மூடு பனி - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6351
கண்ணாடிக்கு முன்னால் நின்றபோது வழக்கம்போல தன்னைத்தானே அவள் தேற்றிக் கொள்ள முயன்றாள். முன்பு இருந்து சோர்வு இப்போது இல்லை. முகம் வெளிறிப் போய் காணப்பட்டது சற்று குறைந்திருக்கிறது. வெளிச்சம் அதிகம் விழாத ஒரு மூலையில் கண்ணாடி வைக்கப்பட்டிருந்தது. கட்டப்பட்ட கூந்தலில் அவ்வப்போது தோன்றுகிற நரைத்த முடிகள் ‘பளிச்’ என்று வெளியே தெரியவில்லை.
பகல் வெளிச்சம் தெளிவாக விழும் இடத்தில் நின்றுகொண்டு கண்ணாடியை அவள் மார்பு துடிக்கத்தான் பார்ப்பாள்.
பனிப்படலம் மூடிக்கிடக்கும் இந்த மலையோரங்களுக்கு சமதளங்களிலிருந்து வரும் மதராஸிகளுக்கு வெகு சீக்கிரமே நரை தோன்ற ஆரம்பித்துவிடும் என்று சமையல் வேலை செய்யும் வயதான கிழவி சொன்னது, தன்னைச் சமாதானப் படுத்துவதற்காக இருக்குமோ என்று அவள் நினைத்தாள்.
முகம் எண்ணெய் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. அவள் கொஞ்சம் பவுடர் தேய்த்து, உதடுகளில் வாஸ்லின் தேய்த்தாள். கருப்பு நிறத்தில் மாறிவிட்டிருந்த உதடுகள் இப்போது இரத்த நிறத்தில் இருந்தன. ஹேங்கரில் தொங்கவிடப்பட்டிருந்த நீல நிறக் கோட்டை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்து அவள் கதவைப் பூட்டினாள்.
போர்ட்டிகோவிற்கு வெளியே ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு அமர்சிங் ஹுக்கா இழுத்துக் கொண்டிருந்தான்.
அவன் காலில் செருப்பு இல்லை. காக்கி நிறத்தில் கால் சட்டையும், கசங்கிப் போய் அழுக்கு நிறத்தில் முழங்கால் வரை இருக்கும் சட்டையும் அவன் அணிந்திருந்தான். ஏராளமான ஓட்டைகள் விழுந்திருந்த ஸ்வெட்டரைத் திறந்து விட்டிருந்தான்.
‘‘அமர்சிங், நான் வெளியே போறேன்.’’
‘‘சரிம்மா!’’
அவன் மூக்கு வழியாகவும் வாய் வழியாகவும் புகையை விட்டவாறு சுருக்கங்கள் விழுந்திருந்த தன்னுடைய கண்களை உயர்த்தி அவளைப் பார்த்தான்.
‘‘கொஞ்சம் நடந்துட்டு வர்றேன்.’’
‘‘சரிம்மா!’’
அவள் இறங்கி நடந்தாள்.
‘கோல்டன் நூக்’கின் படிகளைக் கடந்தால் மலைச்சரிவு வழியாக வளைந்து செல்லும் நடைபாதை ஆரம்பிக்கிறது. குதிரையில் பயணம் செய்பவர்களின் வசதிக்காகக் கருங்கற்கள் பதிந்து உண்டாக்கப்பட்டிருக்கும் வழியைக் கடந்தால் நடைபாதை பிறகும் உயரத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கும். வருடத்தில் ஒரு நாள் பஹாடிகன் ராமலீலை நடத்தும் திறந்த வெளிக்கு மேலே, அந்த வழிக்கு அருகில் நின்று பார்த்தால், மிகவும் சுவாரசியமாக இருக்கும். மலை அடுக்குகளுக்கு நடுவில் இருக்கும் ஏரி... இரண்டு பக்கங்களிலும் தெரியும் நகரத்தின் சிவப்பு நிற மேற்கூரைகள்... ஏரியை இரண்டு முறை சுற்றிச் செல்லும் பாதை... மரக்கூட்டங்களுக்கு மத்தியில் ஏரியின் மறுகரையில் தெரியும் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள்....
ஏரிக்கும் நகரத்திற்கும் மேலே ஏப்ரல் மாதத்தின் இளம் பனிப்படலம் முன்பு எப்போதோ பகல் தூக்கத்தின் போது கண்ட ஒரு கனவைப் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
2
உலகத்தின் மேற்பரப்பில் நீங்கள் நின்று கொண்டிருப்பதைப் போல் தோன்றுகிறது. தூங்கிக் கொண்டிருக்கும் அறையின் மூடப்பட்ட ஜன்னலின் இடைவெளி வழியாக உள்ளே நுழையும் பகல் வெளிச்சத்திலிருந்து மானத்தைக் காப்பாற்றுவதற்காக இழுத்து தாழ்த்திய கொசுவலைச் சுருள்கள் சுற்றிலும் இருக்கின்றன. சிவப்பு கலந்த மாலை நேர வெளிச்சம் தாண்டவமாடும் மலைச் சிகரங்கள்தான் உங்களின் கண்களின் எல்லைகளைக் குறிக்கின்றன. பிரியத்துடன் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்திராத இடத்தின் எல்லைகள். குளிர்ச்சியான காற்றுக்குப் பச்சிலைகளின், ஈர மண்ணின் வாசனை இருக்கிறது.
குளிர்காலத்தின் இறுதியில் ஒரு நிமிடம்.
ஒரு நிமிடம். வாழ்க்கையில் ஒரு நிமிடம்.
‘‘காலத்தின் நடைபாதையில் இந்த நிமிடம் முன்பே இடம் பிடித்துவிட்டது.’’
சுதீர்குமார் மிஸ்ரா
1955 மே, 19
ஓடி மூச்சு விட்டும் கால் இடறியும் இறுதியில் நீங்கள் இதற்கருகில் வந்து சேர்ந்திருக்கிறீர்கள்.
யுகங்களுக்கு முன்பே உங்களுக்காகக் குறிக்கப்பட்டிருக்கும் நிமிடம்.
3
பாதை வெறிச்சோடிப் போய் காணப்பட்டது. ஏரியின் கரையில் ஆங்காங்கே நீரில் இறக்கிக் கட்டப்பட்டிருக்கும் செங்கல்லான சிறிய தங்குமிடங்களில் ஒன்றின்மீது நீல நிற ஆடையணிந்த ஒரு இளைஞன் சாயம் பூசிக் கொண்டிருக்கிறான்.
பிரகாசித்துக் கொண்டிருந்த விளக்குக் கம்பங்களில் ‘ஈரமான சாயம். கவனமாக இருக்கவும்’ என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகைகள் தொங்கிக் கொண்டிருந்தன.
மே மாதத்திற்காக நகரம் தயாராகிக் கொண்டிருந்தது. தூர இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வரும்போது கால வழக்கத்தில் நிறம் மங்கலாகிப் போன முகம் மினுமினுப்பாகிறது. முதுமையை அறிவிக்கும் வெள்ளை முடிகள் மறைக்கப்படுகின்றன.
பெரும்பாலான படகுகள் இரண்டு முனைகளிலும் மரக்கால்களில் இணைக்கப்பட்டு, உறங்கிக் கொண்டிருக்கின்றன. வெண்மணல் தெரியும் கரைகளில் வாத்துகள் கொத்தியவாறு மேய்ந்து கொண்டிருந்தன. நீரோட்டத்தில் மிதந்து வந்து பல வண்ணங்கள் பூசப்பட்ட மிதவைகளில் ஒன்று நீரில் சாய்ந்து கிடக்கும் மரத்துண்டுகளுக்கு நடுவில் கிடந்தவாறு இப்படியும் அப்படியுமாக ஆடிக் கொண்டிருந்தது.
உறுதியாக அமைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தவாறு அமைதியாக இருந்த ஏரியையே பார்த்துக் கொண்டிருந்தாள் விமலா.
தூக்கம் முடிந்து உற்சாகமில்லாத முகத்துடன் யாருக்காகவோ வேடம் பூண்டு கொண்டிருந்தது சூழல். நகரத்தின் இதயத்தை அவளால் படிக்க முடிந்தது. அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொள்ள முடியும்.
மே மாதத்தில் இந்தச் சிறிய நகரம் பரபரப்பாகவும், சிரித்து ஆரவாரம் உண்டாக்கிக் கொண்டும் வண்ணங்களையும் வாசனைகளையும் தூவி எறிந்து கொண்டும் இருப்பதை விமலா விரக்தியுடன் பார்த்தவாறு நிற்பதுண்டு.
அவை எல்லாம் யாருக்காக?
ஒன்பது வருடங்கள் ஒருவரையொருவர் நன்கு தெரிந்து கொண்டிருக்கும் நண்பன் என்ற நிலையில் கேள்வி அவளுடைய மனதை விட்டு வெளியே வரவில்லை.
தல்லித்தாளிலிருந்து படகொன்று புறப்பட்டுச் செல்வது தெரிந்தது. அதில் சிறுவர் - சிறுமிகள் உட்கார்ந்திருந்தார்கள்.
நைனீதேவி கோவிலின் பெரிய மணிகள் ஒலித்தன.
சிறு பெண்ணாக இருந்தபோது அவள் வெள்ளிக் கிழமையிலும், செவ்வாய்க்கிழமையிலும் கோவிலுக்குப் போயிருக்கிறாள். வயலைக் கடந்து சிறுமணல் கிடக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சாலையை அடைந்தால் அங்குதான் கோவில் இருக்கிறது. பாதையின் இருபக்கங்களிலும் மஞ்சள் நிற மலர்கள் ஏராளமாக விரிந்து நின்று அழகு செய்யும். உருளைக் கற்கள் நிறைந்த பாதை இப்போது முன்னால் இருக்கத்தான் செய்கிறது. பாதையோரத்தில் நெசவு நெய்பவர்களின் குடிசைகளின் வாசலில் நீளமாக நூல்கள் கட்டியிருப்பது இப்போதும் அவளுடைய ஞாபகத்தில் இருக்கிறது. ஓட்டுத் துண்டுகள் சிதறிக் கிடக்கும் கோவில் வாசலை விட்டு புறப்படும்போது வேலிக்கருகில் கிடக்கும் குன்றிமணிகளை அவள் சேகரித்து எடுப்பாள்.
அப்போது அவளுடைய தந்தை எங்கோ தூரத்தில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வீட்டிற்கு வருவதை யாரும் பொதுவாக விரும்பவில்லை. தன்னுடைய வீட்டிலுள்ளவர்களிடம் கோபித்துக் கொண்டு வெளியேறியபோது அவளுடைய தந்தைக்கு எங்கும் ஒரு இடமில்லாமற்போனது.