ஷ்யாம் அண்ணன் - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
ஆனா, முக்கிய ஸ்டீமர் துறையில் பலத்த காவல் இருக்குற மாதிரி ஏற்பாடுகள் செய்தால், திருடன் எந்த விதத்திலும் சகாலினை விட்டுப்போகவே முடியாது. அக்டோபர் வரை திருடனைத் தேடித்திரியிறதுக்கு எங்களுக்கு நாட்கள் இருக்குன்றது விஷயம்.
கம்பியில்லா தந்தி வழியே அலக்ஸான்ட்ரோவஸ்கில இருக்குற போலீஸ் இலாகாவுக்கு விவரத்தைத் தெரியப்படுத்திட்டு நானும் எங்க கேம்ப்ல டாக்டரான மார்ட்டினும் கூலிகளோடு தான்லினைத்தேடிப் புறப்பட்டோம்.
சிறிது நாட்கள் காட்டுலயும் மேட்டுலயும் சுற்றித் திரிஞ்சு கடைசியில ஏமாற்றத்தோட இருந்த நேரத்துல அதிர்ஷ்டவசமா ஒரு துப்பு கிடைச்சது.
டியார் மலைக்குப் பக்கத்துல ஒருநாள் சாயங்கால நேரத்துல நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே வசிக்கிற கிலியாத் என்ற ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒரு வேடன்கிட்ட இருந்து உறுதியாகக் கூறமுடியாத ஒரு தகவல் கிடைச்சது. அன்னைக்குக் காலையில ஒரு சீனாக்காரன் போகுறதைப் பார்த்ததா அவன் சொன்னான்.
இரவு நேரத்துல கூடாரத்துக்குள்ளே படுத்து உறங்குறதுன்றது முடியாத காரியம். சகாலின் தீவுல பயங்கரமான மிருகம்னு கரடியை மட்டும்தான் சொல்லமுடியும். பொதுவா கரடிகள் மனிதர்களை ஒண்ணுமே செய்யாது. ஆனால், பகல் நேரத்துல ஈக்களும் ராத்திரி நேரத்துல கொசுக்களும் மிருகங்களைவிட பயங்கரமான தொந்தரவுகள் தரும். அதனால் நானும், மார்ட்டினும் உறங்க முடியாமல் வெளியே வந்து உட்கார்ந்து எதையாவது பேசிக் கொண்டிருந்தோம். அப்போ திடீர்னு நான் அதிர்ச்சியடைந்து எழுந்தேன்.
'அங்கே பாருங்க மார்ட்டின்!'
மார்ட்டின் நான் காட்டிய பக்கம் தன் பார்வையைத் திருப்பினார். அவர் சொன்னார்: "ஆமா... நல்ல ஒரு வெளிச்சம் தெரியுது. மனிதர்கள் நடமாட்டமே இல்லாத இந்தப் பகுதியில எங்கேயிருந்து இந்த வெளிச்சம் வருது? பேய், பூதம் ஏதாவது இருக்குமோ?"
நான் சிறிது நேரம் கூர்மையாகப் பார்த்து விட்டு சொன்னேன்: "இல்ல... இது அந்த மாதிரி வெளிச்சம் எதுவும் இல்ல. தூரத்துல தெரியிற அந்தப் பாறைக்குப் பின்னாடி ஒரு வீடு இருக்கணும். அதுல இருந்து வர்றதுதான் அந்த வெளிச்சமா இருக்கணும்!"
'இந்த இடத்துல வீடு உண்டாக்கி வாழ்றதுக்கான தைரியம் யாருக்கு வரும்? கிலியாக், ஒரோக், டும்குஸ் ஆகிய இனத்தைச் சேர்ந்த காட்டுவாழ் வேடர்களைத் தவிர வேற யாரும் இங்கே வருவாங்கன்னு சொல்ல முடியாது. இங்கே இதுவரை ஏதாவது கனிமங்கள் இருக்குற சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கேள்விப்பட்டது இல்ல.'
சம்பவத்தைத் தெரிஞ்சிக்கணும்ன்ற ஆர்வம் மனசுல அதிகமாக இருந்தாலும், பொழுது விடியிற வரையில காத்திருப்பதைத் தவிர எங்களுக்கு வேற வழியே இல்ல. ஆனால், அப்போ திடீர்னு பயங்கரமான ஒரு ஓசை அந்த இரவு நேரத்தின் அமைதியையே கெடுத்திடுச்சு.
நானும் மார்ட்டினும் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கிட்டோம். பிறகு எதுவுமே பேசாமல் உள்ளே இருந்து டார்ச் விளக்கைக் கையில் எடுத்துக்கிட்டு நாங்க நடக்க ஆரம்பிச்சோம். எங்க கையில ஆயுதம் எதுவும் இல்லைன்னு சொல்ல முடியாது. இரண்டுபேர் இடுப்புலயும் பிஸ்டல் தொங்கிக் கொண்டிருந்துச்சு.
வெளிச்சம் வந்து கொண்டிருந்த பாறைக்குப் பின்னாடி போகணும்னா அப்படியொண்ணும், அதிக தூரம் நடக்க வேண்டியதில்ல. முன்னூறிலிருந்து நானூறு கஜ தூரம் தான். பாறையை ஒரு முறை சுற்றி மறுபக்கத்தை அடைஞ்சப்போ நாங்க நினைச்சது தப்பாக இல்லைன்றதைத் தெரிஞ்சுக்கிட்டோம். அந்த அளவுக்குப் பெரிசுன்னு சொல்ல முடியாத ஒரு வீட்டின் ஜன்னல் வழியே நல்ல வெளிச்சம் வெளியே தெரிஞ்சது.
எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒண்ணே ஒண்ணுதான். பயங்கரமான அந்தச் சத்தம் அதற்குப் பிறகு கேட்கவேயில்லையன்ற விஷயம்தான் அது. இரண்டு பேரும் ஒரே நேரத்தில் அந்தச் சத்தத்தைக் கேட்காமப் போயிருந்தோம்னா அப்போ அங்கே இருந்த முழு அமைதியைப் பார்த்து அந்தச் சத்தம் எங்க கற்பனையின் விளைவுன்ற எண்ணம் உண்டாகியிருக்கும்.
வீட்டை நெருங்கினவுடனே, நாங்க அப்படியே நின்னோம். இனி என்ன செய்றது? கேள்வியே பட்டிராத ஒரு இடத்துல, இதுக்கு முன்னாடி அறிமுகமே இல்லாத ஒரு வீட்டின் வாசல்ல இரவு நேரத்துல போய் நின்னுக்கிட்டு, கதவைத் தட்டி அழைப்பதுன்றது அவ்வளவு நல்ல ஒரு செயல் இல்லன்னு தெரியும். அதுக்காகத் திரும்பிப் போறதுன்றதும் சிந்திச்சுப் பார்க்க முடியாத ஒண்ணுதான்.
வெளிச்சம் வெளியே வந்துக்கிட்டு இருந்த ஜன்னல் பக்கத்துல நின்னுக்கிட்டு ஆர்வத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தோம். பெரிய ஒரு அறை. பார்ப்பதற்கு அது ஒரு கண்காட்சி சாலையைப் போல இருந்தது. கண்ணாடி போட்ட ஒரு பெரிய மேஜை அறையின் நடுவுல இருந்தது. கண்ணாடிக்குள்ளே என்ன இருக்குதுன்னு எங்களால பார்க்க முடியல. அங்கே யாரும் இல்ல. அந்தச் சமயத்துல யாரும் இருப்பாங்கன்னு எதிர்பார்க்கவும் முடியாது.
அங்கேயிருந்து நகர்ந்து கதவுக்குப் பக்கத்துல போய் அதைத் தட்டலாமா வேணாமான்னு சிந்திச்சுக்கிட்டே நின்னுக்கிட்டு இருந்தோம். அப்போ பின்னாடியிருந்து காதுக்குள்ளே நுழையிற மாதிரி ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் வந்துச்சு. 'உயிர் மேல ஆசையிருந்தா கையைத் தூக்குங்க.'
அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தோம். திருடர்கள் கூட்டத்துல இருக்குறவனை மாதிரி தோற்றம் இருக்குற ஒரு இளைஞன் எங்களுக்கு நேரா கைத்துப்பாக்கியைக் காமிச்சிக்கிட்டு நின்னிருந்தான். அவனுக்குப் பின்னாடி உயரமும், கனமும் இருக்குற, எமதூதனைப் போல காட்சியளிக்குற வேறொரு மனிதன் நின்னுக்கிட்டு இருந்தான். அவன் கையிலும் துப்பாக்கி இருந்துச்சு.
சம்பவம் பலவித திருப்பங்களோட நடந்துக்கிட்டிருந்தாலும் கடைசியில அங்கு நின்னுக்கிட்டு இருந்த மனிதன் யார்னு தெரிஞ்சதும், சூழ்நிலைகள் சாதாரணமாயிடுச்சு.
எங்களை நோக்கி பிஸ்டலைக் காட்டி பயமுறுத்தி கையைத் தூக்கச் சொன்ன மனிதன் நிஷிமாரான்ற ஜப்பான்காரன்றதை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். அவன் ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளன். சகாலினிலுள்ள புழு, பூச்சிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்றதுக்காக அவன் அந்தப் பகுதியில் வந்து தங்கியருக்கான். நாங்கள் எதுக்காக வந்தோம்ன்றதை அவனுக்கு விளக்கிச் சொன்னப்போ, அவன் ஒரு மாதிரி ஆயிட்டான். கொஞ்ச நாட்கள் அங்கேயே தங்கியிருந்து தன்னோட ஆராய்ச்சிகளைப் பார்க்கும்படி அவன் சொன்னான். அதோட காணாமற்போன சீனாக்காரனைத் தன்னோட ஆட்களைப் பயன்படுத்தி கண்டுபிடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யிறதாகவும் சொன்னான். அந்தப் பகுதியில கண்களை முழுமையாகக் கட்டிவிட்டால் கூட அவனுக்கு வழி கொஞ்சமும் தவறாது. அவனோட மனிதர்களின் கண்ணில் மண்ணைத் தூவிட்டு யாரும் அங்கேயிருந்து நடந்து செல்ல முடியாது.
இது எந்த அளவுக்கு உண்மையான ஒரு விஷயம்ன்றதை ஒரு நாள் முடியிறதுக்குள்ளே நாங்களே தெரிஞ்சுக்கிட்டோம். அடுத்த நாள் காலையில் நிஷிமாரா தன்னோட ஆராய்ச்சி சாலைகளைச் சுற்றி நடந்து பார்க்குறப்போ எங்ககிட்ட தன்னோட ஆராய்ச்சிகளைப் பற்றி விளக்கிச் சொன்னான்.