மூடு பனி - Page 17
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6352
இரும்புக் கம்பியில் தொங்க விடப்பட்டிருந்த நாக்கு இல்லாத மணிக்குக் கீழே அமர்ந்துகொண்டு வயதான பூசாரி ஹுக்கா புகைத்துக் கொண்டிருந்தார். முன்பு அந்த இடத்தைத் தாண்டிச் செல்பவர்கள் கடவுளுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பூசாரி பாறையின் மேலிருந்து குதித்து இறந்த இளம்பெண்ணை தினமும் மனதில் திட்டிக் கொண்டிருப்பார். கோவில் தூங்குகிறது. கடவுள் தூங்குகிறார்.
பின்னாலிருந்து யாரோ சத்தமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததைக் கேட்டு அவள் திரும்பிப் பார்த்தாள்.
சர்தார்ஜி நெஞ்சை அழுத்திப் பிடித்தவாறு நின்று கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டுக்கொண்டிருந்தார். வறண்டு போயிருந்த முகம் குருதி கட்டியதைப் போல் இருந்தது.
‘‘ப...ழை...ய... குதிரைகளின் காலம் போயிடுச்சு.’’ சிரிப்பும் பெருமூச்சும் கலந்த குரலில் அவர் கேட்டார்:
‘‘மேலேயா போறீங்க, டீச்சர்ஜி?’’
‘‘ஆமா...’’
‘‘நானும் வர்றேன். கொஞ்சம் மூச்சு சரியாகட்டும்.’’
நினைவுகள் தூங்கிக் கொண்டிருக்கும் தனிமையான அந்த நடைபாதையில் யாரும் உடனிருப்பது சிறிதும் விருப்பமில்லாத ஒரு விஷயமாக இருந்தது.
எனினும், எதுவும் சொல்லவில்லை.
அவள் நடந்தபோது அவரும் பின்னாலிருந்தார்.
புதர்களுக்கு மத்தியில் பலநூறு வருடங்களாக அங்கு இருக்கும் பழமையான ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டியவாறு அந்த மனிதர் கேட்டார்.
‘‘அந்த மரத்தைப் பார்த்தீங்களா, டீச்சர்ஜி? முன்பு அதற்குக் கீழே எவ்வளவு பூக்கள் விழுந்து கிடக்கும்! அதன் கீழே இருக்குற பொந்தில் வருடத்துக்கு ஒருமுறை கடவுள் கழுத்துல இருக்கும் பாம்பு தரிசனம் கொடுக்கும்னு சொல்லுவாங்க. அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?’’
அவள், ‘‘இல்லை’’ என்று தலையை ஆட்டினாள்.
‘‘கடவுளே தேவையில்லைன்னு ஆயிட்டப்போ பாம்புக்கு எங்கே இடம்? ம்...’’
பாறைக்கு அருகில் செல்லும்வரை அவர் எதுவும் பேசவில்லை. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க முக்கி முனகியவாறு மேல்நோக்கி ஏறிக்கொண்டிருந்த அவருடைய கண்கள் சுற்றிலும் பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கவனித்தாள். மேலே போய்ச் சேர்ந்தபோது அவர் முழுமையாக வியர்வையில் நனைந்திருந்தார்.
‘‘மன்னிக்கணும் டீச்சர்ஜி. நான் கொஞ்சம் உட்காரட்டுமா?’’
அவர் ஒரு இடத்தில் அமர்ந்தார். அவள் அடிவாரத்தைப் பார்த்தாள். சுகமான காற்றில் பின்னால் வட்டமாகச் சுருட்டி வைத்திருந்த தலைமுடி அவிழ்ந்து பறக்க ஆரம்பித்தது.
‘‘உட்காருங்க டீச்சர்ஜி.’’
நெருங்கியோ விலகியோ இல்லாத ஒரு நிலையில் உயரமாக இருந்த ஒரு கல்லில் கால்களைத் தொங்கவிட்டாறு அவள் அமர்ந்தாள். பின்னால் கரும் பாறைகள் வானத்தை நோக்கி உயரமான ஒரு கோபுரத்தைப் போல கம்பீரமாக உயர்ந்து நின்று கொண்டிருந்தன.
‘‘அப்பாவுக்கு என்ன வயசாயிடுச்சு, டீச்சர்ஜி?’’
‘‘ஐம்பத்தெட்டு.’’
அவர் மெதுவான குரலில் முணுமுணுத்தார்.
‘‘ம்... ஆறுதல் சொல்லல... யார் யாருக்கு ஆறுதல் சொல்லுறது?’’
அடிவாரத்திலிருந்த மரக் குடிசைகளில் இருண்ட நீல நிறத்திலிருந்து தன் கண்களை அகற்றிய அவள் அந்த மனிதரைப் பார்த்தாள். நரையேறிப் போயிருந்த அடர்த்தியான தாடியைத் தடவியவாறு புன்னகைத்துக் கொண்டிருந்த அவருடைய கண்கள் தன்னுடைய மனதின் உள்ளறைகளுக்குள் பயணம் செய்து கொண்டிருக்கின்றன என்பதை அவள் புரிந்து கொண்டாள்.
‘‘மரணம் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு கோமாளி... இல்லையா டீச்சர்ஜி?’’
அவள் வேதனையுடன் புன்னகைத்தாள்.
‘‘நான் அதைப் பற்றியெல்லாம் சிந்திச்சது இல்ல...’’
‘‘உண்மைதான். வேணும்னா எழுதி வச்சுக்கங்க. படிக்காத சிந்தனையாளனின் இந்த வார்த்தைகளை தேவைப்படுகிறப்போ நினைச்சுப் பாருங்க.’’
அதைச் சொல்லிவிட்டு அவர் தன்னைத் தானே ரசித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.
எழுந்து உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்த பாறைக்கு முன்னால் நடந்தவாறு அவர் யாரிடம் என்றில்லாமல் சொன்னார்:
‘‘பெயர்கள் பலவும் மறைந்துபோய் விட்டன.’’ கருங்கல்லில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களைத் தடவிக் கொண்டே அவர் முணுமுணுத்தார்: ‘‘முன்பு பெயரைப் பொறித்து வைக்காமல் இருந்தது எவ்வளவு நல்லதா போச்சு!’’
அவளுக்கு அதைக் கேட்டு ஒருவித ஆர்வம் உண்டானது. ‘என்ன?’ அவள் தன் கண்களை உயர்த்தினாள்.
‘‘இப்போ அதைப் பார்த்து பெருமூச்சு விடாத இருக்கு முடியுதுல்ல? டீச்சர்ஜி, உங்களுக்குப் பிரச்சினை இல்லைன்னா சொல்லுங்க. எங்கே உங்களின் முதல் வருகையைப் பற்றிய நினைவுச் சின்னம்?’’
அவன் அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. தரையையே பார்த்தவாறு அவள் உட்கார்ந்திருந்தாள்.
அவர் விஷயத்தை மாற்றுவதைப் போல பேசினார்: ‘‘தற்கொலைக்குப் பொருத்தமான இடங்களை ஏன்தான் மனிதர்கள் காதல் புரிவதற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கிறார்களோ? வாழ்க்கையின் மலர்ச்சி இருக்கும் இடத்துலயே அதன் முடிவும் இருக்கட்டும்னு அவங்க நினைக்கலாம். மதரிஹட்டுக்குப் போயிருக்கீங்களா? அஸ்ஸாம் போயிருக்கீங்களா? அங்கேயிருந்து ரெண்டு மைல்கள் பயணம் செய்தால் அங்கே இதே மாதிரி ஒரு பாறை இருக்கு. எவ்வளவு ஜோடிகள் அதுலு எழுத்துகளையும் அம்பு பாயும் இதயங்களையும் பதிச்சு வச்சிருக்காங்க தெரியுமா?’’
அவள் அவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிற மாதிரி தலையை ஆட்டினாள். பேசுவதில் அவருக்கு ஒரு பெரிய விருப்பம் இருப்பது தெரிந்தது.
‘‘அதற்கு அடுத்து ஒரு பெரிய காட்டு பங்களா இருக்கு. அங்கே படுத்தால் இரவு நேரங்கள்ல காட்டின் சங்கீதத்தைக் கேட்கலாம். ஆமா... காட்டுக்குன்னு ஒரு சங்கீதம் இருக்கு. மழைக்கும் காற்றுக்கும்கூட மொழியும் சங்கீதமும் இருக்கத்தான் செய்யுது...’’
அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு தன் நெஞ்சில் இடது கையின் மெலிந்து போன விரல்களை வைத்து அழுத்தியவாறு குரலைச் சற்று தாழ்த்தி வைத்துக் கொண்டு சொன்னார். ‘‘இன்னொரு தடவை அங்கே போகணும்போல இருக்கு. கடவுள் அதற்குச் சம்மதிப்பாரான்னு தெரியலையே?’’
‘‘நல்ல விஷயம்...’’
‘‘பயணம் செய்த இடங்களுக்கெல்லாம் திரும்பவும் நடந்து போறேன். தலைமை அலுவலகத்தில் வருடக்கணக்கு ஸ்டாக் எடுக்குற சாக்குல...’’
அவர் சிரிக்கும்போது வருடங்கள் அவரிடமிருந்து உதிர்ந்து விழுவதைப் போல இருந்தது. ஒரு சிறு குழந்தையின் சந்தோஷத்துடன் அவர் இருந்தார்.
‘‘டீச்சர்ஜி, எவ்வளவு வருடங்களாக நீங்க இங்கே இருக்கீங்க?’’
‘‘ஒன்பது வருடங்களாக.’’
‘‘ம்... முதல் முறையா இந்தப் பாறையில வந்து உட்கார்ந்தப்போ, தனியா வரல... அப்படித்தானே?’’
அவள் அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை.
‘‘நானும் தனியா வரல. ஆனால், அது ரொம்ப ரொம்ப வருடங்களுக்கு முன்னாடி...’’
அவர் தலை குனிந்து கண்களை மூடி உட்கார்ந்திருந்தார்.
‘‘அப்போ எனக்கு இருபத்து மூணு வயது. ஒரு ஆணின் வாழ்க்கையில் மிகவும் அருமையான காலம் எதுன்னு தெரியுமா? நல்லா தெரிஞ்சு வச்சுக்குங்க... இருபத்து மூணு...’’
அவரிடம் அதற்கு ஒரு நீண்ட விளக்கமும் கைவசம் இருந்தது. இருபத்தைந்து ஒரு திருப்பத்தை உணடாக்கும் வயது. பக்குவமடைந்த ஒரு இளைஞனாக நாம் ஆகிவிட்டோம் என்று அப்போது தோன்றும்.