ஷ்யாம் அண்ணன் - Page 15
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அந்தப் பெரிய பூமி அதிர்ச்சியில் காட்டுவாழ் மனிதர்கள் கண்ட பாதைகளிலெல்லாம் தலைதெறிக்க ஓட ஆரம்பித்தார்கள். பூமி அதிர்ச்சி நின்னப்போ நாங்கள் மட்டுமே சுயநினைவற்ற நிலையில் அங்கே நின்னுக்கிட்டு இருந்தோம். கிவ் ஏரியிலிருந்து ஒரு நதி இடைவிடாது ஓடிக்கொண்டிருந்தது. இந்த விஷயத்தை அறிவித்ததற்காகத்தான் டாக்டர் ஹில்லுக்கு ஃபெல்லோஷிப்பே கிடைத்தது."
கதையைச் சொல்லி முடித்தபோது சிபு கேட்டான்: "அந்த மீன் பூகம்பம் வரப்போறதை முன்கூட்டியே காட்டியது... அப்படித்தானே? அந்த மீனோட பேர் என்ன?"
"அந்த நாட்டுல இருக்குற ஒரு வகை மீன் அது" - மிடுக்கான குரலில் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "ஆங்கிலத்தில் அதை கேட்ஃபிஷ் என்று அழைப்பார்கள். ஜப்பானில் இருக்குறப்போ அதன் குணங்களை நான் தெரிந்து வைத்திருந்தேன். ஜப்பான்ல அடிக்கடி பூகம்பம் உண்டாகும். பூகம்பம் உண்டாகுறதுக்கு முன்னாடி கேட்ஃபிஷ் ஆச்சரியப்படும் வகையில் அதை முன்கூட்டியே எப்படி வெளிப்படுத்தும் என்ற உண்மையை ஜப்பான் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடிச்சாங்க. பூகம்பம் வர்றதுக்கு முன்னாடி அதை எப்படியோ தெரிந்து கொள்ளும் கேட்ஃபிஷ் துடிக்க ஆரம்பிக்கும். அதனால் பூகம்பம் வர்றதை முகூட்டி தெரிஞ்சுக்கிறதுக்காகவே பலரும் இந்தவகை மீன்களை வளர்க்கிறாங்க."
சிறிது நேரம் தன்னுடைய பேச்சை நிறுத்திய ஷ்யாம் அண்ணன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சொன்னார்: "அன்னைக்கு எங்க எல்லாரோட உயிரையும் காப்பாற்றியது அந்த மீன் தான். அதை எப்படி நான் சாப்பிடுவேன்?"
பேய்த் தீவு
ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டார். ஷ்யாம் அண்ணன் இப்படி அடிக்கடி கொட்டாவி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இரும்புக் கம்பிகள் வாயாக வாமன வயதைக் கொண்ட இரண்டு கால் மிருகங்களின் ஆணவத்தைப் பார்த்து மனம் நொந்து போன மிருகங்களின் ராஜாவான சிங்கராஜா அவ்வப்போது சேர்வைப் போக்கிக் கொள்வதைப் பார்த்தவர்களுக்கு ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விடும் காட்சியை மனதில் கற்பனை பண்ணிப் பார்த்துக் கொள்ள முடியும். அந்த அளவிற்குப் பெரிதாக வாயைத் திறந்து அவர் கொட்டாவி விடுவார். அந்த நேரத்தில் வெளியே கேட்கும் சத்தம் இருக்கிறதே! அதுவே குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒன்றுதான். குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் எண்ணெய் என்ற ஒன்றையே பார்த்திராத மாட்டு வண்டி சக்கரத்தில் கேட்பதைப் போன்ற ஒரு பெரும் சப்தம் அவரின் கொட்டாவியின் போது கேட்கும். எனினும், சிங்கம் அவர்களால் ஷ்யாம் அண்ணன் செய்வதைப் போல கையால் சொடக்கு போட முடியாது என்ற விஷயத்தை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டது எங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அதன் அழகைப் பார்த்து அல்ல- எதற்காக அவர் கொட்டாவி விட்டார் என்பதை நினைத்துப் பார்த்துத்தான் நாங்கள் ஆச்சரியப்பட்டோம். மாலை நேரத்தில் நாங்கள் திட்டமிட்டிருக்கும் விஷயங்களெல்லாம் நடக்காது போய்விட்டால்?
பொழுது விடிந்தது முதல் கணக்கு வழக்கில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது. மாநகராட்சி ஆட்களின் கருணை காரணமாக இந்த மழையின் போது கல்கத்தாவின் தெருக்களில் நடப்பது என்பது அவ்வளவு சாதாரணமான ஒரு விஷயம் இல்லை. ட்ராம்களும் பஸ்களும் தெருக்களில் நின்றிருந்தன. கல்கத்தா, வெனிஸ் நகரமாக மாறிவிட்டது என்று கூறினால், அது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று என்று யாருக்கும் தோன்றாது. இந்த அவலம் பிடித்த மாலை நேரத்தின் சோர்வைச் சற்று குறைப்பதற்கு ஷ்யாம் அண்ணனைப் பயன்படுத்தினால்தான் சரியாக இருக்கும் என்று நாங்கள் மனதில் நினைத்திருந்தோம்.
ஆனால், மேகங்கள் முழுமையாக மூடியிருந்த இந்தச் சூழ்நிலையில் ஷ்யாம் அண்ணனும் நனைந்துபோன அவலைப் போல மாறியிருப்பார் என்று நாங்கள் யாரும் நினைக்கவில்லை.
சிபு மீன் பிடிக்கும் விஷயத்திலிருந்து பேச்சை ஆரம்பித்து வைத்தான். பேச்சில் ஒரு சுவாரசியம் உண்டாக வேண்டும் என்பதற்காக ராமன் சொன்னான்: "எது எப்படியோ மழைக்காலத்துல மீனுக்கு நல்ல இரை கிடைக்கும்."
அதற்குப் பிறகும் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு ஷ்யாம் அண்ணன் சிறிதும் அசையவில்லை. ஒருமுறை தான் அளவில் மிகப்பெரியதாக இருக்கும் ஒரு விரால் மீனைத் தூண்டில் போட்டுப் பிடித்த விஷயத்தைத் தன்னுடைய இரண்டு கைகளைக் கொண்டும் எடையையும் நீளத்தையும் காட்டியவாறு எல்லாரிடமும் கூறினான் கோரா. அதற்குப்பிறகும் எந்த அசைவும் இல்லை.
விரால் மீனைப் பற்றிக் கூறினால் ஷ்யாம் அண்ணன் அடுத்த நிமிடம் தென்துருவக் கடலில் வாழும் பயங்கரமான திமிங்கலங்களை தான் வேட்டையாடப்போன கதையைக் கூற ஆரம்பித்துவிடுவார் என்று கோரா மனதில் கணக்குப் போட்டிருந்தான். ஆனால், அதற்குப் பதிலாகத் தளர்ந்து போன நிலையில் சிகரெட் புகையை வெளியே ஊதியவாறு உட்கார்ந்திருந்தார் ஷ்யாம் அண்ணன்.
அதற்குப் பிறகு நாங்கள் மலை ஏறும் விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். கைக்கெட்டும் தூரத்தில் இமயமலை இருந்தாலும், வங்களா இளைஞர்களுக்கு மலை ஏறும் விஷயத்தில் சிறிது கூட திறமையோ, ஆர்வமோ இல்லாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்று கோரா மிகவும் வருத்தமான குரலில் கேட்டான்.
இரண்டு கால்களையும் நாற்காலியின் கைகளில் வைத்தவாறு உட்கார்ந்திருந்த ஷ்யாம் அண்ணனிடம் சிறிய அளவிலாவது அசைவு உண்டாகிறதா என்று எல்லாரும் பார்த்தோம். கண்களை மூடிக்கொண்டு புகைப் பிடிப்பதில் மட்டும் முழுமையாக ஈடுபட்டவாறு ஐம்புலன்களையும் அடக்கியிருக்கும் ஒரு முனிவரைப்போல அவர் அமர்ந்திருந்தார்.
நாங்கள் வேறு வழியில்லாமல் எடை தூக்குவதைப் பற்றிப் பேச ஆரம்பித்தோம். விஞ்ஞான சம்பந்தமான விஷயங்களைக் கூறும் அறிவுடன் சிபு சொன்னான்: "சிறு சிறு பூச்சிகள் கூட தங்களைவிட பல மடங்கு எடை கொண்ட பொருட்களைத் தூக்க முடிகிறபோது, மனிதனுக்கு மட்டும் ஏன் முடியாமல் போகிறது?"
அப்போது ஷ்யாம் அண்ணன் கொட்டாவி விட்டார். கடைசியில் மௌனத்தில் இருக்கும் யாரையும் கூட கலைத்துவிடக் கூடிய தன் பேச்சுத் திறமை ஷ்யாம் அண்ணன் விஷயத்தில் எடுபடாது என்பதைப் புரிந்து கொண்ட ராமன் நேராகவே போய் கேட்டான்: "எப்பவாவது வெயிட் லிஃப்டிங் பண்ணியிருக்கீங்களா, ஷ்யாம் அண்ணே?"
"வெயிட் லிஃப்ட்டிங்!"- களைப்புடன் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "இல்ல... வெயிட் லிஃப்டிங் பண்ணிப் பார்த்தது இல்ல. இருந்தாலும் ஒருமுறை கல் ஒன்றைத் தூக்கியிருக்கேன்."
எல்லாரும் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்க ஆரம்பித்தார்கள். கோரா உற்சாகம் மேலிட கேட்டான்: "கல்லா? அந்தக் கல்லுக்கு எவ்வளவு எடை இருந்துச்சு?"
எங்கள் எல்லாருக்கும் ஏமாற்றம் அளிக்கும் வண்ணம் ஷ்யாம் அண்ணன் சொன்னார்: "அதுல என்ன எடை இருக்கப் போகுது? ஒரு சின்ன கல்லுதான் அது!"