மூடு பனி - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
4
கயிற்றுக் கட்டிலில் போர்வைக்குக் கீழே படுத்திருந்தபோது, தன்னைத் தானே அவள் தேற்றிக் கொண்டாள். மேலும் ஒரு நாள் முடிகிறது.
எப்போதும் இருப்பதையும் விட அதிக களைப்பு தோன்றியது. கண்களை மூடிய போது எப்போதையும் விட முன்னால் இன்று தூக்கம் வந்து அணைத்துக் கொள்ளும் என்று தோன்றியது. உறக்கம் அல்ல - முடிவு இல்லாத ஆழத்தில் விழுகிறோம் என்ற உணர்வு....
உடல் மட்டுமல்ல, கயிற்றுக் கட்டிலும் அறையும் முழுக் கட்டிடமும் மலைச்சிகரத்தின் உச்சியிலிருந்து கீழ் நோக்கி, ஒரு பஞ்சுத் துண்டைப் போல மிதந்து செல்கிறது...
அதிர்ச்சியில் உறைந்து போய் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு அவள் படுத்திருந்தாள். கண்களை மூடும் போது ஆழத்திற்கு... ஆழத்திற்கு....
மனம் சலனமடைந்த ஒரு மரக்கிளையைப் போன்றது. இல்லாவிட்டால், ரஷ்மியைப் பற்றி இப்போது நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.
ஹல்தானியிலிருக்கும் சுற்றுலா பயணிகள் பங்களாவின் மூன்று அறைகளில் ஒன்றிற்குள் இருண்ட பல மைல் தூரங்களைக் கடந்து அவள் தன் கண்களைச் சுருக்கி வைத்துக் கொண்டு பார்த்தாள்.
வேறு பல விஷயங்களைப் பற்றியும் கூட அவள் நினைக்க வேண்டியதிருக்கிறது.
ஏரிக்கரையில் எங்கோயிருந்து முரசொலியும், குழலோசையும், ஆரவார ஒலிகளும் மூடப்பட்ட ஜன்னல்களைத் தாண்டி காதுகளில் வந்து விழுந்தன.
பஹாடிகளின் ஒரு திருமணக் கொண்டாட்ட ஊர்வலமாக இருக்க வேண்டும். பெட்ரோமாக்ஸ் விளக்குகள்...
தலைப்பாகையும், பட்டுச்சட்டையும் அணிந்து இடுப்பில் வாளைச் சொருகிக் கொண்டு குதிரை மீது அமர்ந்திருக்கும் மணமகனும் அவனுடைய நண்பனும்... பல நேரங்களில் பார்த்த அந்தக் காட்சி மனதில் தெளிவாக வலம் வந்தது.
மலைச் சரிவில் எங்கோ பைன் மரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு நதியில் மணப்பெண் வாத்திய ஒலிகள் தன்னை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காதைத் தீட்டி வைத்துக் கொண்டு எதிர்பார்த்தவாறு காத்திருப்பாள். அவளுடைய நிமிடங்கள், ஆலிப் பழங்களைப் போல உதிர்ந்து கொண்டிருக்கும்.
பேருந்து நிலையத்திலோ, படித்துறை வாசலிலோ பழைய ஒரு தோலாலான பையை மார்புக்குப் பக்கத்தில் மிகவும் கவனமாக வைத்துக் கொண்டு படகோட்டி புத்து படுத்து இப்போது உறங்கிக் கொண்டிருப்பான். ஒரு நாள் அவனுடைய ‘கோரா ஸாஹிப்’ வராமல் இருக்க மாட்டான்.
ஒருநாள் வராமல் இருக்கமாட்டான்.
- நானும் நீங்களும் எல்லோரும் பல யுகங்களாக எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
காலமென்னும் பாறையின் மீது பனி விழுகிறது, உருகுகிறது. திரும்பவும் பனிப்படலம் குளிச்சியாகி உறைந்து கட்டியாக மாறுகிறது.
நாம் எல்லோரும் காத்திருக்கிறோம்.
மஞ்சள் நிற பற்களும் முகத்தில் தழும்புகளும் உள்ள புத்துவிடம் அவளுக்கு ஒருவித பாசம் உண்டானது. அவனுடைய கதையைக் கேட்டவர்கள் எல்லோரும் அவனைக் கேலிதான் செய்திருப்பார்கள்.
அவளால் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. அதற்குக் காரணம் - ஒன்பது வருடங்களுக்கு முன் அவள் இழந்த ஒரு கனவு திரும்பவும் தனக்கு முன்னால் உயிருடன் வந்து நிற்குமென்று, ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் அவள் நினைப்பதுதான்.
மலை அடிவாரம் எங்கிருந்தோ வரும் பயணிகளுக்காகத் தன்னை அழகுப்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கும்போது உள்ளே அடக்கி மறைத்து வைக்கப்பட்ட ஒரு மூலையிலிருந்து முனகல் சத்தம் கேட்கிறது.
‘‘நான் யாரையும் எதிர்பார்த்திருக்கவில்லை’’ - அவள் தனக்குத்தானே கூறிக் கொள்ள முயன்றாள்.
யார் யாரை ஏமாற்றுகிறார்கள்?
ஆப்பிள் தோட்டங்களில் மலர்கள் மலரும்போது, மலைச்சரிவுகளில் பனி உருகும்போது, காய்ந்து கொண்டிருக்கம் வெயிலில் தூரத்திலிருக்கும் மலைச் சிகரங்கள் தெரியும்போது அவள் நினைக்கிறாள் - இதோ... குமயூண் மலைகளில் இன்னொரு வசந்தம்!
சுற்றிலும் இயற்கையின் முகம்மாறிக் கொண்டிருப்பதை அவள் கவனிக்காமல் இருக்கிறாள். ஒரு இரவு நேரத்தில் வெளியே எங்கோ ஒரு ஆரவாரம் கேட்டது.
காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்டபோது சந்தோஷத்தின் ஆர்ப்பரிப்பு அது என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
‘‘ஹோலி கங்கா சாகர்மே
பார் கங்கா சாகர்மே
ஹோலி ஹே....’’
இதோ இன்னொரு ஹோலி வந்து சேர்ந்திருக்கிறது.
‘‘பீபிஜி, நாளை மறுநாள்தான் ஹோலி.’’
பக்ஷுஷைப் பற்றி அமர்சிங் முன்கூட்டியே ஞாபகப்படுத்தினான்.
இப்போது பயணிகளின் ஒட்டு மொத்த காலோசைகளைக் கேட்பதற்காக இரவுகள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு காத்திருக்கின்றன.
ஏரியின் நீரைப் போலவே காலம் சலனமற்று நின்று கொண்டிருக்கிறது.
பல வருடங்களுக்குப் பிறகு வருபவர்கள் ஒவ்வொருவரும் கூறுவார்கள் - இங்கு முன்பு பார்த்ததைப் போல்தான் எல்லாமும் என்று.
ஒன்பது வருடங்களுக்கு இடையில் என்னவெல்லாம் மாறியிருக்கின்றன? வாழ்க்கையிலிருந்து ஓடி திரும்பவும் வருபவர்களே, உங்களால் அதைப் பார்க்க இயலவில்லை. காரணம் - இருண்ட முடிச் சுருள்களுக்கு நடுவில் நரையின் அடையாளங்கள் மறைந்து கிடக்கின்றன. விளக்கு மரங்களின் பச்சை சாயத்திற்கு உள்ளே விழுந்திருக்கும் பள்ளங்களும், ஓட்டைகளும் மறைந்து கிடக்கின்றன.
பூமியின் கிரீடத்தை மிதித்த வெற்றிப் பெருமிதத்துடன் நானும் நீங்களும் உட்கார்ந்திருந்த பாறையின் பெயர் கூட மாறிவிட்டது.
இருட்டின் ஆழத்தில் விழுந்து விழுந்து வந்து சேரும்போது, கடவுளே.... இங்கு வெண் மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன.
கருங்கற்கள் போடப்பட்ட பாதை வழியாக நடந்து கொண்டிருக்கும் குதிரைகளின் குளம்போசை...
கருத்த குதிரைக்காரன்.... அழுக்கடைந்த உரோம கோட்டின் பாக்கெட் கனமாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. தலையில் வட்ட தொப்பி... கழுத்தில் சுற்றப்பட்டிருக்கும் மஃப்ளர்... வெள்ளை, தவிட்டு நிறங்களில் இருக்கும் குதிரைகள்.
‘‘எனக்கு இந்த வெள்ளைக் குதிரை போதும்.’’
‘‘யுவர் சாய்ஸ்.’’
‘‘யெஸ்... இவனோட பேர் என்ன?’’
‘‘இவன் இல்லை. இவள். உயிரியல் படித்தும் அது தெரியல...’’
முகம் வெட்கத்தால் குனிந்து கொண்டது.
ஸைஸ் சொன்னான். ‘‘மோத்தி.’’
தாழ்ந்த குரலில்: ‘‘இந்த ஊர்ல குதிரைகளுக்கு ஒரே ஒரு பெயர்தான்... மோத்தி...’’
மலைக்கு மேலே குதிரைகளைக் கட்டிப் போட்டுவிட்டுத் திரும்பவும் நடந்தபோது சிறிய ஒரு கோவில் கண்ணில் பட்டது. கழுத்தில் கேமராவைத் தொங்கவிட்டுக் கொண்டு கோவில் வாசலில் பல பயணிகள் இருந்தார்கள். இரும்புக் கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருந்த மணிகள் கிணுகிணுத்தன. பலரும் பிரார்த்தனை செய்தார்கள்.
‘‘நாம இந்த வழியில ஏறிப் பார்ப்போம்.’’
பிரகாசமான காலைப்பொழுது . காற்றில் நறுமணம் தங்கி நின்றிருந்தது.
‘‘இந்த வழி வந்ததுண்டா?’’
‘‘இல்ல...’’
‘‘பேர் தெரியுமா?’’
காலடிகளைப் பார்த்து சிரித்து விட்டாள். தெரியும். ஆனால் வெளியே சொல்லவில்லை.
‘‘நல்ல பெயர்... லவர்ஸ் ட்ராக்.’’
வெட்டவெளியின் மார்பில் குத்தி நிற்கும் ஒடிந்த அஸ்திரத்தைப் போல பாறை இருந்தது.