ஷ்யாம் அண்ணன் - Page 10
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6348
'அது எனக்குத் தெரியும். ஆனால், யூத கோபத்தை இப்படியா காட்டுவது? இந்த வேஷம் உன் உடம்புத் தோலைப் பொசுக்குறது மாதிரி இல்லையா?'
பார்த்தால் பயந்து போகிறமாதிரி ஜேக்கப்பின் முக பாவங்கள் திடீர்னு மாறின. அவரோட கண்களில் இருந்து கிளம்பிய தீப்பொறி மனசுக்குள்ள எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. நெருப்பு மலையையே அவர் காட்டுவதாக உணர்ந்து நான் நடுங்கிப் போயிட்டேன்."
விருந்து
அன்று விடுதியில் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் காரணம்- அன்று விடுமுறை நாள். இரண்டாவது- விடுதியில் இருக்கும் கௌரன் என்ற பையன் ஏதோவொரு தேர்வில் வெற்றி பெற்றிருந்தான்.
அதற்காக நன்கொடை ஏதாவது கேட்டு விடுவார்களோ என்று பயந்தது காரணமாக இருக்கலாம்- ஷ்யாம் அண்ணன் தன் வயிற்றுக்குக் கேடு இருக்கிறது என்று கூறி ஒதுங்கி இருந்து விட்டார். கடையிசில் ஷ்யாம் அண்ணனுக்காகத் தனியாகச் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டியதாகி விட்டது.
எல்லாரும் உணவு சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள். ஷ்யாம் அண்ணனுக்காகத் தனியாகத் தயாரிக்கப்பட்ட ஜீரணப் பிரச்சினை உள்ளவர்களுக்கென்றே தயாரிக்கப்பட்ட 'கேட்ஃபிஷ்' குழம்பைப் பரிமாறுவதற்காக அதற்கென நியமிக்கப்பட்டிருந்த மனிதன் ஷ்யாம் அண்ணனின் கிண்ணத்தை நோக்கிக் குனிந்ததுதான் தாமதம், அவர் தன் இரண்டு கைகளையும் கோர்த்து கிண்ணத்தின் மீது வைத்துக் கொண்டு மறுத்தார்: "எனக்கு இது வேண்டாம். நான் இதைச் சாப்பிட மாட்டேன்."
விருந்திற்குச் செலவு செய்த கௌரன் கெஞ்சுகிற குரலில் கேட்டான்: "ஷ்யாம் அண்ணே, எதற்கு இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்க? நோயாளிகளுக்கு கேட்ஃபிஷ் நல்லதுன்னு சொல்லுவாங்க. ஜீரண பிரச்சினை இருக்காது. வயிற்றுல கேடு இருக்குன்னு நீங்க சொன்னதுனால..."
"சீக்கிரமா ஜீரணம் ஆகும்னா, நீயே அதை வயிற்றுக்குள்ளே போட்டுக்கோ. தேவையில்லாம மற்றவர்களுக்கு உதவ நடந்து திரிய வேண்டாம்" ஷ்யாம் அண்ணன் கோபம் தலைக்கேற கூறினார்.
அப்போது நான் தலையிட வேண்டி வந்தது. ஏதோ ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு நான் சொன்னேன்: "அது தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்கிவிடும், ஷ்யாம் அண்ணே எங்களுக்காகச் சமையல் செய்திருப்பது மாமிசம்... அதுவும் கொழுப்பு ஏராளமா இருக்குற ஆட்டோடது... ஷ்யாம் அண்ணே, உங்களுக்க அது ஆகாதே!"
ஷ்யாம் அண்ணன் இக்கட்டான நிலையில் மாட்டிக் கொண்டு சொன்னார்: "தற்போதைக்கு அதுவே பரவாயில்லைன்னு நினைக்கிறேன், தம்பி! வேற எந்த மீனாக இருந்தாலும் பரவாயில்ல. இந்த கேட்ஃபிஷ்னு சொல்லப்படுறதை பட்டினியே கிடந்து செத்தாலும் பரவாயில்ல, நான் சாப்பிடமாட்டேன்."
"இதுமேல அப்படி என்ன வெறுப்பு?" சமையல்காரன் ஆட்டு மாமிசத்தை ஷ்யாம் அண்ணனின் கிண்ணத்தில் பரிமாறுவதற்கிடையில் கௌரன் கேட்டான். ஆனால், இரண்டு முறை பரிமாறப்பட்ட ஆட்டு மாமிசத்தை முழுமையாகச் சாப்பிட்டு முடித்து கிண்ணத்தை நாய் நக்கிய பாத்திரத்தைப் போல் ஆக்குவதற்கு முன்பு ஷ்யாம் அண்ணன் தலையை உயர்த்தவேயில்லை.
அதற்குப் பிறகு சட்னி வந்தது. தயிர் வந்தது. கடைசியாக 'சந்தேஷ்' (வங்காளிகளுக்கு மிகவும் விருப்பமான இனிப்புப் பலகாரம்) வந்தது. இதற்கிடையில் ஷ்யாம் அண்ணன் மெதுவாகத் தன் தலையை உயர்த்துவதைப் பார்த்து நான் சொன்னேன்: "இன்னைக்கு உங்க வயிற்றுல கோளாறு இருக்குன்றது என்னவோ உண்மை." அக்யூட் ஆங்கிளில் அவர் உணவு உண்ண ஆரம்பித்தார். அப்ட்யூஸ் ஆங்கிளை அடைந்தபோது அவருடைய உடம்பும் மனதும் ஒரே நிலையில் தெளிவு நிலைக்கு வந்தன. பிரகாசமான ஒரு சிரிப்புடன் அவர் சொன்னார்: "அதற்காகத்தான் எனக்காக இப்படியொரு தனியான ஏற்பாட்டைச் செய்து வச்சிருங்கீங்கள்ல? சரிதான்... உங்களைக் குறை சொல்லி பிரயோஜனம் இல்ல. எனக்கு ஏன் கேட்ஃபிஷ்ஷைப் பிடிக்கலைன்னு தெரியுமா?"
"ஏன் அவரைப் பிடிக்கலைன்றதை நாங்களும் கொஞ்சம் தெரிஞ்சிக்க விரும்புறோம்." - கௌரன் மெதுவான குரலில் சொன்னான்.
"சொல்றேன்... சொல்றேன்..."
திடீரென்று சந்தேஷ் தொண்டையில் அடைத்து கொண்டதால் அதற்குப் பிறகு அவர் சொன்னது எதுவும் எங்கள் காதுகளில் விழவில்லை.
சாப்பிட்டு முடித்து அறைக்குள் நுழைந்த ஷ்யாம் அண்ணன் அவர் எப்போதும் உட்காரக்கூடிய சாய்வு நாற்காலியில் கால்கள் இரண்டையும் நீட்டிக் கொண்டு சிசிரனிடம் ஒரு சிகரெட்டை 2999- ஆவது தடவையாக இரவல் வாங்கிப் புகைத்தவாறு சொல்ல ஆரம்பித்தார்:
"1929-ஆம் வருடம் செப்டம்பர் 23-ஆம் தேதி உண்டான சந்திரகிரகணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. காரணம்- அந்தக் கிரகணம் இந்தியாவுல ஒரு இடத்துலயும் தெரியலைன்றதுதான். டாக்டர் ஆல்ஃப்ரெட் ஹில் 1930 எஃப்.ஆர்.ஜி.எஸ். அதாவது ஃபெல்லோ ஆஃப் தி ராயல் ஜியோக்ராஃபிகல் சொசைட்டியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டப்பட்டார். கிவ்விற்கும் எட்வர்ட் ஏரிக்கும் நடுவில் ஒரு புதிய நதி தோன்றியதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க."
ஷ்யாம் அண்ணனைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'கேள்விப்பட்டது இல்லை' என்று எல்லாரும் ஒரே குரலில் சொன்னதும் அவர் உற்சாகத்துடன் தன் கதையைத் தொடர்ந்தார். "ஆப்பிரிக்காவுல பெல்ஜியம் காங்கோவிற்குக் கிழக்கே விஷுவத் ரேகைக்குக் கொஞ்சம் தள்ளி தெற்கு திசையில நடந்தது அது..."
"ஜெர்மனியில் ஒரு புகழ்பெற்ற சர்க்கஸ் கம்பெனிக்கும் ஸ்பெயினிலிருந்த ஒரு மிருகக் காட்சி சாலைக்கும் கான்ட்ராக்ட் எடுத்து ஆப்ரிக்காவின் காடுகளில் அலைந்து திரிந்து பயங்கரமான மிருகங்களைப் பிடிக்கும் வேலையில் அப்போது நான் ஈடுபட்டிருந்தேன். மிருகக்காட்சி சாலைக்குத் தேவையான பெரும்பாலான மிருகங்களை நான் பிடித்து முடித்திருந்தேன். ஒட்டகச்சிவிங்கிக்கும் வரிக்குதிரைக்கும் இடையில் இருக்கிற ஒரு வினோதமான மிருகமான ஒகாபி, காங்கோவில் இருக்கும் சிவப்பு நிறக் குள்ள மிருகம், நரிப்பூனை, புள்ளி இருக்கும் கழுதைப்புலி, பல மாதிரியான பறவைகள், மீன்கள், பாம்புகள் இப்படி எத்தனையோ... இனி சர்க்கஸ் கம்பெனிக்காரர்களுக்குத் தேவைப்படுற மிருகங்களை நான் கொண்டு போய் சேர்க்கணும். அது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். அவர்களுக்குத் தேவையானது ஒரு குட்டி கொரில்லா. கொரில்லாக்களைப் பிடிக்கிறதுன்றது அவ்வளவு சாதாரண விஷயமில்ல. அடர்ந்த காடுகளுக்குள்தான் அவை இருக்கும். காங்கோவிலும் காமெரூனிலும் இருக்கிற அடர்த்தியான காடுகளில் தான் முதன்முறையா நான் பயங்கரமான இந்த கொரில்லாக்களைப் பார்த்தேன்.
அதற்குப் பிறகு கிவ் ஏரிக்கு அருகில் மலை மீது பத்தாயிரம் அடி உயரத்தில் இருக்கிற காட்டில் முதல்ல பார்த்ததைவிட கொஞ்சம் பெருசா இருக்கிற கொரில்லாக்களைப் பார்த்தேன். இப்போ அவை இருக்கிற இடத்தை நோக்கித்தான் என் பயணம். ஆப்ரிக்காவில்... குறிப்பாக காங்கோவில் இருக்குற காடுகளுக்குள் நான் நுழைய வேண்டும். அது எவ்வளவு பெரிய ஆபத்தான விஷயம்ன்றது அங்கே போய் வந்தவனுக்குத்தான் தெரியும்.