ஷ்யாம் அண்ணன் - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
சிபு அதைச் சொன்னதும் மீண்டும் சிரிப்பு அலை எழுந்தது. அப்போது அதட்டுகிற குரலில் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "கேவலமா சொல்லல. அது அதோட விஞ்ஞானப் பெயர்."
நாங்கள் படிகளில் இறங்குவதற்காகப் புறப்படுவதற்கு முன்னால் ஷ்யாம் அண்ணன் கதையை ஆரம்பித்தார்.
"1931- ஆம் வருடம் டிசம்பர் 22- ஆம் தேதி லாக்வியாவுல இருக்குற நிஷா நகரத்தின் தெருக்கள் பனியால மூடப்பட்டுக் கிடந்தன. அதற்கு முந்தின நாள் பலமான ஒரு பனிப்புயல் அடிச்சது. நகராட்சியைச் சேர்ந்தவர்கள் வந்து பனியை வெட்டி அப்புறப்படுத்துறது வரை மக்களால் சாளரங்களைத் திறக்கக்கூட முடியல. நான் வழக்கம்போல காலை நேரத்து நடை முடிந்து ஹோட்டலுக்கு அப்போதான் திரும்பி வந்திருந்தேன்.
அப்போது ஒரு குதிரை வண்டி என் பக்கத்துல வந்து நின்னுச்சு. 'அஸ்ட்ரகான்' கோட்டும் ரஷ்யன் தொப்பியும் அணிஞ்ச ராணுவத்தைச் சேர்ந்த ஆள்னு நினைக்கிற மாதிரி தோற்றத்தைக் கொண்ட ஒரு மனிதன் இறங்கி வந்து என்னையே பார்த்தான். பிறகு ஒரு கடிதத்தை அவன் என் கையில தந்தான்.
கடிதத்தைப் படிச்சிட்டு ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்து நான் சொன்னேன்: "ஜெனரல் வர்னோஃப் இங்கே இருக்குறார்னு எனக்குத் தெரியாது"ன்னு.
அவன் அதற்குச் சொன்னான்: "ஆமா... மூணு வருடங்களாக அவர் இங்கேதான் வசிக்கிறார். உங்களை அவர் இப்போ பார்க்க விரும்புறார்."
'அந்த விஷயத்தைக் கடிதத்திலேயே எழுதியிருக்கார். ஆனா, அவர் பார்க்க விரும்புற ஆள் நான்தான்னு எப்படி நீங்க கண்டுபிடிச்சீங்க?'- நான் அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டேன்.
அதற்கு அஸ்ட்ரகான் கோட்டின் காலரை உயர்த்தியவாறு சொன்னான்: 'அதைத் தெரிஞ்சுக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு? ஜெனரல் உங்களைப் பற்றி என்கிட்ட எவ்வளவோ சொல்லியிருக்காரு. அது ஒரு பக்கம் இருக்கட்டும். இரத்தத்தை உறைய வைக்கிற பனியில ஒரு சாதாரண ஸ்வெட்டரை மட்டும் அணிந்து கொண்டு அதிகாலை நேரத்துல நடக்குறதுக்காக நிச்சயம் உங்களைத் தவிர, வேற யாரும் போகமாட்டாங்கன்றது எனக்கு நல்லா தெரியும்!'
ஜெனரல்
அதற்குப் பிறகு நான் ஜெனரலோட வீட்டுக்குப் போனேன். ரிகா கடலின் தெற்குப் பகுதியில் அழுக்கடைந்ததும் பழையதுமாக இருக்குற நகரத்தின் மத்தியில் மக்கள் கூட்டம் கூட்டமா வசிக்கிற ஒரு தெருவுல ஜெனரலோட ரெண்டு அறைகள் மட்டுமே இருக்கக் கூடிய, கீழே விழுற நிலையில இருக்குற வீட்டைப் பார்க்குறப்போ உண்டானதைவிட ஆச்சரியம் அதிகமா உண்டானது.
ஆப்ரிக்காவுல வேட்டைக்குப் போற காலத்துல ஜெனரல் எனக்குப் பழக்கமானாரு. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நைப்பர் நதியில் சிறு படகுல நாநூறு, ஐந்நூறு மைல்கள் பயணம் செய்திருக்கோம். காங்கோவின் பயங்கரமான காடுகளுக்குள் உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு கொரில்லாக்களைத் தேடிஅலைஞ்சிருக்கோம். மாஸாயிகளோடு சேர்ந்து வில்லையும் அம்பையும் கையில எடுத்துக்கிட்டு வேட்டைக்குப் போயிருக்கோம். தோற்றத்திலயும் நடவடிக்கைகள்லயும் ப்ரஷ்யாக்காரர் உடலும் மனசும் ஒரே மாதிரி உருக்கால உருவாக்கினதைப் போல இருக்கும். சோர்வுன்னா என்னன்னு அந்த மனிதனுக்குத் தெரியாது. துன்பம்னா என்னன்னு இதுவரை அவரோட மனம் உணர்ந்ததுகூட இல்ல. முதல் உலகப்போர் சமயத்துல ஜெர்மன் படைத் தளபதின்ற முறையில அவருக்கு மிகப்பெரிய மதிப்பு இருந்துச்சு. ஏராளமான பரிசுகளை அவர் வாங்கியிருக்காரு. அப்படிப்பட்ட ஒரு மனிதருக்கு இக்கட்டான ஒரு நிலையா? பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது. உடல்நிலை அதைவிட படுமோசமாக இருந்தது. பழைய ஜெனரலோட ஒரு நிழல் மட்டும்தான் தெரிஞ்சது.
மரியாதைக் குறைவுன்னு மனசுல பட்டாலும் இப்படிப்பட்ட சூழ்நிலை உண்டானதுக்குக் காரணம் என்னன்னு கேட்காம என்னால இருக்க முடியல. ஜெனரல் ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னார்: 'நீங்க இந்த நேரத்துக்கு வந்திருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். இதைப்பற்றி பேசுறதுக்குத்தான் நான் ஆள் அனுப்பி உங்களை இங்கே வரவழைச்சிருக்கேன். உலகத்துல இருக்குற யாருக்கும் இந்த விஷயம் தெரியாது. நீங்கதான் இதைத் தெரிஞ்சுக்கப் போற முதல் மனிதர் வாங்க...'
என்னை அறைக்குள்ளே அழைச்சிட்டுப்போயி அங்கேயிருந்த ஒரு நாற்காலியில உட்காரச் சொல்லிட்டு மேஜையை அவர் திறந்தாரு. உள்ளேயிருந்து ஒரு புகைப்படத்தை வெளியே எடுத்தாரு. பிறகு என்னைப் பார்த்து கேட்டாரு: 'இது யாரோட புகைப்படம்னு தெரியுதா?'
பார்த்த உடனே எனக்கு அது யாருன்னு தெரிஞ்சிருச்சு. ஆச்சரியத்துடன் நான் சொன்னேன்: 'இந்தப் புகைப்படத்துல இருக்குறது டாக்டர் ரத்ஸ்டைன்தானே? பதினஞ்சு வருடங்களுக்கு முன்னால் ஸி.ஸி.ஈக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யிறதுக்காக ஆப்ரிக்காவுக்குப் போன அவர் அங்கேயே இறந்துட்டாருன்னு சொல்லுவாங்க.'
ஜெனரல் மெதுவாகத் தலையை ஆட்டிக் கொண்டே சொன்னாரு: 'இல்ல... இறக்கல. இப்பவும் அவர் வாழந்துக்கிட்டு இருக்காரு. தனிப்பட்ட ஒரு நோக்கத்தை மனசில வச்சிக்கிட்டு தான் இறந்துட்டதா நாடு முழுவதும் அவரே செய்தி பரப்பிட்டாரு.'
'அந்த விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியும்?'
சில நிமிட அமைதிக்குப் பிறகு ஜெனரல் மெதுவான குரல்ல சொன்னாரு: 'அவர் என் சகோதரர்!'
'உங்க சகோதரரா? டாக்டர் ரத்ஸ்டைன் யூத இனத்தைச் சேர்ந்தவராச்சே! நீங்க ஜெர்மன்காரர். அவர் எப்படி உங்களுக்கு சகோதரரா ஆக முடியும்?'
'என்னோட சொந்த சகோதரர்தான். ஒரே தாய்- தந்தைக்குப் பொறந்தவங்க நாங்க'- ஜெனரல் கவலையுடன் என்னைப் பார்த்துக் கொண்டே சொன்னார்: 'உங்களை எனக்கு அறிமுகமாகுற காலத்துல ஆப்ரிக்காவுல வேட்டைக்குப் போறோம்ன்ற போர்வையில நான் இந்த சகோதரரைத் தேடிக் கொண்டிருந்ததேன்.'
நான் உணர்ச்சிவசப்பட்டு ஜெனரலைப் பார்த்தேன். வறுமையாலும் கவலைகளாலும் அந்த மனிதருக்கு பைத்தியம் பிடிச்சிருக்குமோன்னு நினைச்சேன். என் பார்வையோட அர்த்தத்தைப் புரிந்து கொண்ட ஜெனரல் கவலை தோய்ந்த குரல்ல சொன்னார்:
'என் தலைக்கு என்னவோ பிரச்சினை வந்திருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க. ரத்ஸ்டைன் யூதரா இருக்குறப்போ எப்படி அவர் என் சொந்த சகோதரரா ஆக முடியும்னு நினைச்சு நீங்க குழம்பிப்போய் இருக்கீங்கள்ல! போன உலகப் போர்ல ஜெர்மனியின் மிகப்பெரிய போர் வீரருக்குத் தரப்படுற பரிசுகளைப் பெற்ற, ஒரு மனிதர் ரிகாவின் இந்த அசிங்கம் பிடிச்ச மூலையில் வறுமையின் பிடியில் சிக்கி ஒரு திருடனைப் போல மறைந்துகொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை எப்படி உண்டானதுன்றதை நினைச்சுப் பார்த்தா உங்களால புரிஞ்சுக்க முடியும்.'
நான் எதுவும் பேசாமல் அமர்ந்திருப்பதைப் பார்த்து ஜெனரல் திரும்பவும் என்னைப் பார்த்துச் சொன்னார்: 'உண்மையான ஜெர்மன்காரன்னு சொல்லிக்கிட்டு ப்ரஷ்யாக்காரர்களை விட மிடுக்கா நடந்து கொண்டு திரியிறவன் நான் என்ற விஷயம் எல்லாருக்கும் தெரியும்.