மூடு பனி - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
ஒற்றைக் கம்பி இணைக்கப்பட்டிருக்கும் முழம் நீளத்தில் இருக்கும் ‘இக்தாரா’வின் இசை பெரிதாக ஒலித்தபோது விமலா அதைக் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டாள்.
அந்த மனிதர்தானா? அப்படியென்றால் தளர்ந்து போன விரல்கள் எவ்வளவு திறமையாக அந்த ஒற்றைக் கம்பியில் சஞ்சரிக்கின்றன.
மெத்தை ஏதோ ஒரு புழுவின் உடலைப் போல குளிர்ந்து போய் துவண்டுக் கிடந்தது.
சர்தார்ஜியின் குரலாகத்தான் இருக்க வேண்டும். நடுங்கிய குரல்.
அவள் காதுகளைத் தீட்டிக்கொண்டு கேட்டாள்.
‘உட்டீ உட்டீ வேதிலீ ஆர் காகா
லம்பீ லயி வே உடாரீ
ஜா ஆகீம் மேரே நாஹி நு
கோரீ மனோம் க்யோம் பிஸாரி’
பழமையான ஏதோ ஒரு பஞ்சாபி கிராமத்துப் பாடல் அது.
அறுவடை செய்து குவிக்கப்பட்ட சோளக் கதிர்களுக்கு நடுவில் கடுமையான வெயிலில் நிலவைப் போல கயிறைச் சுழற்றிக்கொண்டு நடந்து செல்லும் ஒரு பஞ்சாபி இளம் பெண்ணின் வாடிய முகம் மனதில் அப்போது தோன்றியது.
தலை முடியையும் தாடியையும் நீளமாக வைத்துக்கொண்டு வெங்காய வாசனை வரும் பலசாலிகளான பஞ்சாபிகளைப் பார்க்கும்போது அவளுக்கு எப்போதும் மனதில் வெறுப்புதான் வரும். தேவையில்லாமல் அவர்களைப் பார்த்து அவளுக்குப் பயம் தோன்றும். ஆனால், அவர்களின் பாடல்களை அவளுக்கு மிகவும் பிடிக்கும். ஆக்ராவில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் அம்ருதா என்றொரு பஞ்சாபி இளம்பெண் அவளுக்குத் தோழியாக இருந்தாள். அவள் ஏராளமான காதல் பாடல்களை அவளுக்குப் பாடிக் கேட்க வைத்திருக்கிறாள். முரட்டுத்தனமான இளைஞர்களின் கண்களில் மலரும் பகல் கனவுகள்தான் அப்பாடல்கள் என்று அவள் நினைப்பாள்.
சுவருக்கு அப்பாலிருந்து நடுங்குகிற குரலும் இக்தாராவின் அழுகையும் காற்றில் மிதந்து வந்தன.
‘தில்கா டுகடா மை காகஜ் பகாவாம்
உம்கலியா கட்ட கானீ
அக்காம் தா கஜ்ஜலா மைம் சாஹீ பணாவாம்
ஹஸீ ஆம் தா பாணீ ஆ பாணீ’
விமலாவின் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
‘காகமே, பறந்து செல் நீண்ட தூரம். என் காதலனிடம் போய்க் கேள், என்னை ஏன் மறந்தான்?’ அவள் அந்தப் பாடலில் தன்னையே பொருத்திப் பார்த்தாள். முப்பத்தொரு வயதான ஒரு பெண் நாடோடிப் பாடலைக் கேட்கும்போது கலக்கமடையக் கூடாது.
துன்ப நினைவுகளில் மூழ்கிக் கிடக்கும் அந்தக் கிராமத்துப் பெண்ணின் குரலை அவள் கேட்டாள்.
‘தில்கா டுகடா மை காகஜ் பகாவாம்...’
இதயத்தின் ஒரு பகுதியைத் தாளாக்கி, விரலை ஒடித்து பேனாவாக ஆக்கி, கண்ணீரை மையாக ஆக்கி நான் செய்தியை எழுதட்டுமா?’’
சர்தார்ஜியின் விரல்கள் மீட்டுவது தன் உள்ளே எங்கேயோ என்று அவள் நினைத்தாள். கவனத்தைத் திருப்புவதற்காக ஏதாவது படிக்கலாம் என்று அவள் நினைத்தாள். ஸ்டாண்டில் இருந்த புத்தகங்களைப் பல தடவைகள் எடுத்து அவள் அதைப் படித்திருப்பதால், அதன் மேலட்டை கிழிந்துபோயிருந்தது. வயலட் நிற மையால் முதல் பக்கத்தில் நீளமாக கையெழுத்து இடப்பட்டிருந்தது.
சுதீர்குமார் மிஸ்ரா ஜனவரி, 55
அருகில் வயலட் நிற மையால் கோடிட்ட வரிகள் பெரும்பாலான பக்கங்களிலும் இருந்தன. அவனுக்கு மிகவும் விருப்பப்பட்ட நான்கு வரிகள் இருந்தன. பல நேரங்களிலும் அவன் அதைச் சொல்ல, அவள் கேட்டிருக்கிறாள்.
I am dying my own death
And the deaths of those after me
I am living my own life
And the lives of those after me.
ஒற்றைக் கம்பியால் ஆன இசைக் கருவியின் சப்தம் குளிர்ந்த காற்றில் மிதந்து வந்து கொண்டிருந்தது.
‘கோல்டன் நூக்’கிற்கு சீஸனில் வரும் பயணிகள் பலவகைகளிலும் இந்த அறையின் வாழ்க்கையைப் பாதித்திருக்கிறார்கள். போன வருடம் இரவும் பகலும் சிறுவர், சிறுமிகளின் ஆரவாரம்தான். அதற்கு முந்தின வருடம் வந்த புதுமணத் தம்பதிகள் மிகவும் அமைதியாக இருந்தார்கள். முன் தலையில் குங்குமமும் நெற்றியில் நிறைந்து நிற்கும் பெரிய ஒரு பொட்டும் அணிந்திருந்த புது மணப்பெண். ஒரு மாதம் அவர்கள் அங்கு தங்கினார்கள். இரவும் பகலும் அவர்கள் காட்டெஜுக்கு உள்ளேயே இருந்தார்கள். வெளியே நடந்து செல்வதுகூட மிகவும் அபூர்வமாகத்தான். திரைச்சீலைக்கு அப்பால் அவர்களின் நிழல்கள் நெருங்கியும் விலகியும் தெரிந்து கொண்டிருக்கும். பேச்சுச் சத்தம் வெளியே கேட்காது.
ஏரியையும் நந்தாதேவியின் மஞ்சள் நிற கிரீடத்தையும் பார்ப்பதற்காக வந்து சேரும் பயணிகளின் ஆரவாரங்களுக்கு நடுவில் ஒருவரையொருவர் மட்டும் பார்த்துக் கொண்டு முப்பது நாட்கள் இருப்பது!
அது சாத்தியமானதுதான் - மூடப்பட்ட கதவுகளுக்கு உள்ளே மிகவும் இனிமையான ஒரு உலகம் அவர்களுக்குக் கிடைத்திருக்கும்போது!
ஒருமுறை வயதான ஒரு கிழவனும் பதினேழோ பதினெட்டோ வயது இருக்கக் கூடிய ஒரு இளம்பெண்ணும் அங்கு தங்க வந்தார்கள். அவர்கள் தந்தையும் மகளுமாக இருப்பார்கள் என்றுதான் அவள் நினைத்தாள். அமர்சிங்தான் கண்டுபிடித்தான். கிழவனின் புதுப் மணப்பெண்ணாம் அந்த இளம்பெண்.
புஷ்பா சர்க்காரால் புகழின் உச்சிக்க உயர்த்தப்பட்ட அந்த அறையில் காலம் தளம் அமைத்து நின்று கொண்டிருந்தபோது, கோல்டன் நூக்கில் வாழ்க்கையின் பல முகங்களும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.
சர்தார்ஜியின் வீணை அமைதியானது.
அவர் தனியாக வந்திருக்கிறாரா?
வயதான ஆளாக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும் அவர் தனியாகவா வந்திருக்கிறார்?
தனியாக.... தனியாக....
9
இமாலயத்தின் சரிவில் குளிர்ச்சியான இரவுகளில் நீங்கள் உறங்கியிருக்கிறார்களா? அடுத்த இரவின் தனிமை மட்டுமே நினைக்க இருக்கும்போது? நவம்பரிலும் மேயிலும் வாசல் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டிருக்கின்றன. குளிரின் உஷ்ணத்தின் பாதிப்புகள் இல்லாத மரப்பலகைகளால் ஆன சுவர்கள் சுற்றிலும். திறந்த ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் உறக்கம் கலைந்து அதிர்ந்து கண்களைத் திறந்தபோது, பிரபஞ்சத்தின் ஒரு கீற்றில் பங்குபெற முடியவில்லை. வானம் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை. பூமியின் நிழல்களும் நிலவில் வெளிறிப்போய் நிற்கும் மர உச்சிகளும் இல்லை. மூடுபனியின் நிறத்திலிருக்கும் ஜன்னல்கள்.... மங்கலான கண்ணாடித் துண்டுகள்... உங்கள் உலகத்தின் பார்வையை இழந்த கண்கள்....
‘என்னுடையதும் எனக்குப் பின்னால் உள்ளவர்களுடையதுமான
மரணத்தை நான் மரணிக்கிறேன்.
என்னுடையதும் எனக்குப் பின்னால் உள்ளவர்களடையதுமான
வாழ்க்கையை நான் வாழ்கிறேன்....’’
இக்தாராவின் ஓசை எங்கோ தூரத்தில் மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தது.