மூடு பனி
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
சுராவின் முன்னுரை
1964-ஆம் ஆண்டில் எம்.டி. வாசுதேவன் நாயர் (M.T.Vasudevan Nair) எழுதிய ‘மஞ்ஞு’ (Manju) என்ற புதினத்தை ‘மூடுபனி’ (Moodupani) என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறேன். முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைதியான உலகத்திற்கு நம்மை இந்த நாவல் மூலம் அழைத்துக் கொண்டு போகிறார் வாசுதேவன் நாயர். மனித வாழ்க்கையில் நாம் ஒவ்வொருவரும் எதையோ ஒன்றை நித்தமும் தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். அந்தத் தேடல் ஒன்றாக இருக்கலாம். பலவாக இருக்கலாம். எனினும், தேடல் தேடல்தானே !
அந்தத் தேடலில் சிலர் தேடியதைக் கண்டுபிடிக்கிறார்கள். பலர் வாழ்க்கையின் முடிவு வரை தேடி, கடைசி வரை தேடியது கிடைக்காமலே வாழ்க்கையை முடிக்கிறார்கள். இப்புதினத்தில் வரும் விமலா டீச்சர், புத்து இருவரும் தத்தம் வழிகளில் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் கண்களில் மின்ன தேடுகிறார்கள்… தேடுகிறார்கள்… தேடிக்கொண்டே இருக்கிறார்கள். அந்தத் தேடலுக்குப் பலன் கிடைத்ததா ? அவர்களின் அமைதியற்ற மனதிற்கு ஆறுதல் கிடைத்ததா ?
இப்புதினத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் உயிர்ப்புடன் எழுதியிருக்கிறார் எம்.டி. வாசுதேவன் நாயர். நாமும் விமலா டீச்சர்தான், புத்துதான் என்று இதைப் படிக்கும் ஒவ்வொருவரும் உணர்வார்கள். அப்படியென்றால் எம்.டி. வாசுதேவன் நாயர் தன் எழுத்தில் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் அர்த்தம்!
இந்த புதினம் 'மஞ்ஞு' (Manju) என்ற பெயரில் 1982 - ஆம் ஆண்டில் திரைப்படமாக மலையாளத்தில் உருவாக, அதை எம்.டி.வாசுதேவன் நாயரே இயக்கினார். விமலா டீச்சராக ஸ்மிதா பாட்டீல் (Smita Patil) நடிக்க, புத்துவாக நஸிருத்தீன் ஷா (Naseeruddin Shah) நடித்தார்.
‘மூடுபனி’ கதை அல்ல… இது வாழ்க்கை. நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் கண்ணாடியைப் போல் இதில் நாம் பார்க்கலாம்.
சந்தோஷப் பெருமிதத்துடன் உங்கள் முன் இந்தப் படைப்பைச் சமர்ப்பிக்கிறேன்.
இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com) நிறுவனத்திற்கு நன்றி.
அன்புடன்,
சுரா (Sura)