ஷ்யாம் அண்ணன் - Page 12
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தப்பட்டையின் ஓசையைக் கேட்டால் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உடனே அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி சத்தம் உண்டாக்குவார்கள். இந்த முறையில் செய்தி நீண்ட தூரத்தில் போய் சேரும். யாருக்கு எதிராக உண்டாக்கிய சத்தமாக இருந்தாலும், எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், சம்பந்தப்பட்ட மனிதன் உடனே ஓடிப்போயே ஆகணும். அந்தத் தப்பட்டையிடமிருந்து யாரும் தப்பிக்க முடியாது.
நீண்ட காலமாக ஆஃப்ரிக்காவின் அடர்ந்த காடுகளில் சுற்றி நடந்து கொண்டிருந்த எனக்கு இந்தத் தப்பட்டையின் மொழியை நல்லா புரிஞ்சிக்க முடிஞ்சது. அதனால் அந்தத் தப்பட்டை ஒலியைக் கேட்டதும், அது என்னைப் பாதிக்கக்கூடிய ஒண்ணு இல்லைன்றதை நான் தெரிஞ்சுக்கிட்டாலும், ஒருவித கவலை என்னை ஆட்டிப் படைத்ததென்னவோ உண்மை.
மறுநாள் நாங்கள் கூடாரத்தைக் கலைத்துவிட்டு சவன்னாவைக் கடந்து மலையை நோக்கி நடந்தோம். அந்த மலையில் பத்தாயிரம் அடி மேலே ஏறிச் சென்றால் கொரில்லாக்கள் இருக்குற இடத்தைப் பார்க்கலாம்னு பொதுவா சொல்லுவாங்க. மலை நெடுங்குத்தா நின்னுக்கிட்டு இருந்துச்சு. அது முழுக்க அடர்ந்த காடுகளா இருந்துச்சு. எவ்வளவு உயரத்துல ஏறின பிறகும் தப்பட்டை ஒலி எங்களை விடுறதா இல்ல. ராத்திரியும் பகலும் அது எங்களைப் பின் தொடர்ந்து கொண்டே இருந்துச்சு.
நான்காம் நாள் கிவ் ஏரியை நாங்கள் அடைந்தோம். முள் மரங்கள் அடர்ந்து நின்று கொண்டிருக்கும பயங்கரமான அந்தக் காட்டைப் பார்த்ததும் கொரில்லாக்களின் இருப்பிடம் நெருங்கிவிட்டது என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொண்டோம். நல்ல இடமாக ஒரு இடத்தைத் தேர்வு செய்து நாங்கள் கூடாரம் அமைத்தோம். இரவு வருவதற்கு முன்பு காட்டைக் கொஞ்சம் பார்த்துவிட்டு வரலாம் என்று நான் மட்டும் தனியே புறப்பட்டேன். கொரில்லா வேட்டையில் அவற்றை உயிரோடு பிடிப்பது என்பது உயிரோடு விளையாடக்கூடிய ஒன்று. முதலாவது விஷயம்- அவை மனிதர்களைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்ளும். தானாகவே அது யாரையும் எதிர்த்துக் கிளம்பாது. அப்படி கோபப்பட்டு கிளம்பியாச்சுன்னு வச்சுக்கங்க, அதற்குப்பிறகு அதுக்கிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது. அந்த நேரத்துல அதை மாதிரி கொலைவெறி பிடிச்ச இன்னொரு பிறவியைப் பார்க்க முடியாதுன்றதுதான் உண்மை. ஒரே குண்டுல அதைக் கொல்ல முடியலைன்னு வச்சுக்கங்க, அதற்குப் பிறகு அதைத் தடுத்து நிறுத்துறதுன்றது சாதாரண விஷயமில்ல. வேடன் யாராவது கையில் கிடைத்தால் தப்பட்டையை அடிக்கிறது மாதிரி மார்புப்பகுதியை ரெண்டு கைகளாலும் அடிச்சுக்கிட்டே கொரில்லா அவனை சட்னியாக்கிட்டுத்தான் மறு வேலையைப் பார்க்கும். அதனால் வயதான ஆண் கொரில்லாவைப் பொதுவா யாரும் பிடிக்கிறதுக்கு முயற்சி பண்ணுறதே இல்ல.வேணும்னா குட்டி கொரில்லாக்களை வேட்டையாடுவாங்க. ஆனா, குட்டிகளை மட்டும் தனியா பார்க்குறது கஷ்டம். சிறு சிறு குடும்பங்களாக கொரில்லாக்கள் சேர்ந்து பகல் முழுவதும் மரங்களில் பழங்களைத் தின்னுக்கிட்டு இரக்கும். ராத்திரி நேரங்கள்ல வயதான ஆண் கொரில்லா மரத்துக்குக் கீழே காவல் காக்கும். குட்டி கொரில்லாக்களும், தாய் கொரில்லாவும் மரத்தில் இலைகளாலும் சுள்ளிகளாலும் அமைக்கப்பட்ட படுக்கையில் படுத்திருக்கும். அதனால் அதுவாகவே ஏதாவது கொரில்லா குட்டி அந்த இடத்தை விட்டுப்போனால் தவிர, சாதாரணமாக அதைப் பிடிக்குறதுன்றது இலேசுப்பட்ட விஷயமில்ல.
அடுத்த நாள் எந்த இடத்துல எப்படி கொரில்லாவைப் பிடிக்குறதுன்றதைப் பற்றி தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு நான் இருந்தேன். அநத நேரத்துல ஜீகன் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு ஓடிவந்து சொன்ன செய்தியைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன். நான் நின்னுக்கிட்டு இருந்த இடத்துல இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஒரு குகைக்குள்ள ஒரு கொரில்லா போறதை அவன் பார்த்திருக்கான். அது பார்க்குறதுக்கு வெள்ளை நிறத்துல இருந்திருக்கு.
குதிரைக்கு கொம்பு இருக்குன்னு சொல்றது மாதிரியான விஷயம்- வெள்ளை நிறத்துல கொரில்லா இருக்குன்னு சொல்றது. அப்படி இருக்கவே முடியாது. இருந்தாலும் மாலை நேரத்து மங்கலான வெளிச்சத்துல பார்க்குறப்போ ஜீகனுக்கு அப்படி தோணியிருக்கலாம். ஆனால், கொரில்லா தனியா குகையில் வசிக்குதுன்ற விஷயம் நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று. எது எப்படியோ, ஜீகன் சொன்னது உண்மையான்னு கண்டுபிடிச்சுத்தான் ஆகணும்.
ஜீகனை அழைச்சிக்கிட்டு அந்தக் குகையை நெருங்கினப்போ நல்லா இருட்டிடுச்சு. அந்த இருட்டில் குகைக்குள் கொரில்லாவைத் தேடுவது என்பது ரொம்பவும் ஆபத்தான ஒரு சாகசச் செயலாக இருக்கும் என்பதை நான் புரிஞ்சுக்கிட்டேன். குகை அப்படியொண்ணும் பெரிதாக இல்லை. மலையின் மார்பில் உண்டான ஒரு பிளவு போல் அது இருந்தது. அதனால் முதல்ல குகையின் வாசற்பகுதியை நோக்கி நான்கைந்து முறைகள் சுட்டேன். எந்தவிதமான பயனும் உண்டாகாமல் போகவே காய்ந்து போன ஒரு மரக்கிளையைப் பந்தம் போல எரிய வைத்து உள்ளே புகுந்தோம். நான் துப்பாக்கியைக் கையில் பிடிச்சு நீட்டியவாறு முன்னால் நடக்க, ஜீகன் பந்தத்தைக் கையில பிடிச்சுக்கிட்டு பின்னால் வந்தான். கொரில்லா திடீர்னு எங்கள் மீது பாய்ந்தால், துப்பாக்கியை அழுத்த வேண்டியதுதான். பிறகு நடப்பது நடக்கட்டும்.
குகை சிறிது தூரம் நேராக உள்ளே சென்று வலது பக்கம் திரும்பியது. திரும்பியவுடன் அதிர்ச்சியடைந்து நின்னுட்டோம். இதுதான் ஜீகனின் கொரில்லாவா?
அந்த கொரில்லா பாறையின் மீது சாய்ந்து நின்றவாறு எங்களையே உற்றுப் பார்த்தது. அதன் நிறம் நல்ல வெளுப்புதான். உடம்பும் நல்லா பெருசாவே இருந்துச்சு. ஆனா, அது கொரில்லா இல்லை.
நாங்கள் நிற்பதைப் பார்த்து தன் கையில் இருந்த கைத்துப்பாக்கியை உயர்த்தி அது சுத்தமான ஆங்கிலத்தில் சொன்னது: 'உஷாரா இருந்துக்கங்க. ஒரு அடி முன்னாடி வச்சாலும் உங்களைத் தொலைச்சிடுவேன்.'
இதற்கிடையில் நான் என்னை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்திருந்தேன். சிரித்துக்கொண்டே நான் சொன்னேன்: 'அதனால் யாருக்கும் உயிர்ச்சேதம் வரும்னு நினைக்கிறீங்களா, டாக்டர் ஹில்? உங்க குணம் எனக்குத் தெரியும்?’
டாக்டர் ஹில் அதிர்ச்சியடைந்து தன் கையிலிருந்த பிஸ்டலைக் கீழே இறக்கியவாறு என்னை நெருங்கிக்கிட்டே கேட்டார்: "யார் இது? மிஸ்டர் தாஸ்... நீங்களா? நீங்க எப்படி இங்கே?"
மிடுக்கான குரலில் நான் சொன்னேன்: "எல்லாம் விதியின் செயல்னுதான் சொல்லணும். இல்லாவிட்டால் அமெரிக்காவில் ப்ரஸீலில் இருக்கும் காடுகள் எங்கே?"
டாக்டர் ஹில் நெகிழ்ச்சியுடன் சொன்னார்: "நீங்க சொல்றது உண்மைதான். அப்போ நீங்க மட்டும் இல்லாமலிருந்தா நான் அங்கேயிருந்து உயிரோட வந்திருக்கவே முடியாது."
சிரித்துக் கொண்டே நான் சொன்னேன்: "உங்க துப்பாக்கியோட சக்தி என்னன்னு அன்னைக்கே நான் புரிஞ்சுக்கிட்டேன். முதலையைக் கொல்றதுக்காக சுட்டது என்மேல பாய்ந்து, என்னைக் கொல்லாம விட்டிருச்சு!"