ஷ்யாம் அண்ணன் - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
அறைக்குச் சென்றபிறகு அவர் ஹுக்கா இழுக்கும் சத்தமும் சில நேரங்களில் மரத்தில் கூர்மையான வாளை வைத்து அறுக்கும்போது உண்டாகும் சத்தத்தையொத்த குறட்டைச் சத்தமும் கீழேயுள்ள மாடிகளில் அமர்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருப்பவர்களின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கும்.
அன்று அப்படிப்பட்ட சுகமான உறக்கத்திற்கு திடீரென்று என்ன கேடு உண்டாகிவிட்டது? ஷ்யாம் அண்ணனின் உரத்த சத்தத்தைக் கேட்டால் ஒரு வாரம் பட்டினி கிடந்த ஏதோ நரியோ, சங்கிலியை அறுத்துக் கொண்டு கத்தியை ஓங்கியவாறு ஓடிவருகின்ற இரத்தவெறி பிடித்த பைத்தியக்காரனோதான் அந்தச் சத்தத்தின் காரணகர்த்தா என்று யாரும் நினைப்பார்கள். ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு வீரசாகசங்கள் செய்யும் மனிதனுக்கு எந்த விஷயமும் சாதாரணமானதே. அப்படியென்றால் என்னதான் நடந்தது?
அந்த ரகசிய சம்பவத்தின் கதாநாயகனான ஷ்யாம் அண்ணன் அடுத்த நிமிடம் 'சடபடா' என்று படிகளில் இறங்கி வந்து கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். வேகமாக அருகில் சென்று அவரிடம் கேட்டோம். "என்ன நடந்தது, ஷ்யாம் அண்ணே?"
நாங்கள் இப்போதும் விழித்துக்கொண்டுதான் இருக்கிறோம் என்று ஷ்யாம் அண்ணன் நினைக்கவில்லை. ஆர்வத்துடன் நாங்கள் கேள்வி கேட்டவுடன், முதலில் ஷ்யாம் அண்ணன் திகைப்புடன் நின்றிருந்தார். ஒருவேளை எங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். அடுத்த நிமிடம் நாங்கள் எல்லாரும் அதிர்ச்சியடையும் வண்ணம் ஷ்யாம் அண்ணன் தாழ்ந்த குரலில் சொன்னார்: "சம்பவம்... சம்பவம்... நான் நினைச்சதுதான்." அவர் சொன்னதன் அர்த்தத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர் சொன்ன விதத்தைப் பார்த்து நாங்கள் வியப்படைந்தோம். ஏதோ பயத்தின் சாயல் அவருடைய குரலில் ஒளிந்திருப்பதை எங்களால் உணர முடிந்தது. நடு எலும்பு வழியாகக் குளிர்ச்சியான நீர் வழிந்து போவதைப் போல ஒரு உணர்வு எங்கள் எல்லாருக்கும் உண்டானது.
அந்த அதிர்ச்சியிலிருந்து ஒரு வகையில் விடுபட்டு, நடுங்கிய குரலில் முதலில் கேள்வி கேட்டவன் சிபுதான். அவன் கேட்டான்: "பூதமோ, ஆவியோ ஏதாவது இருக்குமோ, ஷ்யாம் அண்ணே?"
"பூதம்!"
தன்னுடைய கிண்டல் கலந்த கூர்மையான வார்த்தையைக் கேட்டு, சாதாரண ஒரு பூதத்தைப் பார்த்து தான் உண்டாக்கிய சத்தத்தைக் கேட்டு, சிபு தன்னை அவமானப்படுத்திவிட்டான் என்று ஷ்யாம் அண்ணன் நினைப்பதைப் போல் தோன்றியது.
"எல்லாரும் போயி பார்த்துட்டு வருவோம்"- கோரா சொன்னான்.
ஷ்யாம் அண்ணனுக்கு இந்த விஷயத்தில் சம்மதம் இல்லை. தவிர, இவ்வளவு பெரிய ஆபத்தை நோக்கி எங்களைத் தள்ளிவிட வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இல்லை. அதைவிட இரவு நேரத்தில் நாங்கள் யாருடைய அறையிலாவது தங்கியிருந்துவிட்டு பொழுது விடிந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.
ஆனால், அவ்வளவு எளிதாக அந்த விஷயத்தை விட்டுவிட நாங்கள் தயாராக இல்லை. ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு மனிதரின் மனதில் பாதிப்பு உண்டாக்கிய அந்த விஷயம் என்ன என்பதைக் கண்டுபிடிக்காமல் விடக்கூடாது என்ற பிடிவாதம் எங்களுக்கும் உண்டானது.
எல்லாரும் படிகளில் ஏறி அறைக்குள் நுழைந்தோம். அறைக்குள் நல்ல இருட்டு. ஸ்விட்ச்சைப் போட்டால் அங்கு என்ன நடக்கும் என்ற பயம் இருந்ததால் யாருக்கும் விளக்கு போட தைரியம் வரவல்லை. கடைசியில் சிசிரன் பாதி மனதுடன் ஸ்விட்சைப் போட்டான்.
ஆனால், எங்கு? என்ன?
கீழே விழுந்து கிடந்த மேஜையையும் நாற்காலியையும் தவிர அங்கு வேறு எதுவும் இல்லை. எவ்வளவு முயற்சித்தும் எங்களைத் தடுக்க முடியாமற்போன ஷ்யாம் அண்ணன் எங்களுக்குப் பின்னால் நடந்து அறைக்குள் வந்து நின்றிருந்தார். நாங்கள் திகைத்துபோய் ஷ்யாம் அண்ணனின் முகத்தைப் பார்த்தபோது அவர் மிடுக்கான குரலில் சொன்னார்: "நான்தான் சொன்னேன்ல?" அறையில் எதுவும் இல்லை என்பதுவே ஒரு மிகப்பெரிய ரகசியமாயிற்றே என்பதுதான் அந்தக் கேள்வியின் அர்த்தம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.
நாங்கள் ஏதாவது கூறுவதற்கு முன்பு அந்த அறையில் ஆச்சரியப்படும் வகையில் ஒரு சத்தம் கேட்டது. 'கோ' என்றொரு சப்தம். திடீரென்று ஒலித்த அந்தச் சத்தத்தைக் கேட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்து எங்களை மீறி நாங்கள் எல்லாரும் பின்னால் நகர்ந்து நின்றோம். ஆனால், அடுத்த நிமிடம் விஷயம் என்னவென்று தெரிந்தபோது சிரித்து சிரித்து எங்களுக்கு வயிறே வெடித்துவிடும் போல் இருந்தது.
கோராதான் எல்லாருக்கும் முன்னால் நின்றிருந்தான். முதலில் அவன் எல்லாருடனும் சேர்ந்து பின்னோக்கி நகர்ந்தான் என்றாலும் அடுத்த நிமிடம் குனிந்து தரையிலிருந்து ஒலித்த எல்லாரையும் பயமுறுத்திய அந்த பயங்கரமான ரகசியத்திற்கு ஆதாரமான உண்மையைக் கையில் எடுத்தான்.
பெரிய ஒரு விட்டில் பூச்சி!
நாங்கள் அதையும், தொடர்ந்து ஷ்யாம் அண்ணனையும் பார்த்தோம். நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். சிசிரன் இதற்கிடையில் சிரிப்பை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு கேட்டான்: "கடைசியில இந்த ஒரு விட்டில்தான் ஷ்யாம் அண்ணனை பயமுறுத்தினதா?"
மீண்டும் சிரிப்பு அலை அங்கு ஓயாமல் கேட்டு கொண்டிருந்தது. ஆனால், அந்தச் சிரிப்பலைகள் ஷ்யாம் அண்ணனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அதைப்பற்றி சிறிதும் கவனிக்காமல் தன்னுடைய கட்டிலில் போய் அமர்ந்து கொண்டு எங்கள் ஒவ்வொருவரையும் அவர் ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு எங்களிடம் அவர் கேட்டார்: "ஒரு விட்டில் பூச்சியைப் பார்த்து இந்த அளவுக்குப் பயம் உண்டாகியிருக்கு... அப்படித்தானே?"
இரண்டு கால்களையும் தூக்கிக் கட்டிலில் வைத்துக் கொண்டு வசதியாக உட்கார்ந்தவாறு ஷ்யாம் அண்ணன் பிரகாசிக்கும் கண்களுடன் எங்களைப் பார்த்துக் கேட்டார்: "ஒரு பூச்சிக்குப் பின்னால் எட்டாயிரம் மைல் தூரம் எப்பவாவது ஓடியிருக்கீங்களா? மூவாயிரம் டன் இறந்துபோன கிருமிகளை இனி என்ன செய்யிறதுன்ற தர்மசங்கடமான நிலையில சிக்கியிருக்கீங்களா? பாக்கெட்ல ஒரு மூடிய டப்பாவையும் கையில ஒரு காகிதத்தையும் வச்சுக்கிட்டு ஆப்ரிக்காவின் அடர்ந்த காட்டுலயும் மேட்டுலயும் ஒரு பூச்சியைத் தேடி அலைஞ்சிருக்கீங்களா?"
அவரின் அந்தக் கேள்வியைக் கேட்டு எங்களின் சிரிப்புச் சத்தம் நின்றுவிட்டது. எனினும், கேள்வி கேட்காமல் எங்களால் இருக்கமுடியவில்லை. நாங்கள் கேட்டோம்: "அப்படி என்ன பூச்சி ஷ்யாம் அண்ணே? இந்த மாதிரி விட்டிலா?"
"இல்ல... அதோட பேரு பிஸ்ட்டோ ஸார்க்கா க்ரிகேரியா."
"போதும்... போதும் ஷ்யாம் அண்ணே, பூச்சியா இருந்தாலும் கடவுளோட படைப்புல சேர்ந்ததுதானே? அதைக்கேவலமா பேசுறது சரியா என்ன?"