ஷ்யாம் அண்ணன் - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
முதலில் கதையைக் கூறுவதா? இல்லாவிட்டால் கதை கூறும் ஷ்யாம் அண்ணனை, கனஷ்யாம் அண்ணனை முதலில் வர்ணிப்பதா? கதை ஷ்யாம் அண்ணனுடன் தொடர்பு கொண்டதுதான். அதனால் ஷ்யாம் அண்ணன் முன்கூட்டியே நமக்கு அறிமுகமாகவில்லையென்றால், கதையில் பாதி சுவாரசியம் இல்லாமலே போய்விடும். அதனால் ஷ்யாம் அண்ணனைப் பற்றி முதலில் ஆரம்பிப்போம்.
ஒட்டி உலர்ந்துபோய் எலும்புகள் புடைத்த உடம்புடன் இருக்கும் ஷ்யாம் அண்ணனின் வயது என்ன என்பதை அவ்வளவு எளிதாக நம்மால் முடிவு செய்ய முடியாது. முப்பத்தைந்திலிருந்து ஐம்பதுக்கு இடையில் என்ன வயது வேண்டுமானாலும் இருக்கும். ஷ்யாம் அண்ணனிடம் அதைப் பற்றிக் கேட்டால் சிரித்துக் கொண்டே அவர் கூறுவார்: "வயசை எண்ணிப் பார்க்குறுதுக்கு எனக்கு எங்கே நேரம் இருக்கு? நான்தான் இவ்வளவு காலமா உலகத்தைச் சுற்றிக்கிட்டுத் திரியிறேனே! இருந்தாலும்..." இதைக்கூறிவிட்டு ஷ்யாம் அண்ணன் சொல்லப்போகும் கதை இருக்கிறதே... அது சில நேரங்களில் சிப்பாய் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும். இல்லாவிட்டால் ரஷ்யாவுக்கும் ஜப்பானுக்குமிடையில் நடைபெற்ற முதல் போரைப்பற்றி இருக்கும். அதனால் ஷ்யாம் அண்ணனின் வயதைப் பற்றி நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். கடந்த இருநூறு வருடங்களுக்கிடையில் ஷ்யாம் அண்ணன் செல்லாத இடமோ அவர் பங்கு பெறாத ஏதாவது சம்பவமோ இல்லை என்று நாங்கள் ஏற்கெனவே அவரிடம் ஒப்புக் கொண்டிருக்கிறோம்.
எனினும், பல வருடங்களுக்கு முன்பு நகரத்தின் சிறிய ஒரு தெருவில் இருக்கிற எங்களின் இந்த நெருக்கமான மெஸ்ஸில் அவர் கருணை மனம் கொண்டு வசிக்க வந்ததற்கான காரணம் என்ன என்று கூறுவது சற்று சிரமமான ஒரு விஷயம்தான். ஓய்வு நேரங்களில் நாங்கள் பலரும் சேர்ந்து உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றி சிரிக்கச் சிரிக்கப் பேசுகிற இடத்தில் அவர் தவறாமல் வந்து உட்காருவார். இதுகூட அவருடைய அளவற்ற கருணை மனத்தால் நடக்கக்கூடியதே. தான் பெட்டியையும், சாமான்களையும் எடுத்துக் கொண்டு இந்த இடத்தை விட்டு உடனே போகப்போவதாக அவ்வப்போது அவர் எங்களைப் பயமுறுத்துவது உண்டு. மாதக் கடைசியில் மெஸ் பில் கையில் கிடைக்கிற நேரத்தில்தான் பெரும்பாலம் அவர் அப்படிக் கூறி நாங்கள் பார்த்திருக்கிறோம்.
இறுதியில் எல்லாரும் ஒன்றாகக் கூடி உட்கார்ந்து இனிமேல் ஷ்யாம் அண்ணன் பில் பணம் தரவேண்டாம் என்று முடிவெடுத்தோம். பில் பணம் கொடுக்காதது மட்டுமல்ல. நாங்கள் கூட்டமாக அமர்ந்திருக்கிற இடத்துக்கு வந்து ஷ்யாம் அண்ணன் அங்கு போடப்பட்டிருப்பதிலேயே மிகவும் நன்றாக இருக்கும் சாய்வு நாற்காலியில் உட்காருவார். எங்களில் அதிர்ஷ்டசாலியாக இருக்கும் யாராவது ஒருவனிடம் சிகரெட் வாங்கி இழுத்தவாறு கண்களை மூடிப் படுத்திருப்பார். இடையில் திடீரென்று நாங்கள் யாராவது கூறும் வார்த்தையைப் பிடித்துக்கொண்டு உரத்த குரலில் சிரிப்பார்.
நாங்கள் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்ப்போம். ஷ்யாம் அண்ணன் நிமிர்ந்து உட்கார்ந்து சிகரெட்டை இழுத்துப் புகையை விட்டவாறு சற்று கர்வம் கலந்த குரலில் கேட்பார்: "எதைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன்? வெள்ளப்பெருக்கு...”
நாங்கள் வெட்கத்துடன் "தாமோதர நதியின் வெள்ளப் பெருக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்" என்பதைக் கூறுவோம்.
ஷ்யாம் அண்ணன் இரக்க குணத்துடன் எங்களை மாறி மாறிப் பார்ப்பார். பிறகு கேட்பார்: "டைடல் வேவ்னா என்னன்னு உங்கள்ல யாருக்காவது தெரியுமா? இந்த வெள்ளப்பெருக்கை நீங்க யாராவது எப்பவாவது பார்த்திருக்கீங்களா? கடல்நீர் கொந்தளிப்புன்னு சொல்லப்படுற இந்த நீர்ப்பெருக்கத்தை?"
"கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் நேரடியாகப் பார்த்ததில்லை" என்று கூச்சத்துடன் நாங்கள் கூறுவோம்.
ஷ்யாம் அண்ணன் சிரித்துக்கொண்டே கூறுவார்: "அது எப்படி உண்டாகுது? அதை நான் சொல்றேன். கேளுங்க! அப்போ ஒரு முறை முத்து வியாபாரம் பண்ணலாம்னு நினைச்சு நான் தாஹிதி தீவுக்குப் போயிருந்தேன்."
ஷ்யாம் அண்ணன் சொன்ன அந்த நீளமான சுவாரசியம் கலந்த கதையிலிருந்து அவர் எப்படி ஒரு மிகப்பெரிய டைடல் அலையின் முதுகின்மீது உட்கார்ந்து தாஹிதி தீவிலிருந்து ஃபிஜி தீவிற்கு ஒரே நிமிடத்தில் போய்ச் சேர்ந்தார் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.
அந்தக் கதையைக் கேட்ட பிறகு எங்களுடைய மனநிலை எப்படி ஆகியிருக்கும் என்பதைக் கூறுவதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. நடுப்பகல் நேரத்தில் இருக்கும் சூரியனுக்கு முன்னால் எரிய வைக்கப்பட்ட சாதாரண மெழுகுவர்த்தியைப் போல் நாங்கள் ஆகிவிட்டோம்.
ஷ்யாம் அண்ணன் எங்கே இடையில் புகுந்துவிடுவாரோ என்று பயந்துபோய் நாங்கள் மிகவும் மெதுவான குரலில்தான் எதையும் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தோம். எனினும், எவ்வளவுதான் மனதிற்குள் நாங்கள் பேசிக்கொண்டாலும், ஷ்யாம் அண்ணனிடமிருந்து நாங்கள் தப்பவே முடியாது. நாங்கள் பேசுவது எப்படியோ அவருடைய காதுகளில் விழுந்து விடும். நாங்கள் என்ன பேசுகிறோம் என்பதை அவர் தெரிந்து கொள்வார்.
சில நேரங்களில் இப்போது பெரும்பாலான மனிதர்கள் கண்ணாடி அணிவதைப் பற்றி யாராவது ஏதாவது கூறுவார்கள். முன்பைப் போல கண்களுக்குப் பார்வை சக்தி இளைஞர்களுக்கு இல்லாமலிருக்கிறது என்பதைப் பற்றியதாக இருக்கும் பேச்சு. அடுத்த நிமிடம் ஷ்யாம் அண்ணன் தனக்கேயுரிய ட்ரேட் மார்க் சிரிப்புடன் ஆன்டிஸ் மலையின் உச்சிக்கு உலகத்திலேயே மிகவும் பெரிய பறவையான 'கண்டுர்' கழுகுக் கூட்டைத் தேடிச் சென்ற கதையைக் கூற ஆரம்பித்துவிடுவார்.
"ஆமாம்... பார்வையோட சக்தி என்னன்றதை அப்போதான் நான் பார்த்தேன். ஆன்டிக் மலைப்பகுதிகளில் நான் வழி தவறிப்போய் சுற்றிக் கொண்டிருந்தேன். குளிர்ல உறைஞ்சு போறதுக்கு இனி அப்படியொண்ணும் அதிக நேரமில்லைன்ற நிலையில நான் இருந்தேன். என்கூட அர்ஜன்டினா நாட்டைச் சேர்ந்த ஒரு ஆறு அடி உயர மனிதன் இருந்தான். அவன் 'போரோரோ'ன்ற இனத்தைச் சேர்ந்தவன். சிவப்பு இந்திய வழிகாட்டியாக எனக்கு முன்னால் அவன் போய்க் கொண்டிருந்தான். நேரம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிக் கொண்டிருந்தது. சில நிமிடங்களில் சரியான பாதையைக் கண்டுபிடிக்க முடியலைன்னா, அங்கேயே உயிரோடு பனிக்குள்ளே மூடப்பட்டு சாக வேண்டியதுதான். அந்த நேரத்துல மலை உச்சிக்குக் கீழே இருட்டா நின்னுக்கிட்டு இருந்த மேகங்களுக்கு மத்தியில ஒரு சின்ன இடைவெளி தெரிஞ்சது. இருபதாயிரம் அடி உயரத்துல இருந்து கொண்டு அந்த இடைவெளி வழியா எதையாவது பார்க்கமுடியுமா? 'போரோரோ'க்காரர்களின் பார்வை சக்தியைப் பற்றி அப்போ நான் எதுவும் சொல்லல. ரெண்டு கைகளையும் அந்த ஆள் தூரமானியைப் போல தன் கண்களுக்கு மேலே வச்சான். பிறகு அவன் 'ம்'... இனிமேல் பயப்படுறதுக்கு ஒண்ணுமில்ல...'ன்னு சொன்னான்.