ஷ்யாம் அண்ணன் - Page 9
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
இப்பவும் அதே நிலை தொடருது. ஆனால், உண்மையா சொல்லப்போனால் நானும் யூதன்தான். என் சகோதரர் காலத்துல யூதர்களுக்கு அணையாவிளக்காக இருந்தார்ன்னா நான் அவர்களின் இனத்தை அழிக்க வந்த கொடியவன். ஜெர்மனியில - ஜெர்மனி மட்டும் எதற்கு? ஐரோப்பா முழுவதும் யூத மதத்தின் மீது வெறுப்பு எந்த அளவுக்குப் பரவிப்போய் இருந்ததுன்றதை நான் சொல்ல வேண்டியது இல்லையே! ரெண்டாயிரம் வருடங்களாக அவர்கள் எங்கள் மீது காட்டி வர்ற பகை சாதாரண ஒரு விஷயமில்ல. அவ்வப்போ இந்த விரோதத்துக்கு சக்தி கொஞ்சம் குறைந்து போய்விட்டது மாதிரி தோணுமே தவிர, முன்பு இருந்ததைவிட மேலும் அதிக பலத்தோட அந்த விரோதக் காற்று வீசிக்கொண்டு இருந்ததுன்றதுதான் உண்மை. சின்ன வயசுல இருந்தே இந்த யூதர்களுக்கு எதிரான பகை எங்க ரெண்டுபேர் மனசையும் பயங்கரமா வேதனைப்பட வைத்தது. ஆனா, ரெண்டு பேரையும் ரெண்டு வெவ்வேறு விதத்துலன்னு சொல்றதுதான் சரியா இருக்கும்.
என் சகோதரர் ஜேக்கப்... ரத்ஸ்டைன்றது எங்களோட குடும்பப் பெயர்... விஞ்ஞானியாக ஆகணும்னு முயற்சி பண்ணிக் கொண்டிருந்தார். அதன் மூலம் யூத இனத்தின் பெருமையை நிலை நாட்டணும்ன்றது அவரோட எண்ணம். ஆனால், நான் என்னோட இனத்தை விட்டு விலகி ஜெர்மன்காரர்களோடு சேர்ந்து யூதர்கள் மீது இருந்த வெறுப்புல இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள முயற்சி பண்ணினேன். சிந்தனையிலும் அறிவிலும் நான் ஜேக்கப்பைவிட எவ்வளவோ பின்தங்கி இருந்ததேன். அதனால என்னோட தாய், தந்தை இருவரும் இறந்தபிறகு என் இருபதாவது வயசுல நான் ப்ரஸீலில் இருந்த ஒரு சுரங்கத்துல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கேயிருந்து நான்கைந்து வருடங்களுக்குப் பிறகு திரும்பி ஊருக்கு வந்தப்போ, நான் ஒரு முழுமையான ப்ரஷ்யாக்காரனா மாறிவிட்டிருந்தேன். நடத்தை, பழகுற விதம் எதிலயும் என்னை வேறொரு ஆளா யாராலும் பார்க்க முடியல.
சந்தர்ப்பச் சூழ்நிலையால் ப்ரஷ்யன் கொடுத்து வைத்தவன் என்று எல்லாருக்கும் காட்டக்கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைச்சது. சுத்த ப்ரஷ்யன் இனத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் கடுமையான பயணத்துக்கு மத்தியில் ப்ரஸீலின் காடுகளில் அலைந்து திரிஞ்சப்போ எங்க சுரங்கத்துக்குப் பக்கத்துல வர்றப்போ இறந்துட்டான். அவனுக்கு என்னைப்போலவே உருவ ஒற்றுமை இருக்குன்னு எல்லாரும் சொன்னாங்க. அந்தப் பொன்னான சந்தர்ப்பத்தை நான் சரியா எனக்குச் சாதகமா பயன்படுத்திக்கிட்டேன். சாகுறப்போ ஜெர்மனியில் கொண்டுபோய் சேர்க்கணும்னு அவன் சில பொருட்களையும் கடிதங்களையும் என்கிட்ட கொடுத்தான். அவனைக் கவனிக்கிறதுக்கு பக்கத்துல நான் மட்டும்தான் இருந்தேன். அந்தக் கடிதங்களைக் கொண்டும் பொருட்களைக் கொண்டும் எந்தவித பயமும் இல்லாமல் வர்னோஃபாக என்னால் நடித்து திரிய முடிஞ்சது. போர்ச் செயல்களில் ஈடுபட்டு நல்ல நிலைமைக்கு என்னால் வர முடிஞ்சது. யாருக்கும் என்மேல கொஞ்சம் கூட சந்தேகம் வரல.
இதற்கிடையில் ஜேக்கப்பைப் பார்க்கணும்னு நான் கொஞ்சம் கூட முயற்சி பண்ணலை. அவரைப் பற்றிய செய்திகளையெல்லாம் நான் பலரிடமும் கேட்டுத் தெரிஞ்சு வச்சிருந்தேன். ஒருநாள் பெர்லினிலிருந்து ம்யூனிச்சிக்குப் போற வழியில ரயில்ல யதேச்சையா நான் பார்த்தேன். அப்போ நான் ராணுவ அதிகாரியா மாறிவிட்டிருந்தேன். ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி விசாரிக்கிறதுக்காகத் தான் நான் ம்யூனிச்சிக்குப் போயிருந்தேன். அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்ட ஏதோ ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜேக்கப் அங்கு வந்திருந்தார். பார்த்தவுடனே எனக்கு ஜேக்கப்பை அடையாளம் தெரிந்துவிட்டாலும் ராணுவ உடையில நான் மிடுக்காக இருந்ததால், அவரால் என்னை உடனே அடையாளம் கண்டுபிடிக்க முடியல. சந்தேகத்துடன் என்னையே ஒண்ணு ரெண்டு தடவை பார்த்துக்கிட்டே இருந்தார். அவ்வளவுதான். நான் யாருன்னு சொல்றதுக்கு எனக்கும் அப்படியொண்ணும் விருப்பம் இல்ல. இருந்தாலும் சூழ்நிலையால் அதையும் சொல்ல வேண்டி வந்தது.
வழியில ஒரு ஸ்டேஷன்ல வண்டி நின்னப்போ, எனக்குக் கீழே வேலை செய்து கொண்டிருந்த ஒரு இராணுவ அதிகாரி எனக்கு வணக்கம் சொல்றதுக்காக அறைக்குள் வந்தான். ஒரே பார்வையில் ஜேக்கப்பை ஒரு யூதன் என்று கண்டுபிடிக்க அவனுக்குச் சிரமமாக இருக்கவில்லை. அணிந்திருக்கும் ஆடைகளாலும், நடவடிக்கைகளாலும் தான் யூதன் இல்லை என்று மற்றவர்கள் நினைக்கும்படியான எந்தவொரு செயலையும் செய்வது அவருக்கு பழக்கமும் இல்ல. எனக்குக் கீழே வேலை பார்த்த அந்த அதிகாரி ஒரு சரியான முரட்டு ஆசாமியாகவும், அதிகார மனப்பான்மை கொண்டவனாகவும் இருந்தான். அவன் ஜேக்கப்பை வைத்துக்கொண்டு என்கிட்ட சொன்னான்: 'இந்த யூதக் கழுதை உங்கக் கூட ஒரே பெட்டியில பயணம் செய்யுதா? இவனைக் கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளட்டுமா?'
மனதில் அது ஒரு மிகப்பெரிய அடியாகத் தோன்றினாலும், அதை மறைச்சிக்கிட்டு அதிகாரத் தொனியில் நான் சொன்னேன்: 'சரி! போகட்டும்! அதெல்லாம் வேண்டாம். போற பாதையில எத்தனையெத்தனை நாய்களும் பூனைகளும் நடந்து திரிகின்றன!'
ஒரு யூதனை அழிப்பதற்காகக் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் தன் கையைவிட்டு நழுவிப் போகிறதே என்பதை நினைத்து மிகுந்த வருத்தத்துடன் அந்த மனிதன் ரயில் பெட்டியை விட்டு கீழே இறங்கிப்போனான். நான் வெளியே பார்த்தவாறு உட்கார்ந்துக்கிட்டு இருந்தேன். ஒருமுறை யதேச்சையா ஜேக்கப்பின் முகத்தைப் பார்த்தப்போ, அவர் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். நான் தர்மசங்கடமான நிலையில் தலையைத் திருப்பிக் கொண்டாலும் சில நிமிடங்கள் கழிச்சு என் பார்வை அவரை நோக்கியே திரும்பியது.
அப்பவும் அவர் என்னையேதான் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் பாசமான ஒரு சிரிப்பு தெரிஞ்சது. பெட்டியில் வேற யாரும் இல்ல. அதை அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். இல்லாவிட்டால் ஒரு யூதனுக்கு முன்னாடி ஒருவன் அமைதியா உட்கார்ந்திருப்பதைப் பார்த்து யாருக்கும் கட்டாயம் சந்தேகம் வரத்தான் செய்யும்.
ஜேக்கப் என்னைப் பார்த்துச் சொன்னார்: 'ஐஸக், நீ யாருன்னு இப்பத்தான் எனக்கே தெரியுது.'
முடிந்தவரை ராணுவ அதிகாரிக்கே இருக்கக்கூடிய மிடுக்கான குரலில் நான் கேட்டேன் : 'நீங்க என்ன பேசுறீங்க? யாருகிட்ட பேசுறோம்னு தெரியுதா?"
'எதுக்காக இப்படி தேவையில்லாம விளையாடணும், ஐஸக்? எனக்குத்தான் எல்லாம் புரிஞ்சு போச்சே. ஒரு உண்மையான ப்ரஷ்யாக்காரன் தனக்குச் சரி நிகரா உட்கார்ந்து கொண்டு வர்ற ஒரு யூதனை மிதிச்சு வெளியே தள்ளக்கூடிய எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிடவே மாட்டான்.'
கண்களில் கண்ணீர் நிறைய நான் அவரைப் பார்த்து பாசத்துடன் அவரோட ரெண்டு கைகளையும் பற்றியவாறு சொன்னேன்: 'என்னை மன்னிச்சுடுங்க, ஜேக்கப். இந்த ஆள்மாறாட்ட வேலையில இருக்குறதுக்காக எவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறேன்றதை உங்களுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லைன்னு நினைக்கிறேன்.'