![மூடு பனி Moodupani](/images/moodupani-novel.jpg)
‘‘ஆமா... காலையில.... ஆமா அக்கா... ஐந்தரை மணிக்கு...’’
தபால் அலுவலகத்தில் வெளியே கற்துண்டுகள் நிறைய இருக்கும் வெளியிடத்தில் ஒரு நிமிடம் அவள் நின்றாள். இளம் வெயில்... பயணிகளின் மகிழ்ச்சியான காலை வேளை சுற்றிலும்... பின்னால் பேருந்து நிலையம் இரைந்து கொண்டிருந்தது.
உறங்கிக் கொண்டிருந்த அந்த இடம் எவ்வளவு வேகமாக எழுச்சியுடன் எழுந்திருக்கிறது! பயணிகளின் கூட்டங்கள்... பெட்டிகள், ஹோல்டால்ள் ஆகியவற்றைச் சுற்றி கழுகளைப் போல கூடியிருக்கும் போட்டி கூலியாட்கள்.... சைக்கிள் ரிக்ஷாக்காரர்களும் ஹோட்டல் ஏஜெண்ட்களும், சேர்ந்து உண்டாக்கும் ஆரவார ஒலிகள்...
‘‘ஆமா... காலை ஐந்தரை மணிக்கு...’’
‘‘எனக்கு எதுவும் ஆகல...’’- அவள் தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
வண்ணங்களின், சப்தங்களின் அலைகள் பயணித்துக் கொண்டிருந்தன. அறிமுகமில்லாத ஆயிரக்கணக்கான முகங்கள்... அந்தக் கூட்டத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன்னால் பார்த்த ஒரு இளம் பெண்ணைத் தேடுகிற கண்கள் இருக்கின்றனவா? மை எழுதியதைப் போன்ற கண்கள்? நெற்றியில் சிதறி விழுந்து கிடக்கும் முடிக்குக் கீழே நீல நிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்கள்?
புத்து எங்கே? வழுக்கைத் தலை விழுந்த அந்த அரைக்கால் சட்டை அணிந்த மனிதன் வெள்ளைக்காரனா? அவனுடைய புகைப்படம் எங்கே, புத்து? படகுத் துறையில் மனிதர்களைப் பிடிப்பதற்காகப் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் படகோட்டிகள் கூட்டத்திற்குள் இருந்துகொண்டு ‘கோரா ஸாஹிப்’பின் படத்தைப் பத்திரமாக கையில் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞனின் கண்கள் அந்த ஆரவாரங்களுக்கு மத்தியிலிருந்து உற்று பார்க்கின்றனவா?
விமலா நடந்தாள்.
கடவுளே, எனக்கு என்னவோ பிரச்சினை இருக்கிறது. சிறிதுகூட என்னால் அழமுடியவில்லையே!
தன்னுடைய காலடி வைப்புகளில் தடுமாற்றம் இல்லை என்பதை அவள் நினைத்துக் கொண்டாள். கவலையின் நீர்த் தடங்கள் மனதிற்கு இறங்கி வருவதில்லை.
அதிகாலை நேரத்தில், ஐந்தரை மணிக்கு, என்னுடைய தந்தை இறந்துவிட்டார்....
மரணத்தைப் பற்றிய செய்திக்கு முன்னால், நீர்ச்சுழிக்குள் அடிப்பட்டுக் கொண்ட ஒரு புல்கொடியைப் போல, இப்படியும் அப்படியுமாக ஆடி தான் தவித்துக் கொண்டிருப்பதை அவள் மன அளவில் உணர்ந்தாள்.
எதுவும் நடக்கவில்லை. ஆழ்ந்த அமைதி நிலை மட்டுமே மனதில்.
கோல்டன் நூக்கின் எல்லையில் வெட்டிவிடப்பட்ட முட்செடிகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கும் சர்தார்ஜியின் கண்கள் பிரகாசித்தன.
‘‘யார் டீச்சர்ஜி, விருந்தாளி?’’
அவளுக்குப் புரியவில்லை.
‘‘சௌக்கிதார் ட்ரங்கால் வந்திருப்பதாகச் சொன்னார். யார் விருந்தாளி?’’
‘மரணம்... மரணம்தான் என்னுடைய விருந்தாளி?’ உரத்த குரலில் கூற வேண்டும்போல் அவளுக்கு இருந்தது. தன்னுடைய அமைதித் தன்மையை கவனித்து, கண்களில் இருந்த குறும்புத்தனமான சிரிப்பை இல்லாமல் செய்து மெலிதான பதைபதைப்புடன் நின்றுகொண்டிருந்த அந்த மனிதரின் முகத்தை தைரியத்துடன் அவள் பார்த்தாள்.
தன் குரலில் தடுமாற்றம் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதில் அவள் கவனமாக இருந்தாள்.
‘‘யாரும் வரல. போயிட்டாங்க. என் அப்பா...
தபால் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது தன்னுடைய ஒவ்வொரு காலடி வைப்பிலும் திட்டமிட்டு சேர்த்து வைத்திருக்கும் அமைதித் தன்மை முழுவதும் எங்கே ஒரே நிமிடத்தில் தகர்ந்து காணாமல் போய் விடுமோ என்று அவள் பயந்தாள். அழக்கூடாது... அழக்கூடாது... கண்களின் பகுதியில் எங்கோ... வேர்களில் உண்டாவதைப் போல ஒரு குடைச்சல் அரும்புவதை அவளால் உணரமுடிந்தது.
அறைக்குள் செல்லவேண்டிய நிமிடங்களுக்கு எத்தனை தூரம்!
மரண வீடு வந்திருப்பவர்களின் கூட்டத்தால் நிறைந்திருக்கும் என்றுதான் அவள் நினைத்தாள். வீட்டு வாசலில் கால் வைத்தபோது அவளுடைய முகம் என்னவோ போல் ஆகிவிட்டது. தூணுக்குப் பக்கத்தில் ஆல்பர்ட் கோமஸ் நின்றிருந்தான். சுருக்கங்கள் விழாத சூட் அணிந்து, இரண்டு பக்கங்களிலும் காதுகளுக்கு மேலே நரை விழுந்த தலையைத் தூக்கிக் கொண்டு நிமிர்ந்த நிலையில் அவன் நின்றிருந்தான். தங்க நிறத்தில் இருந்த ஹோல்டரில் இணைக்கப்பட்டிருந்த ஒரு சிகரெட்டை இழுத்து அவன் புகைவிட்டுக் கொண்டிருந்தான். டான்ஸ் ஹாலிலிருந்து சற்று விலகி காற்று வாங்குவதற்காக வெளியே வந்து நின்று ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு ஆளின் செயலாக அது இருந்தது. பரிதாபத்தை வரவழைத்துக் கொண்டு புன்னகைத்தவாறு என்னவோ சொன்னபோது, முகம் கறுத்துவிட்டது. அந்தப் பரிதாபம்தான் சகித்துக் கொள்ள முடியாதது.
ஒரு கவலையில் பங்கு பெற வந்திருக்கிறான்! அவனுக்கு இன்று ஒரு சுப தினம்!
முன்னறைக்குள் நுழைந்தபோது தலைக்குள் ஈக்கள் கூட்டம் பறந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு தாங்க முடியாத நிலையை அவள் உணர்ந்தாள். திண்ணையிலும் நாற்காலிகளிலும் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு மூலையில் நகத்தைக் கடித்துக் கொண்டு பாபு இருந்தான்.
சாப்பிடும் அறையிலிருந்த மேஜை மீது ஏர்பேக்கை வைத்துவிட்டு, சிறிய படுக்கையறைக்குள் நுழைந்தபோது முதலில் எதுவும் புரியவில்லை. தலைக்குள் அதிகமான சிறகடிப்புகள் நடந்து கொண்டிருந்தன.
மங்கலான வெளிச்சத்தில் கட்டிலில் அவளுடைய தாய் சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருப்பதைப் பின்னர் கண்டால் பெண்கள் யார் யாரோ உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யாரும் சிறிதுகூட அசையவில்லை. வெளிறிப்போன சிரிப்புகளை எங்கெல்லாமோ பார்த்து, குளிர்ந்து நிற்கும் சூழல் சற்று மாறியது. அவளுடைய தங்கை அழுது கொண்டே அவளை கட்டிக் கட்டிப் பிடித்தாள். கண்ணீரால் நனைந்திருக்கும் அவளுடைய முகம் தோளில் பட்டபோது, முதுமை தடவிக் கொண்டு விமலா அமைதியாகச் சொன்னாள் ‘‘அழாதே.... அழாதே...’’
பெண்களில் சிலர் பேசினார்கள். அவளுடன்தான். பதில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.
பாபுவின் தோளில் கை வைத்து நடந்து வந்த யாரோ வெளியே நின்று அழைத்தார்கள்.
‘‘விமலா, வா...’’
மலையாளத்தில்தான். கேட்டபோது இனம்புரியாத நிம்மதி தோன்றியது.
மேனன் ஸாப்தான் அது.
‘‘ஊருக்கு விஷயத்தை அறிவிக்கணுமா?’’
‘‘தெரியாது.’’
‘‘அறிவித்து என்ன பிரயோஜனம்? ஆள் வந்து சேர ஐந்து நாட்கள் ஆகும். காத்திருக்க முடியாதே!’’
அப்போது மிஸ்டர் கோமஸ் அங்கு வந்தான்.
அவன் அதைக் கேட்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. திருமதி மேனனுக்கு விமலாவின் தாயின் மாலை நேர பயணத்தின் ரகசியம் நன்கு தெரியும். அதை மேனன் ஸாபின் காதுகளில் அவள் கட்டாயம் போட்டிருப்பாள்.
‘‘இனி யாருக்காவது காத்திருக்கணுமா, விமலா?’’
‘‘யாருக்காகக் காத்திருப்பது?’’
இறுதிச் சடங்குகள் முடிந்து கடைசியாக அங்கிருந்து பிரிந்து சென்றது மிஸ்டர் கோமஸ்தான்.
அவன் விமலாவின் தாயிடம் விடைபெறுவதற்காக அறைக்குள் வந்தபோது அவள் வெளியே வந்துவிட்டாள். ஆறுதல் கூறட்டும்.... வசதிப்படி ஆறுதல் கூறட்டும்...
வெளியே வராந்தாவில் சமையலறையிலிருந்து அழுக்கு நீர் வெளியேறிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது அனிதா பின்னால் வந்து நின்றாள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook