ஐந்து சகோதரிகள் - Page 23
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6461
அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஆனால், அப்படிப்பட்ட ஒரு வீட்டிற்கும் தங்களுக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்கும் என்று அவர்கள் மனதில் கூட நினைத்ததில்லை. அதனால் அந்த வீட்டை அவர்கள் கவனம் செலுத்தி பார்த்ததில்லை.
வீட்டிற்கு முன்பக்கமிருந்த சாலையில் அவர்கள் நின்றார்கள். அப்து சொன்னது உண்மைதான். வாசலில் காவலாளி நின்றிருந்தான். நான்கு பக்கங்களிலுமிருந்த உயரமான வெளிச் சுவர்களுக்கு மேலே கண்ணாடித்துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு வீடு அது.
என்ன இருந்தாலும், பணக்காரரின் வீடாயிற்றே அது!
வாசலில் இருந்த காவலாளி உறுதியான உடம்பு படைத்த மனிதனாக இருந்தான். அவனைப் பார்க்கும்போதே, பயம் வருவது மாதிரி இருந்தது.
அப்து திரேஸ்யாவிடம் கேட்டான்:
“என்ன, சித்தியோட மகனைப் பார்க்குறதுக்காக அக்காவான நீ உள்ளே போகப் போறியா?”
திரேஸ்யாவின் புத்திசாலித்தனத்திற்கு ஒரு பிடிவாதம் உண்டானது.
“நான் அக்கான்னு தெரிஞ்சாச்சுல்ல... அதுபோதும் நான் உள்ளே போகலாமே...”
திரேஸ்யாவின் நிலைமையைப் பார்த்துக் கிண்டல் செய்வது மாதிரி அப்து சொன்னான்:
“அப்படியா?”
திரேஸ்யா கோபத்துடன் சொன்னாள்:
“ம்... என்ன நாங்கள்லாம் ஒரே குடும்பமாக்கும்...”
திரேஸ்யாவின் நிலைமையைப் பார்த்து ஜானகிக்குக் கூட சிரிப்பு வந்து விட்டது.
அப்து சொன்னான்:
“இவ, சரியான முட்டாள், அம்மா...”
ஜானகி அதற்குச் சொன்னாள்:
“என்ன செய்யிறதுன்னு தெரியாம நிற்கிற முட்டாள் பொண்ணு அதை நீ தெரிஞ்சுக்கிட்டா போதும்.”
அந்தக் காதலன்- காதலி இருவரின் கண்களும் அப்போது ஒன்றோடொன்று சந்தித்தன.
திரேஸ்யா அதற்குப் பிறகும் என்னவோ சொன்னாள்:
சில நிமிடங்களாகச் சாலையில் நின்றிருந்த அவர்களைக் காவலாளி கவனித்தான். அப்போது ஜானகி சொன்னாள்:
“நாம கிளம்பலாம். எதுக்காக நாம இங்கே நிற்கணும்?”
திரேஸ்யாவிற்கு மனதில் ஒரு ஆசை இருந்தது. அவனை ஒரு தடவையாவது பார்க்க வேண்டும். அந்த இடத்தில் நின்றிருந்தால் கூட அந்தச் சிறுவனைப் பார்க்க முடியாது என்று அப்து சொன்னான்.
திரேஸ்யா கேட்டாள்:
“அப்போ கூட்டுக்குள் போட்டு வளர்க்குற கிளியா அவன்?”
அப்து அதற்குப் பதில் சொன்னான்:
“அவங்க அவனை அப்படித்தான் வளர்க்குறாங்க. அவர்களின் அதிர்ஷ்டம் அவன். அந்தச் சிறுவன்தான் எல்லாமே. முதலாளி கூட சில நேரங்களில் அந்தச் சிறுவனை நான் பார்த்திருக்கேன்!”
திரும்பிப் போகும்போது திரேஸ்யா கேட்டாள்:
“சித்தி இப்போ உயிரோட இருக்காங்கன்னு வச்சுக்கோங்க. அவங்கதானே அவனைப் பெத்தவங்க! அந்தச் சித்தி அவனைப் பார்க்கணும்னு பிரியப்பட்டா...”
அதற்கு அப்து உடனடியாகப் பதில் சொன்னான்:
“பார்க்க முடியாது!”
“அய்யோ... கேட்கவே கஷ்டமா இருக்குதே!”
“அது அப்படித்தான்!”
ஒரு நிமிடம் சென்றபிறகு அவள் வேறு ஏதோ கூறுவதற்காக முயன்றபோது ஒரு வார்த்தை அவள் வாயிலிருந்து வெளியே வந்தது அந்த வார்த்தை - ‘அப்பா!’
அப்து கேட்டான்:
“நீ என்ன சொல்ல வந்தே?”
யாரும் எதுவும் பேசவில்லை. அந்தப் பையனின் தந்தையைப் பற்றிய பேச்சை வளர்க்க அங்கு யாரும் தயாராக இல்லை. கிறிஸ்தவர்கள் தெருவில் இருப்பவர்களில் அந்தச் சிறுவனின் தந்தை தான்தான் என்று இப்போது பலரும் கூறுவார்கள். அன்று... அவன் பிறப்பதற்கு முன்பு, எல்லாரும் அவனை ஒதுக்கியிருப்பார்கள்.
ஜானகி சொன்னாள்:
“அம்மா, அம்மாவின் அக்கா, தங்கை, தங்கையின் பிள்ளைகள், அப்பா எல்லாருமே அவனுக்குத் தொந்தரவு தரக் கூடியவர்களாக இருக்கலாம்.
8
பல நாட்கள் காத்திருந்த பிறகுதான் ஜானகியால் அந்த அதிர்ஷ்டசாலி பையனைப் பார்க்க முடிந்தது. அந்தக் குழந்தையின் வளர்ப்புத் தந்தையும் தாயும் பொன்னைப் போல அவனை வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எல்லாமுமாக இருப்பவன் அவன். அந்தக் குழந்தையை விலைக்கு வாங்கிய பிறகுதான் அவர் இவ்வளவு பெரிய பணக்காரராகவே ஆனார் என்று ஊரைச் சேர்ந்த எல்லாருமே கூறினார்கள். அது உண்மையிலேயே ஒரு அதிர்ஷ்டமான குழந்தைதான். அந்த விதத்தில் அதிர்ஷ்டசாலியான அந்தக் குழந்தை அதைப் பெற்ற தாயிடம் இருக்க முடியாது. அது அவளிடம் இருக்கவும் செய்யாது. குழந்தையைப் பார்த்த நிமிடத்திலேயே அது பவானியின் குழந்தைதான் என்பதை ஜானகி கண்டுபிடித்தாள். அந்தக் கதை உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.
அவனைக் கஷ்டப்பட்டு பெற்ற தாய் அவனை விற்றுவிட்டுப் போய் விட்டாள். இனி ஒருமுறை கூட அந்தக் குழந்தையைப் பார்க்க வரக்கூடாது என்று ஒரு ஒப்பந்தம் வேறு. அப்துக்குட்டி மட்டுமல்ல- அந்த ஒப்பந்தத்திற்கேற்ற ஒரு தொகையை அவள் ஏற்கெனவே வாங்கிக் கொண்டுவிட்டாள் என்றும், அதற்குப் பிறகு அவள் திரும்பவும் வந்ததே இல்லையென்றும் எல்லாருமே கூறினார்கள். இனிமேலும் அவள் வராமலே கூட இருக்கலாம். அது கூட தன்னுடைய குழந்தையின் மீது கொண்ட பாசமாக இருக்கலாம்.
அந்தக் குழந்தைக்குத் தந்தை, தாய் இருவருமே கிடைத்து விட்டார்கள். அவர்கள்தான் தன்னுடைய தந்தையும், தாயும் என்ற எண்ணத்திலேயே அவன் வளரட்டும். பவானி அந்த வாழ்க்கைக்குள் ஒரு நிமிட நேரம் நுழைந்தால் கூட, அதற்குப் பிறகு அந்தச் சூழ்நிலை முற்றிலும் மாறிப்போய் விடாதா? தன்னைப் பெற்றவள் வேறொருத்தி என்ற உண்மை அவனுக்குத் தெரிந்தால், தான் விலைக்கு விற்கப்பட்ட ஒரு பொருள் என்ற உண்மையை அவன் தெரிந்து கொண்டால், அதற்குப் பிறகு அவன் எப்படி இருப்பான்? அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்காமலே இருக்கவேண்டும் என்று ஜானகி கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
யாருக்கும் தெரியாமல் மறைத்தவாறு வந்து பவானி அந்தச் சிறுவனைப் பார்ப்பாள் என்று திரேஸ்யா சொன்னாள். அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால், பவானி மிகவும் தைரியமான ஒரு பெண். அன்று ஆலப்புழைக்குப் போன அவள் அதற்குப் பிறகு, திரும்பவும் வீட்டைத் தேடி வரவேயில்லை. அதனால் அந்தக் குழந்தையைப் பார்க்காமல் வாழ்வதற்கான மனத்திடம் அவளுக்கு நிச்சயம் இருக்கும். ஆனால், அவள் உயிருடன் இருக்கிறாள் என்பதற்கு உறுதி இல்லை.
எல்லா விஷயங்களையும் யோசித்துப் பார்க்கும்போது, அந்தச் சிறுவனின் வாழ்க்கையில் ஒரு நிழல் விழாமல் இருப்பதே நல்லது என்று ஜானகி நினைத்தாள். அந்த விஷயத்தில் அவள் உறுதியாகவும் இருந்தாள். இவ்வளவு விஷயங்கள் தனக்குத் தெரியாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று அவள் நினைத்தாள். பத்மினியின் வாழ்க்கையைப் போலவே, பவானியின் வாழ்க்கையும் யாருக்குமே தெரியாத ஒன்றாக இருப்பதால், யாருக்கு என்ன இழப்பு என்று அவள் நினைத்தாள். அந்த முதலாளி அவனை ஒருவித பயத்துடன்தான் வளர்க்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தக் கிளை கூட்டைவிட்டு எங்கே பறந்துவிடப் போகிறதோ என்ற பயம். அதனால் அந்த மனிதர் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். ஒரு குழந்தையை விலைக்கு வாங்கக் கூடிய ஒரு மனிதரின் பயம் அப்படித்தான் இருக்கும்.