மூடு பனி - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
இரண்டு வருடங்களாக இதே படுத்த படுக்கை நிலைமைதான். கட்டிலுக்கு அருகில் போய் நிற்கும் நிமிடங்களில் மனதில் தோன்றுவதுண்டு மரணம் தன் தந்தைக்கு ஒரு கொடுப்பினைதான் என்று. காரணம் - அவள் மனதில் போற்றி வைத்திருந்த தந்தை பல வருடங்களுக்கு முன்பே இறந்து போய்விட்டார். க்ரீம் நிறத்தில் சூட்டும் தலையில் பெல்ட் தொப்பியும் அணிந்து பிரம்பைக் கையில் வைத்துக் கொண்டு அதை வீசியவாறு நடந்து வரும் தன்னுடைய தந்தையின் மெலிந்து நீண்ட உருவத்தைத்தான் அவள் மனதில் எப்போதும் வைத்திருக்கிறாள். அவளுடைய தந்தை அந்தக் குடும்பத்தின் தலைவர் மட்டுமல்ல- சக்கரவர்த்திகூட அவர்தான். சாப்பிடும் அறையில் அவளுடைய தந்தைக்கு சிம்மாசனத்தைப் போல சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு பெரிய நாற்காலி போடப்பட்டிருக்கும். அதை வேறு யாரும் தொடக்கூடாது. அதன் வழியாகக் கடந்து போகும்போது, ஒருவித பயத்துடன் அவள் அந்த நாற்காலியைப் பார்ப்பாள்.
அவளுடைய தந்தை வீட்டிற்கு வந்து விட்டால், அதற்குப் பிறகு எந்தச் சத்தமும் இருக்கக்கூடாது. எரிந்து கொண்டிருக்கும் பைப்பின் வாசனை வீடு முழுக்க நிறைந்திருக்கும். எல்லோரும் தாழ்ந்த குரலில்தான் பேசிக்கொள்வார்கள்.
மதிய நேரம் சாப்பிட்டு முடித்து படுத்தால் அவளுடைய தாய்க்கு கண்களை மூட பயமாக இருக்கும்.
மணி எவ்வளவு ஆகிவிட்டது? மூன்று மணிக்கு வேலை செய்ய ஆரம்பித்தால்தான் நாலரைக்கு அவளுடைய தந்தை திரும்பி வரும்போது, காப்பியும் பலகாரங்களும் தயார் நிலையில் இருக்கும். ஆடைகளை மாற்றாமல் நேராக அவர் வந்து உட்காருவது சாப்பாட்டு அறையில்தான். மேஜை மீது எல்லாம் நிறைந்து இருக்கவில்லையென்றால், ஒரு பெரிய சூறாவளியே அங்கு வீச ஆரம்பித்துவிடும்.
தன் தந்தையுடன் உணவு சாப்பிட்ட உட்காருவதென்பது அவள் பயப்படக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.
‘‘விமலா எங்கே? பாபு எங்கே?’’
‘‘அவங்களுக்கு இன்னும் தயாராகல. அவங்க பின்னாடி சாப்பிடுவாங்க.’’
‘‘விமலா... பாபு... கம் அண்ட் ஜாய்ன் மீ...’’
டம்ளர்கள் ததும்பி விட்டால், ஏப்பம் விட்டால், தும்மினால், அவளுடைய தந்தையின் முகம் கோபத்தால் சிவந்துவிடும். அவர் திட்டமிட்டார். திட்டுவதைவிட பயம் அந்தப் பார்வைக்குத்தான்.
அனிதா ஒருநாள் சொன்னாள்:
‘‘நாம ஊருக்குப் போகணும், அப்பா.’’
‘‘ஊர்ல உன் தாத்தா இருக்காரா?’’
அதைக் கேட்டு அனிதாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது. சொந்த ஊரைப்பற்றி அவளுடைய தந்தை பாசத்துடன் பேசி யாரும் கேட்டதில்லை.
அவளுடைய தந்தையைப் பார்த்து எப்போதும் எல்லோரும் பயந்தார்கள்.
தன் தந்தைக்கு கடிதம் எழுதும்போதுகூட அவள் பயந்தாள். ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுத வேண்டும் என்று கட்டாயமாக அவர் கூறியிருந்தார். அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் தவறாக இருக்கும் பகுதிகள் அடிக்கோடு இடப்பட்டு திரும்பி வரும்.
அத்துடன் ஒரு குற்றச்சாட்டும்.
‘கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைச் செலவழித்து நீ படிக்கிறாய் என்ற ஞாபகம் இருக்க வேண்டும்.’
இதெல்லாம் முன்பு இருந்த விஷயங்கள். இப்போது யாரும் அவளுடைய தந்தையைப் பார்த்துப் பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. அவரால் எழுந்திருக்க முடியாது. கண்களில் மட்டும் பழைய நெருப்பு ஜுவாலைகள் மீதி இருக்கின்றன.
நான்கு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் அவள் தன் வீட்டிற்குச் சென்றாள். ஒரு இரவு வீட்டில் தங்கியபோது அவளுக்கே வெறுப்பாக இருந்தது. காலை பேருந்திலேயே அங்கிருந்து கிளம்பி விட்டாள்.
சாயங்காலம் வீட்டில் அவளுடைய தந்தையும் அவளும் மட்டும் தனியாக இருந்தார்கள். கட்டிலுக்கு அருகில் நின்றிருந்தபோது குழைந்த நாக்கு என்னவோ சொல்ல சிரமப்படுவதை அவள் பார்த்தாள்.
‘‘அப்பா... பேச வேண்டாம்... களைச்சுப் போவீங்க.’’
அப்போது முதல் தடவையாக அந்தக் கண்களில் கையற்ற நிலை இருப்பதை அவள் உணர்ந்தாள். ஊரில் யாருக்கும் தேவைப்படாத ஒரு இளைஞன் பெரிய ஒரு வீட்டைச் சேர்ந்து இளம் பெண்ணைத் திருமணம் செய்தான். அது ஒரு வீரபராக்கிரமத்தின் கதையாக இருந்தது. இளம் வயதில் பலமுறை அந்தக் கதைகளை அவள் கேட்டிருக்கிறாள். தோட்டத்தில் கணக்கு எழுதும் வேலை பார்த்தார். தபால் மாஸ்டராக ஆனார். அவளுடைய தாயின் கழுத்தில் இருந்த தாலியை விற்று எங்கோ போனார். பிறகு கேள்விப்பட்ட செய்தி என்னவென்றால் சென்னையில் அவர் படித்துக் கொண்டிருக்கிறாராம். திருமணம் முடிந்து மூத்த அக்காவுடன் சண்டை உண்டானபோது, தனக்கு பங்கு எதுவும் தேவையில்லை என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய அந்த தைரியச் செயலை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.
பலவற்றையும் வாழ்க்கையில் பார்த்த அந்த மனிதர்தான் தெருச்சுற்றிச் சிறுவர்கள் சுழற்றி எறிந்து விட்டுப் போன தவளையைப் போல செயலற்ற நிலையில் இப்படிப் படுத்துக்கிடக்கிறார்.
நீண்ட நேரம் அந்த அறைக்குள் அவளால் நிற்க முடியவில்லை. வெளியே வாசலைக் கடந்து சென்று ஒரு மூலையில் போய் நின்றாள்.
அவளுடைய தாய் வழக்கம்போல திருமதி பட்நாகரின் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே போயிருந்தாள்.மினுமினுத்துக் கொண்டிருக்கும் புடவை, உதட்டில் சாயம் பூசி வரவழைத்த அசிங்கமான சிவப்பு, லோமா தேய்த்து கருப்பு தவிட்டு நிறங்களில் இருந்த தலைமுடி ஒப்பனை சகிதமாக வெளியே நடந்து செல்வதைப்பார்க்கும் போது வெறுப்புதான் தோன்றியது.
வெளியே வாசலுக்கு அருகில் அவளுடைய தங்கை நின்றிருக்கிறாள். மாலை நேரங்களில் அவளும்கூட தேவைக்கும் அதிகமாக தன்னை அழகு படுத்திக்கொள்கிறாள். அதற்குத் தேவை இருக்கலாம். டாக்டரின் மகன் ப்ரதீப் சந்திர சர்மா தோல் மேலாடை அணிந்து அந்த வழியில் எங்காவது நின்றிருக்கலாம்.
அவளுடைய தந்தையை க்ளப்பின் குளியலறையிலிருந்து ஆட்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டு வந்த நாளுக்கு முன்பு -
யாரும் வாசலில்கூட வந்து நிற்க முடியாது.
இப்போது அவளுடைய தம்பி பாபு, பஹாடிகளுடன் சேர்ந்து பங்க் புகைத்து, பணயம் வைத்து சீட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். அவளுடைய தங்கை, வேலையாள் பீர் பகதூர் மூலம் காதல் கடிதங்கள் கொடுத்தனுப்புகிறாள். அவளுடைய தாய்க்கு அவற்றையெல்லாம் பார்க்க நேரமில்லை. வயதானதால் உண்டான சுருக்கங்களில் க்ரீமும் பவுடரும் தடவி தலைமுடியைக் கறுப்பாக்கி வருடங்களைத் தடுத்து நிறத்த அவள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறாள்.
அவளுடைய தந்தைக்கு இந்த விஷயங்களெல்லாம் தெரியுமா? தெரிந்திருக்க வேண்டும். ஒளி குறையாத கண்கள் குழைந்து போன நாக்கின் இடத்தைப் பிடித்திருக்கிறது.
அன்று தன் தந்தையின் நோயைப் பற்றி விசாரிப்பதற்காக ஜீப்பில் முக்தேஸ்வரத்திலிருந்து டாக்டர் மேனனும் திருமதி மேனனும் வந்திருந்தார்கள். வீட்டில் அப்போது யாரும் இல்லை.