ஷ்யாம் அண்ணன் - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
சாதாரணமா நாம பார்க்குற உயிரினங்களைப் பற்றியல்ல. அவன் ஆராய்ச்சி செய்யிறதுன்றதை சோதனைச் சாலையைப் பார்த்தவுடனே நாங்க புரிஞ்சிக்கிட்டோம். ஆராய்ச்சி பண்றதுக்கான விஷயங்கள் மட்டுமல்ல- உயிரினங்களை வளர்ப்பதற்கும், பெருக்குவதற்கும் உள்ள ரசாயனப் பொருட்களும் மின்சக்தியால் இயங்கக்கூடிய பலவிதப்பட்ட இயந்திரங்கள், கருவிகளும் கூட அங்கு இருந்தன.
மார்ட்டின் ஒருமுறை அந்த மனிதனைப் பார்த்து, 'புழு, பூச்சிகளில் முக்கியமா நீங்க கொசுவைப் பற்றித்தான் ஆராய்ச்சி பண்றீங்கன்னு நினைக்கிறேன்'ன்னார்.
அதற்கு நிஷிமாரா சிரிச்சுக்கிட்டே 'இதுல ஆச்சரியப்படுத்துறதுக்கு என்ன இருக்கு? மனித இனத்தின் அழவிற்கு மிகப்பெரிய எதிரியே கொசுதான். இந்த சலாகின் தீவுல தொடங்கி உலகம் முழுவதும் மலேரியாவைப் பரப்புற வாகனம் கொசுன்றதை நினைக்கிறப்போ, அது எவ்வளவு பெரிய கேட்டை உண்டாக்குதுன்ற விஷயத்தை ஒரு டாக்டர்ன்ற முறையில உங்களால புரிஞ்சிக்க முடியுதா?ன்னு கேட்டான்.
அதற்கு மார்ட்டின், 'ஆனா, இங்கே கொசுக்களை வளர்க்குறதுக்கான ஏற்பாடுகள் இருக்குறதைப் பார்க்குறேனே! பிறகு எப்படி மலேரியாவை ஒழிக்க முடியும்?'னு கேட்டார்.
அப்போ நிஷிமாரா, திரும்பவும் சிரித்தான். 'யாருக்கும் இப்படியொரு சந்தேகம் உண்டாகத்தான் செய்யும். கொசுக்களை அழிப்பதன் மூலம் நான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண விரும்பல. கொசுக்கள் மலேரியா உண்டாக்காமல் இருக்க என்ன வழி என்பதைப் பற்றித்தான் இப்போ நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்' என்றான் அவன்.
நாங்கள் எதுவும் புரியாமல் விழித்தவாறு நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு நிஷிமாரா சொன்னான்: 'கொசுக்கள் எப்படி நோய்க் கிருமிகளை உடம்புக்குளே செலுத்துதுன்ற விஷயம் டாக்டரான உங்களுக்குத் தெரியாதது இல்ல. அவற்றின் முகம் டாக்டர்களின் கையில் இருக்குற பலவகைப்பட்ட கருவிகள் கொண்ட ஒரு பெட்டின்னு சொல்லலாம். உடம்புல வந்து உட்கார்ந்து முதல்ல அது ஒரு கருவியால் தோலைத் திறக்கும். பிறகு வாயில் இருந்து ஒருவகையான எச்சிலை அங்கு பரவவிடும். பிறகு இரத்தம் கட்டாம இருக்குறுதுக்காக அது. மூணாவதா ஒரு கருவி மூலம் இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும். நம்ம உடம்புல ரெண்டாவதா பரவவிடுற எச்சில் வழியாத்தான் நோய் அணுக்கள் உடம்புல பரவுறது. கொசு பிறந்ததற்குப் பிறகு அதன் வாயில் இருக்கும் எச்சிலில் இருந்து நோய் அணுக்களை இல்லாமற் செய்வதற்கான ரசாயனச் செயல்களைச் செய்தால் கொசு எவ்வளவுதான் கடிச்சாலும் மலேரியா வரவே வராது. நான் என் சோதனைச் சாலையில் கொசுக்களின் வாயிலிருக்கும் எச்சிலின் குணத்தை மாற்றுவதற்கான முயற்சியில இப்போ ஈடுபட்டிருக்கேன்.'
நம்பிக்கை இருந்தாலும் இல்லாட்டியும் நிஷிமாரா கூறியதைப் பற்றி கேள்வி கேட்க நாங்கள் தயாரா இல்லை. சோதனைச் சாலையில் மொத்தத்துல என்னவோ ரகசியம் மறைஞ்சிருக்குன்ற எண்ணம் எங்களுக்கு உண்டாச்சு. கடந்த இரவில் கேட்ட பயங்கரமான அந்தச் சத்தத்தை நாங்க மறக்கல. நிஷிமாராகிட்ட அதைப் பற்றி கேட்டதுக்கு ஏதாவது காட்டு மிருகங்களோட சத்தமாக இருக்கும்னு அவன் சொன்னப்போ, அவன் எதையோ மறைக்க முயற்சிக்கிறான்னு எங்களுக்குப் பட்டது.
கொசு
மறுநாள் இரவிலேயே அந்த ரகசியம் என்னன்றதை நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். நிஷிமாரா எங்களை உபசரிக்கிறதுல எந்தக் குறைவும் வைக்கல.
இரவு உணவு முடிஞ்சு உறங்குறதுக்கு ஏற்பாடு பண்ணிக் கொடுக்கப்பட்ட அறையில நாங்க படுத்திருந்தப்போ மார்ட்டின், ‘எதுக்கு இப்பவே படுக்கணும்? வாங்க... கொஞ்ச நேரம் வெளியே போய் உட்காருவோம்'னு சொன்னாரு. வெளியே போகலாம்னு நினைச்சப்போ, நாங்க அதிர்ச்சியடைந்து போனோம். வெளியே கதவு பூட்டப்பட்டிருந்ததுதான் காரணம்.
'இதன் அர்த்தம் என்ன?'ன்னு மார்ட்டின் சிந்தனை மேலோங்க என் பக்கம் திருப்பிக் கேட்டாரு.
அர்த்தம் சரியாக என்னன்னு எனக்குத தெரியலைன்னாலும் அந்தச் செயலில் ஏதோ ஆழமான நோக்கம் இருக்குன்ற விஷயத்துல மட்டும் கொஞ்சமும் எங்களுக்குச் சந்தேகம் வரல.
அவ்வளவு சீக்கிரமா வலையில மாட்ட நாங்களும் தயாரா இல்ல. மண்ணுக்குக் கீழே காற்று போறதுக்காக ஒரு சின்ன சாளரம் இருந்துச்சு. அதன் கண்ணாடியை உடைச்சு எப்படியோ முண்டி முண்டி ஊர்ந்து நாங்க வெளியே வந்துட்டோம்.
கடுமையான இருண்டுபோன இரவு நேரம். சோதனைச் சாலையில் மட்டும்தான் வெளிச்சம் இருந்தது. மெதுவா நடந்து அறையின் பின்பக்கம் இருந்த சாளரத்துக்குப் பக்கத்துல போய் நிற்கலாம்னு முயற்சி செய்யிறப்போ மீண்டும் அந்த பயங்கரமான சத்தம் கேட்டது. முந்தினநாள் கேட்ட அதே சத்தம்தான். அந்தச் சத்தத்தைக் கேட்டவுடன், நாங்க ரெண்டு பேரும் சாளரத்தின் வழியா குதித்து அறைக்குள்ளே நுழைஞ்சோம். ஆனா, என்ன ஆச்சரியம்! நாங்க தேடிக் கொண்டிருந்த அந்த தான்லி தரையில் படுத்து வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்துல முந்தின நாள் பார்த்த அந்த எமதூதனைப் போன்ற முரட்டு மனிதன் நின்னுக்கிட்டு இருந்தான். இன்னொரு பக்கம் கையில ஒரு பருமனான கண்ணாடிக் குழாயைப் பிடிச்சுக்கிட்டு நிஷிமாரா நின்னுக்கிட்டு இருந்தான்.
'என்ன நடக்குது நிஷிமாரா?'- மிகுந்த கோபத்துடன் நான் கேட்டேன்.
நிஷிமாரா எங்களை அங்கு பார்த்த ஆச்சரியத்தில் ஒரு வார்த்தை கூட பேசாமல் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டான். பிறகு தன்னைச் சமாளிச்சுக்கிட்டு அவன் சொன்னான்:
'என் விருந்தினர்களா வந்து தங்கியிருக்குற நீங்க இப்படி நடக்கலாமா? உங்களை இந்த அறைக்குள்ளே யார் வரச் சொன்னது?'
'யாருமில்ல. இப்போ என்ன நடக்குதுன்னு சொல்லுங்க.'
நிஷிமாரா ஆச்சரியம் கலந்த ஒரு சிரிப்புடன் சொன்னான்: ‘என்ன நடந்ததுன்னு நீங்கதான் பார்த்தீங்கள்ல? இந்த மனிதனைப் பாம்பு கடிச்சிடுச்சு. அதுக்கு நான் சிகிச்சை பண்ணுறேன்.'
மார்ட்டின் இதற்கிடையில் தரையில் படுத்திருந்த தான்லினையே உற்றுப் பார்த்தார். அவர் தன் தலையை உயர்த்தி கடுமையான குரலில் சொன்னார்: 'இந்த ஆளு இறந்துட்டாரு. பாம்பு கடிச்சு இவன் இறக்கல. இவனை நீங்க என்ன செய்தீங்க?'
'அதை நீங்க தெரிஞ்சுக்கணுமா?'
இதற்கிடையில் நிஷிமாரா எங்கிருந்து ஒரு கைத்துப்பாக்கியைக் கொண்டு வந்தான்னு தெரியல. அதை எனக்கு நேராகக் காட்டியவாறு அவன் சொன்னான்: 'சரி... அந்தக் கதையை நான் சொல்றேன். கேளுங்க. உலகத்திலேயே மிகப்பெரிய ஆச்சரியமான கண்டுபிடிப்பைக் கேட்டு சாகக்கூடிய அதிர்ஷ்டம் உங்களுக்குக் கிடைச்சதா இருக்கட்டும். உங்க தான்லின் பாம்பு கடிச்சு இறக்கல. அவன் ஒரு கொசு கடிச்சு இறந்திருக்கான். சாதாரண ஒரு கொசு கடிச்சு...'
நிஷிமாரா காதுகளே செவிடாகிற மாதிரி உரத்த குரல்ல சிரிச்சான். நாங்களே அதைக் கேட்டு நடுங்கிப் போனோம். அவன் சொன்னான்: 'நம்ம முடியல... அப்படித்தானே? பரவாயில்ல...