ஷ்யாம் அண்ணன் - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
நான் ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்துக் கேட்டேன்: 'பயப்படுறதுக்கு எதுவும் இல்லாம இருக்கலாம். ஆனா, நீங்க பார்த்தது என்ன?'ன்னு.
அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்: 'நான் என்ன பார்த்தேன்னு கேக்குறீங்களா? கீழே வேடர்களின் கூடாரம் அடிக்கப்பட்டிருக்கு. ஒரு பெரிய நாயுடன் சிவப்பு கோட் அணிந்த ஒரு மனிதன் கூடாரத்துக்குள்ள போறதை நான் பார்த்தேன்'ன்னு.
அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டு நின்னுட்டேன்!"
ஷ்யாம் அண்ணனின் பேச்சைக்கேட்டு நாங்கள் அதைவிட ஆச்சரியத்துக்கு உள்ளாகிவிட்டோம். "இருபதாயிரம் அடி உயரத்துல நின்னுக்கிட்டு ஒரு மனிதன் அணிஞ்சிருக்கிற சிவப்பு நிறக் கோட்டை ஒரு ஆள் பார்க்குறதுன்றது..."
"அதைக் பார்க்க முடியாத கண்ணோட பார்வை என்ன பார்வை? 'கண்டுர்' கழுகோட கண்கள் எப்படிப்பட்டது தெரியுமா? ரெண்டு மைல் உயரத்துல இருந்து கொண்டு செத்துக் கிடக்கிற கால்நடைகளை நல்லா பார்க்க அந்தக் கழுகால முடியும். இந்த 'போரோரா' இனத்தைச் சேர்ந்தவர்கள் கண்களும் அதே மாதிரிதான்றதைப் புரிஞ்சிக்கங்க."
அதற்குப்பிறகு நாங்கள் எதுவும் பேசவில்லை என்பதைச் சொல்ல வேண்டியதில்லையே!
ஷ்யாம் அண்ணன் வந்துவிட்டால் பொதுவாகவே பேச்சை நாங்கள் நிறுத்திவிடுவோம். ஆனால், ஒருநாள் கிரகத்தின் கோளாறு என்று தான் சொல்ல வேண்டும்- யாரோ கொசுவைப் பற்றிப் பேசினார்கள். ஷ்யாம் அண்ணன் அப்போது அங்கு வரவில்லை என்ற தைரியம்தான் அதற்குக் காரணமாக இருக்கவேண்டும். அது மட்டுமல்ல - அப்படியே அதற்குள் வந்து சேர்ந்தாலும்கூட மிக சாதாரணமான ஒரு கொசுவைப்பற்றி ஷ்யாம் அண்ணன் அப்படி சிறப்பாக ஒரு கதையையும் கூற முடியாது என்று அங்கு பேசிய நபர் நினைத்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால், அப்படி நினைத்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிக நேரம் ஆகவில்லை. கொசுவைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்த ஆள் தன்னுடைய கிராமத்தில் கொசுக்களைக் கொல்வதற்கு மனிதர்கள் எப்படிப்பட்ட வழிமுறைகளையெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கூறிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வாசலில் ஷ்யாம் அண்ணன் வந்து நின்றார்.
"எதைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க?"
"சிறப்பா ஒண்ணுமில்ல. கொசுவைப் பற்றி சொல்லிக்கிட்டிருந்தேன்."
அந்த ஆள் அதைக் கூறிவிட்டு மரியாதையுடன் எழுந்து சாய்வு நாற்காலியை ஷ்யாம் அண்ணனுக்கு ஒதுக்கிக் கொடுத்தார்.
ஷ்யாம் அண்ணன் சாய்ந்தவாறு அந்த மனிதரின் கையிலிருந்து ஒரு சிகரெட்டைக் கேட்டு வாங்கிப் பிடித்தவாறு சொன்னார்: "ம்... கொசுவைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்களா?"
எங்களுக்குச் சற்று நிம்மதி கிடைத்ததைப் போல் இருந்தது. ஷ்யாம் அண்ணனின் கவனம் கொசு மீது இல்லை என்பதாக நாங்கள் நினைத்தோம். ஆனால், அடுத்த நிமிடம் ஒரு குண்டு வெடித்தது. சாதாரண குண்டு அல்ல- அணுகுண்டு.
"ஆமா... ஒருமுறை நான் ஒரு கொசுவைக் கொன்னுட்டேன்."
அதைக் கேட்டு நாங்கள் திகைத்து நின்று விட்டோம். ஷ்யாம் அண்ணன் கொசுவைப் பற்றி நடைபெற்ற பேச்சிலும் விலகி நிற்காமல் இருந்ததற்காக அல்ல- யாராலும் நம்பமுடியாத அவருடைய திறமையைப் பார்த்து வியப்பு உண்டாகாமல் எப்படி இருக்கும்? கொசுவைக் கொல்வது என்பது ஒருபக்கம் இருக்கட்டும்- ஷ்யாம் அண்ணனைப் போன்ற ஒரு பெரிய மனிதர் ஒரே ஒரு கொசுவை மட்டும் தனிமைப்படுத்திக் கொல்வது என்பதைக் கனவில் கூட எங்களால் கற்பனை பண்ணிப் பார்க்க முடியவில்லை.
எனினும், கொசுவைப்பற்றி கூறிக் கொண்டிருந்த ஆள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்: "ஒரே ஒரு கொசுவையா?"
"ஆமா... ஒரே ஒரு கொசுவைத்தான் இப்போவரை நான் கொன்னிருக்கேன்"- எங்களின் ஆர்வத்தை இரண்டு மடங்கு அதிகரித்தபடி ஷ்யாம் அண்ணன் தொடர்ந்து சொன்னார்: "அது நடந்தது 1939-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி சகாலின் தீவுல."
சகாலின் தீவு
கேட்பதற்குத் தேவையான ஆர்வம் எங்களிடம் மேலும் அதிகமாக வரட்டும் என்ற எண்ணத்துடன் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தபிறகு ஷ்யாம் அண்ணன் கதையைத் தொடங்கினார்:
"சகாலின் தீவு என்று கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனால், அதற்கு மேல் அதைப்பற்றி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது. அப்படித்தானே! சகாலின் ஜப்பானுக்கு வடக்கே, தெற்கு வடக்காக சரியாகச் சொல்லப் போனா ஒரு வாலைப் போல நீண்டு கிடக்கு. அதோட தெற்குப் பக்கம் ஜப்பான்காரர்களுக்கும் வடக்குப் பக்கம் ரஷ்யாக்காரர்களுக்கும் சொந்தம். அந்தத் தீவின் கிழக்குக் கரையில அம்பர் (சுறாமீனின் குடலிலிருந்து கிடைக்கும் ஒரு வாசனைப்பொருள்) சேகரிக்கும் ஒரு நிறுவனத்தின் ஏஜன்டாக அப்போ நான் வேலை பார்த்துக்கிட்டு இருந்தேன். இந்த அளவிற்கு யாருக்கும் தெரியாத, பாண்டவர்கள் கூட கால் வைக்காத ஒரு இடம் உலகத்துல வேற எங்கேயாவது இருக்குமான்றது சந்தேகம்தான். வருடத்தில பாதி நாட்கள் அங்கே பெருமழை பெய்துக்கிட்டே இருக்கும். மீதி நாட்கள் கடுமையான பனி இருக்கும். அதுக்குமேல மிகப்பெரிய பனிமலை வேற. எங்கே பார்த்தாலும் பனி மூட்டம்தான். எது எப்படி இருந்தாலும் விலை மதிப்புள்ள அம்பர் கொஞ்சம் சேகரித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டுப் போயிட்டா, பிறகு அந்த இடத்தைத் திரும்பிக்கூட பார்க்கக்கூடாதுன்னு மனசுல தெளிவா முடிவு எடுத்திருந்தேன் நான். ஆனா, எல்லாமே வேற மாதிரி ஆயிடுச்சு. எங்கள் நிறுவனத்துல வேலை பார்த்த தான்லின் என்ற சீனாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருநாள் பொழுது புலர்ந்த நேரத்துல காணாமல் போயிட்டான். அவனோடு சேர்ந்து அதுவரை சேர்த்து வைத்திருந்த விலை மதிப்புள்ள அம்பரும்.
சகாலின் தீவு அப்படியொன்னும் சின்னது இல்ல. அதன் முக்கால் பகுதி காடும் மலையுமாக இருந்தது. அந்த இடங்கள்ல யாரோட காலாவது பதிஞ்சிருக்குமா என்பதே சந்தேகம்தான். அங்கே யாரையாவது தேடிக் கண்டுபிடிக்குறதுன்றது அவ்வளவு சாதாரண ஒரு விஷயமில்ல. இருந்தாலும் ஒருவகையில் நிம்மதிதான். அம்பர் மாதிரி இருக்குற விலை மதிப்புள்ள பொருளைத் திருடி சகாலின் தீவுல மறைச்சு வைக்கிறதுனால ஒரு பிரயோஜனமும் இல்ல. அந்தத் திருடிய பொருளை விற்பனை செய்யணும்னா யாராக இருந்தாலும் வெளி உலகத்துக்குப் போகாம இருக்க முடியாது. சகாலின் தீவுல இருந்து - ஏப்ரல் மாதத்துல இருந்து அக்டோபர் மாதம் வரை யாராவது வெளியே கடந்து போகணும்னா முக்கிய நகரமான அலெக்ஸான்ட் ரோவஸ்கில இருந்து வ்ளாடிவஸ்டோக்குக்கு ஸ்டீமர் இல்லாம முடியாது. அக்டோபர் மாதம் கடந்துட்டா கடல்நீர் உறைந்துபோய் பனிக்கட்டியா மாறிடும். அப்போ நாய்களை வச்சு இழுக்குற, 'ஸ்லேஸி'ல் ஏறி ஓடிப்போக முடியும்.