ஷ்யாம் அண்ணன் - Page 13
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"நீங்க சொல்றது உண்மைதான்"- நீண்ட ஒரு பெருமூச்சை விட்டவாறு டாக்டர் ஹில் சொன்னார்: "ஆனா, உங்களைப் பார்த்ததால் இந்த முறை எந்தவித பிரயோஜனமும் இல்லை, மிஸ்டர் தாஸ். இந்தத் தடவை எனக்கு உங்களால் உதவ முடியாது."
"சரி... என்கூட வாங்க. மற்ற விஷயங்களைப் பிறகு பார்க்கலாம்” என்று கூறியவாறு டாக்டர் ஹில்லின் கையைப் பிடித்தபோது அவர் தடுத்துக் கொண்டு சொன்னார்: "என்னை உடன் அழைத்துக் கொண்டு போறதா இருந்தால், நீங்களும் உங்க கூட இருக்குற ஆளும் தேவையில்லாத ஆபத்துல சிக்க வேண்டியது வரும் புரியுதா?"
குகைக்குள்ளும் தப்பட்டையின் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. சிறிது நேர அமைதிக்குப் பிறகு நான் சிரித்துக் கொண்டே சொன்னேன்: "ஆபத்துகளை இழுத்து தலையில் போட்டுக் கொள்வது என் குணம். அது உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர் ஹில்?"
டாக்டர் ஹில்லைக் கூடாரத்திற்கு அழைத்துக் கொண்டு வந்து எல்லா விஷயங்களையும் அவரிடம் சொன்னேன்.
டாக்டர் ஹில்லை புவியியல் நிபுணர் என்று சொன்னால் அது அவ்வளவு பொருத்தமான ஒன்றாக இருக்காது. வாழ்க்கையில் ஒரு துப்பாக்கியை ஒழுங்காகப் பிடிக்க அவர் இதுவரை படித்ததில்லை. ஆனால், உலகத்தில் மிகவும் சிரமமான இடங்களைப் போய் பார்ப்பது என்பது அவருக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம் அமேஸான் நதியின் ஆரம்ப இடத்தில் வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்னாடி நான் டாக்டர் ஹில்லைப் பார்த்து அறிமுகமானேன். அந்த முறை நான் அவரை அமேஸான் நதியில் ஒரு கொடுமையான 'அலிகேட்டர்' முதலையிடமிருந்து காப்பாற்றினேன்.
டாக்டர் ஹில் சொன்னதைக் கேட்டபோது இந்த முறை அவரைக் காப்பாற்றவோ இல்லாவிட்டால் தானே தப்பிக்கவோ அவரால் முடியாது என்று தோன்றியது. தொடர்ந்து மூணு நான்கு நாட்களாகக் கேட்டுக் கொண்டேயிருக்கும். தப்பட்டை ஒலியின் நோக்கமே டாக்டர் ஹில்தான் என்ற விஷயத்தைச் சொல்ல வேண்டியதில்லையே! காங்கோவின் இந்தப் பகுதிக்குப் புவியியல் சம்பந்தப்பட்ட பயணத்திற்காக வந்த டாக்டர் ஹில் தன்னுடைய குழந்தைத்தனமான செயல்களால் இங்குள்ளவர்களுக்க கெட்ட மனிதராகத் தோன்றிவிட்டார்.
இங்குள்ள காட்டுவாழ் மக்கள் இப்போதும் பழமையான முறைகளில்தான் வாழ்கிறார்கள். அவர்களின் காட்டிற்கு அப்பால் ஒரு உலகம் இருக்கிறது என்பதே அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் ஒரு கிராமத்தில் டாக்டர் ஹில் சுற்றித் திரிஞ்சப்போ முதல் வினோத மனிதர் அங்கு வந்திருக்கிறார்னு அவங்க அவரைப் பாராட்டினாங்க. அவருக்கும் அவருடன் வந்தவங்களுக்கும் அவங்க தேவையான உதவிகளைச் செஞ்சாங்க. டாக்டர் ஹில் பதிலுக்கு அவர்களுக்கு உதவி செய்யப்போனப்போதான் பிரச்சினையே உண்டானது.
அந்தக் கிராமத்தின் தலைவன் நீண்ட நாட்களாகவே தலைவலியால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தான். கிராமத்தின் புரோகிதரும் மந்திரவாதிகளும் பலவகைப்பட்ட மந்திரங்களையும் சொல்லி பூதங்களையும், ஆவிகளையும் விரட்ட முயற்சி பண்ணினாங்க. ஆனா, தலைவலி கொஞ்சமும் குறைந்ததாக இல்லை. டாக்டர் ஹில் பரிசோதனை செய்து பார்த்து ஒரு ஆஸ்பிரின் மாத்திரையைத் தந்து தலைவலியை ஒண்ணுமில்லாமப் பண்ணிட்டார். அதற்குப் பிறகு அவரை விடுவார்களா? தலைவனின் பார்வையில் அவர் பத்து மடங்கு மிகப்பெரிய மனிதராகத் தோன்றியபோது, கிராமத்திலிருந்த புரோகிதருக்கும் மந்திரவாதிகளுக்கும் அவர் எதிரியாகத் தெரிந்தார். காட்டு வாழ் மனிதர்களுக்கு மத்தியில் தங்களின் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள புரோகிதர்களும் மந்திரவாதிகளும் செய்யாத கெட்ட காரியங்கள் ஒண்ணு கூட இல்லை. அதற்கேற்றபடி சந்தர்ப்பம் வந்தது. அவர்களின் அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். ஏதோவொரு தொற்றுநோய் காரணமாக அங்கிருந்த சில மிருகங்கள் இறந்துவிட்டன. டாக்டர் ஹில் தன்னுடைய மாயச் செயல்களால் அந்த மிருகங்களைக் கொன்னுட்டார்னு அவங்க செய்திகளைப் பரப்பினாங்க. இதே மாதிரி மனிதர்களையும் கொல்லுறதுதான் அவரின் நோக்கம்னு அவங்க சொன்னாங்க. தலைவனிடமும் அவர்கள் இதே விஷயத்தைச் சொன்னாங்க.
தமக்கு இது ஒரு நல்ல சூழ்நிலை இல்லைன்னு புரிஞ்சுக்கிட்ட டாக்டர் ஹில் தன் மனிதர்களுடன் ஓடிப்போக தீர்மானித்ததன் மூலம் அவரே சீக்கிரமா ஆபத்தை வரவழைச்சுக்கட்டார். அவர் கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஒரு இருட்டில் இந்தக் குகையில் வந்து மாட்டிக்கொண்டார். அவருடன் வந்த மற்றவர்கள் அனைவரும் பிடிபட்டு விட்டார்கள். இங்கு வந்ததன் மூலம் தப்பித்து விட்டார் அப்படின்னும் சொல்ல முடியாது. தப்பட்டையை ஒலிக்கச் செய்து காடு முழுவதும் முன்னறிவிப்பு செய்திட்டாங்க. அவர்களிடமிருந்து தப்பிக்கிறதுன்றது நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்ல.
அன்று இரவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த தப்பட்டை ஒலியிலிருந்து காட்டை முழுமையாக ஆக்கிரமித்து அவர்கள் இந்தப் பகுதியை நோக்கி வந்துக்கிட்டு இருக்காங்கன்றது தெரிஞ்சது. இனிமேல் அவர்களிடமிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. மலை வழியாக கிழக்குப் பக்கமாகக் கடந்து டங்கனிக்காவை (டான்ஸானியா) அடையணும்.
நடுராத்திரி நேரத்தில் தப்பட்டை ஒலி நின்னப்போ கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அனேகமாக பொழுது புலர்ந்த பிறகுதான் அவர்கள் திரும்பவும் தங்களின் தேடுதல் வேட்டையைத் தொடருவாங்க.
அதனால் எல்லாரையும் அழைத்து இரவோடு இரவாகவே இந்த இடத்தை விட்டுக் கிளம்பி விடலாம் என்று சொன்னேன் நான்.
ஆனால், நீண்ட தூரம் போக முடியல. பொழுது விடியிற நேரத்துல கிவ் ஏரியின் கரையை அடையிறப்போ காடும் மலையும் பூகம்பம் உண்டானதைப் போல குலுங்கின. அதிர்ச்சியுடன் நாங்கள் பார்த்தோம். பல நிறங்களில் கன்னாபின்னாவென்று பச்சை குத்தியிருந்த ஆயிரக்கணக்கான காட்டு வாழ் மனிதர்கள் வாள், ஈட்டி ஆகியவற்றைக் கையில் வைத்துக் கொண்டு இந்திர ஜாலத்தால் பூமி பிளந்ததைப் போல எங்களைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.
அதற்குப் பிறகு உண்டான மோசமான சம்பவத்தை வார்த்தைகளால் கூறவே முடியாது. புரோகிதர்களின், மந்திரவாதிகளின் அட்டகாசத்தைத் தாங்க முடியல. எங்கள் கைகளைப் பின்னால் கட்டிய அவர்கள் ஊழித்தாண்டவம் ஆடினார்கள். அவர்களின் பேச்சிலிருந்து எங்களை நெருப்பில் சுட்டுப் பொசுக்கப் போகிறார்களோ அல்லது கொப்பறையில் போட்டு வறுக்கப் போகிறார்களோ என்பதை இன்னும் அவர்கள் தீர்மானிக்கவில்லை என்று தெரிந்தது.
மத்தியானம் காட்டு வாழ் மக்களின் தலைவன் அங்கே வந்தான். அவனடைய முக வெளிப்பாட்டையும் அடிக்கொருதரம் தன்னோட நெற்றியைத் தடவியதைப் பார்த்தப்போ இப்போதைக்கு ஒரு ஆஸ்பிரின் கிடைச்சா நல்லா இருக்கும்னு அவன் நினைப்பது தெரிஞ்சது. இருந்தாலும் புரோகிதருக்கு பயந்து அவன் பேசாம இருக்குறான்றதையும் நாங்க தெரிஞ்சுக்கிட்டோம்.
காட்டு வாழ் மனிதனாக இருந்தாலும் அவன் நன்றி இல்லாத மனிதனா இல்ல. தலைவலியை இல்லாமற் செய்ததற்காக அவன் இதயம் டாக்டர் ஹில் மீது நன்றியுடன் இருந்தது. அருகில் வந்த டாக்டர் ஹில்லைப் பார்த்து அவன் கேட்டான்: