ஷ்யாம் அண்ணன் - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
இப்போ நீங்களே நேரடியா அதைப் பார்க்கலாம். ஆனா, அதைக் காட்டுறதுக்கு முன்னாடி ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புறேன். கவனமா கேட்கணும். கொசுவின் வாயில் சுரக்கும் எச்சிலை ரசாயன செயலால் வேற மாதிரி மாற்றலாம்னு நான் சொன்னதை நீங்க மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் அந்த விஷயத்துல வெற்றி அடைஞ்சிட்டேன். முட்டையில இருந்து ஆரம்பிச்சு நீரில் கொசு புழுவாக நீந்திப் போகுறது வரை உள்ள ஒவ்வொரு கட்டத்திலும் அதன் மீது பலவகைப்பட்ட ரசாயன செயல்கள் நடத்தி கொசுவின் எச்சிலை பாம்பின் விஷத்தை விடவும் மிகவும் கொடிய ஒன்றாக நான் மாற்றியிருக்கேன். நேற்று நீங்கள் கேட்ட பயங்கர சத்தம் இதே மாதிரி ஒருத்தன் மீது கொசுவைக் கடிக்கச் செய்து பார்த்ததன் விளைவாக உண்டானது. தான்லினின் நிலையை உங்கக் கண்களாலேயே இப்போ நீங்க பார்த்தீங்க. இனிமேல் இருக்குறது நீங்க ரெண்டுபேர்தான்.'
நிஷிமாரா சைகை காட்டியதைத் தொடர்ந்து எமதூதனைப் போல அங்கே நின்னுக்கிட்டு இருந்த அந்த மனிதன் எந்தவித கஷ்டமும் இல்லாம மார்ட்டினைத் தன் கைகளால் பற்றினான். அவர் பக்கத்துல நெருங்கிப் போன நிஷிமாரா சொன்னான்: 'இந்தக் குழாயைப் பாருங்க. இதுல ஒரே ஒரு கொசுதான் இருக்கு. ஆனா, உங்களை மாதிரி உள்ள இருபது இளைஞர்களை இது எம உலகத்திற்கு அனுப்பும். நீங்க விஞ்ஞான வளர்ச்சியில முன்வரிசையில நின்னுக்கிட்டு இருக்குற அமெரிக்காகாரர் ஆச்சே! அதுனால நண்பர்களான உங்க ரெண்டு பேர்ல உங்களைத்தான் நான் விஞ்ஞான சோதனைக்காக உயிரை இழக்குறதுன்ற மிகப்பெரிய செயலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கேன். நீங்க குறிப்பா ஒண்ணும் செய்ய வேண்டியது இல்ல. இந்தக் குழாயை உடம்புல அழுத்தி வைக்கிறப்போ அதோட மூடி அதுவாகவே திறக்கிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கு. உள்ளே இருக்குற கொசு உங்களைக் கடிக்க அதிக நேரம் ஆகாது...'
தலைக்குள்ளே புழுக்கள் நெளிவதைப் போல் நாங்கள் உணர்ந்தோம். இதுக்கு மேல அங்கு எங்களால இருக்க முடியல. எல்லா பலத்தையும் பயன்படுத்தி நான் நிஷிமாராவை ஓங்கி ஒரு அடி கொடுத்தேன். நிஷிமாரா திடீர்னு கிடைச்ச அடியால ஒரு பக்கம் சாய்ந்து விழுந்தான். அவன் விழுந்தவுடனே, அந்தக் குழாயும் தரையில விழுந்து உடைந்தது. அதற்குப் பிறகு என்ன நடந்ததுன்றதை வர்ணிக்குறது கஷ்டமானது. நீங்களே நினைச்சுப் பாருங்க. மூணு பேர் எமனைப் போல பயங்கரமான ஒரு கொசுவோட கடியில இருந்து தப்பிக்கிறதுக்காக அறைக்குள்ளே இங்கேயும் அங்கேயுமா ஓடுறதுன்றதை நீங்க கொஞ்சம் மனசுல நினைச்சுப் பாருங்க. தான்லினோட இறந்துபோன உடலை அங்கேயே விட்டுட்டு தப்பிச்சு ஓடுறதுக்கான வழி என்னன்னு பார்த்தோம்.
எப்படியோ வாசலை அடைந்து, கதவை இழுத்துத் திறக்கறதுக்காக பிடியில கையை வச்சேன் நான். அப்போ அந்த அரக்கனைப் போன்ற மனிதன் எனக்கு நேராகப் பாய்ந்தான்.
இனி தப்பிக்கிறதுக்கு வழியே இல்ல. அப்போ கொசு என் மூக்குக்கு நேரா ஒரு தடவை பறந்துட்டு போய்க் கொண்டிருந்தது. அந்த மனிதன் உரத்த குரல்ல கத்திக்கிட்டே என் மேல ஒரு புகைவண்டி இயந்திரத்தைப் போல வந்து விழுந்தான். கொசு அவனைக் கடிச்சிருக்குன்றதையும், அவனோட கதை முடிஞ்சிடுச்சுன்றதையும் நான் புரிஞ்சுக்கிட்டேன்.
ஆனா, அதை நினைச்சு அங்கே நிக்கிறதுக்கு நேரமில்ல எழுந்து ஓட நான் நினைச்சேன். அப்போ இன்னொரு ஆபத்து வந்தது. நிஷிமாரா மார்ட்டினை தரையில விழவச்சிட்டான். கொசு அவங்களுக்கு நேரா பறந்துக்கிட்டு இருந்துச்சு. நான் ஓடிப்போய் மார்ட்டினை தள்ளிவிட்டேன். அப்போ நிஷிமாரா உரத்த குரல்ல கத்தினான். கொசு அவனோட கன்னத்துல உட்கார்ந்துக்கிட்டு இருந்துச்சு.
அதற்கு மேல நான் சும்மா இருக்கல. நிஷிமாராவின் கன்னத்துல ஓங்கி ஒரு அடி அடிச்சேன். கொசு, நிஷிமாரா ரெண்டு பேரோட ஆட்டமும் ஒரே நேரத்துல முடிஞ்சிடுச்சு."
கொசுவைக் கொன்ற தன்னுடைய வீரச் செயலைச் சொன்ன ஷ்யாம் அண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னார்: "அதற்குப் பிறகு கொசுவைக் கொல்லணும்ன்ற ஆர்வம் எனக்கு ஒரு முறைகூட வரல!"
பூச்சி
ஷ்யாம் அண்ணன் அன்று கிட்டத்தட்ட தோல்வியைத் தழுவிவிட்டார்.
'கிட்டத்தட்ட' என்று வெறுமனே கூறவில்லை. உண்மையாக சொல்லப்போனால் தன்னுடைய தோல்வியை அவ்வளவு சாதாரணமாக ஒப்புக் கொள்ளக்கூடிய மனிதரில்லை அவர். எவ்வளவு மோசமான சூழ்நிலை உண்டாகி மூலையில் போய் உட்காருகிற ஒரு நிலை வந்தாலும் சிறிதும் பதறாத - வேறு யாருக்கும் இல்லாத ஒரு குணம் ஷ்யாம் அண்ணனுக்கு இருந்தது. வழுவழுப்பான மீனைப் போல எவ்வளவு இக்கட்டான தருணத்திலும் வழுக்கிப்போகும் சாதுர்யம் ஷ்யாம் அண்ணனுக்கு மட்டுமே உரியது.
ஆனால், அன்று ஷ்யாம் அண்ணன் ஒரு மாதிரி ஆகிப் போயிருந்தார் என்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை. மெஸ்ஸில் இருக்கும் எல்லாரின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி மனக் காயமடைந்து போயிருந்தார் அவர்.
மெஸ்ஸின் மூன்றாவது மாடியில் இருந்த ஒரு சிறு அறையில் ஷ்யாம் அண்ணன் மட்டும் தனித்து வசித்து வந்தார். அப்படி இருப்பதுதான் ஷ்யாம் அண்ணனுக்குப் பிடித்திருந்தது என்பது ஒருபுறம் இருக்கட்டும்- அப்படி அவர் இருப்பதுதான் எங்களுக்கும் நிம்மதியைத் தரக்கூடிய ஒன்றாக இருந்தது.
ஷ்யாம் அண்ணனுக்கு நிகரான அசாதாரண தகுதிகளைக் கொண்ட ஒரு மனிதன் அவருக்கு அருகிலேயே இருப்பது என்பது எவ்வளவு ஆபத்தான ஒரு விஷயம் என்று எல்லாரும் நினைத்ததுதான் அதற்குக் காரணம்.
ஷ்யாம் அண்ணன் இருக்கும் அந்த மூன்றாம் மாடியில் அன்று இரவு சுமார் பன்னிரண்டு மணிக்கு ஒரு சிறு பிரச்சினை உண்டாகுமென்று எங்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. சனிக்கிழமை இரவு. அடுத்த நாள் விடுமுறை. அதிகாலையில் எழுந்திருக்சக வேண்டிய தேவையில்லை என்ற நிம்மதியுடன் எல்லாரும் தங்களுக்கு விருப்பமான சீட்டு விளையாட்டு, தமாஷாகப் பேசிக் கொண்டிருத்தல் எல்லாம் முடிந்து அப்போதுதான் போய்ப்படுத்திருப்பார்கள். அப்போது மேஜை, நாற்காலிகள் கீழே தள்ளப்படும் சத்தமும் தொடர்ந்து ஷ்யாம் அண்ணனின் பயங்கரமான ஒரு கர்ஜனையும் கேட்க, எல்லாரும் திடுக்கிட்டு எழுந்தார்கள்.
"என்ன நடந்தது?"
சீட்டு விளையாட்டு போன்றவை ஷ்யாம் அண்ணனின் கண்களில் படக்கூடாது. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இரவு நேரத்தில் எங்களிடம் கோபம் இருக்க, எப்போதையும்விட சீக்கிரமே தன்னுடைய அறைக்கு ஷ்யாம் அண்ணன் போய்விடுவார்.