தில் அந்தக் குடும்பம் காத்திருந்தது. பேருந்தில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை சிறையிலேயே கொடுத்து விடுவார்கள் என்று சொன்னான் அப்து. அவ்வளவு அதிகாலை வேளையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவன் சொன்னான். திருவனந்தபுரத்திலிருந்து பேருந்து வரவேண்டாமா என்றான் அவன்.
ஒவ்வொரு பேருந்து வரும்போதும் ஆர்வத்துடன் அதைப் பார்த்தவாறு நின்றிருப்பாள் ஜானகி. அங்கு பயணிகள் இறங்குவார்கள். எனினும், அவர்களை ஏமாற்றிவிட்டு பேருந்துகள் தங்கள் விருப்பப்படி அந்த இடத்தைவிட்டு போய்க்கொண்டே இருக்கும். அவர்களின் ஆசையை அதிகரிக்கும் வண்ணம் அவன் அங்கு இருக்கிறான் என்ற எண்ணத்தை அவை உண்டாக்கின.
அந்த நாள் அப்படியே முடிந்தது. மறுநாள் அவன் வருவான் என்று அப்து, நம்பிக்கை ஊட்டினான். ஆனால், ஜானகிக்கு தூக்கம் வரவில்லை. மறுநாளும் அவள் எதிர்பார்த்து நின்றிருந்தாள். அன்று கோபாலன் வரவில்லை.
பரமு கேட்டான்:
“அம்மா, அப்பா எங்கே?”
உரிமை கலந்த கேள்வி அது. அவனுக்கு ஒரு தந்தை இருக்கிறான் என்று அவள்தான் அவனிடம் கூறியிருக்கிறாள். அந்தத் தந்தை எங்கே என்று அவன் கேட்கிறான்.
ஜானகி எவ்வளவோ விஷயங்களை அனுபவித்தவள். எதையும் தாங்கிக்கொள்ளும் சக்தி படைத்தவள். ஆனால், அந்தக் கேள்வியைத் தாங்கிக்கொள்ள அவளால் முடியவில்லை.
ஒரு வாரம் முடிந்தது. கோபாலன் வரவில்லை. அடுத்து என்ன செய்வது என்று அப்துவும் திரேஸ்யாவும் கேட்டார்கள். ஒருவேளை ஜானகி சொன்ன கதை பொய் கதை என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
வருடங்கள் பல கடந்தன. ஜானகி கிழவியாகி விட்டாள். பரமு வளர்ந்து வாலிபனாகிவிட்டான். ஓச்சிற கோவிலில் அந்த ஆலமரத்திற்குக் கீழே அப்போதும் அந்த மனிதனை எதிர்பார்த்து அவள் காத்துக்கொண்டேயிருக்கிறாள்.