மூடு பனி - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
‘‘ஆட்கள். பாறைக்கு ஏன் பெயர் வைக்கல?’’
காதலின் நடைபாதை முடிவடையும் இடத்தில் - ‘‘எதன் பாறை என்று சொல்வது?’’
பாறையில் ஆங்காங்கே சில பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன.
1953 சிவா - கிஷோர்
பி எஸ்.
‘‘நேற்று ஹோட்டலில் அறிமுகமான இரண்டு இளம் தலைமுறையினர் இந்த இடத்தைப் பற்றி சொன்னாங்க.’’
பாறையின் கூர்மையான நெற்றியில் நின்று பார்த்தால் பயம் தோன்றும். இதயத்தின் சங்கீதத்தைக் கேட்பதற்காக வரும் ஜோடிகளுக்குப் பாறையின் சரிவில் உலகம் தனிமையான மார்பகங்களைத் தயார் பண்ணி வைத்திருக்கிறது.
‘‘பழைய பெயர்கள் மறைந்து போகின்றன. புதிய பெயர்கள் அதிகமாகின்றன.’’
குளிர்ந்த காற்றும் இளம் சூடுள்ள வெயிலும்... அவன் தான் பயணம் செய்த நகரத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். பலவற்றைப் பற்றியும் அவன் சொன்னான். ஜிம்கார்பட்.. வைஸ் சான்ஸலர்... ஆட்டோபான்... கிஸ்ஸிங் கேம்...
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த அந்த மனிதனை ஐந்து நாட்களுக்கு முன்புதான் அவள் பார்த்தாள். ஏரியின் கரையில் சிரித்துக் கொண்டே நேரம் என்ன என்று கேட்டது ஐந்து நாட்களுக்கு முன்பா ? பேருந்தில் அருகில் உட்கார வேண்டி வந்தது அன்று காலையிலா ? ஐந்து வருடங்களையும் தாண்டி அப்பால் அல்லவா ?
அடைக்கப்பட்ட ஜன்னலுக்குக் கீழே நகரத்தின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும்போது, போர்வைக்கும் கீழே கனமான கை மீது தலையை வைத்துப் படுத்திருக்கும் போது கூற வேண்டும் போல் இருந்தது.
‘‘நான் தனியாக இல்ல... நான் தனியாக இல்ல...’’
தெரியுமா ? அந்தப் பாறை மேல் பயணிகள் இப்போது ஏறுவதில்லை. ஒரு ஜூன் மாதத்தில் பாறையின் கூர்மையான தலையில் ஏறி நின்று ஒரு இளம்பெண் கீழே குதித்துவிட்டாள். ஜோடிகள் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்து உருளக்கூடிய மலைச் சரிவுகள் இப்போது ஆள் அரவமற்றுக் கிடக்கின்றன. பாதை திரும்பும் இடத்தில் யாரோ ஒரு கல்லில் சுத்தியல் கொண்டு, பதிந்து வைத்திருக்கிறார்கள். ‘திஸ் வே டூ ஈஸி டெத்’. ஒரு மண்டையோடும் கீழே சேர்த்து வைத்த இரண்டு அஸ்தியும்.
சொல்லிச் சொல்லி அந்தப் பாதைக்குப் புதிய ஒரு பெயர் வந்து சேர்ந்தது : ‘‘டெவில்ஸ் ட்ராக்’’.
வானத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் பாறையின் மேலிருந்து அதல பாதாளத்திற்கு...
5
அமர்சிங் இரண்டு கடிதங்கள் கொண்டு வந்தான்.
கடிதங்கள் முன்னால் விழும்போது என்னதான் கட்டுப்படுத்தினாலும் நெஞ்சு வழக்கத்தைவிட வேகமாக அடிக்க ஆரம்பித்து விடுகிறது. ஒன்பது வருடங்கள் கடந்தோடிய பிறகும் நம்பாமல் இருக்க முடியவில்லை. ஒரு முறை கவரைத் திறந்து பேப்பரைப் பிரித்தபோது,
நடனமாடிக் கொண்டிருக்கும் வயலட் நிற எழுத்துக்கள்.
‘என் பிரிய விமலா’
தபால் அலுவலகத்திலிருந்து அமர்சிங் வரும்போதெல்லாம் எதிர்பார்ப்புகள் அடங்கிய ஒரு மாய உலகம் சில நிமிடங்களில் உண்டாக ஆரம்பித்து விடுகிறது. அது வந்து வேகத்திலேயே நீர்க்குமிழியைப் போல உடைந்தும் போகிறது.
அவற்றில் ஒன்று பாபு எழுதிய கார்டு. அவன் எப்போதும் இந்தியில்தான் எழுதுவான். பாபுவிற்கும் அனிதாவிற்கும் மலையாளம் எழுதவும் படிக்கவும் தெரியாது.
இறுதியாக இருந்த இரண்டு மூன்று வரிகளைப் பார்த்தபோது அவளுக்கு விஷயம் புரிந்தது : ‘அதனால் கடிதம் கிடைத்த உடன் அக்கா, நீங்கள் எனக்கு இருபத்தைந்து ரூபாய் அனுப்பி வைக்க வேண்டும்’.
ஐம்பத்து மூன்று மைல்களுக்கப்பால் உருளைக்கிழங்கு தோட்டங்களுக்கு மத்தியில் இருக்கும் தன்னுடைய வீட்டைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் அவளால் இருக்க முடியவில்லை.
இரண்டு மணி நேர தூரத்தைத் தாண்டித் தன்னுடைய குடும்பம் இருக்கிறது. தந்தை, தாய், பாபு, அனிதா எல்லோரும் இருக்கிறார்கள்.
வீட்டிலிருக்கும் போது விமலாவும் அனிதாவும் சாப்பாட்டு அறைக்கு அருகிலிருக்கும் படுக்கையறையில்தான் எப்போதும் தூங்குவார்கள். அதற்கடுத்து இருக்கும் ஸ்டோர் அறையில் போடப்பட்டிருக்கும் கயிற்றுக் கட்டில் பாபுவிற்குச் சொந்தமானது.
ஆனால், இரவு நேரங்களில் கட்டில் எப்போதும் காலியாகத்தான் இருக்கும். வீடு இருளில் மூழ்கியவுடன், வெளியே இருக்கும் கதவைத் திறந்து அவன் வெளியேறி விடுவான். டாக் பங்களாவிற்கு அருகிலிருக்கும் கடைக்கு மேலே கஞ்சா புகை மண்டியிருக்கும் அறையில் அமர்ந்து, அவன் பணம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பான். அது அவளுடைய அன்னைக்கு நன்றாகவே தெரியும். நீர் எடுப்பதற்காகச் சாப்பிடும் அறைக்கு வந்து ஸ்விட்சைப் போடும்போது ஸ்டோர் அறையில் வெளிச்சம் விழும். காலியாகக் கிடக்கும் கட்டிலைத் தான் பார்க்காதது மாதிரி காட்டிக் கொண்டு அவள் திரும்பச் சென்று விடுவாள்.
‘‘பாபு தூங்கிட்டானா ?’’
‘‘ம்...’’
‘‘இவ்வளவு சீக்கிரமாகவா -?’’
‘‘ம்...’’
தன் தாயிடம் அப்படித்தான் கூறமுடியும். காரணம் -அவளின் தாய் தன் மகனின் கண்களை உற்றுப் பார்க்கும்போது அவன் சிறிதுகூட பயம் இருப்பது மாதிரி வெளியே காட்டிக் கொள்ள மாட்டான்.
பாபுவின் கண்களில் எப்போதும் ஒரு பய உணர்வு இருந்தபடி இருக்கும்.
ஒரு நாள்...
கல்லூரி அடைக்கப்பட்டிருந்த காலம். அவளுடைய தந்தை குளியலறையில் இருந்தார்.
‘‘எனக்கு ஐம்பது ரூபாய் வேணும்.’’
‘‘என் கையில பணம் இல்ல.’’
‘‘தயார் பண்ணணும். ரொம்பவும் முக்கியமா தேவைப்படுது.’’
‘‘அப்பாக்கிட்ட கேளு. நானா இங்கே பணம் கொண்டு வர்றேன் ?’’
‘‘பணம் தரலைன்ன...--?’’
அவன் ஒரு நிமிடம் நிறுத்தினான்.
அவனின் தாயின் அமைதி அழுகையாக மாறியது.
‘‘ஒரு கடிதம் கொடுத்தால் போதும். நான் மிஸ்டர் கோமஸ்கிட்ட போய் வாங்கிக்குவேன்.’’
‘‘பாபு...’’
தாயும் மகனும் ஒருவரோடொருவர் வார்த்தைகளில் மோதிக் கொண்டு நின்றிருந்த போது, தன்னுடைய நெஞ்சு அடித்துக் கொள்வதை மட்டுமே அவள் கேட்டாள்.
அவள் முன்னறையிலிருந்த இருக்கையில் தளர்ந்து போய் உட்கார்ந்து விட்டாள்.
அவளுடைய தாய் உள்ளே போனாள். பெட்டிகள் திறக்கப்படுவதும், மூடப்படுவதும் கேட்டது. சில நிமிடங்களில் அவளுடைய தம்பி வெற்றிப் பெருமிதத்துடன் வெளியேறிச் செல்வதை அவள் பார்த்தாள்.
அவளுடைய தந்தை பெரிய படுக்கையறைக்கு அருகில் போடப்பட்டிருந்த பெரிய இரட்டைக் கட்டிலில் கண்களை மூடிப் படுத்திருப்பார்.
தூங்காத நேரத்திலும் கண்களை மூடித்தான் அவர் படுத்திருப்பார். கண் இமைகள் ஆட்களின் காலடி ஓசையைக் கேட்டுத் துடிக்கும் மிகவும் சிரமப்பட்டு அவர் தன் கண்களை அப்போது திறப்பார்.
அவளுடைய தந்தை பேசும் போதுதான் வேதனையாக இருக்கும். மெதுவாக வரும் தெளிவற்ற சப்தங்கள்...
போன வாரம் அவளுடைய தாய் எழுதியிருந்தாள் : ‘இப்போது சிறிதுகூட பேச முடியவில்லை. கண் இமைகள் மட்டும்தான் சிறிது அசைகின்றன.